30 September 2025 அகரமுதல
(நாலடி நல்கும் நன்னெறி 14: நல்லோரும் தீயோர் பக்கம் சேர்ந்தால் தீயனவே விளைவிப்பர்! – தொடர்ச்சி)
நாலடி நல்கும் நன்னெறி 15
கேடு எண்ணாதே! பொய் சொல்லாதே!
தான்கெடினும், தக்கார்கே டெண்ணற்க தன்னுடம்பின்
ஊன்கெடினும் உண்ணார்கைத் துண்ணற்க – வான்கவிந்த
வையகம் எல்லாம் பெறினும் உரையற்க
பொய்யோ டிடைமிடைந்த சொல்
(நாலடியார், பொறையுடைமை, 80)
தான் கெடினும் – தான் கெடுவதாக இருந்தாலும், அஃதாவது தனக்குக் கேடு வருவதாக இருந்தாலும்; தக்கார் கேடு எண்ணற்க – அக் கேட்டினை நீக்கிக் கொள்ளும் பொருட்டுச் சான்றோருக்குக் கேடு செய்ய எண்ணாதே; தன் உடம்பின் ஊன் கெடினும் – தனதுடம்பின் தசை பசியால் வற்றிப் போனாலும் உண்ணார் கைத்து உண்ணற்க – நுகரத்தகாதவரது தரும் உணவை உண்ணாதே; வான் கவிந்த – வானம் சூழ்ந்த; வையகமெல்லாம் பெறினும் – வையகம் முழுமையும் பெறுவதாயிருந்தாலும் ; உரையற்க – சொல்லாதே ; பொய்யோ டிடை மிடைந்த சொல் – பேச்சினிடையில் பொய் கலந்த சொற்களை;
தம் இல்லத்தில் உணவு உண்ணாதவர் தரும் உணவை உண்ணக் கூடாது எனச் சிலர் விளக்கம் தருகின்றனர். வள்ளலோ சான்றோரோ உணவு தரும் பொழுது அதற்கு முன்னர் அவர் தன் வீட்டில் உணவு உண்டிருக்க வேண்டும் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? எனவே, நுகரத்தகாத, பண்பால் கீழோரானவர் தரும் உணவு எனக் கொள்ளுவதே பொருத்தமாகும்.
பிறனுக்குக் கேடு செய்வதைப் பற்றி மறந்தும் நினைக்கக் கூடாது என்பதைத் திருவள்ளுவரும்,
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு. (திருக்குறள், ௨௱௪ – 204)
என்கிறார்.
தீயனவற்றை எண்ணலும் தீது என்பதே தமிழ் நெறி. எனவேதான் பிறருக்குக் கேடு செய்யாதே என்று சொல்லாமல் செய்கைக்கு அடிப்படையான கேடு செய்யும் எண்ணமும் வரக்கூடாது என்கிறது நாலடியார்.
வாழ்தல் வேண்டிப்
பொய் கூறேன், மெய் கூறுவல்;
எனத் தான் யாருக்காகப் பரிசு பெறவந்திருக்கிறாரோ அந்தச் சுற்றத்தார் வாழ்வதற்காகக்கூடப் பொய் கூற மாட்டேன் என்கிறார் புலவர் மருதன் இளநாகனார்(புறநானூறு 139).
அதுபோல்தான் நாலடியாரும் வாழ்வற்காகப் பொய் சொல்லக் கூடாது என்கிறது.
நாமும் யாருக்கும் எதற்காகவும் கேடு எண்ணாமலும் உலகமே நமக்குக் கிடைத்தாலும் பொய் பேசாமலும் வாழ்வோம்.
- இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment