அகரமுதல 191, ஆனி 04, 2048 / சூன் 18, 2017
ஆட்சியை மாற்ற வேண்டியது மக்களே! ஆளுநர் அல்லர்!
இந்திய நாடு
முழுவதுமே மத்திய ஆளுங்கட்சிக்கு ஒத்துவராத மாநில ஆட்சிகள் பலமுறை
கவிழ்க்கப்பட்டுக் கலைக்கப்பட்டுள்ளன. முதன் முதலில் (சூலை 31, 1959),
சவகர்லால்நேருவால், தேர்ந்தெடுக்கப்பட்டப் பொதுவுடைமைக் கட்சியின் ஆட்சி
கேராளவில் கலைக்கப்பட்டுக் குடியரசுத்தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட்டது.
அதன்பின்னர் இதுவரை 125இற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் மாநிலஅரசுகள்
கலைக்கப்பட்டுள்ளன. சத்திசுகாரையும்(Chhattisgarh) புதியதாகத் தோன்றிய
தெலுங்கானாவையும் தவிர எல்லா மாநிலங்களுமே குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு
உட்பட்டுள்ளன. ஏறத்தாழ 85 முறை பேராயக்(காங்.)கட்சிதான்
இத்திருவிளையாடலைச் செய்துள்ளது. பா.ச.க.வின் கலைப்புப்பணி 7 முறைதான்
நடந்துள்ளது. இதனால், தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளுமே
கலைக்கப்பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் குறுக்கு வழியில் கலைப்பதற்குக் கலைஞர் கருணாநிதி
பெரும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். அ.தி.மு.க. ஆட்சியைக் கலைக்க
வேண்டும் என்று உள்ளக்கிடக்கை இருந்தபொழுதுகூட, அரசமைப்புச்சட்டப்பிரிவு
356 ஐப் பயன்படுத்தி அரசைக் கலைப்பதற்கு எதிராகவே பேசி வந்துள்ளார்.
ஆனால், இப்பொழுது அவர் திருமகனான மு.க.தாலின், குடியரசுத்தலைவர் ஆட்சியை அரங்கேற்றத் துடித்துக் கொண்டுள்ளார். செயலலிதா மறைவால் அதிமுக பிளவுறும்; ஆட்சியைக் கைப்பற்றலாம் என்ற கனவு தகர்ந்ததால் வந்த செயற்பாடே இது.
சோ.இரா.பொம்மை(S.R.Bommai) வழக்கில்
உச்ச நீதிமன்றம், குடியரசுத்தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்துவதற்குச் சில
நடைமுறைகளை வரையறுத்து நீதிமன்றத்தின் பார்வைக்கு இதனைக் கொணர்ந்தது.
இருப்பினும் அதன்பின்னர், ஆட்சிக்கலைப்புகள் நிகழத்தான் செய்துள்ளன. ஆனால்,
இதுவரை வந்த எந்த ஆளுநர் ஆட்சியும் நேர்மையான ஆட்சியாக இருந்ததில்லை.
நேற்றுவரை இன்றைய அரசியல்வாதிக்குரிய இலக்கணங்களுடன் திரிந்து, மக்கள்
செல்வாக்கு இழந்த பின்னர் ஆளுநராக அமர்த்தப்பட்டவர்கள், எங்ஙனம் நேரான
பாதையில் செல்வர்? இருப்பினும் குடியரசுத் தலைவர் சார்பிலான ஆளுநர் ஆட்சி
நேர்மையான ஆட்சி என்பதுபோல் சிலர் அதனை வரவேற்கின்றனர்.
இத்தகைய திணிப்பு ஆட்சி என்பது மத்திய
ஆளுங்கட்சியின் ஆட்சியாகத்தான் செயல்படுகின்றதே தவிர மக்கள் நலன் நாடும்
ஆட்சியாகச் செயல்படுவதில்லை. எனவே, இத்தகைய ஆட்சியைத் தமிழ்நாட்டில்
நடைமுறைப்படுத்தினால், பா.ச.க.வின் மறைமுக ஆட்சிதான் நிலவும். இதனால் தி.மு.க.விற்கு என்ன ஆதாயம்? அடுத்துத்
தேர்தல் வந்தால் தான் வரலாம் எனத் தி.மு.க. கனவு காணலாம். ஆனால், இதுவரை
ஆளுங்கட்சியான அதிமுகவைப் புரட்டி எடுத்துக்கொண்டிருக்கும் பா.ச.க.
அடுத்துத்தன் பாய்ச்சலைத் தி.மு.க.மீதுதானே காட்டும். தமிழ்நாட்டின் இரு முதன்மைக்
கட்சிகளையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து தன் பேரவலிமையைக்
கூட்டிச்சட்டமன்றத்திலும் ஆட்சி்யிலும் இடம் பிடிக்கும் முயற்சியில்தானே
அது ஈடுபடும்! இதனை உணராமல் தாலின் ஆட்சிக் கலைப்பிற்குப் பாடுபடுவது சரியல்ல.
அதிமுகவில் பன்னீர் பிரிந்ததும்
எடப்பாடி பழனிச்சாமி முதலானோர் சசிகலா-தினகரனைப் புறக்கணிப்பதும்
பா.ச.கவின் சித்து விளையாட்டுகளால்தான் என்பதை அனைவரும் அறிவர்.
இருப்பினும் யாரும் தி.மு.க.பக்கம் சாயவில்லையே!
இயல்பாகத் தேர்தல் நடந்தால் தி.மு.க.விற்குக் கிடைக்கும் வெற்றி வாய்ப்பு
இதனால் பாதிக்கப்படுமே தவிரக், குடியரசுத்தலைவர் சார்பிலான ஆளுநர்
ஆட்சியால் தி.மு.க.விற்கு எப்பயனும் விளையாது. நாடடிற்கும் கட்சிக்கும்
பயன்தராத ஆட்சி வருவதற்குத் தி.மு.க. ஏன் பாடுபடவேண்டும்?
ஆளுங்கட்சி,
பெரும்பான்மை இழந்த சூழலில் எக்கட்சியும் ஆட்சியமைக்க இயலாச் சூழலில்,
சட்டம் ஒழுங்கு சிதைந்த சூழலில், நாட்டின் பாதுகாப்பிற்கு ஊறு நேரும்
சூழலில்.
என ஆட்சியைக் கலைப்பதற்கான சூழல்களை
அரசமைப்புச்சட்டம் வரையறுத்துள்ளது. இவற்றுள் எந்த ஒன்றும் தமிழ்நாட்டில்
இப்பொழுது பொருந்தவில்லை. கூவத்தூர் பூச்சாண்டியைக் காட்டுவதும்
பொருந்தாது. எல்லா மாநிலங்களிலும் இது போன்ற நேர்வுகள் நிகழ்ந்துள்ளன.
தி.மு.க.வும் இந்தப் பாதையில் வந்ததுதான்; இப்பொழுதும் இந்தப்பாதையில்
நடந்து இயலாமல் திரும்பியதுதான்; இனியும் வாய்ப்பிருந்தால் இந்தப் பாதையில்
நடக்கப்போவதுதான்.
ஆட்சிக்கலைப்பிற்கு ஒரு காரணமாக மாநில
அரசு சமயச் சார்பின்மைக்கு எதிராகச் செயல்படுவதும் குறிக்கப்பெற்றுள்ளது.
அப்படியானால் பா.ச.க. அரசுகளைத்தான் கலைக்க வேண்டும். ஆனால், அதற்கு
வழிகாட்டும் சமயவெறியும் மொழிவெறியும் பிடித்த பா.ச.க. அரசிற்கு என்ன தகுதி யிருக்கிறது?
மக்கள் பரத்தை ஒருத்தி மீது கல்லெறிந்த பொழுது, இயேசுநாதர்,
“உங்களில் யார் ஒரு குற்றமும் செய்யவில்லையோ அவர்கள் இவள் மேல் கல்லை விசி
எறியுங்கள்” என்றார் அல்லவா? அப்படிப்பார்த்தால் யாரொருவருக்கும்
ஊழலைப்பற்றிச் சொல்லத் தகுதி இல்லை. நாம் நேர்மையான ஆட்சிதான் வரவேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், அதற்கான சூழலை உருவாக்கவில்லை.
எனவே, அந்த நல்ல காலம் எப்பொழுது கனியும் என்று தெரியவில்லை. ஒரே வகையான
குற்றச்செயலை அனைவரும் செய்யும் பொழுது வலியோருக்கு ஒரு தீர்ப்பு,
எளியோருக்கு ஒரு தீர்ப்பு என்பது முறையில்லை யல்லவா?
ஆகவே, தேர்தல் ஊழலைக் காரணம் காட்டி
ஆட்சியைக் கலைக்கச்சொல்வது அதே குற்றத்தில் ஊறியவர்கள் சொல்வது, அதே
குற்றத்தில் திளைப்பவர்கள் நடைமுறைப்படுத்துவது என்பது எப்படிச் சரியாகும்?
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி
மக்களால்தான் அகற்றப்பட வேண்டுமே தவிர, அதிகாரத்தால் அல்ல! என்பதை அவர்
புரிந்துகொள்ள வேண்டும்.
தவறான ஆட்சியை அகற்றும் அதி்காரம் கொண்டவர்கள் வாக்குரிமை கொண்ட மக்கள் மட்டுமே!! ஆளுநர் அல்லர்! மத்திய ஆட்சியனரும் அல்லர்!
விளைவை எண்ணாமல் ஆட்சியைக் கவர எண்ணுவது அழிவைத்தரும். அதனை விரும்பாமல் வாழும் பெருமிதம் (ஆட்சியாகிய) வெற்றியைத் தரும்.
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு (திருவள்ளுவர், திருக்குறள் 180)
– அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை : அகரமுதல 191, ஆனி 04, 2048 / சூன் 18, 2017
No comments:
Post a Comment