• வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள்
  • நூலறிமுகம் 2/4
சொல்லின் செல்வர் கங்காராம் துரைராசு
 திருக்குறள் தூதர் வெ.இர.கனகசபை, சொல்லின் செல்வர் கங்காராம் துரைராசு குறித்து எழுதிய கட்டுரை இடம் பெற்றுள்ளது.
தம்பிக்கு மடல்கள் எழுதிய அறிஞர் அண்ணா வழியில் ‘அன்ப’ எனத் தொடங்கி ஏராளமான பன்முக வாழ்வியல் மடல்களைத் தீட்டிய சிறப்பிற்குரியவர் பெருமகனார் எனக் கட்டுரையாளர் அறிமுகப்படுத்தி வைக்கிறார்.
31.12.1917 ஆம் ஆண்டு தோன்றி 08.10.1998 இல் மறைந்த பெருமகனார் ஆயிரம் பிறை கண்டு அழியாப்புகழ் பெற்றுள்ளார் எனக் கட்டுரை முழுவதும் கட்டுரையாளர் நன்கு விளக்கியுள்ளார்.
சங்க இலக்கியம் முதல் பாவேந்தர் பாடல்கள் வரை நிரம்பக்கற்ற செந்தமிழ்த்தேனீ, திருக்குறளைச் சிறப்பாகவும் விளக்கமாகவும் இலக்கிய எடுத்துக்காட்டாகவும் எடுத்தியம்பிய இலக்கியத் தூதர், பல்துறை நூலாசிரியர், இதழியல் தமிழ்ப்பேராசிரியர், அறிவியல், ஆட்சியியல், இயற்கையியல், ஈட்டவியல், உழவியல், ஊட்டவியல், எண்ணியல், ஏரியியல், ஒழுக்கவியல், ஓர்தலியல், கல்வியியல், சமனியல், தற்சார்பியல், நடப்பியல், பண்பியல், மக்களியல், யாழியல், வணிகவியல், ஞானவியல் எனப் பல்சுவை அறிந்த பட்டறிவு மிகுந்த அறிஞர் என உள்ளத்தில் பதியும் வண்ணமும் ஆத்திசூடியை நினைவூட்டும் வண்ணமும் கட்டுரையாளர்  பெருமகனாரின் சிறப்புகளை நமக்குத் தந்துள்ளார்.
சொல்லின் செல்வர் கங்காராம் துரைராசிற்கு வாழ்த்து கூறி, அவரின் தோற்றம், வளர்ச்சி, இல்லறவாழ்வு, பொதுத் தொண்டுகள், சமுதாயச்சங்கப்பணிகள், மொழிபெயர்ப்புப் பணிகள்,அமைப்புகள் மூலமான மக்கள் தொண்டுகள், எனப் பலவற்றையும் நிரல்படக் கட்டுரையாளர் கூறியுள்ளார்.
1950இல் தலைமையர் நேரு மதுரை வந்த பொழுது பொதுக்கூட்டத்தில் அவரது ஆங்கில உரையைத் தமிழில் மொழிபெயர்த்துப் பாராட்டு பெற்றமையையும் கட்டுரையாளர் சுட்டியுள்ளார்.
ஆங்கிலத்திலும் சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்துள்ளார் இ.ஆ.ப.பயிற்சிகள் நடத்திப் பலர் பணிவாய்பபு பெற உதவினார் என்னும் சிறப்புகளையும் நாமறியச் செய்கிறார்.
இரத்தத்தான முகாம், கண்தான முகாம் நடத்தியவர், தம் கண்களையும் தானம்செய்து பிறருக்கு அறிவுறுத்தியபடித் தாமும் வாழ்ந்துள்ள பெருமையையும் உணர்த்தியுள்ளார்.
வள்ளுவர் வகுத்த வழியில் சிறப்பாகத் திருக்குறள்களை விளக்கியதுடன் தாமும் அதன்படி வாழ்ந்தவர்  என்பதை நமக்குக் கட்டுரையாளர் விளக்கியுள்ளார். திருக்குறளைக் கூறிக் கூட்டங்களையும் உரைகளையும் தொடங்குதல், குறள்நெறிப்படியான திருமணம் நடத்துதல், சமூகநீதி, பகுத்தறிவு, கட்டுப்பாடு, கடமை, முன்னேற்றப்பணிகள் என நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளைத் திருக்குறள் எடுத்துக் காட்டுகளுடன் படைத்த சிறப்பு என அறிஞர் பெருமகனாரின் திருக்குறள் ஈடுபாட்டையும் பணிகளையும் கட்டுரையாளர் அளித்துள்ளார்.
தமிழ்ப்பணிகளுடன் பல்வேறு வணிக அமைப்புகளில் பொறுப்பாளராக இருந்து நற்பணிகள் ஆற்றியுள்ளார்; பெங்களூர் தினச்சுடர், தெக்கான் எரால்டு முதலான இதழ்களில் பொருளியல் கட்டுரைகளையும் மக்களுக்கேற்ற எளிய முறையில் எழுதியவர் தாமும் நாடார் சங்கத்தின் ‘மகாசனம்’ இதழின் ஆசிரியராக இருந்து சிறப்பாக இதழ்ப்பணிகளும் ஆற்றியுள்ளார். தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் புகழ் பெற்ற பெருமகனாக வாழ்ந்து மறைந்துள்ளார் எனக் கட்டுரையாளர் விளக்கியுள்ளார்.
கட்டுரையாளர் மிகவும் அருமையாகவும் நேர்த்தியாகவும் இலக்கியச்சுவையுடனும் சொல்லின் செல்வர் கங்காராம் துரைராசு பற்றி நமக்குச் சொல் விருந்து அளித்துள்ளார். எனினும் நெல்லில் பதர் கலந்தாற்போல் அமைப்புகளின் பெயர்கள் எல்லாம் அயற்சொற்களாகவே இருக்கின்றன. சிறந்த படைப்பாளியாக இருக்கும் கட்டுரையாளர் இனி அயற்சொற்கள் கலப்பும் அயலெழுத்துகள் கலப்புமின்றிக் கட்டுரைகள் எழுத வேண்டுகிறேன். அடுத்த பதிப்பில் இக்கட்டுரையையும் அவ்வாறு கலப்பற்றதாக மாற்றுமாறும் வேண்டுகிறேன்.
திருக்குறள் கம்பர்
மூன்றாவது, இ.ப.நடரசானின் ‘திருக்குறள் கம்பர்’ கட்டுரை இடம் பெற்றுள்ளது.
திருவள்ளுவர் நம் அறிவை மயக்கி அடிமை கொண்டார் என்றும் கம்பர் உணர்வை மயக்கி அடிைம கொண்டார் என்றும் கட்டுரையாளர் ஒப்புமை தருகிறார். கம்பரைக் கம்பரின் வரிகளிலேயே ‘கலைகளின்் பெருங்கடல் கடந்த கல்வியாளர்’ என்றும் ‘எண்ணில் நண்ணூல் ஆய்ந்தே கடந்தான்’ என்றும் கூறுகிறார்.
திருவள்ளுவர் கூறும் செய்ந்நன்றி அறிதலுக்கு எடுத்துக்காட்டாகக் கம்பர் சடையப்ப வள்ளலைத் தன் காப்பியத்தில் நினைவு கூர்வதை விளக்குகிறார். அதுமட்டுமல்ல. தன் அறிவை வளர்த்த தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் தமிழ்ப்புலவர்க்கும் மூலநூல் புலவர் வால்மீகிக்கும் நன்றி தெரிவித்துத் திருக்குறள் கருத்தை வாழ்வில் மேற்கொண்டுள்ளார் எனக் கட்டுரையாளர் விளக்குகிறார்.
கம்பர் சங்க இலக்கியம் முதல் தம் கால இலக்கியம் வரை ஆழ்ந்து கற்ற புலமையாளராக இருந்துள்ளார். எனவே, அவற்றில் தம்மை ஈர்த்த காட்சிகளை இராமாயணத்தில் பொதிந்து வைத்துள்ளார்.
ஆரியத்தாசராக எண்ணப்படும் கம்பரை ஆரியஎதிர்ப்புக் கருத்துகளைத் திருவள்ளுவர் வழியில் திருக்குறள் கருத்துகள் மூலம் வெளிப்படுத்தி ஆரிய எதிர்ப்பாளராகவும் கடடுரையாளர் விளக்குகிறார்.
“வேள்வியை இயற்றியும் வளர்க்க வேண்டுமோ”
எனக் கம்பர் ஆரிய வேள்விக்கு எதிராக வினா தொடுப்பதையும் கட்டுரையாளர் சுட்டுகிறார்.
கம்பர் 300க்கு மேற்பட்ட இடங்களில் திருக்குறளைக் கையாண்டுள்ளதாகவும் சிலர் 500 முதல் 1000வரை குறிப்பிடுவதாகவும் கட்டுரையாளர் தெரிவிக்கிறார்.
திருவள்ளுவர் கூறிய உவமைகளைச் சற்று மாற்றியும் பல இடங்களில் கம்பர் பயன்படுத்தியுள்ளார் எனவும் கட்டுரையாளர் விளக்கியுள்ளார்.
திருக்குறளை அறியாமல் கம்பர் இராமாயணத்தைப் படிப்போரும் அறியும் வண்ணம்  திருக்குறள் கருத்துகளைக் கையாண்டுள்ளார் எனக் கட்டுரையாளர் பாராட்டுகிறார்.
கம்பர் தாம் படைத்துள்ள சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, ஏர் எழுபது, சிலை எழுபது, திருக்கை வழக்கம் என்னும் 5 நூல்களிலும் திருக்குறள் கருத்துகளைப் பெய்துள்ளார் எனவும் கட்டுரையாளர் அழகுற விளக்குகிறார்.
அனைத்தையும் கட்டுரையிலேயே படித்துக் கொள்வதே சிறப்பு. எனினும் சான்றுக்கு ஒன்றைப் பார்ப்போம்.
ஏர் எழுபது நூலில்,
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாரும்
தொழுதுண்டு பின்செல்வா ரென்றேஇத் தொல்லுலகில்
எழுதுண்ட மறையன்றோ இவருடனே இயலுமிது
பழுதுண்டோ கடல்சூழ்ந்த பாரிடத்துப் பிறந்தோர்க்கே
என்கிறார்.
இப்பாடலில் தொடக்கத்தில் திருக்குறளை முழுமையாகக் கையாண்டுள்ளதைக் காணலாம்.
திருக்குறள் சிறக்கத் தம்மால் இயன்ற தொண்டினை ஆற்றி உயர்ந்த கம்பரைப் போற்ற வேண்டும் என்கிறார் கட்டுரையாளர்.
கட்டுரையளார் இ.ப.நடராசன் சிறப்பான ஆராய்ச்சிக் கட்டுரையை அளித்துள்ளார். எனவே, அவர் கம்பரின் திருக்குறள் ஆளுமை குறித்து முழுமையாக ஆராய்ச்சி நூல் அளிக்குமாறு வேண்டுகிறேன்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்