(சட்டச் சொற்கள் விளக்கம் 961-965 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 966-970
966. Attendance (S. 7(9) ROBDA, 1969) | வருகை முன்னிலையாதல் கல்வியகம், பணியகம், தொழிலகம் போன்ற இடங்களில் உரிய நேரத்தில் பயிலுவோர் அல்லது பணியாளர்கள் அல்லது தொழிலாளர்கள் வருவதைக் குறிப்பது. முறை மன்றம் போன்ற இடங்களில் அதன் தலைவர் முன்னர் நேர் நிற்பதை அல்லது முன்னிலையாதலைக் குறிப்பது. தொல்பொருள், கருவூலப் பொருள்கள் சட்டம் 1972(Antiquities and Art Treasures Act), இருப்பூர்தித் துறை(சட்ட முரண் உடைமை)ச் சட்டம், 1966(The Railway Property (Unlawful Possession) Act, 1966), பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம் 1969 (ROBDA, 1969) ஆகியவற்றில் உசாவல் (விசாரணை) தொடர்பில் நேர்நிற்றல், முன் நிற்றல், வருகை பற்றி விதிகள் இருக்கின்றன.) |
967. Atom | அணு அணு என்பது நுண்ணிய அளவைக் குறிக்கும் ஒரு சொல். “அணு அளவு இலாபத்திலும் அரைப்பங்கு பாழ்”, “அணு மாமேரு ஆகுமா?”, “அணுவும் மலையாச்சு மலையும் அணுவாச்சு” என்னும் பழமொழிகள் மக்கள் மத்தியில் அணு இடம் பெற்றுள்ளதை உணர்த்துகிறது. 1,075, 200 இல் ஒரு பங்கு. 1 —————————– 1,075, 200 இதனினும் சிறியது அணு. அணுவைப் பகுக்க முடியாது என்பர் இக்கால அறிவியல் அறிஞர்கள். ஆனால், “அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்” என்கிறார் ஒளவையார். கற்பனை மிகையாகப் பாராட்டிய சொல் என அறியார் கூறுகின்றனர். அணுவின் நூற்றில் ஒரு பங்கு குறித்துக் கம்பர் கூறுகிறார். கம்பராமாயணத்தில்(பாடல் 6312), அணுவினைச் சதகூறிட்ட கோணினு முளன் (இரணியன் வதைப் படலம், 124) என்கிறார் அவர். அணுவைச் செந்து எனவும் குறிப்பர். இதனை உயிரணுவைக் குறிக்கப் பயன்படுத்தலாம். இலெக்குசிசுநெக்குசிசு(LexisNexis) என்னும் தரவுத் தளம், “அணு” என்ற சொல், அறிவியல் பொருளில் மட்டுமல்ல, எந்தவோர் அடிப்படை அலகு அல்லது கட்டுமானத் தொகுதியைக் குறிக்கச் சட்டச் சூழல்களிலும் இன்னும் பரந்த அளவில் பயன்படுத்தப்படலாம் என்கிறது. சுருக்கமாக, “அணு” அதன் அறிவியல் பொருளைக் கொண்டிருந்தாலும், அதன் சட்டப் பயன்பாடுகள் முதன்மையாக அணுவாற்றல், தொடர்புடைய தொழில்நுட்பங்களின் ஒழுங்குமுறை, இயல்நிலையான மடக்கடிகள்(hazards) ஆகிவற்றுடன் தொடர்புடையவை. அணு ஆற்றல் சட்டம் அணுசக்திப் பாதுகாப்பு அணுக்கழிவு அகற்றல் அணுவாற்றல் ஒழுங்குமுறை ஆணையம் (NRC) அணுபற்றிய பன்னாட்டுச் சட்டங்கள் முதலியவற்றில் அணு தொடர்பான சட்டப்பிரிவுகள் உள்ளன. |
968. Attender | உழையர் உடனாள் கையாள் நோயர் அருகில் உள்ளவர்களும் பயணத்தில் துணையாக உடன் வருபவர்களும் குடும்பத்தினர்களாகவோ உறவினர்களாகவோ நண்பர்களாகவோ இருக்கலாம். அவர்களை ஏவலர் என்று சொல்வதைவிட உழையர் என்றோ, உடனாள் என்றோ சொல்லலாம். பணித்தலைவருக்கு உடனிருந்து எடுபிடி வேலைகளையும் அவர் சொல்லும் வேலைகளையும் செய்பவரைக் கையாள் எனலாம். உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று அப்பால்நாற் கூற்றே மருந்து.(குறள் 950) என்கிறார் திருவள்ளுவர். அஃதாவது நோயுற்றவன்; நோயைத் தீர்க்கும் மருத்துவன்; நோய் தீர்க்கும் மருந்து; பக்கத்திருந்து மருந்து கொடுத்தல் முதலியவற்றிற்கு உதவுவான் என்னும் நான்கு பிரிவுகளையுடையது மருத்துவம் என்கிறார். உழைச்செல்வான் என்பதன் சுருக்கமாக உழையர் எனலாம். |
969. Attention | கவனம் மறுவடிவம் உன்னிப்பு துணைஞர் துணையாள் பார்வை சட்டச் சூழலில், “கவனம்” என்பது “கவனிப்பு உரிமை”, ஒப்பந்தங்களில் “கவனிப்புத் தொடர்”, கவனத்தன்மை குறித்த சட்டப்படியான தாக்கங்கள், குறிப்பாகக் கவனம் செலுத்தாமை, செறிவுக்கான ஒருமுகப்படுத்தலில் சட்ட ஒழுங்குமுறைபோன்ற பலவற்றைக் குறிக்கிறது. |
970. Attest | சான்றொப்பமிடு சான்றொப்பமிடுதல் சான்றொப்பமளி சட்டப்பூர்வச் சூழலில், “சான்றளி” என்பது ஓர் ஆவணத்தின் செயல்பாட்டை முறையாகச் சரிபார்ப்பது அல்லது சான்றுரையளிப்பது, அதன் நம்பகத்தன்மை, செல்லுபடியை உறுதிப்படுத்துவது. இஃது ஓர் ஆவணத்தில் கையொப்பமிடுவதற்குச் சான்றாகக் கையொப்பமிடுவதை உள்ளடக்கியது, விருப்ப முறிகள், வழக்கறிஞரின் ஆவணங்கள், ஒப்பந்தங்கள் போன்ற சட்ட முதன்மை வாய்ந்த ஆவணங்களுக்குச் சான்றளிப்பு தேவைப்படுகிறது. சான்றிதழ்களின் மூலப்படிகளை அளிப்பதற்கு மாற்றாக, அவற்றின் நேர்படிகளில்(True Copies)சான்றொப்பம் தேவை. சான்றிதழ்களில் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் தேவை என முன்பு இருந்தது. இவ்வகைப்பாடு நீங்கி அ, ஆ, இ, ஈ பிரிவு அலுவலர்கள் என வந்து விட்டதால், அ அல்லது ஆ பிரிவு அலுவலர் சான்றொப்பம் தேவை. சான்றாவண அலுவலரின் (notary public) சான்றொப்பமும் நீதித்துறை, வருவாய்த்துறை, பதிவுத்துறை முதலான அரசுத் துறைகளில் சான்றாவணங்களுக்கு அல்லது சான்றிதழ்களுக்கு அல்லது உறுதி ஏற்பிற்குத் தேவை. |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment