(காற்று இல்லா வானத்தைஅறிந்திருந்த பழந்தமிழர் – சங்கப் புலவர்கள் பொன்னுரை – 20 தொடர்ச்சி)

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 21

புன்கண் கொண்டு இனையவும் பொருள் வயின் அகறல்

அன்பு அன்று

பாலை பாடிய பெருங்கடுங்கோ, கலித்தொகை-பாலைக்கலி 1

“புன்கண் கொண்டு இனையவும்” என்பதன் பொருள் “துன்பமான கண் அல்லது துயரத்துடன் கூடிய கண்களுடன் வருந்துதல்  “

அகறல் = அகலுதல் = பிரிதல்

அத்தகைய சூழலில் பொருள் திரட்ட அன்புத் தலைவியை விட்டுப்பிரிதல் அன்பன்று.

தமிழர்களின் பொருள் தேடும் நோக்கம் ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்பதல்ல. முன்னோர் பொருள் இருப்பினும் தன் முயற்சியில் ஈட்டும் பொருளையே பொருள் என்றனர். அப்பொருள் எதற்கு? தம்மிடம் வந்து இரப்போர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுப்பதற்கு. இல்லை என்று நம்மை நாடி வந்து கேட்பவர்களிடம் நாமும் இல்லை என்று சொல்வது எங்ஙனம் சிறப்பாகும்? எனவே, இரப்போர்க்குக் கொடுக்க வேண்டும் என்றே பொருள் தேடினர். இதனைச் சங்கப்பாடல்கள் பலவும் கூறுகின்றன. கலித்தொகையில் இவ்வொரே பாடலிலேயே மூன்று முறை சுட்டிக் காட்டியுள்ளார்.

தலைவன் எதற்குப் பொருள் திரட்டச் செல்கிறான்? மாடு மனை தேர் ஆடம்பரப் பொருள் வாங்கவா? அல்ல! அல்ல!  ஈத்துவக்கும் இன்பத்தை அடைய. ஈதலே இன்பம் என்பது தமிழர் நெறியல்லவா? “ஈதல் இசைபட வாழ்தல்” எனத் திருவள்ளுவரே கூறுகிறாரே! ஆதலின் இல்லார்க்குப் பொருளை வழங்கி இன்பம் அடையப் புறப்படுகிறான். ஏன்? அவனிடம் செல்வம் இல்லையா? இருக்கிறது. ஆனால் அவன் முன்னோர் திரட்டிய செல்வம் அது. தன் சொந்த உழைப்பால் பிறருக்குக் கொடுப்பதுதான் உயர்வு. எனவே,

தன்னை நாடி வந்து இரக்கும் வறியோர்க்குக் கொடுத்து உதவ முடியாதிருப்பது இழிவாகும் என்று எண்ணி, மலை பல கடந்து சென்று செல்வம் தேடக் கருதிச் செல்கிறான்.

“வறுமையால் வாழ வழியில்லை” என வந்து இரப்பவரிடம் இல்லை என்று சொல்வது இழிவல்லவா? எனவே, அத்தகையோர்க்கு வழங்குவற்கான செல்வத்தைத் தேடிச் செல்கிறான்.

வாழ இடம் இல்லை என்று வந்து இரப்பவர்க்குச் சிறிதேனும் கொடுக்க முடியாமல் போனால் இழிவல்லவா? அந்த இழிநிலை வரக்கூடாது என்பதற்காகச் செல்வம் திரட்டச்செல்கிறான்.

இதில் ஒன்றும் தவறில்லையே! ஆனால் தோழி தடை சொல்கிறாளே! ஏன்? புதிதாகத் திருமணம் ஆனவன். தன் அன்பு மனைவியை விட்டுப் பிரிந்து செல்கிறான். இதனால் அவள் வருந்துவாள் அல்லவா? வருந்துவாளா? இறந்தே விடுவாள்! எனவேதான் தலைவனிடம், “செல்வம் திரட்டச் செல்வது சிறப்புதான். ஆனால் உன் மனைவியை விட்டுப் பிரியலாமா? உடனிருந்தே செல்வம் திரட்டலாமே” என்கிறாள்.

அவள் முதலில் தடை சொன்னதை அவன் பொருட்படுத்தவில்லை. ஆனால் அவள் மார்பைத் தழுவி இன்பம் காணாமல் அவன் நீங்கியதும் அவள் இறந்து விடுவாள் என்றதும் பொருளைத் தேடும் முயற்சியில் வாழ்க்கையைத் தொலைக்கலாமா என எண்ணினான்; உடன் மனம் மாறிவிட்டான்.  அது குறித்துப் புலவர் என்ன தெரியுமா சொல்கிறார்?

காழ் வரை நில்லாக் கடும் களிற்று ஒருத்தல்

யாழ் வரைத் தங்கியாங்குத் தாழ்பு நின்

தொல்கவின் தொலைதல் அஞ்சி என்

சொல்வரைத் தங்கினர் காதலோரே.

என இது குறித்துத் தலைவியிடம் தோழி கூறுகிறாள்.

காழ் = கட்டுத்தறி; வரை = எல்லை; நில்லாக் = நிற்காத; கடும் களிற்று ஒருத்தல் = பெரும் மதயானை.

யாழ் = யாழிசை; வரை = எல்லை; தங்கியாங்கு = தங்கி நிற்கும் வண்ணம்.

யானை மதம் பிடித்துக் கட்டுத்தறியைக் கடந்து செல்கிறது.  குத்துக்கோல் – அங்குசம் – மூலம் பாகன் அடக்கியும் அடங்கவில்லை. ஆனால் அக்கொடுங்களிறு அடங்கியது. அடக்கியது யார்? அல்லது எதற்கு அடங்கியது? யாரும் அடக்கவில்லை. தமிழரின் யாழிசையைக் கேட்டதும் மயக்குண்டு மெய்ம்மறந்து அடங்கி நின்று விட்டது. அதைப்போல் தலைவனும் அடங்கி அயற்பயணத்தை நிறுத்தி விட்டான். அந்த யாழிசை எது? தலைவியன் அன்புதான் அது. நின்னைப் பிரிந்தால் தலைவி உயிர் துறப்பாள் எனத் தோழி கூறினாள் அல்லவா? அத்தகைய அன்புமிகு தலைவியைப் பிரிய எங்ஙனம் மனம் வரும்? எனவேதான் தலைவன் தலைவியுடன் இருந்தே செல்வம் திரட்டலாம் எனக் கருதிச் செல்வம் திரட்ட அயலகம் செல்லும் திட்டத்தைக் கைவிட்டான்.

இதில் புலவர் பாலைபாடிய பெருங்கடுங்கோ யானை இசைக்கு வயப்படும் என்பதையும் அவ்வாறு வயப்படுத்தும் ஆற்றல் தமிழரின் யாழிசைக்கு உண்டு என்பதையும் ஒருசேர நமக்கு உணர்த்தி விட்டார்.

 முயன்று உழைத்து ஈட்டும் செல்வம் சிறந்த செல்வமே. ஆனால் அதனினும் சிறந்த செல்வம் உள்ளதே. அதுதான் மனையாளுடனான இன்ப அன்பு வாழ்க்கை. இல்லறம் அல்லவா நல்லறம்! எனவே, மனையாளைப் பிரியாமலேயே செல்வம் திரட்டும் முடிவிற்குத் தலைவன் வந்துள்ளான்.

எனவே, பொருளைத் தேடு. ஆனால் பொருளைத் தேடும் வாழ்க்கையில் நீ வாழ்கையைத் தொலைக்காதே எனப் புலவர் வலியுறுத்துகிறார்.

பொருளைத் தேடு. ஆனால் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டுத் தேடும் படி வைக்காதே” என்பதை நாமும் பின்பற்றுவோம்!

இலக்குவனார் திருவள்ளுவன்