தமிழ்ப் புதுவை மாநிலம் உருவாக்குக!
புதுச்சேரி அல்லது பாண்டிச்சேரி எனப்படும் ஒன்றியப்பகுதிக்கு மாநிலத் தகுதி வழங்கப்பெட வேண்டும் என்பது புதுச்சேரி மக்களின் நீண்ட காலக் கோரிக்கை. குடியரசுத்தலைவர் என்ற பெயரில் பாசக முகவராகக் கிரண்(பேடி) வந்ததிலிருந்து அனைத்துத் தரப்பு மக்களிடமும் தன்னுரிமையுடன் வாழப் புதுவைக்கு மாநிலத் தகுதி வேண்டும் என்ற கருத்து ஆழமாகப் பதிந்துள்ளது.
இந்தியாவில் மாநிலங்களுடன்  மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஒன்றியப்பகுதிகளும் உள்ளன.
இப்போது இந்தியாவில் அந்தமான் நிக்கோபார் தீவுகள். சண்டீகர், ததுரா – நாகர் அவேலி(Dadra and Nagar Haveli), தையூ-தாமன்(Daman and Diu), புதுச்சேரி, இலட்சத்தீவுகள், தில்லி தேசிய தலைநகரப் பகுதி ஆகிய 7 ஒன்றியப் பகுதிகள் உள்ளன.
இவற்றுள், புதுச்சேரி, தில்லி ஆகியன மாநிலத்திற்கு இணையாகக் கருதும் வகையில் தேர்தல் மூலம் அரசு அமைக்க உரிமை கொண்டன. எனவே, சட்ட மன்றங்களும் இருக்கும். மாநிலங்களுக்கு இணை என்று சொன்னாலும் முழுமையான மாநிலமாக ஏற்கப்படவில்லை. எனவே, சட்டம் இயற்ற ஒப்புதல் தேவை போன்ற முறைகளால் குடியரசுத்தலைவரின் கட்டுப்பாட்டில் உள்ளன.
பிரெஞ்சு ஆளுகைக்குட்பட்டிருந்த புதுச்சேரி 1954இல் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது; 1962இல் ஒன்றியப் பகுதியானது. எனினும், புதுச்சேரி ஒன்றியப் பகுதியாக தொடர்ந்து இருக்கத் தேவையில்லை.
தனித்த பண்பாட்டுக் கூறுகள் உள்ளமையைக் காரணம் காட்டி ஒன்றியப் பகுதியாக மத்திய அரசு அறிவிக்கிறது. உண்மையில் தனித்த பண்பாட்டுக் கூறுகள் உள்ள பகுதிகள்தாம் மத்தியக் கட்டுப்பாட்டில் இல்லாமல் தனித்து இருக்க வேண்டும்.
ஒரு மாநகராட்சி அளவுள்ள சிறிய பகுதி ஆகிய புதுவையை எப்படித் தனி மாநிலமாக அறிவிக்க முடியும் என்கின்றனர். புதுச்சேரியின் மக்கள் தொகை 12,47,953. ஆனால் இதைவிடக் குறைவாக மக்கள் தொகை உள்ள அருணாச்சலப் பிரதேசம்(10,97,968), மிசோரம்(8,88,573), இதைவிடச் சற்றுக் கூடுதலாக மக்கள் தொகை உள்ள கோவா (13,47,668) ஆகிய ஒன்றியப் பகுதிகள் மாநிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. இவை தவிர, இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, ஆகிய ஒன்றியப் பகுதிகள் மாநிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. அவைபோல் புதுவையை(யும் தில்லியையும்)  முழுமை மாநிலமாக மாற்ற  வேண்டும்.
 இந்தியாவுடன் இணைந்த சிக்கிம்(5,40,851) மக்கள் தொகையும் புதுச்சேரி மக்கள் தொகையைவிடக் குறைவுதான். எனவே, மக்கள் தொகை அடிப்படையில் மாநில  உரிமையை மறுப்பது முறையல்ல.
எனவே, புதுச்சேரி மாநில மக்களின் ஒருமித்த கருத்தை ஏற்று அதனை முழுமை மாநிலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அல்லது அதுவரை அம்மக்கள் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்.
