Showing posts with label நன்றி. Show all posts
Showing posts with label நன்றி. Show all posts

Thursday, August 9, 2018

அண்ணாவின் அருகே தம்பியின் துயிற் பேழை – காரணர்களுக்கு நன்றி. : இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

அண்ணாவின் அருகே தம்பியின் துயிற் பேழை

– காரணர்களுக்கு நன்றி.

  இந்திய நாட்டின் மூத்த தலைவரும் தி.மு.க.வின் தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி நோய்வாய்ப்பட்டு மரண வாயிலை நெருங்கும் பொழுதே குடும்பத்தினர் அடக்கம் செய்யும் இடம்பற்றி முடிவெடுத்துள்ளனர். எனவேதான் இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திரர்(மோடி) அவரைப் பார்க்க வரும்பொழுதே சென்னைக் கடற்கரையில் அறிஞர் அண்ணா நல்லடக்க இடத்தருகே இடம் ஒதுக்க ஏற்பாடு செய்து தருமாறு வேண்டியுள்ளனர். பின்னர் தமிழக முதல்வரை மூத்த தி.மு.க.தலைவர்களும் குடும்பத்தினரும் சந்தித்து விண்ணப்பம் கொடுத்து இடம் ஒதுக்க வேண்டியுள்ளனர்.
  ஆனால், தொடக்கத்தில் தமிழக அரசு இவ்வேண்டுகோளை மறுத்துவிட்டது. இதற்காகக் காழ்ப்புணர்ச்சியால் பாசகவும் அதிமுகவும் வேண்டுகோளை நிறைவேற்றவில்லை என்பது சரியாகப் படவில்லை.
  பாசக அரசியல் பேர அடிப்படையில் கூட்டணி, ஒத்துழைப்புபோன்ற எதையும் எதிர் நோக்கியிருக்கலாம். ஆனால் பாசக முதலான அனைத்துக் கட்சியினருமேஇந்திய அரசியலில்  பல திருப்புமுனைக்குக் காரணமாக இருந்த கலைஞர் கருணாநிதியை இந்தியத் தலைவராகக் கருதி அதற்குரிய மதிப்பை அளித்துள்ளனர். எனவேதான்  நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திராத அவருக்காக மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டையும் ஒத்தி வைத்துள்ளனர். இதனால் எல்லாம் பாசகவிற்குத் தமிழ்நாட்டில்  வாக்கு விழுந்துவிடாது. எனவே, காழ்ப்புணர்ச்சியின்றி மதிப்பளித்து உள்ளார்கள் என்றுதான் பாராட்ட வேண்டும்.
  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காந்தி மண்டபம் அருகே 2 காணி நிலம் தருவதாகவும் வேறிடம் கேட்டாலும் தருவதாகவும் அரசு மதிப்புடன் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கும் முன்னரே முதல்வரும் அமைச்சர் பெருமக்களும் காவேரி மருத்துவமனை சென்று மேனாள் முதல்வர் நலம்குறித்து உசாவி வந்துள்ளனர். மேனாள் முதல்வர் செயலலிதா இருந்தால் இதற்கான வாய்ப்பு இருந்திருக்க வாப்பில்லை. ஒருவேளை அவர் அதிரடியாக நேர் மாறாகவும் இருந்திருக்கலாம். அண்ணா சதுக்கத்தில் இடம் தர இயலாமைக்குச் சட்டச்சிக்கல்தான் காரணம் என்பதையும் முதல்வர் விளக்கியுள்ளார்.
  தங்கள் தங்கத்தலைவிக்கு இடம் ஒதுக்கி அடக்கம் செய்ததை எதிர்த்து வழக்கு தொடுத்தவர்களின் தலைவருக்கு இடம் தந்தால் கட்சியில் கொந்தளிப்பு ஏற்படலாம். நாளை வழக்கு முடிவு மாறுபட்டு இருந்தால் நல்லடக்கம் செய்ததைத் தோண்டி அப்புறப்படுத்தும் நிலையும் வரலாம். எனவேதான் இந்தக் கூற்று. இதன் மூலம் தங்களுக்குள்ள சிக்கலைப் போக்க எண்ணி இறுதியில் அதில் வெற்றியும் பெற்றுள்ளளனர்.
 உயர் நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்திற்கு மேல் முறையீட்டிற்குப் போகாமையே அவர்களின் காழ்ப்புணர்ச்சி யின்மையைக் காட்டுகிறது. ஆனால், சூழ்நிலை மாறியிருந்து திமுக ஆட்சியில் செயலலிதாவிற்கு நல்லடக்க இடம் கேட்டிருந்தால், மேனாள் முதல்வர் காமராசர், மேனாள் முதல்வர் சானகியம்மாள் ஆகியோருக்கு இடம் ஒதுக்காததுபோல் குற்றவாளி என்பதையும் கூறி  மறுத்திருக்கவே வாய்ப்பு உள்ளது.
 ஆனால், மக்கள் வேறு வகையாகப் பார்க்கின்றனர். காந்தி மண்டபம் அருகே முதல்வர் எனச் செயலலிதாவிற்கு இடம் ஒதுக்கவில்லை. தங்கள் புரட்சித்தலைவருக்கு அடுத்த நிலையில் இருந்து கட்சியைக் காத்தவர் என அவருக்கு அருகேதான் ஒதுக்கியுள்ளனர்.
  இதுபோல் திமுகவின் தலைவர் அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு கட்சியைக் காத்தவர் என்ற முறையில் கலைஞர் கருணாநிதிக்கும் அவர் அருகேதான் இடம் ஒதுக்க வேண்டும் என்பது திமுகவினரின் கருத்து மட்டுமல்ல. பெரும்பாலான பொதுமக்களும் அவ்வாறுதான் கருதினர்.
  கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருக்கும்பொழுது மறைந்தால்தான் அறிஞர் அண்ணாவின் அருகே அடக்கம் செய்ய இயலும். இல்லையேல் அறிவாலயத்தில்தான் அடக்கம் செய்ய வேண்டிவரும். எனவே, அவர் மறைவின்பொழுது ஆட்சியில் இருக்க வேண்டும் எனத் திமுக தொண்டர்கள் பலரும் கூறியுள்ளனர். கலைஞர் கருணாநிதியும் அவ்வாறு எண்ணம் கொண்டுள்ளதாகவும் கூறுவர். ஆனால், எதிர்க்கட்சியாக இருந்தபொழுதும் அவரும் தொண்டர்களும் விரும்பியவாறு அறிஞர் அண்ணாவின் அருகேயே தம்பி கருணாநிதிக்கும் இடம் ஒதுக்கப்பட்டுவிட்டது.
  13 முறை  சட்ட மன்ற உறுப்பினராகவும் ஒரு முறை சட்ட மேலவை உறுப்பினராகவும் 5 முறை முதல்வராகவும்  நாட்டின் தலைமையமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட வழிகாட்டியாகவும் விளங்கிய மாபெரும் தலைவர்கலைஞர் கருணாநிதி; அவர் விரும்பியவாறும் மக்கள் விரும்பியவாறும் அறிஞர் அண்ணாவின் துயிற்பேழை அருகே தம்பி கலைஞர் கருணாநிதியின் துயிற்பேழையையும் அடக்கம் செய்ய முடிந்துள்ளது.
  இதற்கு ஏற்ப சென்னைக் கடற்கரையில் அடக்கம் செய்ய இசைவளித்துத் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி (பொறுப்பு)  குலுவாடி இரமேசு (Huluvadi G. Ramesh) நீதிபதி சுந்தர் ஆகியோருக்கும் தடையை விலக்கும் வகையில் வழக்குகளைத் திரும்பப் பெற்றவர்களுக்கும் வில்சன், வீர கதிரவன், ஆர்.விடுதலை ஆகிய வழக்குரைஞர்களுக்கும் தீர்ப்பினைச் செயல்படுத்திய தமிழக அரசிற்கும் கோரிக்கை வைத்த திமுகவின் குடும்பத்தினருக்கும் தலைவர்களுக்கும் நன்றியைத் தெரிவிக்கிறோம்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். (திருவள்ளுவர், திருக்குறள் 666)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல

Saturday, June 4, 2016

அதிமுக நன்றி கூற வேண்டியது திமுகவிற்கே! – இலக்குவனார் திருவள்ளுவன்





அதிமுக நன்றி கூற வேண்டியது திமுகவிற்கே!  - இலக்குவனார் திருவள்ளுவன் :thalaippu_athimuka_nandri_thimuka_thiru

அதிமுக நன்றி கூற வேண்டியது திமுகவிற்கே!

   அதிமுக வெற்றி பெற்றதற்கு “வைகோவிற்கு நன்றி கூற வேண்டும்”, “விசயகாந்திற்கு நன்றி கூற வேண்டும்”, “இராமதாசிற்கு நன்றி கூற வேண்டும்” என்றெல்லாம் வஞ்சப்புகழ்ச்சியாகத் திமுக அன்பர்கள் கூறி வருகின்றனர். உண்மையில்,  ‘அதிமுகவின் ஆ அணி’ என மக்கள்  நலக்கூட்டணியைக் கூறிவந்த திமுகதான் அதிமுக துணை அணியாகச்  செயல்பட்டு அதனை வெற்றி பெறச் செய்துள்ளது என்பது வெள்ளிடை மலை.
  அதிமுக, திமுக நேரடியாக மோதிய தொகுதிகள் 172இல்  அதிமுக 83 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றுள்ளது. திமுக அதைவிட 6 தொகுதிகள் கூடுதலாக  மொத்தம் 89 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுகவா, அதிமுகவா என வந்தால் மக்கள் திமுகவையே நாடுகின்றனர் என்பது தெரிகின்றது. ஆனால், காங்கிரசும் திமுக கூட்டணிக் கட்சிகளும் போட்டியிட்ட 60 தொகுதிகளில்  51 இடங்களை அதிமுக வென்றுள்ளது. பொதுவாகத் தமிழ்நாட்டில் திமுக அல்லது அதிமுக என்பதே மக்களின் நாட்டமாக உள்ளது. எனவேதான் இரு கட்சியணிகளிலும் தோழமைக் கட்சிகள் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.  அதே நேரம்,  பேராயமாகிய காங்கிரசு பெரிய கட்சியாக இந்திய அளவில் உள்ளது. ஆனால், 1967 இல் அதனை விரட்டிய மக்கள் மீண்டும் அதற்கு அரியணை தர விரும்பவில்லை.  அதிமுகவா காங்கிரசா என்று வரும்பொழுது காங்.கிற்கு வாக்களித்தால் திமுக – காங். கூட்டணி அரசு அமைக்க வேண்டி யிருக்கும்.  எனவே, பொதுவான மக்களைப்போலவே  திமுகவினரும் காங். வெற்றி பெறக்கூடாது என உறுதியாக இருந்துள்ளனர். இந்த இடங்களில் மக்கள்நலக்கூட்டணிக்கோ பாமகவிற்கோ வாக்களித்தால் அப்பொழுதும் கூட்டணி  ஆட்சி அமையவே வாய்ப்பு ஏற்படும். அத்துடன், திமுக அல்லது அதிமுக என்ற தமிழக அரசியல் சூழல் மாறும். பிற கட்சிகளை வளர்த்துவிட்டதாக அமையும். எனவே, பிற கட்சிகளைவிட அதிமுகவே வெற்றி பெறட்டும் எனத் திமுகவினர் விரும்பியுள்ளனர். இதன் மூலம் அடுத்த தேர்தலில் காங்.கைச்சுமக்கும் வேலை திமுகவிற்கு இல்லாமல் போகும்வாய்ப்பை உருவாக்குதவாக அமையும் எனவும் எதிர்பார்த்துள்ளனர்.
  பொதுவாகத் தேர்தல் போக்கைப் பார்த்த அரசியல் நோக்கர்கள்,  கடைசி நேரத்தில் திமுகவும் அதிமுகவும் மறைமுகக்கூட்டணியை வைத்துக் கொள்ளும் என்றும் கருதினர். திமுக தலைமைக்குத் தெரியாமல் திமுகவினர் இப்படிச்செயல்பட்டனர் எனில் அவர்கள் தங்கள் தலைமைக்குக் கொடுக்கும் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளலாம்.
  இந்தத் தொகுதிகளில் காங்.கிற்குச் செல்வாக்கு இல்லை எனவேதான் தோற்றது எனக் கூறுதற்கில்லை. ஏனெனில், காங்.கில் உள்ள தனிப்பட்ட சிலரின் செல்வாக்கு தவிர, நாடு முழுவதும் பரவலாகக் காங்.கிற்குச் செல்வாக்கு இல்லை என்பது அனைவரும் அறிந்ததே! திமுக வெற்றி பெற்ற இடங்களில் காங்.கின் வாக்குகளால் வெற்றி பெற்றது எனக் கூற இயலாது. திமுக போட்டியிட்ட தொகுதிகளில் வாக்களித்த திமுகவினர்,  காங்.கிற்கு வாக்களிக்காததாலேயே காங். மண்ணைக்  கௌவியது.
   பொது இடங்களில் திருடன், தான் பிடிபடாமல் இருக்க, வேறு  யாரையாவது திருடனாகக் காட்டித் திசை திருப்புவது வழக்கம். அதுபோல்,  அதிமுகவின் துணை அணியாகச் செயல்பட்டு வாக்களித்த திமுக,  வைகோவையும் அவர் அமைத்த ம.ந.கூட்டணியையும் அதிமுகவின் ‘ஆ’ அணி எனக் கூறி்  அதற்கு வாக்களிப்பதற்கு அதிமுவிற்கே  நேரடியாக வாக்களிக்கலாம் அல்லது அதிமுக வேண்டா என்றால் திமுகவிற்கு வாக்களிக்கலாம் என்பதுபோன்ற எண்ணத்தை விதைத்துள்ளது. யார் முதுகில் பயணம் செய்தாலும் கொலைகாரக் கட்சியை மக்கள் குப்புறவே தள்ளிவிடுவர் என்பதை  காங்.கட்சி  இதன்மூலம் புரிந்து கொண்டிருக்கும்.
  எவ்வாறாயினும் அதிமுகவின்  துணையணியாகச் செயல்பட்டுக் காங்.கைத் தோற்கடித்த திமுகவினருக்குப் பாராட்டுகள்!
தன்  வெற்றிக்காக அதிமுக , திமுகவிற்கு நன்றி கூறுகிறதோ இல்லையோ,
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல். (திருவள்ளுவர், திருக்குறள் 830)
எனச் செயல்பட்ட திமுகவினருக்குத் தமிழ் உணர்வாளர்கள் நன்றி கூறுகின்றனர்.
– இலக்குவனார் திருவள்ளுவன்

Friday, November 6, 2015

கணித்தமிழ்ப்பேரவை உருவாக்கியுள்ள முதல்வருக்குப் பாராட்டும் நன்றியும்


முத்திரை-கணித்தமிழ்ப்பேரவை:muthirai_logo_kanithamizhperavai

கணித்தமிழ்ப்பேரவை உருவாக்கியுள்ள

முதல்வருக்குப் பாராட்டும் நன்றியும்

  ஆவணி 14, 2046 / 31.08.2015 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவித்த புதிய கணித்தமிழ்க் கொள்கையில்(தகவல்தொழில்நுட்பவியல் துறையின் 2015-16 ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்பில் இடம் பெற்றுள்ள தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் புதிய செயல்திட்டங்கள்), கணித்தமிழ் வளர்ச்சியைப் பெருக்கிடும் நீண்டகால நோக்கிலும் அதன் முதன்மையை எதிர்காலத் தலைமுறையினர் உணர்ந்து செயல்படும் விதத்திலும் கல்லூரிகள் தோறும் கணித்தமிழ்ப் பேரவைகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு இடம் பெற்றது. ஏட்டளவில் அறிவிப்பு நின்றுவிடாமல் செயல்பாட்டிற்கும் விரைந்து வந்து விட்டது.
  இதன் தொடர்பிலான மகிழ்ச்சியை வேண்டுகோளுடன் தெரிவிக்க விரும்புகிறோம்.
  கடந்த சில ஆண்டுகளாகவே, “இணையம் வழியாகத் தமிழ் வளர்ப்பதற்குக் கணிணியில் தமிழ்ப்பயன்பாடுகள் பெருக வேண்டும். இதற்கெனத் தமிழக அரசே, ‘தமிழ்நாடு இணையத்தமிழ் மன்றம்’ ஒன்றை அமைக்க வேண்டும்”.
 “ ‘தமிழ்நாடு இணையத் தமிழ் மன்றம்’ / ‘தமிழகக் கணித் தமிழ் மன்றம்’ என்ற ஏதேனும் ஒரு பெயரில் இணைய வழியிலான அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கென ஓர் அமைப்பு இன்றியமையாது வேண்டப்படுகின்றது”
எனக் குறிப்பிட்டுக் கணித்தமிழுக்கான அமைப்பு ஒன்று ஏதேனும் பெயரில் தொடங்கப்பட வேண்டும் எனத் தமிழ்க்காப்புக்கழகம் சார்பிலும், இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பிலும் தோற்றுவிக்கப்பட வேண்டும் எனத் தமிழக அரசிடமும் மாண்புமிகு முதல்வர் அவர்களிடமும் முறையிட்டு வந்தோம்.
“கணியன்கள்(soft-ware) உருவாக்கம் முதலான கணிணி வினைநலன்களில் தமிழை முதன்மைப்படுத்தும் செயற்பாடுகளும் அதற்கான ஊக்கமும் வழிகாட்டுதலும் தேவை.
கணித்தமிழ்ப்பட்டறைகள், பயிலரங்குகள், கருத்தரங்குகள் நடத்தவும் பிழை திருத்தி, தேடுபொறி, சீர், தளை பிரிப்பி, சீர்மை எழுத்துரு, ஒளி எழுத்துணரி எனப் பலவகைக் கணியன்கள் உருவாக்கம், செம்மையாக்கம், இவற்றிற்குப் பொருளுதவி வழங்கல் முதலான பணிகளுக்கு ஓர் அமைப்பு தேவை.“
எனவும் குறிப்பிட்டு இருந்தோம்.
இது குறித்துக் கிழமை இரு முறை வெளிவரும் தமிழக அரசியல் இதழ் வாயிலாகவும் (- ஆரா, தமிழக அரசியல், நாள் 04.09.2013 வியாழன், பக்.22-23) இணையத் தமிழ் மன்றம் வேண்டும் – முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் என வேண்டுகோள் விடுத்து அதனை இணைத்தும் அரசிற்கு மடல் அனுப்பியுள்ளோம்.
. நம் முயற்சிகளுக்குத் தக்க பயன் விளைந்து மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்கக் கணித்தமிழ்ப்பேரவை கல்விநிலையங்கள் தோறும் தொடங்கப்பெற்று வருகிறது.
  எனவே, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் மாண்புமிகு தகவல் தொழில்நுட்ப அமைச்சர், மதிப்பிற்குரிய தகவல் தொழில்நுட்பச் செயலர், அன்பிற்குரிய தமிழ்நாடு இணையக்கல்விக்கழக இயக்குநர், ஆகியோருக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றோம்.
  கணித்தமிழ் வளர்ச்சிக்கான அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்னும் வேண்டுகோளைப் பாரறியச் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்திய தமிழக அரசியல் இதழினருக்கும் நம் நன்றி.
  தகவல்நுட்பச் செயலர் திரு தா.கு.இராமச்சந்திரன் இ.ஆ.ப., தக்காங்கு வழிகாட்டுவதற்கேற்ப,
  த.இ.க.க. இயக்குநர் திரு உதயச்சந்திரன் இ.ஆ.ப.,தமிழ்ப்பற்றும் செயல்திறனும் கொண்டு தொடர்புடையவர்கள் கருத்தறிந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். எனவே, இருவருக்கும் பாராட்டுகள்.
  இணையக்கல்விக்கழக உதவி இயக்குநர்கள் முனைவர் தமிழ்ப்பரிதி, முனைவர் உமாராசு முதலான அலுவலகத்தினரும் துடிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். எனவே, மதுரையில் செப்டம்பர் 05, 2015 அன்று தொடங்கப்பெற்ற கணித்தமிழ்ப்பேரவை, பல நகர்களிலும் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் கிளை பரப்பி வருகிறது. பயிலரங்கங்களும் நடைபெற்று வருகின்றன.
  இது தொடர்பில் மேலும் சில கருத்துகளை இணையக்கல்விக் கழகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்ல விரும்புகிறோம்.
  எந்த அமைப்பும் தொடக்கத்துடன் நின்றுவிடாமல் தொடர்ந்து செயல்பட நிலையான அமைப்பு தேவை.
  ஆண்டிற்கு ஒரு முறையோ இரு முறையோ கூட்டம் நடத்தும் கல்லூரிப்பேரவைபோல் கணித்தமிழ்ப்பேரவை அமைந்துவிடக் கூடாது.
  ஆட்சி மாறினால் காட்சி மாறும் அவலத்திற்கு இலக்காகி அறிவியல் தமிழ் மன்றம்போல் முற்றாக்கப்படும் நிலைக்கும் வரக்கூடாது.
எனவே, இவற்றை ஒழுங்கு படுத்த மாவட்டந்தோறும் மாவட்டக் கணித்தமிழ்ப்பேரவை உருவாக்கப்பட வேண்டும்.
  மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்டக் கணித்தமிழ்ப்பேரவைகளை அமைப்பதைவிட, இவை, கல்வியகங்களைச் சார்ந்து தொடங்கப்பெற்று வருவதால் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தலைமையில் மாவட்ட அமைப்புகளை இயக்கலாம். பல்கலைக்கழக வரம்பு ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களைக் கொண்டுள்ளமையால், ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் துணைவேந்தரைத் தலைவராகக் கொண்டு தனித்தனி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். பல கல்விநிலைய அமைப்பினர், தனியார் உதவியைக்கூடத் தலையீடாகக்கருதிப் புறந்தள்ளும்போக்கு உள்ளது. துணைவேந்தர் தலைமையில் அமைவதால் தவறாமல் ஒத்துழைப்பு நல்குவர்.
  இதன் தொடர்ச்சியாக மண்டல அளவிலும் மண்டலக் கணித்தமிழ்ப்பேரவை அமைக்கப்பட வேண்டும். மண்டல அமைப்பு அமையும் மாவட்டத்திலுள்ள பல்கலைக்கழகத் துணைவேந்தர் மண்டல அமைப்பிற்குத் தலைமை தாங்கலாம். அல்லது சுழற்சி முறையில் துணைவேந்தர்கள் தலைமைப் பொறுப்பு வகிக்கலாம். பிற துணைவேந்தர்கள் துணைத்தலைவர்களாக இருந்து ஒருங்கிணைக்கலாம்.
  கணித்தமிழில் ஈடுபாடுகொண்ட, கல்வி நிலையம் சாராத தன்னார்வலர்களை மாவட்ட அமைப்புகளிலும், மண்டல அமைப்புகளிலும் சேர்த்து நாடு தழுவிய விழிப்புணர்வையும் கணித்தமிழ்ப் பரவலையும் ஏற்படுத்த வேண்டும்.
  தமிழ் இணையக்கல்விக்கழகத்தின் சார்பு அமைப்பாகக் கணித்தமிழ்ப்பேரவை செயல்பட்டாலும், அதன் இயக்குநரைச் செயலராகக் கொண்டு மாநிலக் கணித்தமிழ்ப் பேரவை அமைப்பு உருவாக்கப்படுவது ஒருங்கிணைப்புப் பணியை எளிதாக்கும்.
  ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள், நெறியாளர் அல்லது புரவலராகச் செயல்படுவது கணித்தமிழ்ப்பேரவையின் நிதியுதவி பெறுவதை எளிதாக்கும். ஆனால், அரசின் செயல்திட்டமாகக்கருதாமல் கட்சிக்கொள்கைபோல் தவறான எண்ணம் விளைந்தால் செயல்பாடு நின்று விடும். எனவே, கல்விசார்ந்த அமைப்பு என்பதால், அமைச்சர் முதலானோர் பொறுப்பில் இல்லாமலே உதவி வழிநடத்துவதே சிறப்பாக அமையும்.
  கணித்தமிழ்ப்பேரவையை உரிய முறைப்படிப் பதிந்து பதிவு பெற்ற அமைப்பாகச் செயல்படச்செய்ய வேண்டும்.
  கணித்தமிழை வளர்த்துக் கன்னித் தமிழை மேலும் சிறக்க முனைவோர் அனைவருக்கும் வாழ்த்துகள்!
எண்ணிய வெண்ணியாங் கெய்துப வெண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்(திருவள்ளுவர், திருக்குறள் 666).தமிழக அரசியல்-இணையத்தமிழ்மன்றம்01:ArasiyalInfit01
தமிழக அரசியல்-இணையத்தமிழ்மன்றம்02:ArasiyalInfit02
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
 இதழுரை
அகரமுதல 101, ஐப்பசி 1, 2046 / அக்.18, 2015
AkaramuthalaHeader




Followers

Blog Archive