தமிழகச்சட்டமன்றத்தை ஆங்கிலமன்றமாக்குவோர் மீது
நடவடிக்கை தேவை!
தமிழ்மக்களுக்கான
தமிழ்நாட்டின்சட்டமன்றத்தை ஆங்கில மன்றமாக ஆக்கும் முயற்சியில் தி.மு.க.
உறுப்பினர்கள் ஈடுபட்டுவருவது கண்டிக்கத்தக்கது. இது குறித்து
அமைதிகாத்து ஆங்கிலக்காவலர்களாக விளங்கும் தி.மு.க. முன்னணியினரும்
கண்டிக்கத்தக்கவர்களே! எனவே, விரைவில் தி.மு.க.தலைவர் கலைஞர் மு.கருணாநிதி
இவர்களை அழைத்துக் கண்டித்தும் அறிவுறுத்தியும் பொதுவிலும் அறிக்கை விட
வேண்டும்.
முதலில் மேனாள் அமைச்சர் பழனிவேல்இராசனின்(P.T.R.) மகன் தியாகராசன் ஆங்கிலத்தில் பேசினார். அடுத்து மேனாள்அமைச்சர் த.இரா.பாலு (T.R.Balu)வின் மகன் இராசா ஆங்கிலத்தில் பேசியுள்ளார்.
இவர்கள் கூறும் சப்பைக்கட்டு,
முதல்வருக்கு ஆங்கிலம் தெரியும் என்பதுதான். முதல்வர் வேறு பிற மொழிகளையும்
அறிவார். அப்படியானால் அந்த மொழிகளிலும் இனிப் பேசுவார்களோ? அல்லது
முதல்வருக்குத் தமிழ் தெரியாது என்கின்றனரா?
மேலும் சட்டமன்றத்தில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசலாம் என விதி உள்ளதால் ஆங்கிலத்தில்பேசுவதாகவும் கூறுகின்றனர்.
தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்த பொழுது
பிற மொழி பேசும் பகுதியும் இணைந்திருந்தது. எனவே, தமிழ்நாடு மொழிவழித்
தனிமாநிலமாகப் பிரிக்கப்பட்ட பொழுது இங்கேயே தங்கியுள்ள பிற மொழியினர்
உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவரவர் மொழியில் பேசக்கூடாது
என்பதற்காகப் பொதுமொழியான ஆங்கிலத்திலும் பேசலாம் என்று விதி வகுத்தனர்.
தமிழ்அறியாமலிருந்தால் நியமன உறுப்பினரான ஆங்கிலோ இந்திய வகுப்பைச்
சேர்ந்தவர் ஆங்கிலத்தில் பேசினால் பொருளுண்டு. தமிழ் உறுப்பினர்கள் தமிழில் பேசாமல் பிற மொழிகளில் பேசுவதென்பது ஏற்கக்கூடியதல்லவே!
சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற அவையில் உள்ள அனைவருக்கும் தத்தம்
தொகுதியினருக்கும் புரியும் வகையில் தமிழில் பேசுவதே முறையாகும் என்பது
அனைவரும் அறிந்ததே!
தமிழால் வளர்ந்த தி.மு.க. தமிழ்க்காவலாக விளங்காமல் ஆங்கிலக் காவலாக விளங்குகிறது
என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது. அதற்கு வலு சேர்க்கும் வகையில்
தி.முக. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்கிலத்தில் பேசி அதற்கு முதல்வரும்
ஆங்கிலத்தில் விடையிறுக்க வைத்துத் தமிழகச்சட்ட மன்றத்தை ஆங்கிலமயமாக்க முயல்கின்றனர்.
இவ்வாறு இனி யாரேனும் ஆங்கிலத்தில் பேசினால், முதல்வர், அவர்களிடம் தமிழில் பேசுமாறு அறிவுறுத்தித் தமிழிலேயே விடையிறுக்க வேண்டும். தமிழக மக்களும் இத்தகைய உறுப்பினர்கள் மீண்டும் வெற்றி பெறாவண்ணம் இவர்களைப் புறக்கணிக்க வேண்டும். ஆங்கிலத்தில் பேசியதாகப் பெருமை கொள்ளும் இவர்கள் நாணிக்குனியும் வண்ணம் இவர்களைக் கண்டிக்க வேண்டும்.
தமிழகச் சட்டமன்றம் ஆங்கில அறிவைக் காட்டுவதற்கான மன்றமன்று. ஆங்கிலப்
பேச்சுத்திறன் வேறு, ஆங்கிலப் புலமை வேறு! ச.ம.உறுப்பினர்களுக்கு
உண்மையிலேயே ஆங்கிலப் புலமை இருப்பின், தமிழ் ஆங்கில ஒப்பிலக்கியப்
பணிகளிலும் மொழி பெயர்ப்புப்பணிகளிலும் தொண்டாற்றி விருதுகள் பெறட்டும்.
நாமும் வாழ்த்துவோம்!
கலைஞர் மு.கருணாநிதிக்கு இருக்கும்
தமிழுணர்வும் படைப்புத்திறனும் அவர் குடும்பத்தில் யாருக்குமில்லை என்பது
உண்மைதான். என்றாலும் தி.முக.வின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக
இருக்கும் மு.க.தாலின், மக்கள் மன்றம் மக்கள் மொழியிலேயே நடைபெறவேண்டும் என்பதைப் பேணிக்காப்பதில் கருத்து செலுத்தவேண்டுமல்லவா? ஆதலின் விலக்காகப் பின்பற்ற வேண்டிய விதியை வழக்கமாகக் கொள்ளும் தன் கட்சி உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இதே நேரத்தில் மற்றொன்றையும் குறிப்பிட விரும்புகிறோம். தி-மு.க. உறுப்பினர் தியாகராசன் பாண்டித்துரை(த்தேவர்) அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மதுரைத் தமிழ்ச்சங்கத்தைத் தன் தாத்தா தொடங்கி நிதியுதவி வழங்கியதாகப் பேசியது குறித்து முன்னர்க் குறிப்பிட்டிருந்தோம். ஆனால், அவர், அவ்வாறு பேசவில்லை என்பதுபோல் சொல்லி வருவதாகக் கேள்விப்பட்டோம்.
தி.மு.க. (சார்பு) இதழான தினகரன் நாளிதழில்தான்
“எனது தாத்தாதான் மதுரை தமிழ் சங்கத்தையும், திருவள்ளுவர் கழகத்தையும் தொடங்கி நிதி கொடுத்து, பல வகையிலும் தமிழை வளர்த்துவந்தார்.”(http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=234475)
என இவர் பேசியதாக வந்துள்ளது. இது தவறு
எனில் தினகரன் வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதன்பின்னர் நாமும் வருத்தம்
தெரிவிக்கலாம். ஆனால், அவ்வாறில்லாமல் பேசியது உண்மை எனில், பேரவைத்தலைவர் நடவடிக்கை எடுக்கும் முன்னர்ச் சட்டமன்றத்தில் உறுப்பினர் தியாகராசனே இது குறித்து வருத்தம் தெரிவித்து, இப்பேச்சைச் சட்டமன்றக் குறிப்பேட்டிலிருந்து நீக்க வேண்டுகோள் விடுக்க வேண்டும்.
தி.மு.க.தலைவர் கலைஞர் மு.கருணாநிதி இதுகுறித்து அமைதிகாக்காமல், இவரைக் கண்டித்து இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், சட்டமன்றத்தில் இனித் தமிழில்
பேசாமல் ஆங்கிலத்தில் பேசினால் அவ்வாறு பேசுபவர்களைக் கட்சியிலிருந்து
நீக்க வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து தமிழைத் துரத்துவதற்குச்
சட்டமன்றத்தையும் கருவியாகக் கொள்ள இடந்தரக்கூடாது.
தமிழ்நாடு, தமிழ் பேசும் தமிழர்நாடே!
பிறமொழி வாணர்கள் வெளியேறுவது
அவர்களுக்கும் நாட்டிற்கும் நல்லதே!
எண்ணுவோம் தமிழில்! பேசுவோம் தமிழில்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 147, ஆடி 30 , 2047 / ஆக.14, 2016
No comments:
Post a Comment