திறமையால் உயரமான பன்மொழி நடிகர் கிங்காங்கு
?] வணக்கம் கிங்காங்கு அவர்களே! முதலில் உங்கள் அப்பா – அம்மா பெயர், எப்படிப் படித்தீர்கள் போன்ற உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை விவரங்களைக் கூறுங்களேன்!
என்னுடைய சொந்தப் பெயர் சங்கர்.
சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பக்கத்தில் உள்ள வரதராசபுரம்
எனும் சிற்றூர். என் அப்பா பெயர் ஏழுமலை. அம்மா பெயர் காசியம்மாள். என்
உடன்பிறந்தவர்கள் அக்கா ஒருவர், தங்கைகள் மூன்று பேர். அக்கா பெயர்
மகாதேவி, தங்கை பெயர் தேன்மொழி. இன்னொரு தங்கையின் பெயர் சரளா. கடைசித்
தங்கையின் பெயர் சித்திரா. நான் ஐந்தாவது வரைதான் படித்திருக்கிறேன்.
எங்கள் ஊரான வரதராசபுரத்திலிருந்து பள்ளிக்குப் போக வேண்டிய ஊர்
தென்னாத்தூர். ஒன்றரைப் புதுக்கல் தொலைவு. நடந்தே போவேன். வழியெல்லாம்
வயலாக இருக்கும். நாங்கள் ஐந்தாறு பிள்ளைகள் சேர்ந்து ஒன்றாகப் போவோம்.
அப்படித்தான் ஐந்தாவது வரை படித்தேன். அப்பொழுதுதான் என் ஒன்றாம் வகுப்பு
ஆசிரியர், “படித்து என்ன செய்யப் போகிறாய்? நீ படித்து என்ன ஆட்சியராகவா
ஆகப் போகிறாய்? உன்னுடைய உயரத்துக்கு நீ திரைப்படத்தில் நடிக்கப் போனால் கண்டிப்பாக வாய்ப்புக் கிடைக்கும். முயற்சி செய்!” என்று முதன் முதலில் கூறினார்.
?] முன்பெலலாம் நாடகம் மூலம்தான் திரைப்படத்திற்கு வந்துள்ளனர். நீங்கள் எப்படி..?
நானும் அப்படித்தான் வந்தேன். ஒருமுறை
பக்கத்து ஊரில் ஒருவர் நாடகம் நடத்தினார். ஓரங்க நாடகம் மாதிரி நடத்துவார்
அவர். “அந்த நாடகத்தில் நடிக்கிறாயா” என்று என்னை வந்து கேட்டார். நான்,
“எனக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. என் அம்மா அப்பாவை வேண்டுமானால்
கேட்டுப் பாருங்கள்” என்று கூறினேன். அப்பா அம்மாவிடம் வந்து கேட்டார்கள்.
அவர்கள் மிரண்டு “இல்லை. எங்கள் பிள்ளையை நாங்கள் எங்கும் வெளியே அனுப்ப
மாட்டோம். வேண்டா!” என்று சொன்னார்கள். அதற்கு அந்த நாடகம் நடத்தும்
முதலாளி, “ஒன்றும் அஞ்ச வேண்டியதில்லை. நான் பாதுகாப்பாகக் அழைத்துச்
சென்று பாதுகாப்பாக மீண்டும் அழைத்துவந்து வீட்டில் விட்டு விடுவேன்.
நாடகத்தில் நடிப்பது நன்றாக இருக்கும்” என்று சொல்லி எனக்கு வாய்ப்பு
கொடுத்தார். நான் திரையுலகுக்கு வருவதற்கு முன்பு நாடகத்தில்தான் நடித்துக் கொண்டிருந்தேன். நாடகங்களில் பொதுவாக நான் கோமாளிப் பாத்திரம் ஏற்று நடிப்பது வழக்கம்.
?] அப்படி எத்தனை நாடகங்கள் நடித்திருப்பீர்கள்?
நாடகங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் நடித்தேன். ஐந்நூறு நாடகங்களுக்கு மேல்
இருக்கும். அப்பொழுது மக்களிடம் எனக்கு நல்ல வரவேற்பு. நான் செய்த
நகைச்சுவையையெல்லாம் பார்த்து மக்கள் நன்றாகப் பாராட்டினார்கள்;
வாழ்த்தினார்கள். அப்பொழுதுதான் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் “நீ
திரைப்படத்தில் நடிக்கச் சென்றால் கண்டிப்பாக வாய்ப்புக் கிடைக்கும்.
முயற்சி செய்!” என்று சொன்னார்கள். அதற்குப் பிறகுதான் சென்னைக்கு வந்து,
திரைப்பட நிறுவனங்கள் ஒவ்வொன்றாக ஏறி இறங்கி, நிறைய இயக்குநர்களைச்
சந்தித்தேன். அப்பொழுது எனக்கு முதன் முதலில் வாய்ப்பளித்துத் திரையுலகுக்கு என்னை அறிமுகப்படுத்தியவர் என் ஆசான் ‘கலைப்புலி’ திரு.சேகரன் அவர்கள். படம் ‘ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்’.
?] நீங்கள் வாய்ப்பு கேட்டவுடன் கொடுத்துவிட்டாரா?
நான் போய் முதலில் அவரிடம் வாய்ப்பு
கேட்டபொழுது, “உனக்குத் தெரிந்தது என்ன?” என்று கேட்டார். நான் “நன்றாக
ஆடுவேன்” என்று தெரிவித்தேன். அந்தப் படத்தின் பாடலை ஓட விட்டார். ஏதோ
எனக்குத் தெரிந்ததை ஆடினேன். “மிகவும் நன்று” என்று பாராட்டினார். நான்
நடிகர் சாக்கி சான் அவர்களைப் போல சண்டைக்கலை வித்தைகள் செய்வேன். அவரைப்
போலவே தாவுவது குதிப்பது போன்றவற்றைச் செய்வேன். அவற்றையும் செய்து
காட்டினேன். அனைத்தையும் பார்த்துப் பாராட்டியவர், மறுநாளே
படப்பிடிப்புக்கு வந்து விடுமாறு கூறினார்.
?] உங்களால் மறக்கமுடியாத அந்த முதல் படிப்பிடிப்புக்காட்சிபற்றிக் கூறுங்களேன்!
மறுநாள் ஒரு பாடல் காட்சி படம் பிடிக்கப்பட்டது. “என்ன சின்னம்?… பானைச் சின்னம்! செயிக்கிறது?… பானைச் சின்னம்!” இதுதான் அந்தப் பாடல் வரி. அந்தப் பாடலில் இந்த வரி வரும்பொழுது நான் பானைக்குள்ளிருந்து வெளியில் வருவேன், முட்டையிலிருந்து கோழி வருவது போல. அதுதான் என்னுடைய அறிமுகக் காட்சி.
அதன் பின் இயக்குநர் கலைப்புலி சி.சேகரனுக்கு என்னை மிகவும் பிடித்துப்
போனது. அதனால், பாதிப் படம் எடுத்து முடிக்கப்பட்டிருந்த நிலையிலும்
எனக்காக நான்கைந்து காட்சிகள் புதிதாகப் படம் பிடித்தார். 1988இல் பொங்கல்
வெளியீடாக வந்த அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது.
?] தொடர்ந்து பட வாய்ப்பு அவரே கொடுத்தாரா?
அதன் பின் அதே கலைப்புலி சி.சேகரன் அவர்கள் ‘காதல் பூனைகள்’
என்று ஒரு படம் எடுத்தார். அந்தப் படத்தில் ஆட்டம், சண்டைக் காட்சி,
நகைச்சுவை என்று பல காட்சிகள் அளித்து என் திறமையை வெளிப்படுத்தினார்.
அந்தப் படத்தில் நான் இடையாட்டம்(தடையாட்டம்-Break Dance) அது, இது என்று
பல ஆட்டங்கள் ஆடினேன்; சண்டை இட்டேன்; நகைச்சுவை செய்தேன். அது நன்றாக
எடுபட்டது. அதன் பிறகு அவர் ‘சமீன் கோட்டை’ என்று ஒரு படம் எடுத்தார்.
அதில் நான் இரட்டைப் பாத்திரம் ஏற்று நடித்தேன். அஃது ஒரு பேய்ப் படம். அது
தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் நன்றாக ஓடியது. இப்படிக் கலைப்புலி
சேகரன் அவர்கள் எந்தப் படம் எடுத்தாலும் எனக்கு நல்ல வாய்ப்பு கொடுப்பார்.
அவருக்கு ‘அகரமுதல’ இதழ் மூலமாக நான் நன்றி சொல்கிறேன்!
அப்புறம் இந்தக் கிங்காங்கு என்கிற பெயர் எனக்கு எப்படி வந்தது என உங்களுக்குக் கேட்கத் தோன்றும். கலைப்புலி சேகரன் அவர்கள்தாம் இந்தப் பெயரை எனக்குச் சூட்டினார்.
நான் நடிக்க வந்தபொழுது சங்கர் என்ற பெயர் மிகவும் வழமையாக இருப்பதாகச்
சொல்லி வேறு பெயர் சூட்டத் திட்டமிடப்பட்டது. ஆளாளுக்கு ஒவ்வொரு பெயர்
சொல்ல, கலைப்புலி சேகரன் அவர்கள்தாம் கிங்காங்கு என்று இந்தப் பெயரைச்
சூட்டினார். தவக்களை, நண்டு என்றெல்லாம் ஏற்கெனவே பெயர்கள் சூட்டி
விட்டார்கள் என்பதால் தனித்துத் தெரிய வேண்டும், அதே நேரம் நாகரிகமான
பெயராகவும் இருக்க வேண்டும் என்று சிந்தித்து எனக்கு இந்தப் பெயரை அவர்
சூட்டினார். குறிப்பாக, கிங்காங்கு என்று அவர் ஏன் பெயர் சூட்டினார்
என்றால், கிங்காங்கு என்று மற்போர் வீரர் ஒருவர் இருந்தார். மிகவும்
பேருருவமாக (பிரம்மாண்டமாக) இருப்பார். முழுக் கோழியை அப்படியே
சாப்பிடுவார். பத்துப் பதினைந்து பச்சை முட்டைகளை ஒரே நேரத்தில்
சாப்பிடுவார். பெரிய பயில்வான் அவர். அவர் பெயரை எனக்கு ஏன் வைத்தார்கள்
என்றால், பெயருக்கும் ஆளுக்கும் தொடர்பே இல்லாமல் இப்படி முரண்பாடாகப்
பெயர் வைத்தால் நகைச்சுவையாக இருக்கும் என்பதற்காகத்தான். ஆடுவதற்காக நிறைய
மேடை நிகழ்ச்சிகளுக்கு நான் போவதுண்டு. அப்பொழுது ஒலிபெருக்கியில்
அறிவிப்பார்கள் “இப்பொழுது கிங்காங்கு அவர்கள் உங்கள் முன்னிலையில்
நடனமாடுவார்” என்று. நான் வந்து நிற்பேன். ஆட்கள் தேடுவார்கள். ‘என்ன?…
கிங்காங்கு என்றார்கள். ஆளையே காணோமே’ என்று. அப்பொழுது என்னை நானே
மக்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்வேன். உடனே எல்லாரும் சிரித்துக்
கைத்தட்டி மகிழ்வார்கள்.
?]எந்தப்படத்தின் மூலம் நீங்கள் வெகுவாகப் புகழ் பெற்றீர்கள்?
மக்களிடம் என்னை வெகுவாகக் கொண்டு சேர்த்த படம் இரசினிகாந்து அவர்களின் ‘அதிசயப் பிறவி’.
அதுதான் மக்களிடம் கிங்காங்(கு) என்ற பெயரைக் கொண்டு சேர்த்தது. அந்தப்
படத்தில் இரசினிகாந்து அவர்கள் கட்டிலில் படுத்திருப்பார். நான் இடையாட்டம்
ஆடுவேன். இதுதான் காட்சி. அதைப் படம் பிடிக்கும் முன் இரசினிகாந்து
அவர்கள் புதுமையாக ஒன்று சொன்னார். “ஒலிநாடாவை நான் ஓட விட்டுக் கொண்டே
இருப்பேன். நீ ஆடிக் கொண்டே இருக்க வேண்டும். சட்டென நான் ஒலிநாடாவை
நிறுத்துவேன். அப்பொழுது நீ அப்படியே பொம்மை போல அசையாமல் நிற்க வேண்டும்.
மீண்டும் நான் விட்ட இடத்திலிருந்து ஓட விடுவேன். நீயும் விட்ட
இடத்திலிருந்து தொடர்ந்து ஆட வேண்டும்” என்றார். நானும் அதே போல் ஆடினேன்.
அதைப் பார்த்து விட்டு அருமையாக இருக்கிறது என்று அவர் பாராட்டினார்.
இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், அந்தப் படத்தில் அவர்
ஆசான்; நான் அவருக்கு அடியவன்(சீடன்) என்றுதான் முதலில்
திட்டமிடப்பட்டிருந்தது. இரசினிகாந்து அவர்கள் அதையும் மாற்றினார். “நீ
ஆசானாக நடி; நான் அடியவனாக நடிக்கிறேன்” என்றார். அதுவும் நன்கு எடுபட்டது.
படத்தில் “குருவே! குருவே!” என்று அவர் என்னைக்
கூப்பிடுவார். அவையெல்லாம் அவர் சொன்ன திட்டங்கள்தாம். அவர் எவ்வளவு பெரிய
உச்ச நடிகர்! அவர் இப்படியெல்லாம் நடிக்க முன்வருவது உண்மையிலேயே பெரிய
மனப்பாங்கு! நடிகர் இரசினிகாந்து அவர்களுக்கும் அவருடன் இப்படியெல்லாம்
நடிக்க வாய்ப்பளித்ததற்காக அந்தக் கடவுளுக்கும் இந்த நேரத்தில் நான் என்
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
?] உங்கள் புகழுக்கு வெளிநாட்டு அன்பர்களும் காரணம் என்று கேள்விப்பட்டுள்ளோம். சரிதானே!
ஆம். உண்மைதான். நானே கூற நினைத்தேன். ‘அதிசயப் பிறவி’ படத்தில் வரும் அந்த இடையாட்டக் காட்சியை இலண்டன் அன்பர் ஒருவர்
உம் குழல்(you tube) -இல் வெளியிட்டு விட்டார். இதுவரை ஒன்றேகால் கோடிப்
பேர் அதைப் பார்த்திருக்கிறார்கள். இலண்டன், கனடா, அமெரிக்கா, ஆத்திரேலியா
போன்ற இடங்களில் அது மிகவும் புகழ் பெற்றது. இளைய உச்சமீன் கிங்காங்கு
(Little Super Star King Kong) என்று விசையைத் தட்டினால் உம் குழல் (you
tube)-இல் அதைக் காணலாம். அதைப் பார்த்து விட்டு இலண்டனிலிருந்து பி.ஒ.நி.(பி.பி.சி.)
