Showing posts with label : இலக்குவனார் திருவள்ளுவன். Show all posts
Showing posts with label : இலக்குவனார் திருவள்ளுவன். Show all posts

Saturday, June 1, 2019

தேசியக் கல்வித் திட்டம் 2019 – புதிய கல்லறையில் பழைய பெட்டி : இலக்குவனார் திருவள்ளுவன்


தேசியக் கல்வித் திட்டம் 2019 – 

புதிய கல்லறையில் பழைய பெட்டி

மனிதனை மனிதனாக வாழச் செய்வது கல்வி. கல்வி அவரவர் பண்பாட்டுச் சூழலுக்கு ஏற்ப அமைந்தால்தான் கல்வியில் சிறந்து சிறந்த மனிதனாக வாழ முடியும்.
இந்தியா பல தேசிய இன வழி மாநிலங்கள் இணைந்த ஆட்சிப் பரப்பாக உள்ளது. எனவே, கல்வியும் தேசிய இனங்களுக்கேற்ப மாறி அமையும். ஆனால், ஒரே நாடு, ஒரே மொழி என்ற சட்டத்திற்குள் கல்வியை மாற்ற முயலும் பொழுது கல்வி முறை சீரழிகிறது. மனிதக் குலமும் நலங்குன்றுகிறது.
மத்திய அரசு தன் நோக்கத்தை நிறைவேற்ற இந்தியா முழுமைக்குமான புதிய கல்வித்திட்டத்தை வகுக்க 2015 இல் முடிவெடுத்தது. இதன்படி, மேனாள் அமைச்சரவைச்செயலர் திரு தி.சீ.இர.சுப்பிரமணியன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. மே 2016 இல் இக்குழு அறிக்கை அளித்தது. இதில் சில உள்ளீடுளைமத்திய அரசு சேர்த்தது. உள்ளீடுகள், முன்வைப்புரைகள் அடிப்படையில் அறிக்கை அளிக்க முனைவர் கத்தூரிரங்கன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இதில் தலைவருடன் 7 உறுப்பினர்களும் ஒரு செயலரும் உள்ளனர். இக்குழு திசம்பர் 15, 2018 இல் மத்திய அரசிற்கு அறிக்கை அளித்தது. இதன் அடிப்படையிலான கருத்துகளையே மத்திய அரசு இப்பொழுது கேட்டுள்ளது.
புதிய கல்வித்திட்டம் 2019இன் வரைவு மனித வள மேம்பாட்டுத் துறை இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
“பண்டைய இந்தியாவில் முதன்முதலில் முகிழ்த்த கல்விமுறை வேதம் சார்ந்த கல்வி முறை என்று அறியப்படுகிறது” என 2016 ஆம் ஆண்டு கல்விக் கொள்கை கூறுகிறது. இத்தவறான எடுகோளின் அடிப்படையிலான இப்போதைய அறிக்கை எங்ஙனம் கண்ணோட்டமின்றி நடுவுநிலைமையுடன் ஆராய்ந்து இருக்க முடியும்? மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் இந்தி, சமற்கிருதத் திணிப்புக் கொள்கையில் மாற்றம் இருக்காது என்பது தெரிந்ததுதான். எனவே,இத்திட்ட வரைவில் உள்ள இந்தி, சமற்கிருத மொழித்திணிப்புகளைத் தனியே பார்க்கலாம். இப்பொழுது இத்திட்டம் சமச்சார்பில் இலலை என்பதையே சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
திட்டவரைவை வெளியிட்டுக் கருத்து கேட்கும் மத்திய அரசு முதலில் என்ன செய்து இருக்க வேண்டும்? திட்ட வரைவு முடிவாகும் முன்னரே மக்களிடம் வினா நிரல் அளித்துப் புதியக் கல்வித்திட்டம் குறித்த கருத்துருக்களைப் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை.
திட்ட வரைவு உருவாக்குவதற்காக மத்திய அமைச்சுத் துறைகள், அமைப்புகள், நிறுவனங்கள் என 74 அமைப்புகளிடம் கலந்து பேசியுள்ளது. இவற்றில் ஒன்றுகூடத் தமிழ் நாட்டில் இல்லை.
217 வல்லுநர்களிடம் கலந்து பேசியுள்ளது. அவர்களுள் எண்மர் தமிழ்நாட்டவர். எண்மரில் நால்வர் வேலூரில் உள்ளவர்கள். சென்னையிலுள்ள இந்தியத் தொழில் நுட்பக்கழகத்தில் இருந்து இருவரும் திருச்சிராப்பள்ளியில் உள்ள இ.தொ.க.(ஐ.ஐ.டி.)-இல் இருந்து ஒருவரும் மதுரை காமரசார் பல்கலைலக்கழகத்தில் உள்ள மனிதவளமேம்பாட்டு மையத்தில் இருந்து ஒருவரும் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழ்க்கல்வியாளர் ஒருவரும் கலந்து பேசப்படவில்லை. இந்தியாவில் உள்ள உலக மூத்த செம்மொழியான தமிழ்க்கல்வி பற்றி ஆராயாத திட்ட அறிக்கை எப்படி நடுவுநிலைமையுடன் இருக்கும்?
கல்வியில் மொழி, கலை, பண்பாடு முதன்மைப் பங்கு பெற வேண்டும். எனவேதான், திட்ட அறிக்கை சமற்கிருதத்தில் உள்ள அறிவுப்புலங்களைப் போற்றுகிறது.  
பிற மொழிக்கல்வி என்னுமிடத்தில் எடுத்துக்காட்டிற்காகத் தமிழைக் குறிப்பிடும் கல்வித் திட்டக்குழுவினர் தமிழை அறியாதவர்கள் எனக் கூற இயலாது. ஆனால், என் செய்வது? இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி என்பது மத்திய அரசின் கொள்கையாக உள்ளது. அதற்கேற்ப இந்தி,  சமற்கிருத முதன்மையில் புதிய கல்வித் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதுதானே இலக்காக இருக்க முடியும்?  அதனைச் செவ்வனே செய்துள்ளனர்.
புதிய கல்வித் திட்டக் குழுவினருக்குத் தமிழ்நாட்டில் தமிழ்ப்பல்கலைக்கழகம் இருப்பது தெரியாதா? வேறு பல்கலைக்கழகங்கள் இருப்பதுதான் தெரியாதா? இருந்தால் அவர்களுக்கு என்ன என்கிறீர்களா? ஆமாம், இப்பல்கலைக்கழகம் சார்ந்தவர்களைக் கலந்து பேசவேண்டும் என்பது அவர்கள் தலையெழுத்தா என்ன?
புதிய கல்வித்திட்டம் மாநிலக் கல்விக்கு – மண்ணின் மக்களுக்கு உரிமை கொடுக்கும் வகையில் அமையவில்லை. அவ்வாறிருக்க எதற்கு இவர்களைக் கேட்டு நேரத்தை வீணாக்குவத? எனவேதான் புதிய  கல்வித் திட்டக்குழுவினர் தமிழறிஞர்களையோ தமிழ்க்கல்வியாளர்களையோ கலந்து பேசவில்லை. எனவே, புதிய கல்வியில் தமிழுக்குப் பாதுகாப்பு இல்லை.
தொடக்கத்தில் குறிப்பிட்டதுபோல், தேசியக் கல்வித்திட்டம் எந்தெந்த வகைகளில் இந்தியையும் சமற்கிருதத்தையும் திணிக்கிறது?  அயல்மொழித் திணிப்புகளுக்காகத் தாய்மொழியைச் சிதைத்து மாணவர் கல்விக்கு எவ்வாறு கேடு விளைவிக்கிறது? மாணாக்கர்கள் மேல் எவ்வாறு மொழிச் சுமையை ஏற்றுகிறது? பைந்தமிழ் கொண்டு பாராண்ட தமிழினத்தை எங்ஙனம் பாழ்படுத்துகிறது? என்பனபற்றித் தனியே பார்ப்போம். வாய்ப்பிருப்பின் உரையரங்கம் நடத்துவோம்.
நாம் அறிய வேண்டியதெல்லாம் தேசியக் கல்வித் திட்ட உருவாக்கத்தில் தமிழாய்ந்த தமிழறிஞர்களின் கருத்துகளைக் கேட்கவில்லை. எனவே, நாம் இதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
சமநிலையில் கருத்தறிந்து திட்டமிடப்படாத தேசியக் கல்வித் திட்டத்தால்  தேசிய மொழியினர் எதிர்த்துத் திரள்வது ஆட்சிக்கு முடிவு கட்டுவதாக அமையும். எனவே, ஆட்சியைத் தற்காத்துக் கொள்ளவாவது கல்வித்திட்டத்தை மாநிலப்பட்டியலில் சேர்த்து மாநிலத் தன்மைக்கேற்ப கல்வித் திட்த்தை வகுக்க ஆவன செய்ய  மத்திய அரசை வேண்டுகிறோம். மத்திய அரசின் இணக்கத்தில் உள்ள தமிழக அரசும் இதற்கான முன் முயற்சி எடுக்க வேண்டுகிறோம். 
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.( திருவள்ளுவர், திருக்குறள் 435)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல

Sunday, May 12, 2019

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 101-110 : இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல


வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 101-110

(குறள்நெறி)

  1. (பயனும் நன்மையும் நல்கும்) இன்சொல் கூறு!
  2. எக்காலமும் இன்பம் தரும் இன்சொல் பேசு!
  3. இன்சொல் இனிமை தருகையில் வன்சொல் பயன்படுத்தாதே!
  4.  (பழமிருக்கக், காய் உண்டல் போன்று,) இன்சொல் இருக்க, இன்னாத கூறாதே!
  5.  (வையகமும் வானகமும் ஈடாகா வண்ணம்) உதவாதவர்க்கும்  உதவி செய்!
  6.  உற்றநேரத்தில் உதவு!  
  7. பயன்கருதாமல் உதவி செய்!
  8. (பயன்தெரிவார்க்குப் பனையளவாகும் வண்ணம்) திணையளவு செயலேனும் செய்!  
  9. உதவப்பட்டோரின் எண்ணத்திற்கேற்ப உதவியை மதிப்பிடு!
  10. தூயவர் உறவை மறக்காதே!
(தொடரும்)
இலக்குவனார்திருவள்ளுவன்
[காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 111-120]

Saturday, April 27, 2019

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 91-100 : இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல


வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம்

(குறள்நெறி)

91. விண்ணகத்தாரின் விருந்தினன் ஆக, வந்த விருந்தினரை அனுப்பிப் புது விருந்தினரை எதிர்பார்!
92. அளவிடற்கரிய பெருமை அடைய, விருந்தோம்பு!
93. விருந்தினரைப் பேணாது ஈட்டிய பொருளை இழந்து வருந்தாதே!
94. விருந்தினரைப் பேணா மடமையால், செல்வமிருந்தும் வறுமை யாளனாகாதே!
95. மாறுபட்டுப் பார்த்து விருந்தினரை வாட விடாதே!
96. வஞ்சனையற்ற இன்சொல் கூறி அறவாணனாக விளங்கு!
97. மனமுவந்து கொடுப்பதைவிட மேலான முகமலர்ச்சியாய் இரு!
98. அனைவரிடமும் இன்சொல் கூறித் துன்பத்தைத் துரத்து!
99. பணிவையும் இன்சொல்லையும் அணிகளாகக் கொள்!
100. இனியன பேசி அல்லவை தேய்த்து, அறம் பெருக்கு!
(தொடரும்)
இலக்குவனார்திருவள்ளுவன்

Thursday, August 9, 2018

அண்ணாவின் அருகே தம்பியின் துயிற் பேழை – காரணர்களுக்கு நன்றி. : இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

அண்ணாவின் அருகே தம்பியின் துயிற் பேழை

– காரணர்களுக்கு நன்றி.

  இந்திய நாட்டின் மூத்த தலைவரும் தி.மு.க.வின் தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி நோய்வாய்ப்பட்டு மரண வாயிலை நெருங்கும் பொழுதே குடும்பத்தினர் அடக்கம் செய்யும் இடம்பற்றி முடிவெடுத்துள்ளனர். எனவேதான் இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திரர்(மோடி) அவரைப் பார்க்க வரும்பொழுதே சென்னைக் கடற்கரையில் அறிஞர் அண்ணா நல்லடக்க இடத்தருகே இடம் ஒதுக்க ஏற்பாடு செய்து தருமாறு வேண்டியுள்ளனர். பின்னர் தமிழக முதல்வரை மூத்த தி.மு.க.தலைவர்களும் குடும்பத்தினரும் சந்தித்து விண்ணப்பம் கொடுத்து இடம் ஒதுக்க வேண்டியுள்ளனர்.
  ஆனால், தொடக்கத்தில் தமிழக அரசு இவ்வேண்டுகோளை மறுத்துவிட்டது. இதற்காகக் காழ்ப்புணர்ச்சியால் பாசகவும் அதிமுகவும் வேண்டுகோளை நிறைவேற்றவில்லை என்பது சரியாகப் படவில்லை.
  பாசக அரசியல் பேர அடிப்படையில் கூட்டணி, ஒத்துழைப்புபோன்ற எதையும் எதிர் நோக்கியிருக்கலாம். ஆனால் பாசக முதலான அனைத்துக் கட்சியினருமேஇந்திய அரசியலில்  பல திருப்புமுனைக்குக் காரணமாக இருந்த கலைஞர் கருணாநிதியை இந்தியத் தலைவராகக் கருதி அதற்குரிய மதிப்பை அளித்துள்ளனர். எனவேதான்  நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திராத அவருக்காக மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டையும் ஒத்தி வைத்துள்ளனர். இதனால் எல்லாம் பாசகவிற்குத் தமிழ்நாட்டில்  வாக்கு விழுந்துவிடாது. எனவே, காழ்ப்புணர்ச்சியின்றி மதிப்பளித்து உள்ளார்கள் என்றுதான் பாராட்ட வேண்டும்.
  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காந்தி மண்டபம் அருகே 2 காணி நிலம் தருவதாகவும் வேறிடம் கேட்டாலும் தருவதாகவும் அரசு மதிப்புடன் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கும் முன்னரே முதல்வரும் அமைச்சர் பெருமக்களும் காவேரி மருத்துவமனை சென்று மேனாள் முதல்வர் நலம்குறித்து உசாவி வந்துள்ளனர். மேனாள் முதல்வர் செயலலிதா இருந்தால் இதற்கான வாய்ப்பு இருந்திருக்க வாப்பில்லை. ஒருவேளை அவர் அதிரடியாக நேர் மாறாகவும் இருந்திருக்கலாம். அண்ணா சதுக்கத்தில் இடம் தர இயலாமைக்குச் சட்டச்சிக்கல்தான் காரணம் என்பதையும் முதல்வர் விளக்கியுள்ளார்.
  தங்கள் தங்கத்தலைவிக்கு இடம் ஒதுக்கி அடக்கம் செய்ததை எதிர்த்து வழக்கு தொடுத்தவர்களின் தலைவருக்கு இடம் தந்தால் கட்சியில் கொந்தளிப்பு ஏற்படலாம். நாளை வழக்கு முடிவு மாறுபட்டு இருந்தால் நல்லடக்கம் செய்ததைத் தோண்டி அப்புறப்படுத்தும் நிலையும் வரலாம். எனவேதான் இந்தக் கூற்று. இதன் மூலம் தங்களுக்குள்ள சிக்கலைப் போக்க எண்ணி இறுதியில் அதில் வெற்றியும் பெற்றுள்ளளனர்.
 உயர் நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்திற்கு மேல் முறையீட்டிற்குப் போகாமையே அவர்களின் காழ்ப்புணர்ச்சி யின்மையைக் காட்டுகிறது. ஆனால், சூழ்நிலை மாறியிருந்து திமுக ஆட்சியில் செயலலிதாவிற்கு நல்லடக்க இடம் கேட்டிருந்தால், மேனாள் முதல்வர் காமராசர், மேனாள் முதல்வர் சானகியம்மாள் ஆகியோருக்கு இடம் ஒதுக்காததுபோல் குற்றவாளி என்பதையும் கூறி  மறுத்திருக்கவே வாய்ப்பு உள்ளது.
 ஆனால், மக்கள் வேறு வகையாகப் பார்க்கின்றனர். காந்தி மண்டபம் அருகே முதல்வர் எனச் செயலலிதாவிற்கு இடம் ஒதுக்கவில்லை. தங்கள் புரட்சித்தலைவருக்கு அடுத்த நிலையில் இருந்து கட்சியைக் காத்தவர் என அவருக்கு அருகேதான் ஒதுக்கியுள்ளனர்.
  இதுபோல் திமுகவின் தலைவர் அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு கட்சியைக் காத்தவர் என்ற முறையில் கலைஞர் கருணாநிதிக்கும் அவர் அருகேதான் இடம் ஒதுக்க வேண்டும் என்பது திமுகவினரின் கருத்து மட்டுமல்ல. பெரும்பாலான பொதுமக்களும் அவ்வாறுதான் கருதினர்.
  கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருக்கும்பொழுது மறைந்தால்தான் அறிஞர் அண்ணாவின் அருகே அடக்கம் செய்ய இயலும். இல்லையேல் அறிவாலயத்தில்தான் அடக்கம் செய்ய வேண்டிவரும். எனவே, அவர் மறைவின்பொழுது ஆட்சியில் இருக்க வேண்டும் எனத் திமுக தொண்டர்கள் பலரும் கூறியுள்ளனர். கலைஞர் கருணாநிதியும் அவ்வாறு எண்ணம் கொண்டுள்ளதாகவும் கூறுவர். ஆனால், எதிர்க்கட்சியாக இருந்தபொழுதும் அவரும் தொண்டர்களும் விரும்பியவாறு அறிஞர் அண்ணாவின் அருகேயே தம்பி கருணாநிதிக்கும் இடம் ஒதுக்கப்பட்டுவிட்டது.
  13 முறை  சட்ட மன்ற உறுப்பினராகவும் ஒரு முறை சட்ட மேலவை உறுப்பினராகவும் 5 முறை முதல்வராகவும்  நாட்டின் தலைமையமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட வழிகாட்டியாகவும் விளங்கிய மாபெரும் தலைவர்கலைஞர் கருணாநிதி; அவர் விரும்பியவாறும் மக்கள் விரும்பியவாறும் அறிஞர் அண்ணாவின் துயிற்பேழை அருகே தம்பி கலைஞர் கருணாநிதியின் துயிற்பேழையையும் அடக்கம் செய்ய முடிந்துள்ளது.
  இதற்கு ஏற்ப சென்னைக் கடற்கரையில் அடக்கம் செய்ய இசைவளித்துத் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி (பொறுப்பு)  குலுவாடி இரமேசு (Huluvadi G. Ramesh) நீதிபதி சுந்தர் ஆகியோருக்கும் தடையை விலக்கும் வகையில் வழக்குகளைத் திரும்பப் பெற்றவர்களுக்கும் வில்சன், வீர கதிரவன், ஆர்.விடுதலை ஆகிய வழக்குரைஞர்களுக்கும் தீர்ப்பினைச் செயல்படுத்திய தமிழக அரசிற்கும் கோரிக்கை வைத்த திமுகவின் குடும்பத்தினருக்கும் தலைவர்களுக்கும் நன்றியைத் தெரிவிக்கிறோம்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். (திருவள்ளுவர், திருக்குறள் 666)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல

Followers

Blog Archive