வருகின்ற ஆண்டுகள் இன்பம் தருகின்ற ஆண்டுகளாகட்டும்!

  வரும் தை முதல் நாள் திருவள்ளுவர் 2046 ஆம் ஆண்டுப்பிறப்பு வருகிறது. அதற்கு முன்னால் மார்கழி 17 அன்று 2015ஆம் ஆண்டு பிறக்கிறது.
  ஒவ்வோர் ஆண்டையும் நாம் நம்பிக்கையோடுதான் எதிர்பார்க்கி்றோம்! ஆனால், எண்ணிய யாவும் எய்துவதில்லை. இருப்பினும் வரும் ஆண்டு தமிழர் உரிமை எய்தும் ஆண்டாக அமையும் என எதிர்பார்ப்போம்! வெறும் எதிர்பார்ப்பு பயனைத் தராது அல்லவா? எனவே, தமிழர்களின் தேசிய மொழி தமிழே என்பதையும் தமிழர்களின் இனமும் தமிழே என்பதையும் தமிழுக்குத் தலைமையும் தமிழர்க்கு முதன்மையும் உள்ள உரிமை ஆட்சியில்தான் நாம் மகிழ்வுறமுடியும் என்பதையும் அப்பொழுதுதான் உலகத் தமிழர்கள் விடியலைக் காண்பார்கள் என்பதையும் நாம் உலகிற்கு உணர்த்துவோம்!
  தமிழன்பர்கள் திருவள்ளுவர் ஆண்டிற்கு வாழத்து தெரிவிப்பதுடன் தங்கள் கடமை முடிந்துவிட்டது என எண்ணுகிறார்கள். இவ்வாண்டு முறையை நாம் எல்லா இடங்களிலும் பயன்படுத்தினால்தானே இது நிலைக்கும். அரசின் ஆணைகளில் சில துறைகளின் மடல்களில் திருவள்ளுவர் ஆண்டு இடம் பெறுகின்றது. ஆனால், அரசு நிகழ்வுகளிலும் தனிப்பட்ட நிகழ்வுகளிலும் அடிக்கல்நாட்டு விழா அல்லது தொடக்கவிழா முதலான கல்வெட்டுகளிலும் திருவள்ளுவர் ஆண்டு குறிக்கப்பெறுவதில்லை. தமிழ் ஆசிரியர்கள், தமிழ்த்துறையினர் குடும்ப நிகழ்வு அழைப்பிதழ்களில் திருவள்ளுவர் ஆண்டைக் காண இயலுவதில்லை. இலக்கிய இதழ்களில் திருவள்ளுவர் ஆண்டு இடம் பெறுகின்றது. இதழாசிரியர்கள் இதழ் நிகழ்வுகளிலும் குடும்ப நிகழ்வுகளிலும் திருவள்ளுவர் ஆண்டு புறக்கணிக்கப்படுகின்றது. தமிழ்ச்செம்மொழி மத்திய நிறுவனத்திலும் திருவள்ளுவர் ஆண்டு பின்பற்றப்படுவதில்லை. பெரும்பான்மைக் கிறித்துவ தமிழன்பர்கள், திருவள்ளுவர் ஆண்டைக் குறிப்பிட்டால் கிறித்துவ ஆண்டை இழிவுபடுத்துவதாகத் தவறாக எண்ணுகிறார்கள். நாம் நடைமுறை கருதி இரண்டையும்தான் குறிக்குமாறு கூறுகிறோம். கிறித்துவராகத் திருவள்ளுவரைக் கொண்டாடுநருக்கும் திருவள்ளுவர் ஆண்டு என்பது தீண்டத்தகாததாகவே உள்ளது. இந்நிலை மாற வேண்டும்.
  தமிழராகப் பிறந்தவர்கள் எங்கிருந்தாலும் எவ்வலுவலில் இருந்தாலும் எந்நேர்வாக இருந்தாலும் திருவள்ளுவர் ஆண்டைக் குறிக்க வேண்டியது தம் கடமை என எண்ணிச் செயல்பட வேண்டும்.
  தமிழ்வழிக்கல்விக்கு மூடுவிழா நடத்தினால் அவர்களுக்கு ஓடுவிழா நடத்த மக்கள் அணியமாக இருப்பர் என்பதை ஆட்சியாளர்களுக்கு உணர்த்த வேண்டும்!
  தமிழ்ப் பெயரில்லா படங்களையும் தமிழைக் கொலை செய்யும் ஊடகங்களையும் தமிழ்ப்பண்பாட்டிற்கு எதிரான படைப்புகளையும் தமிழ்நாட்டிலிருந்து அகற்ற வேண்டும்!
  தமிழ் என எண்ணும் பொழுது தாம் சார்ந்துள்ள கட்சி, சமயம்,சாதி முதலான பாகுபாடுகளைத் தூக்கி எறிய வேண்டும்!

தமிழ் ஈழ மக்களின் படுகொலைக்குக் காரணமானவர்கள் யாராயிருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் தமிழ் ஈழம் உரிமை பெற்றுத் தனியரசாய்த் திகழ வேண்டும் என்பதையும் இதற்கு எதிரான அரசியல்வாதிகளையும் கலைஞர்களையும்இருக்கின்ற இடம் தெரியாமல் ஆக்க வேண்டும்!
எழுத்தையும் மொழியையும் காத்து இனத்தைக் காப்பதில் உறுதி கொள்ள வேண்டும்!
“தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு! ” என்பதைச் செயற்படுத்திக் காட்ட வேண்டும்.
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்
நீள்வினையான் நீளும் குடி
(திருவள்ளுவர், திருக்குறள் 1022)
 அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழ் 59 feat-default
இதழுரை
மார்கழி 13, 2045 / திசம்பர் 28, 2014

[புத்தாண்டு வாழ்த்தும் வேண்டுகோள்களும், 2014 ]