தொலைக்காட்சியினர் என்னை அணுகி “உங்களைப் பற்றி ஆவணப் படம் ஒன்று எடுக்க
விரும்புகிறோம். உங்களுக்கு ஒப்புதலா” என்று கேட்டார்கள். கண்டிப்பாகச்
செய்யலாம் என்றேன். அதாவது, இலண்டனில் நகைச்சுவை நிகழ்ச்சிகள்,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தி வரும் (உ)ருமேசு
என்பவர் என்னை வந்து சந்தித்து, அந்த ‘அதிசயப் பிறவி’ பட இடையாட்டத்தை
எப்படி ஆடினேன் என்று கேட்பது போலவும் அதற்கு நான் விடையளிப்பது போலவும்,
பின்னர், அவர் திரைப்படத்தில் கதைத்தலைவனாகத் (கதாநாயகன்) தான் நடிக்க
இருப்பதாகத் தெரிவித்து எப்படி நடிக்க வேண்டும், எப்படிச் சண்டை இட
வேண்டும், எப்படி ஆட வேண்டும் எனவெல்லாம் கேட்பது போலவும்
அவற்றைப்பற்றியெல்லாம் நான் அவருக்குக் கற்பிப்பது போலவும்
படமாக்கினார்கள். அது மிகவும் புகழ் பெற்றது. ‘இலண்டன் உருமேசு’ என உம்
குழல்(you tube) -இல் தேடினால் அந்த ஆவணப் படத்தைப் பார்க்கலாம். அந்த
‘அதிசயப் பிறவி’ப் பட ஆட்டம் அந்த அளவுக்கு உலகெங்கும் சென்று சேர்ந்தது.
அதற்குக் காரணமான அந்தப் பட இயக்குநர் எசு.பி.முத்துராமன் அவர்கள், இரசினி அவர்கள் ஆகியோருக்கு இந்த நேரத்தில் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
?] பிற மொழிப்படங்களில் நடித்துள்ளீர்களா?
இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என ஐந்து மொழிப் படங்களில் நடித்திருக்கிறேன். எல்லா நடிகர்களுடனும் நடித்தாகி விட்டது. இதுவரை ஐந்து உச்ச நடிகர்களுடன் நான் நடித்திருக்கிறேன். தமிழ்
உச்ச நடிகர் இரசினிகாந்து, தெலுங்கு உச்ச நடிகர் சிரஞ்சீவி, கன்னட உச்ச
நடிகர் சிவராசு குமார், இந்தி உச்ச நடிகர் சாருக்கான்… இன்னொரு உச்ச
நடிகருடனும் நடித்திருக்கிறேன். அவர் யாரெனச் சொன்னால் நீங்கள் எல்லாருமே
ஒரு மாதிரிப் புன்னகைப்பீர்கள். அவர் வேறு யாருமில்லை பவர் ஃச்டார்
சீனிவாசன். அவருடனும் நடித்திருக்கிறேன். உண்மையிலேயே இந்த
வாய்ப்புகளுக்காக நான் கடவுளுக்குத்தான் நன்றி செலுத்த வேண்டும்!
?] பிற மொழிப்படம் ஒன்றில் வரும் குறிப்பிடத்தக்கக் காட்சியைக் கூறுங்களேன்!
சாருக்கான் அவர்களின் ‘சென்னை எக்சுபிரசு’
படத்தில் ஒரு வாய்ப்பு வந்தது. அந்தப் படத்தில் வழி தெரியாமல் சாருக்கான்
காட்டுக்குள் வந்து விடுவார். என்னிடம்தான் வழி கேட்பார். அவர் மொழி
எனக்குப் புரியாது; நான் பேசுவது அவருக்குப் புரியாது. அவர் பேசியும்
செய்கையிலும் நெடுஞ்சாலைக்கு எப்படிப் போவது எனக் கேட்பார். நான் வெறுமே
நாக்கைத் தக் தக் எனத் தட்டித் தட்டிப் பேசி அவருக்கு விடையளிப்பேன். அஃது
அவருக்குப் புரியாது. கடைசியில், தலையிலடித்துக் கொண்டு போய் விடுவார்.
அந்தக் காட்சி உலகம் முழுவதும் நன்கு புகழ் பெற்றது. சாருக்கான் மிக எளிமையாக அனைவரிடமும் பழகுகிறார். நல்ல மனிதர்! அவருக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! அந்தப் பட இயக்குநர் உரோகித்து செட்டி நகைச்சுவையை மிகவும் விரும்புபவர். எந்த வகையான நகைச்சுவை நடிப்பையும் விரும்பிப் பார்ப்பவர். அவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்!
?] நீங்கள் குள்ளமாக இருப்பதை நினைத்து என்றாவது வருந்தியதுண்டா?
கண்டிப்பாக வருந்தியிருக்கிறேன்.
பள்ளிக்குச் செல்லும்பொழுது எல்லாப் பிள்ளைகளும் என்னைக் கிண்டல்
செய்வார்கள். நிறைய அழுதிருக்கிறேன். ஒரு காலக்கட்டத்திற்குப் பின், “நாம்
எதற்காக அழ வேண்டும்? கடவுள் நம்மை அப்படிப் படைத்து விட்டான். ஆனால்,
அப்படிப் படைத்த கடவுளே நமக்கு ஏதாவது ஒரு திறமையையும் அளித்திருப்பான்.
நமக்கு என்ன வரும்? நடனம். அதை வைத்து நாம் முன்னேறுவோம்” என்று நினைத்து என் குறைபாட்டைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு என் திறமைகளை வெளியே கொண்டு வந்தேன். நான் இரசினிகாந்த் போல ஆடுவேன்; கமலகாசன் போல ஆடுவேன்; விசயகாந்து போல ஆடுவேன்; எம்ஞ்சியார், சிவாசி ஆகியோரைப் போலவும் ஆடுவேன். ஒரே பாட்டுக்கு வெவ்வேறு நடிகர்கள் ஆடினால் எப்படி இருக்கும் என்று முதன் முதலில் ஆடிக் காட்டி அப்படி ஒரு நாட்டியமுறையை அறிமுகப்படுத்தியதே நான்தான். இப்பொழுது
அதைப் பலரும் செய்கிறார்கள். ஆனால், அந்தக் கருத்துருவாக்கத்தை முதன்
முதலில் கொண்டு வந்தவன் நான்தான். அது மக்கள் மனதில் நன்றாகச் சென்று
சேர்ந்தது.
?] நாட்டியக்குழு எதுவும் நடத்துகிறீர்களா?
இப்பொழுது நான் ‘சிறப்பான
நாட்டியம்’(Best Dance) என்றொரு நடனக்குழுவை நடத்தி வருகிறேன். அதில்
முப்பது உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதன் மூலம் நடனம், பல்கலை
நிகழ்ச்சிகள் (Variety Show) போன்றவை நடத்தப் பெறுகின்றன. அதில் கலந்து
கொண்டு நிகழ்ச்சி நடத்திக் காட்ட நடிகர்களும் வருவதுண்டு; மாற்றுத்
திறனாளிகளும் அந்தக் குழுவில் உண்டு. ஒரு கால் இல்லாதவர் நடனம் ஆடுகிறார்.
இரண்டு கைகளும் இல்லாதவர் அயல்முரசு(Drums) இசைக்கிறார். பார்வையற்றவர்
புல்லாங்குழல் இசைக்கிறார். இப்படித் திறமையான மாற்றுத் திறனாளிகள் பலர் என் குழுவில் இருக்கிறார்கள். அவர்களை வைத்து நான் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன்.
?} வெறும் ஆட்டம்மட்டும்தானா?
ஆட்டம்போல நகைச்சுவையிலும் முயன்றேன். நாம்
உண்மையான வாழ்க்கையில் என்ன செய்கிறோம் என்பதையே நகைச்சுவையாக்கி எனக்கு
ஏற்றபடி எழுத்தாக்கம் செய்து பதினைந்து நிமிட நிகழ்ச்சியாக மேடையேற்றுவேன்.
உடன் நடிக்கும் நடிகர்களுடன் சேர்ந்து அதைச் செய்வதுண்டு. அதுவும்
மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. எனவே, நாம் இப்படிப் பிறந்து விட்டோமே
என்று ஒருபொழுதும் எண்ணக் கூடாது! மாற்றுத்திறனாளிகளுக்கு நான்
சொல்லக்கூடியது அதுதான். நம்மிடம் என்ன இருக்கிறதோ, நம்மிடம் உள்ள திறமை எதுவோ அதை நாம் வெளிப்படுத்த வேண்டும்! கவலையே படக்கூடாது! கடவுள் ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவைக் கண்டிப்பாகத் திறப்பார்!
?] நீங்கள் எத்தனை நாடகங்கள், திரைப்படங்களில் நடித்திருப்பீர்கள்?
தனிப்பட்ட முறையிலும் நான் இதுவரை ஐயாயிரம் ஆறாயிரம் மேடை நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்தியிருக்கிறேன். தமிழ்நாடு மட்டுமில்லை, இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களுக்கும் சென்றிருக்கிறேன். பல வெளிநாடுகளுக்கும் போயிருக்கிறேன். சிங்கப்பூர்,
மலேசியா, இலங்கை, துபாய், தோகா, அபுதாபி, மசுகட்டு இப்படிப் பல
வெளிநாடுகளுக்கு மேடை நிகழ்ச்சிகளுக்காகச் சென்றிருக்கிறேன். மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறேன்! அதே போல் திரைப்படங்களிலும் இதுவரை 255 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன்.
இன்னொரு குறிப்பிடத்தக்க தகவல்
என்னவெனில், 2009ஆம் ஆண்டு திசம்பர் மூன்றாம் நாள் அன்று முன்னாள்
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அவர்கள் கையால் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய விருதை நான் பெற்றிருக்கிறேன்.
மாற்றுத் திறனாளிகள் தங்கள் திறமைகளை வெளிக் கொண்டு வந்தால் அவர்களைப்
பாராட்டி நடுவண் அரசு விருது வழங்குகிறது. அந்த விருது எனக்கு
அளிக்கப்பட்டது. இந்த விருது எனக்குக் கிடைக்கக் காரணமாக இருந்தவர் நடிகர் நெப்போலியன்.
அவர்தாம் அப்பொழுது மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இணையமைச்சராகப்
பொறுப்பேற்றிருந்தார். அவருக்கும், அந்த விருது எனக்குக் கிடைக்க
உறுதுணையாயிருந்த அத்தனை பேருக்கும் இந்த நேரத்தில் என் நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன்!
?] தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி’ விருது உங்களுக்கு வழங்கப்பட்டு விட்டதா?
இல்லை. அஃது இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை. நீங்கள் பரிந்துரை செய்யுங்கள். உங்களைப் போன்றவர்கள் சொன்னால் கண்டிப்பாக நடக்கும்.
நான் பிறந்தபொழுது என் பெற்றோர் “நம்
மகன் இப்படிப் பிறந்து விட்டானே” என்று என்னை நினைத்து மிகவும் வருந்தினர்.
ஆனால், இப்பொழுது அவர்கள் அதை மறந்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
அவர்களுக்கு அப்படி எந்த ஒரு கவலையும் ஏற்படாதவாறு நான் அவர்களை
நல்லபடியாகப் பார்த்துக் கொள்கிறேன். மகனுக்குத் திருமணம் செய்து வைக்க
வேண்டும் என்று என் பெற்றோர் மிகவும் விரும்பினர். நான் தொடர்ந்து மறுத்து
வந்தேன். “எனக்கு யாரம்மா பெண் கொடுப்பார்கள்? வேண்டா! விட்டு விடுங்கள்”
என்றேன். ஆனால், அவர்கள் விடவில்லை. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகப்
பெண் தேடி, அதன் பின் தொலைவான (தூரத்து) உறவில் அத்தை முறை உள்ள ஒருவரின்
மகளைப் பார்த்து மணமுடிக்க ஏற்பாடு செய்தார்கள். ஒருமுறைக்கு இருமுறை
அவருடைய ஒப்புதலைக் கேட்டு அவரை மணம் புரிந்தேன். என் மனைவி பெயர் கலா.
பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். இல்லத்தரசியாக உள்ளார். எங்களுக்கு
மகள் இருவர், மகன் ஒருவர். மூத்த மகள் பெயர் கீர்த்தனா; இரண்டாவது மகள்
பெயர் சக்திபிரியா; மூன்றாவதாகப் பிறந்த மகன் பெயர் துரைமுருகன். அனைவரும்
படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
?] உங்கள் மனைவி உங்களை மணக்க முடிவெடுத்தது பற்றிச் சொல்லுங்களேன்!
திருமணத்துக்கு முன்பே நான் அவரிடம்
கேட்டேன்! “எந்த அடிப்படையில் என்னை மணந்து கொள்வதாக முடிவெடுத்தாய்?
பெற்றோர் சொல்கிறார்கள், உடன் பிறந்தவர்கள் சொல்கிறார்கள், அக்கம்
பக்கத்தில் இருப்பவர்கள் சொல்கிறார்கள் என இப்படி ஒரு முடிவுக்கு வந்தாயா?”
என்று கேட்டதற்கு, “இல்லை. நீங்கள் நடிக்கும் படங்களைப் பார்த்தேன்.
தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்தேன்…
?] தொலைக்காட்சித் தொடரிலும் நடித்திருக்கிறீர்களா?
ஆம்! அப்பொழுது ‘என்னருமை(my dear) பூதம்’
என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்துக் கொண்டிருந்தேன். அதை என் மனைவி
அப்பொழுது நாள்தோறும் பார்ப்பாராம். அன்றாடம் என்னைப் பார்த்து என் மீது
ஓர் அன்பு, நேசம். “அதனால்தான் நான் உங்களைத் திருமணம் செய்து கொள்ள
விரும்புகிறேன்” என்றார். ஆக, அப்படி விருப்பப்பட்டு அவர் என்னை மணந்து
கொண்டார்.
?] உங்கள் பிள்ளைகளுடன் படிப்பவர்கள் உங்களைப் பார்க்கும்பொழுது என்ன சொல்கிறார்கள்? கிண்டல் செய்கிறார்களா அல்லது நடிகர் என மதிப்புக் கொடுக்கிறார்களா?
திரைப்பட நடிகர் என மதிப்பாகத்தான்
பேசுகிறார்கள். என் மகள் படிக்கும் பள்ளிக்கு நான் போவதுண்டு. உடனே
எல்லாரும் ஓவென மகிழ்ச்சிக் கூச்சலிடுவார்கள். பிறகு என் மகள் வந்து
“நாங்கள் உன் அப்பாவைப் பார்த்தோம். மிக்க மகிழ்ச்சி!” என்று அவர்கள்
சொன்னதாகத் தெரிவிப்பார்.
?] இப்படிக் கேட்கக்கூடாதுதான்; இருந்தாலும் திருமணம்,
குழந்தை பெற்றுக் கொள்வது போன்றவற்றில் மாற்றுத் திறனாளிகள்
கொண்டிருக்கும் அச்சத்தைப் போக்குவதற்காக இதைக் கேட்கிறேன். உங்கள்
பிள்ளைகள் எல்லாரும் இயல்பான உயரம் கொண்டிருக்கிறார்களா?
பிள்ளைகள் மட்டுமில்லை, என்னைத் தவிர என் வீட்டில் எல்லாரும் இயல்பான உயரம்தான்.
?] நாட்டியக் குழு நடத்துகிறீர்களே அதன் மூலம் தொண்டு, உதவி, நன்கொடை இப்படி ஏதேனும் செய்ததுண்டா?
ஓ! செய்திருக்கிறேன். ஆதரவற்றோர் இல்லம் போன்றவற்றுக்காக இலவயமாக நிகழ்ச்சிகளெல்லாம் நான் நடத்திக் கொடுத்ததுண்டு. ஆதரவற்றோர் இல்லத்துக்காக, அறக்கட்டளைகளுக்காக நடத்திக் கொடுக்கும் நிகழ்ச்சிகளுக்கு நான் பணம் வாங்குவதில்லை.
அது நுழைவுச்சீட்டு வெளியிட்டு நடத்தப்படும் மேடை நிகழ்ச்சியோ,
அவர்களுக்கென இருக்கும் அலுவலகத்துக்குள் நடத்தப்படும் ஆண்டு விழாவோ அரிமா
சங்கம் போன்றோர் மூலமாக நடத்துவதோ. எப்படியாக இருந்தாலும் ஆதரவற்றோர்
இல்லங்கள், அறக்கட்டளைகள் போன்றவற்றுக்கான நிகழ்ச்சி என்றால் நான் இலவயமாக
நடத்திக் கொடுத்து விடுவேன்.
?] திரையுலகில் உங்களைப் போன்ற மாற்றுத் திறனாளிகள் இன்னும் எத்தனை பேர் இருப்பார்கள்?
அவர்கள் எத்தனையோ பேர் இருப்பார்களே!
?] அவர்களுக்கென உதவி செய்யக் குழு மாதிரி ஏதேனும் உண்டா?
இருக்கிறது. வைத்திருக்கிறார்கள். எல்லாரும் நம் நண்பர்கள்தாம். ஆனால், எனக்கு அது பற்றிச் சரியாகத் தெரியவில்லை.
?] நீங்களே ஏன் அப்படி ஒரு சங்கத்தை மாற்றுத் திறனாளிக் கலைஞர்களுக்கெனத் தொடங்கக்கூடாது?
அது தனி மனிதர்கள் செய்யக்கூடியது இல்லை.
எல்லாரும் சேர்ந்து ஒரு சங்கம் அமைத்து அரசிடம் முறையாக விண்ணப்பித்து
அரசு ஏற்பிசைவுடன்(அங்கீகாரத்துடன்) நடத்த வேண்டும். கண்டிப்பாக அப்படி ஒரு
சங்கம் அமைக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். இதற்கு முன்பும் சிலர் இது பற்றிக் கூறியிருக்கிறார்கள். கண்டிப்பாக இதற்கென ஆட்களைத் திரட்டி ஆவன செய்ய வேண்டும்.
?] திரைப்படங்களில் குள்ளமாக இருப்பவர்களை,
மாற்றுத் திறனாளிகளைக் கிண்டல் செய்வது போலக் காட்சிகள் நிறைய வருவதுண்டு.
அப்படி ஏதேனும் காட்சிகள் வரும்பொழுது நீங்கள் எதிர்ப்புத்
தெரிவித்திருக்கிறீர்களா?
அது மாதிரி நிறையச் செய்கிறார்கள்.
ஆனால், என்னைப் பொறுத்த வரை, மக்களை மகிழ்விப்பதுதான் என் தொழில். நாம்
சொல்வதைக் கேட்டு, நம் மூலமாகவும் நான்கு பேர் சிரிக்கிறார்கள் என்றால்
அதுவே கடவுள் இட்ட பிச்சை. தனிப்பட்ட முறையில் யார் மனதையும் நாம்
புண்படுத்தக் கூடாது. மற்றபடி, திரைப்படங்களில் அப்படிச் செய்கிறார்கள்
என்றால் அது மக்கள் சிரிப்பதற்காக.
?] நடிப்பு தவிர திரைத்துறையில் இயக்கம், படத்தொகுப்பு என வேறு பணிகள் எதையாவது செய்ய வேண்டும் என்றோ திரைத்துறை சார்ந்து வேறு ஏதாவது விருப்பமோ உண்டா?
ஆம்! எனக்கு அப்படி இரண்டு விருப்பங்கள் உள்ளன. ஒன்று, படம் இயக்க வேண்டும்.
இரண்டாவது, ஒரு படத்திலாவது கதைத்தலைவனுக்கு எதிரியாக (வில்லனாக) நடிக்க
வேண்டும். எப்படி என்று கேட்டால், பாதிப் படம் வரை எதிரி யார் என்பதே
தெரியக்கூடாது. ‘ஊமை விழிகள்’ இரவிச்சந்திரன் போல. கடைசி இருபது
நிமிடங்களில் பார்ப்பவர்களைக் கலக்கி விட வேண்டும்!
?] நீங்களே கதை சொல்கிறீர்களே! அப்படி ஒரு படத்தை நீங்களே எடுத்து விடுங்களேன்!
பார்ப்போம்! செய்யலாம்! அதற்கு ஒரு நேரம்
வர வேண்டும்! (அகரமுதல இதழ் சார்பில் அதற்கு வாழ்த்து சொல்ல) எல்லாம்
உங்கள் வாழ்த்துப்படி!
?] உங்களை வைத்து,
உங்களைப் போல் குட்டையான உருவம் கொண்டவர்களையே முழுக்க முழுக்க வைத்துச்
சிறுவர் படம் கூட எடுக்கலாமே! ஏற்கெனவே நடிகர் சித்திரகுப்தன் அவர்களை
வைத்து மலையாளத்தில் அப்படி ஒரு படம் வந்தது இல்லையா?
ஆம்! ‘அற்புதத் தீவு’ என்று ஒரு படம். கேரளாவில் உண்ட பக்குரு என்பவர் இயக்குநர் வினயனை வைத்துத் துணிச்சலாக ஐந்நூறு, ஆயிரம் குள்ள மனிதர்களை ஒருங்கிணைத்து ஒரு படம் எடுத்தார்.
தமிழில் அப்படி யாரும் இதுவரை முயற்சி செய்யவில்லை. மேலும், எங்களைப்
போன்றவர்கள் இதுவரை நகைச்சுவையாகத்தான் நடித்திருக்கிறோம். மற்றபடி,
எங்களுக்கு என்னென்ன இடர்ப்பாடுகள் இருக்கின்றன? எங்களுக்குள் உள்ள
உணர்வுகள் என்ன? வெளியில் போனால் நாங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன?
இவற்றையெல்லாம் படத்தில் சொல்ல வேண்டும். அப்படி ஒரு படம் எடுக்கப்பட
வேண்டும்.
?] நடிப்பு தவிர உங்களுக்கென வேறென்ன தொழில் இருக்கிறது? திரையுலகில் சில சமயம் வாய்ப்புகள் நிறைய வரும்; சில சமயம் குறைவாக வரும். நிலையாக மாத வருமானம் தரும்படி வேறென்ன இருக்கிறது?
அப்படி எதுவும் இல்லை. வேறு எந்தத் தொழிலும் எனக்கு ஒத்து வராது. கடை ஒன்று வைத்து நடத்தி வந்தேன். ஆனால், அது சரிபட்டு வரவில்லை. கடையில் போய் உட்கார்ந்து கொண்டு பட வாய்ப்புகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றைக் கையாள முடியவில்லை.
?] உங்கள் உடன் நடிக்கும் மாற்றுத் திறனாளிக் கலைஞர்கள் இன்ன பிற நடிக – நடிகைகள் ஆகியோர் உங்களிடம் நன்கு பழகுவார்களா?
எல்லாரும் நன்றாகப் பழகுவார்கள், பேசுவார்கள். எல்லா நடிக – நடிகையரும் என்னிடம் அன்பாக இருப்பார்கள்.
?] ஏனெனில், திறமைதானே ஒருவரின் உண்மையான உருவம்!
ஆம்! திரைப்பட நடிகர் கிங்காங்கு போகிறார்
என்றதும் யாரோ ஒருவர் குள்ளமாகப் போய்க் கொண்டிருக்கிறாரே என்றுதான்
நினைப்பார்கள். ஆனால், நடித்த திரைப்படங்களைப் பார்த்த பிறகு “அதோ அந்தத்
திரைப்படத்தில் நடித்தவர் போகிறாரே!” என்று பார்த்து மகிழ்வார்கள்.
அப்பொழுது அந்தக் ‘குள்ளம்’ என்ற சொல் மறைந்து விடும். ‘நடிகர்’ என்பது
மட்டும்தான் நிற்கும்.
தன்
திறமையால் உயரம் எய்திய கிங்காங்கு பல்துறைக் கலைஞராக மிளிர்கிறார். தம்
நேரத்தை அகரமுதல இதழுக்கு ஒதுக்கியதற்கு நன்றி. அவர் மேலும் உயர்வும்
புகழும் பெற அகரமுதல இதழ் வாழ்த்துகிறது.
ஒலிவடிவை வரிவடிவாக்கியவர் : இ.பு.ஞானப்பிரகாசன்
No comments:
Post a Comment