மற்றொரு கருத்தையும் முன் வைக்க விரும்புகிறேன். தமிழ்நாட்டைப் பிரித்துத் தென்தமிழகம் உருவாக்க அவ்வப்பொழுது குரல்கள் எழுகின்றன. அதில் சிறிது மாற்றமாக இக் கருத்து அமையும். இப்பொழுது புதுச்சேரியின் சில பகுதிகள் தமிழ்நாட்டின் ஊடாக உள்ளன. புதுச்சேரியின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு புதுச்சேரி பகுதிக்குச் செல்ல தமிழ்நாட்டின் வழியாகச் செல்லவேண்டிய நிலைகளும் உள்ளன. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு செறிவான புதுச்சேரி மாநிலத்தை அமைக்க வேண்டும்.
புதுச்சேரியின் அண்மையில் உள்ள விழுப்புரம், கடலூர் மாவட்டங்களையும் புதுச்சேரி தமிழ்ப்பகுதிகளையும் இணைத்துத் தமிழ்ப்புதுவை என மாநிலம் உருவாக்க வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஏனாம்(Yanam),  ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டத்தின் அண்மையில்  அமைந்துள்ளது. எனவே, அதனை ஆந்திராவுடன் இணைக்கவேண்டும்.
மாகி அல்லது மாகே(Mahe) கேரள மாநிலம் தளிச்சேரிக்கு அண்மையில் உள்ளது. (மைய்யழி என்பது பழைய தமிழ்ப்பெயர்.) இதனைக் கேரள மாநிலத்துடன் இணைக்க வேண்டும்.
காரைக்கால் தமிழ்நாட்டின் நாகப்பட்டனம் மாவட்டத்தின் இடையில் அமைந்துள்ளது.  இதனைத் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும். அல்லது நாகப்பட்டினத்தைத் தமிழ்ப்புதுவையுடன் இணைக்க வேண்டும்.
பிரெஞ்சு ஆளுகையில் புதுச்சேரியுடன் இணைந்திருந்த சந்திரநாகூர்,  கல்கத்தாவின் அருகில் உள்ளதால் மேற்கு வங்காளத்துடன் இணைக்கப்பட்டது. அதை முன் நிகழ்வாகக் கொண்டு இவ்வாறு நடைமுறைப் படுத்தலாம்.
புதிய பகுதிகள் சேர்க்கப்படுவதால் தாங்கள் புறக்கணிக்கப் படுவோமோ என்ற அச்சம் புதுச்சேரி மக்களுக்கு வரலாம். எனவே, தமிழ்ப்பகுதி அமைந்த 10 ஆண்டுகளுக்கு இப்போதைய புதுவைப்பகுதியைச் சேர்ந்தவரே முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என விதி வகுக்கலாம். பழைய புதுவை சேர்க்கப்பட்ட புதுவை என்ற பாகுபாடு இல்லாமல் ஒரே மாநிலமாக உணர்ந்து மக்கள் செயல் படவேண்டும்.
எனவே, புதுவைக்கு மாநிலத்தகுதி வழங்க மத்திய அரசு இனியும் காலம் கடத்தக்கூடாது. தமிழக அரசுடன் கலந்து பேசி, தமிழ்நாட்டின் புதுவைக்கு அண்மைய பகுதிகளையும் இணைத்துத் தமிழ்ப்புதுவை மாநிலத்தை அறிவிக்க வேண்டும். அவ்வாறில்லாமல் ஒன்றியப்பகுதியாகவை வைத்து ஆட்டிப்படைப்பதுதான் மத்திய அரசின் நோக்கம் என்றால் வரும் நாடாளுமன்றத் தேர்தலை அனைத்து மக்களும் புறக்கணிக்க வேண்டும். எக்கட்சியினரும் தனியரும் போட்டியிடக் கூடாது. இதன் மூலம் மததிய அரசிற்குத் தங்கள் தேவையை உணர்த்த வேண்டும்.
புதுவை தனி மாநிலமாக உருவாகுக!
தமிழ்ப்புதுவை மலர்க!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரைஅகரமுதல