மொழிப்போர் நாள் கொண்டாட நமக்குத் தகுதி உள்ளதா?
தமிழ்க்காப்பு மொழிப்போரில் உயிர் நீத்தவர்களுக்கும் சிறைப் பட்டவர்களுக்கும் இன்னல் உற்றவர்களுக்கும் நம் வீர வணக்கங்கள்!
மொழிப்போர் நாள் கொண்டாடுவதால் நாம் புத்துணர்வு பெறவும் வரும் தலைமுறையினர் வரலாறு அறிந்து மொழி காப்புப்பணியில் ஈடுபடவும் வாய்ப்பு  இருப்பின்  அதனை வரவேற்கலாம். ஆனால், ஒரு சடங்காக அதனைக் கொண்டாடுகிறோம். அதனைக் கொண்டாடுபவர்களுக்கும் பங்கேற்பவர் களுக்கும் மொழிக்காப்பு உரிமையைப் பெற வேண்டும் என்ற உணர்வுதான் இல்லை. அவ்வாறிருக்க ஆரவாரக் கொண்டாட்டத்தால் என்ன பயன்?
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினால் சிறையடைப்புக் காலத்தில் உயிர்நீத்த நடராசன், தாளமுத்து, உயிரினும் மேலான தமிழுக்காகத் தங்கள் உயிரைத் தீக்கு இரையாக்கிய செம்மல்கள், கீழப்பழூர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், ஐயம்பாளையம் வீரப்பன், சத்தியமங்கலம் முத்து, மாயவரம் சாரங்கபாணி, நஞ்சருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட பீளமேடு தண்டாயுதபாணி, சத்தியமங்கலம் முத்து, விராலிமலை சண்முகம், துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட சிதம்பரம்  இராசேந்திரன், வெவ்வேறு போராட்டக் களங்களில் அரச வன்முறைகளால் உயிர் பறிக்கப்பட்ட ஐந்நூற்றுவருக்கும் மேலோர் ஆகியோர் வரலாற்றுப்பாட நூல்களில் இடம் பெறவில்லையே!
நடராசன், தாளமுத்து மறைவின் பொழுது பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்ததும் இவர்கள் நினைவு போற்றப்படும் என்றார். ஆனால், போற்றப்பட வேண்டிய அளவிற்குப் போற்றப்படவில்லையே! மொழிக்காவலர் உதவித் தொகை அளித்து வருவதும் மொழிப்போர் ஈகியர்  நினைவு மண்டபம் அமைத்துள்ளதும் பாராட்டப்பட வேண்டியதுதான். என்றாலும் வளரும் தலைமுறையினருக்குத் தமிழ்க்காப்பு உணர்வை ஊட்டும் வகையில் செயல்பாடுகள் இல்லை.
1938 முதல் 7 பெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களைத் தமிழ்நாடு சந்தித்துள்ளது. அவற்றால் உயிர் நீத்தவர்களும் சிறை சென்றவர்களும் வாழ்விழந்தவர்களும் போற்றப்பட்டு அவர்களின் வழி முறையினர் உரிய முதன்மை பெறுகின்றார்களா? இல்லையே!
மாணாக்கர்களும் இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டனர். இதனால் ஆளுங்கட்சிக்குத் தீங்கு என்பதால் மாணாக்கர்கள் அரசியலுக்கு வரக்கூடாது எனப் பலரும் சொல்லத் தொடங்கினர்.
 தமிழ்ப்போராளி இலக்குவனார், தங்களின் எதிர்காலம் குறித்து மாணாக்கர்கள்தான் கருத்துடனும் துணிவுடனும் போராட முடியும் என்று அவர்களை இந்தி எதிர்ப்புப் போரில்  முனைப்புடன் ஈடுபட வைத்தார். எனவேதான் 1.08.1948 இல் இந்தி எதிர்ப்பு மாணவர் மாநாட்டைத் தலைமை தாங்கிச் சென்னை நினைவரங்க மண்டபத்தில் நடத்தினார்.  அதன் பின்னர், மாணாக்கர்களும் இந்தி எதிர்ப்பு மாணவர் மாநாட்டைத் திருச்சிராப்பள்ளி முதலான இடங்களில் நடத்தினர்.1965 இல் இந்தி எதிர்ப்புப் படைத்தளபதியாக விளங்கி மாணாக்கர்களைப் போராட்டக் களத்தில் குதிக்கச் செய்தார். இதனால் வீழ்ந்த பேராயக்கட்சியாகிய காங். கட்சியால் இன்றும் எழுந்திருக்க இயலவில்லை. ஆனால், அதனை விரட்டியடித்தவர்களே அதனைப் பல்லக்கில் சுமந்து கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்க்காப்பில் தங்களையே ஒப்படைத்த அன்றைய மாணாக்கர்கள்போல் இன்றைய மாணாக்கர்கள் இல்லை! அவர்கள் பேச்சிலும் தமிழ் இல்லை! பாட்டிலும் தமிழ் இல்லை! செயல்பாட்டிலும் தமிழ் இல்லை ! அவர்கள் கொண்டாட்டங்களிலும் தமிழ் இல்லவே இல்லை!அவர்களை நல்லாற்றுப்படுத்தும் ஆசிரியர்களும் இல்லை! தலைவர்களும் இல்லை!
