5 மாவட்டங்களிலும் தமிழக அரசே,
மருத்துவமனை அமைக்கட்டும்!
அ.இ.ம.அ.நி.(அனைத்து
இந்திய மருத்துவ அறிவியல் நிறுவம்) மருத்துவமனை (AIIMS) தமிழ்நாட்டில் 200
காணி பரப்பில் 2000 கோடி உரூபாய் செலவில் அமைக்கப்பட இருப்பதாக மத்திய அரசு
நாடாளுமன்றத்தில் 2015 இல் தெரிவத்தது.
தமிழ்நாடு அரசு, செங்கல்பட்டு
(காஞ்சிபுரம் மாவட்டம்), புதுக்கோட்டை, செங்கிப்பட்டி(தஞ்சாவூர்
மாவட்டம்), பெருந்துறை(ஈரோடு மாவட்டம்), தோப்பூர் (மதுரை மாவட்டம்) ஆகிய 5
இடங்களைப் பரிந்துரைத்தது.
இந்திய ஒன்றியத்தின் நல்வாழ்வு
குடும்பநலத்துறை இணைச்செயலர் தத்திரி பண்டா (Dharitri Panda) தலைமையிலான
குழு 5 இடங்களையும் ஆய்வு செய்து திரும்பியது.
எனினும் தொடர் நடவடிக்கை இன்றி
இத்திட்டம் கிணற்றில் போட்ட கல்லானது. மேனாள் முதல்வர் செயலலிதா
தலைமையமைச்சரிடம் உடனே தக்க இடத்தில் இம் மருத்துவமனை நிறுவுமாறு (17.2.
2016) வலியுறுத்தி மடல் அனுப்பினார்.
மத்திய அரசு 5 இடங்களுமே தக்க இடமில்லை என மறுத்தது.
இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
(பிப்.2017 இறுதியில்,) தலைமையர் நரேந்திரரை (மோடியை)ச்சந்தித்த பின்னர்,
இம் மருத்துவமனை தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள செங்கிப்பட்டியல் அமைய
இருப்பதாகத் தனக்குத் தெரிவிக்கப்பட்டதைக் கூறினார்.
வாய்ப்பந்தல் போட்டட அளவிற்கு
மருத்துவமனை அமைப்பற்கான எச் செயல்பாடும் இல்லை. எனவே, 5 மாவட்ட மக்களும்
தத்தம் மாவட்டத்தில் மருத்துவமனை அமையப் போராடி வருகின்றனர்.
இதற்கிடையில் பாற்கர் என்பார்
தமிழ்நாடு(சென்னை) உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மதுரையில் அஇமஅநி
மருத்துவமனையை அமைக்க வழக்கு தொடுத்தார். இவ்வழக்கில் மத்திய அரசு தமிழக அரசு தெரிவிக்கும் இடத்தில் மருத்துவமனை அமையும் எனக் கூறியுள்ளது.
தமிழக அரசின் கையில்தான் மருத்துவமனை அமையும் இடம் இருக்கிறது என்று இப்போது சொல்லும் மத்திய அரசு ஏன் பரிந்துரை கேட்கவேண்டும்.? 5 இடங்களில் பார்வையிட்டு மக்கள் பணத்தை வீணடிக்க வேண்டும்? காலத்தை வீணடிக்க வேண்டும்?
அண்மையில் சட்டமன்றத்தில் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விசய பாற்கர், 5 இடங்களில் மருத்துவமனை எங்கு அமைந்தாலும் வரவேற்பதாகத் தெரிவித்தார். ஆனால், அடுத்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தஞ்சாவூர் மாவட்டத்தில் மருத்துவமனை அமைய வாப்பில்லை என மத்திய அரசு மறுத்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
அமைச்சரவை கூட்டுப்பொறுப்பிற்குரியது. மத்திய அரசின் தகவலைத் தொடர்புடைய அமைச்சருக்குக்கூட முதல்வர் தெரிவிக்கவில்லை எனில் அது தவறாகும்.
மருத்துவச்சுற்றுலா வரைபடத்தில்
இருப்பதாகவும் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய நகரங்களில் இருந்து
சம தொலைவு இருப்பதாகவும் சொல்லப்பட்ட செங்கிப்பட்டியில் அமைந்தால் சசிகலா-தினகரன் அணி செல்வாக்கு பெறும் என முதல்வரே மறுக்கச் சொல்லியிருந்தாலும் மத்திய அரசு மறுத்திருந்தாலும் அதுவும் தவறாகும்.
ருமானவரித்துறை, புலனாய்வுத்துறை முதலான துறைகளில் தலையிடும் மத்திய ஆளுங்கட்சி, இந்திய ஒன்றிய அரசு மூலம், மருத்துவமனை அமைப்பதிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்துகின்றது.
அங்கங்கே மாவட்ட அளவில் மக்கள்
போராடுவதால், இதனை மாநில அரசின் பக்கம் திருப்பவே தமிழக அரசின் கையில்
முடிவு எடுப்பதாகக் கூறியுள்ளது.
இப்போக்கு மாவட்டம் சார்ந்த பெரும்பான்மைச் சாதியின் எதிர்ப்பாகவும் மாறும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது போலும்!
தமிழக மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்!
மத்திய அரசின் அமைப்பு வருகின்றது என்றால், அங்கே தமிழ் அகற்றப்படுகிறது! தமிழர் வேலைவாய்ப்பு உரிமை பறிக்கப்படுகிறது என்றுதான் பொருள்.
ஒவ்வொரு மாவட்ட மக்களும் தனித்தினியே போராடாமல், ஒன்றிய அரசு நிதி உதவியுடன் தமிழக அரசு 5 இடங்களிலும் உலகத்தரம் வாய்ப்நத மருத்துவமனை அமைக்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.
தமிழக அரசு இதனை வலியுறுத்தும் நிலையில் இல்லை. மறைமுக ஆளுங்கட்சியான
பா.ச.க. இது குறித்துக் கவலைப்படாது. எனவே, மக்கள் சேர்ந்து குரல்
கொடுத்தால் ஒன்றிய அரசு செவிமடுக்கும்.
நமக்குத் தேவை, வாப்பு வசதிகள் உள்ளன எனக் கண்டறியப்பெற்ற 5 இடங்களிலும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளே!
முயல்வோம்! செல்வோம்!
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது. (திருவள்ளுவர், திருக்குறள் 671)
தாழ்ச்சியுள் தங்குதல் தீது. (திருவள்ளுவர், திருக்குறள் 671)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 192, ஆனி 11, 2048 / சூன் 25, 2017
No comments:
Post a Comment