அகரமுதல
166, மார்கழி10, 2047 / திசம்பர்25, 2016
ஆள்வினைச்செல்வி சசிகலா மீதான ஆரியத்தாக்குதல்
ஊழலற்ற, நேர்மையான தமிழ்நல மக்களாட்சிதான் நமக்குத் தேவை. ஆனால், அதற்கான காலம் இன்னும் கனியவில்லை. எனவே, இருப்பனவற்றுள் ஏற்கத்தக்கதைத்தான் நாம தெரிவு செய்ய வேண்டியுள்ளது.
“யார் நல்ல பையன்” என்று கேட்டால், “அதோ கூரை மீது கொள்ளி
வைத்துக்கொண்டுள்ளானே அவன்தான் நல்ல பையன்” என்று சொல்லும் நிலையில்தான்,
நாமும் நம்நாட்டுக் கட்சிகளும் உள்ளன. எனவே, நாம் நம் அளவுகோலை மாற்றி
வைத்துக்கொண்டுதான் முடிவெடுக்க வேண்டியுள்ளோம்.
அதுபோல், தமிழ் நாட்டில் பல கட்சிகள் இருப்பினும் இரு கட்சி ஆட்சிமுறைக்கே தமிழக மக்கள் முன்னுரிமை அளித்து வருகின்றனர். எனவேதான், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மாறிமாறி ஆட்சிக்கு வருகின்றன.
அதிமுகவில் இருந்து அதன் அச்சாணிபோல்
செயல்பட்ட செல்வாக்கான தலைவர்கள், கட்சியை விட்டு வெளியேறினர். அவர்கள்
செல்லாக்காசாகினர். அல்லது மீண்டும் அதிமுகவிலேயே அடைக்கலமாயினர்.
திமுகவிற்கும் பிற கட்சிகளுக்கும் இது
பொருந்தும். வைகோவின் கருத்துகளுக்கு இன்றும்கூடத் தி.மு.க.வில்
ஆதரவாளர்கள் உள்ளனர். “வைகோ சொல்வது சரிதான். தலைவர் ஏன், இப்படி
ஈழத்தமிழர் படுகொலைகளுக்குத் துணை நிற்கின்றார்” என்று சொன்னவர்,
சொல்கிறவர் பலர். எனினும் தேர்தல் என்று வந்தால் கட்டுப்பாட்டுடன் தலைவர்
பக்கம்தான் நிற்கின்றனர். இதை நன்கு உணர்ந்ததால்தான் தி.மு.க.வின் மூத்த தலைவர்கள், தாலினுக்கு அளிக்கும் முதன்மையை விரும்பாவிட்டாலும் கட்சிக்கட்டுப்பாட்டுடன் இணங்கி நடக்கின்றனர்.
எனவே, இன்றைக்கு நடுநிலைப்போர்வையிலும் செயலலிதாமீது பரிவுள்ளவர்கள்போல் காட்டிக்கொண்டும் ஆரியக் கருத்துத் திணிப்பு நடைபெற்றாலும் கட்சியில் சிறு சலசலப்பு வருமே தவிர, பெருமளவு சேதம் வராது.
கற்பனை அடிப்படையிலும் ஊகத்தின் அடிப்படையிலும் திரித்துச் சொல்வதில்
உள்ள விருப்பத்தாலும் ஆள்வினைச்செல்வி சசிகலாவிற்கு எதிரான கருத்துகளை
ஊடகங்கள் வாயிலாகவும் இணையத் தளங்கள் வாயிலாகவும் பரப்பி வருகின்றனர்.
சிலர், ஏவலாளி, காவலாளி எல்லாம் தலைவராக முடியுமா என்கின்றனர். அவர்கள் உலக வரலாறு அறியாதவர்கள். சிலர் “சண்முகநாதன் கலைஞர் கருணாநிதியுடன்
கூடவே இருக்கிறார். அவர் தலைவர் பதவிக்கு வர முடியுமா” என ஒப்புமை
பேசுகின்றனர். சண்முகநாதன், கலைஞர் கருணாநிதியுடன் 40 ஆண்டுகளுக்கும் மேலாக
உடனிருந்து அவரின் சொற்பொழிவுப் பதிவாளராகச் சிறப்பாகச் செயல்படுபவர்.
ஒருவருடன் மற்றொருவர் கூட இருப்பின், முதலாமவரின் சிந்தனைக்கேற்பவே
இரண்டாமவரின் எண்ண ஓட்டமும் அமையும். இதனை மறுதலையாகவும் கொள்ளலாம்.
சண்முகநாதனுக்குக் கட்சியிலும் ஆட்சியிலும் பொறுப்பு அளித்தால் சிறப்பாகச்
செயல்படக்கூடியவரே!
என்றாலும், சசிகலாவின் இருப்பு வேறானது. அவர், செயலலிதா சொல்லும் செயலைச் செய்யும் பணியாளராக இல்லை. எலலா நிலைகளிலும் அவருக்கு உதவியாகவும் ஆறுதலாகவும் ஆற்றப்படுத்துபவராகவும் இருந்தவர்.
செயலலிதா சார்பில் பெரும்பான்மையருடன் கருத்துகளையும் கட்டளைகளையும்
தெரிவித்தவரும் அவரே. இன்றைக்கு யார் அதிமுகவின் பொதுச்செயலராக வந்தாலும்
ஆதரவும் எதிர்ப்பும் இருக்கத்தான் செய்யும். ஆனால், பிறர் எல்லாரையும் விட மிகுதியான ஆதரவும் குறைவான எதிர்ப்பும் உடையவரே சசிகலா.
சசிகலா வந்தால் கட்சிக் கட்டுப்பாடு காக்கப்படும் என்பதால் அதைச் சிதைக்கச் சிலர் முயல்கின்றனர்.
அதிமுகவைப் பிடிக்காமல் தலைவி பிராமணவகுப்பு என்பதால் ஆதரித்தவர்களும்
உள்ளனர். தன்னைப் பிராமணப்பெண்ணாகச் சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தாலும்
சாதிப்பாகுபாடு இல்லாதவராகவே செயலலிதா இருந்துள்ளார். எனவேதான், வேறு
வகுப்பைச்சேர்ந்த சசிகலாவுடன் நெருக்கமாக இருக்க முடிந்தது. ஒழுக்கக்கேடனாக
இருந்த செயேந்திரன் பிராமண வகுப்பைச் சேர்ந்தவனாக இருப்பினும் கைது
செய்தார். அதை வேறு காரணமாகத் தி.மு.க. கூறி செயேந்திரனைப் பாதுகாத்தாலும்
அவரைச் சேர்ந்தவர்கள் அதைப் பயன்படுத்திக் கொண்டாலும் திமுக
எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது பிராமணர்கள் எதிராகவே நடந்து
கொள்கின்றனர். பிராமண வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண்மணி துணைவேந்தர் பதவி
கேட்ட பொழுது மும்முறையும் தனியார் கல்லூரியைச் சேர்ந்த அவரை நியமிக்க
வில்லை . ஆனால், அவர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் அப்பதவியை
வாங்கிவிட்டார். இவ்வாறு பல செய்திகள் உள்ளன. இருப்பினும் சிலர் செயலலிதா இடத்தில் மற்றொரு பிராமணப்பெண்தான் வரவேண்டும் என்பதற்காக அவரது மருமகள் தீபாவை முன்னிறுத்துகின்றனர்.
சசிகலாவிற்குத் தகுதி இல்லை
என்பவர்கள்தாம், இதுவரை கட்சிக்காகவோ மக்கள் நலனுக்காவோ துரும்பையும்
எடுத்துப் போடாதவரை முன்னிறுத்துகின்றனர்.
அவரை மரபுரிமையராகக் காட்டுவதும்
தவறுதான். மரபுரிமையைமட்டும் பார்தத்துத் தமிழ் மக்கள் முதன்மை
அளிப்பதில்லை. வேறுகாரணிகளையும் பார்க்கின்றனர். எனவேதான் வாழ்க்கை
நாயகியைவிடப் படநாயகிக்கு முதன்மைஅளித்தனர். அவரும் திடீரென்று வரவில்லை.
தங்கள் தலைவரால் படிப்படியாக வெவ்வேறு நிலைகளில்
அறிமுகப்படுத்தப்பட்டதால்தான் அவரையும் ஏற்றனர்.
செயலலிதா இருந்த பொழுதே அவரால் மதிக்கப்படாத தீபா எப்படி அதிமுகவில் அவரது மரபுரிமையர் ஆவார்?
ஆரியப் பாசக தன் திணிப்பு வேலைகளுக்கு அவர் உதவியாக இருப்பார் என எண்ணி அவரை முன்னிறுத்த உதவுகிறது. என்றாலும் மக்கள் செவிமடுக்கப்போவதில்லை.
வேறு பல கருத்துகள் சசிகலாவிற்கு எதிராக இட்டுக்கட்டப்படுகின்றன. சசிகலாவைச் செயலலிதா விலக்கி வைத்தார் என்றால், மக்கள்திலகம் எம்ஞ்சியாரால் ஒதுக்கப்பட்டவர்தானே செயலலிதா.
கட்சியில் பலரும் எதிர்ப்பதுபோல்
தவறாகவும் கூறி வருகின்றனர். யார், யார் எதிர்க்கிறார்கள் என்று திரித்துச்
சொல்லப்பட்டார்களோ அவர்களே ஆதரவினை வெளிப்படையாகத் தெரிவித்தவுடன் அவர்களை
வாங்கிவிட்டார் என்கின்றனர்.
முரண்பாடான கருத்துகளையும்
பரப்புகின்றனர். ஒருபுறம் செயலலிதாவைச் சசிகலா அடக்கித்
தன்கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்கின்றனர். மறுபுறம் மன்னார்குடி
குடும்பத்தினருக்குச் செயலலிதா பதவிகள் தர மறுத்துவிட்டார் என்கின்றனர்.
சசிகலாவின் கட்டுப்பாட்டில் செயலலிதா இருந்தது உண்மையெனில், அவர்
உறவினர்களுக்குப் பதவிகள் தர மறுத்திருப்பாரா?
சுருக்கமாகக் கூறுவதானால்,
பெரும்பான்மைக் கட்சியினரால் ஏற்கப்படும் சசிகலாதான் பொதுச் செயலாளர்
பொறுப்பிற்கு ஏற்றவர். எனவே, அவர் அந்தப் பொறுப்பை ஏற்றுச் சிறப்பாகச்
செயல்பட்டுத் தமிழ்நாட்டை மேம்படுத்த உதவவேண்டும். அதே நேரம் உறவினர்களாலோ வேறு யாராலோ அதிகார மையங்கள் உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக அதிமுக கட்சி யல்லாதவர்கள் சசிகலாவிற்கு முதன்மை கொடுப்பதன் காரணம், இரா.சே.ச/ ஆர்.எசு.எசு. கும்பல் ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி அதனை நேரடியாகவோ மறைமுகமாகவோ கைப்பற்ற இடம் கொடுக்கக்கூடாது
என்பதுதான். பா.ச.க. கும்பல், வெற்றிடம் எதுவும் இல்லாத பொழுதும்
வெற்றிடத்தை நிரப்பப்போவதாகக் கொக்கரிக்கின்றனர். அப்படி அவர்கள் வந்து
தீமைகள் விளைந்தால் அவற்றை நாம் விரட்டியடித்தாலும் தீமைகளால் தமிழினமும் தமிழ்மொழியும் தமிழ்மக்களும் பல தலைமுறைகள் இன்னலுக்காளாவர்.
எனவேதான், ஆட்சி சிதையாமல் இருக்க,
ஆளுங்கட்சியும் சிதைவுறாமல் இருக்க வேண்டும். ஆளுங்கட்சி சிதைவுறாமல்
இருக்க அதனைக்கட்டிக்காக்கும் வல்லமை உள்ளவர் பொறுப்பிற்கு வரவேண்டும்.
அவ்வாறு கட்சியினரால் கருதப்படுபவர் சசிகலா என்பதால் அவர் அதிமுகவின்
பொதுச்செயலாளராக வேண்டும்!
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.(திருவள்ளுவர், திருக்குறள் 217)
அதிமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்பேற்றுக்
கட்சி்யைப்பொலிவுடன் நடத்த
சசிகலாவிற்கு
முன்னதான வாழ்த்துகள்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment