Sunday, June 4, 2017

அமைதியின் காரணம் ஆழ்மனத் துயரமோ? – இலக்குவனார் திருவள்ளுவன்





அமைதியின் காரணம்  ஆழ்மனத் துயரமோ?


சொலல் வல்லர் சோர்விலர் இன்று
சொல்லவும் இயலவில்லை! சோர்வும் விடவில்லை!
கலைஞர்களைத் தன்  சொல்லோவியங்களால் உருவாக்கிய
கலைஞர் கருணாநிதியின் சொல்ல முடியா
அமைதியின் காரணம் ஆழ்மனத் துயரமோ?
ஆட்சிச்சிறையில் இல்லாத பொழுது
உரிமையுடன் முழங்க முடிந்தது!
சிறைச்சாலையைப் பூஞ்சோலையாய்க் கருத முடிந்தது!
தமி்ழ் தமிழ் என்று தாளமிட முடிந்தது!
ஆட்சியில் குமுக நலன்களுக்குத் தீர்வு கண்டு
பெண்ணுரிமை பேண முடிந்தது!
சமத்துவம் காண முடிந்தது!
ஆரியத்துடன் இணையவும் முடிந்தது!
அன்னைத்தமிழை மறக்கவும் முடிந்தது!
கல்விநிலையங்களில் விரட்டப்படும் தமிழால்
வெல்லும் தமிழ் இல்லாது போனது!
பயன்பாட்டு நிலையில் தமிழை இழந்து
துயர்பட்டுப்போனாள் தமிழன்னை!
செல்வச்சங்கிலியில் பிணைப்புண்டு போனமையால்,
செல்வத்தமிழைப் பிணைத்ததோர்  அவலம்!
தொப்புள்கொடியினரை மறந்ததோர் அவலம்!
தப்பறியா மக்களை அடக்கியதோர் அவலம்!
இத்தனை அவலத்தால் ஆழ் மனம்அழுகிறதோ!
முசிபூர் இரகுமானாய் மகிழ்ந்தது ஒரு காலம்!
அமைதிப்படையை ஏற்காதது ஒரு காலம்!
தனி்யாட்சி  கேட்டு முழங்கியது ஒரு காலம்!
இத்தனைக்காலமும் கனவாய்ப்போனது இக்காலம்!
ஈழத்தமிழருக்காகக் குரல் கொடுத்தது ஒரு காலம்!
ஈழத்தமிழருக்காகச் சிறை சென்றது ஒரு காலம்!
ஈழத்தமிழருக்காகப் பதவி இழந்தது ஒரு காலம்!
இத்தனைக் காலமும் கனவாய்ப்போனதும் ஒரு காலம்!
பாசங்கொண்டு மக்கள் நலம்கண்டவர்
பாசம்மிகுந்து தன்மக்களையே போற்றினார்!
பாசச்சங்கிலியில் பிணைத்துக் கொண்டமையால்
பாசம் தமிழர் மீது இல்லாமல் போனதே!
பாசம்போனதால் பதைபதைத்துப் போனாரோ!
பாசத்தைத் தொலைத்ததால் துயருற்றுப் போனாரோ!
ஒரு வேளை உணவை ஒத்தி வைத்ததை
ஓருணர்வும் இன்றி உண்ணாநோன்பு என்றாரே!
கொலைகளைக் கண்டால் கொதித்தெழுபவர்
கொலைகாரப்பேயைத் தங்கத்தாய் என்றாரே!
போரில் இறத்தல்  இயற்கை என்றதற்குப் பொங்கியவர்
பாரில் இனப்படுகொலையை நிலையாமை என்றாரே!
தன்சொல் கேட்கத் தரணி காத்திருந்தும்
தன் சொல் மறந்து அழிவிற்குத் துணைபோனாரே!
எல்லாம் சேர்ந்து உள்ளத்தை அழுத்தியதோ!
சொல்ல மறந்து சோர்வுறச்செய்தனவோ!
மன்னிப்பு கேட்க ஒருமனம் துடித்து,
மன்னிப்பு கேட்காதே என மறுமனம் அடித்து
உள்ளமும் உள்ளமும் சண்டையிட்டதால்
உள்ளம் அழுது உரைக்க மறந்ததோ!
தோழனாய் எண்ணியவர்க்குக்
காலனாய் மாறியதால்
காலனுக்கு அஞ்சி
நாளும் அழுகிறாரோ!
மன்னிப்பு கேட்காவிட்டாலும்
மன்னித்து விட்டோம்!
மன்பதை காக்க
மனம் திறந்து பேசுக!
கழுவாய் காண
எழுவீர் எழுச்சியுடன்
இனியேனும்  தமிழ் காக்கும்
துணிவோடு ஈழம்காக்கும்
தன்னிகரில்லாத் தலைவனாய்
மீண்டு வருக! மீண்டும் வருக!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை: அகரமுதல 189, வைகாசி 21, 2048 / சூன் 04, 2017

No comments:

Post a Comment

Followers

Blog Archive