1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர்களுள் சிலர் ஆட்சிப்பொறுப்பிற்கும் பதவிகளுக்கும் வந்தனர். இருப்பினும் இந்தி எதிர்ப்பில் உயிர் நீத்தவர்களின் குடும்பங்களுக்கும் சிறை சென்றவர்களின் குடும்பத்தினருக்கும் நிலையான மறுவாழ்வு உதவி அளித்து இந்தி எதிர்ப்புப்போர் குறித்துப்பாடநூல்களில் இடம் பெற முயலவில்லை.
இந்தி இன்றைக்குத் தொலைக்காட்சிகள் மூலம் நம் வரவேற்பு அறையில் நுழைந்து மக்களை ஆட்கொள்கிறது. தமிழ் நாட்டில் இந்தி விளம்பரங்கள்; பட முன்னோட்டங்கள் இந்தியில்; இருந்தும் தமிழ்க் காதலர்களாகச் சொல்லிக் கொள்பவர்கள் அமைதி காக்கிறார்கள். அவ்வாறு சொல்வது கூடத் தவறு. ஏனெனில் இத்தகைய விளம்பரங்களை வெளியிடுபவர்களே அவர்கள்தாம்.
தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தும் தமிழை மீட்காதவர்களா மத்தியஆட்சிப்பொறுப்பில் இடம் பெற்றதும் தமிழ்க்காப்பு நோக்கில்செயல்படுவார்கள்? தமிழ் முழக்க அமைச்சர்கள் பொறுப்பில்தான் சாலைப் பெயர்கள் இந்தி மயமாயின. இந்தி பரப்பும் பல திட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. முழக்கங்கள், திட்டப்பெயர்கள் என்ற பெயர்களில் சமற்கிருதம் திணிக்கப்படுவதற்கு வெண்சாமரங்கள் வீசப்பட்டன.
வேள்விகள், வழிபாடுகள் என்பவை மூலம் இறைநெறியில் தமிழை அடியோடு ஒழித்து விட்டனர்.
கல்வி நிலையங்களிலும் இந்தியும் சமற்கிருதமும் திணிக்கப்படுகின்றன. மத்தியப் பல்கலைலக்கழகங்கள் என்ற பெயர்களிலும் இந்தித்திணிப்பும் சமற்கிருதத் திணிப்பும் நடைபெறுகின்றன.
நுழைவுப்போட்டிகள், பொதுப்போட்டிகள் என்ற போர்வைகளில் தமிழ் துரத்தப்படுகின்றது.
மத்திய அரசின் வேலைவாய்ப்புகள் மூலம் இந்தி நம் மீது ஏறி அமர்ந்து கொண்டுள்ளது.
இந்தி பரப்புரை அவை(இந்தி பிரச்சார சபா) சிறப்பாகவே செயல்பட்டுத் தமிழர்களிடையே இந்தியைப் பரப்பிக் கொண்டுள்ளது.  ஆனால் தமிழ்நாட்டிலேயே தமிழைக் காக்காத  நாமா பிற மாநிலங்களில் தமிழைப் பரப்பப் போகின்றோம்!
பன்னாட்டு அவைகளில் சமக்கிருதம் திணிக்கப்படும்பொழுது தமிழுக்காகக் குரல் கொடுப்போர் யாருமில்லை.
தமிழ்நாட்டுக்கல்விக்கூடங்களில் தமிழ் இருந்த இடம் தெரியாத அளவிற்குத் தொலைந்து போய்க் கொண்டுள்ளது.
திருவையாற்றில்  இசைவிழாவில் வீற்றிருந்த தெலுங்கை நாடு முழுவதும் பரப்பிக் கொண்டுள்ளனர்.
ஆட்சியில் இருந்தவர்கள், இருப்பவர்கள், ஆட்சிக்காக அலைபவர்களுக்குத்தமிழ் தேர்தல் முழக்கத்திற்கு மட்டும் தேவைப்படுகின்றது. எல்லா வகைகளிலும் பிற மொழிகள் திணிக்கப்படுவதற்கு அவர்களே நேரடியாகவும் மறைமுகமாகவும் துணை நிற்கின்றனர். மக்களும் அவர்கள் புகழ்பாடித் தமிழ்க்காப்பு உணர்வை மழுங்கடித்து வருகின்றனர்.
அப்படியானால் எதற்காக வீர வணக்க நாள் சடங்குகள்? உணர்வற்றப் பிண்டங்களுக்கு உணர்வூட்டாத இந்தச் சடங்குகளால் என்ன பயன்?
தமிழ்க்காப்பு மறவர்களைப் போற்றுவது வீர வணக்க நாள் கொண்டாட்டத்தில் மட்டும் இல்லை. எல்லா இடங்களிலும் தாய்த்தமிழைக் காக்கும் உணர்வும்செயல்பாடும் நம்மிடையே திகழப் பாடுபடுவதுதான் உண்மையான வீரவணக்க நாள்!
அந்த நாள் என்று வருமோ?
-வேதனையில் இலக்குவனார் திருவள்ளுவன்