மதுரைத்தமிழ்ச்சங்கம்குறித்துத்
தவறான தகவலைச் சட்டமன்றத்தில் தெரிவித்த
ச.ம.உ.தியாகராசன் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தமிழகச் சட்டமன்றத்தில்(ஆடி12, 2047/சூலை27, 2016) மதுரை மத்தியத்தொகுதி தி.மு.க. உறுப்பினர் பழனிவேல் தியாகராசன் ஆங்கிலத்தில் பேசினார். அதற்குத் திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முக்குலத்தோர் புலிப் படை அமைப்பின் நிறுவனத் தலைவர், கருணாசு
எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கான விளக்கம் தருவதாகச் சட்டமன்றத்திலும்
ஊடகங்களிலும் பழனிவேல் தியாகராசன் தமிழால் முடியாது என்பதுபோல்
தெரிவித்துள்ளது தமிழன்பர்களிடையே கோபக்கனலை எழுப்பியுள்ளது. தனக்கு
எதிர்ப்பு மிகுந்ததும் தான் தெரிவித்ததைத் தானே மறுத்து மழுப்பியுள்ளார்.
ஊடகங்களில் தன் செல்வாக்கைப்பயன்படுத்தித் தனக்கு எதிரான செய்தி வராமலும்
பார்த்துக்கொள்கிறார் என்றும் கேள்விப்பட்டோம்.
சட்ட மன்ற உறுப்பினரான ப.தி.இரா.ப.(பி.டி.ஆர்.பி.) தியாகராசன் தமிழகச் சட்டமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசுவதைவிட அதற்குக் காரணமாகத் தமிழை இழிவாகக் கூறுவது கண்டிக்கத்தக்கது. பி.டி.ஆர். எனப்படும் பொன்னம்பலத் தியாகராசனின் பெயரன் என்றும் பழனிவேல் தியாகராசனின் மகன் என்றும் பெருமை பேசினால் போதாது. தாத்தாவின் பெயரைத் தனக்குச் சூட்டியுள்ளதால் அவருக்குக் களங்கம் வரும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது.
சட்ட மன்ற உறுப்பினரான கருணா தெரிவித்ததுபோல் தமிழ் வளர்த்த மதுரையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் தமிழில் பேசத் தெரியாமையைக் குறையாக எண்ண வேண்டும்.
மாறாக, ஆங்கிலத்தில் பேசுவதால் அறிவாளி என்ற நினைப்பு வரக்கூடாது. தன்
குடும்பப் பெருமையைப் பேசும் அவர், தமிழில் பேசாமைக்கு வருத்தம் தெரிவித்து
இனித் தமிழில் பேசுவதாகக் கூறியிருந்தால் பாராட்டி யிருக்கலாம். மாறாக,
அவர், “தமிழில் பொருளாதாரம் சொல்ல முடியுமா” என்கின்றார்.
அவருக்குத் தமிழில் உரிய சொற்கள்
தெரியவில்லை என்றால், தொடக்கத்தில் ஆங்கிலச் சொற்களையே பயன்படுத்திவிட்டுப்
பிறர் வழி அறிந்து தமிழ்ச்சொற்களைக் கூறலாமே! முதல்வரே இதற்கு
முன்னர்ப், பிறர் சரியான தமிழ்ச்சொற்களைக் கூறாத பொழுது அவற்றுக்கான
தமிழ்ச்சொற்களைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். எனவே, முதல்வரே, அவருக்கு
வழிகாட்டியிருப்பார்.
பொருளியல் மேதையாகவும் திகழும்
தெய்வப்புலவர் திருவள்ளுவர், திருக்குறளில் பல பொருளியல் கருத்துகளைத்
தெரிவித்துள்ளார். சங்க இலக்கியங்களிலும் பொருளியல் கருத்துகள் உள்ளன.
தமிழில் உள்ள பொருளியல் கருத்துகளை அறியாமல் பொருளாதாரத்தைத் தமிழில்
விளக்க முடியுமா என்கின்றார்.
இந்திய அரசாங்கத்தின் முதல் பொருளாதார அறிவுரையாளராக இருந்தவர் முனைவர் பா.நடராசன்.
ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதலாவதும் கடைசியுமான பொருளாதார
அறிவுரையாளராகவும் இருந்தவர். அருதையாகத் தமிழில் பொருளாதார கருத்துகளை
விளக்குவார்.
இந்தியாவின் முதல் நிதியமைச்சரான ஆர்.கே.சண்முகம்(செட்டியார்)
அழகுபடத் தமிழில் பொருளாதார கருத்துகளை விளக்கியவர். இந்தியாவின்
நிதியமைச்சராக ஐவர் தமிழர்களே இருந்துள்ளனர். ஒவ்வொருவரும் பொருளாதாரக்
கருத்துகளைத் தமிழிலும் விளக்கும் வல்லமை படைத்தவர்கள். அவர்களுள் நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் ‘தமிழால் முடியும்’ என்றே நூல் எழுதியவர்.
தமிழ்நாடு அரசாங்கம், கல்லூரிகளில்
தமிழைப் பயிற்றுமொழியாக அறிமுகப்படுத்திய பொழுது முதலில் வரலாற்றுடன்
பொருளாதாரப் படிப்பையும் அறிமுகப்படுத்தினர். பொருளாதார நூல்களைத் தமிழில்
பலர் எழுதியுள்ளனர்.
ஆனால் கற்றுக்குட்டிபோல் இருந்து கொண்டு
“தமிழில் பொருளாதாரக் கருத்துகளை விளக்க முடியுமா” என்கிறார். “மொழி
தெரிந்தவர்களுக்கு எல்லாம் பொருளாதாரம் தெரியுமா? மொழிவேறு. பொருளாதாரம்
வேறு. தமிழ்மொழி தெரிந்தவர்கள் அறிவியலாளர் ஆக முடியுமா” என்கிறார்.
ஆனால், அவரே பி்ன்னர், “ச.ம.உ.
கருணாசுக்குப் புரியும்படி பேசுவதென்றால், எனக்கு ஒன்றும் சிக்கலில்லை.
நிதி நிலை அறிக்கையை அவரது அரசியல் அறிவுக்கு எட்டும் அளவுக்கு என்னால்
தமிழில் பேசமுடியும்” என்றும் சொல்லியுள்ளார். இவ்வாறு பேசியுள்ளது
அச்சட்டமன்ற உறுப்பினரை அவமதித்ததாகும். தன்னால் தமிழில் பேச முடியும்
என்றால் தமிழில் பேசவிடாமல் அவரை எந்த உணர்வு தடுத்துள்ளது?
தமிழ்வழி பயின்று இந்திய முதல் குடிமகனாக உயர்ந்த அப்துல்காலம், இன்றைய இந்திய விண்வெளி ஆய்வு மைய இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை முதலான பலரும் தமிழ்வழி பயின்றவர்கள் மட்டுமல்லர். தமிழ்வழியிலான கல்வியே அறிவியலுக்கு ஏற்றது என்பவர்கள். தனக்கு ஒன்று தெரியவில்லை என்பதற்காக யாருக்குமே தெரியாது என எண்ணுவது என்ன அறிவாளித்தனம் என்று புரியவில்லை.
சட்டமன்றத்தில் (தமிழிலும்)
ஆங்கிலத்திலும் பேசலாம் என விதி உள்ளதால் ஆங்கிலத்தில் பேசுவது தவறல்ல என
எண்ணக்கூடாது. நியமன உறுப்பினரான ஆங்கிலோ இந்தியன் முதலான தமிழ்
தெரியாதவர்க்கான விதி அது. இதனையே அனைவரும் விதியாகப்பயன்படுத்தினால் தமிழ்நாட்டின் சட்டமன்றம் இங்கிலாந்து மன்றம்போல் மாறிவிடும்.
தமிழ் தெரியாமல் ஆங்கிலத்தில் பேசுவதை
மறைப்பதற்காக முதல்வருக்கு ஆங்கிலம் தெரியும் என்பதுபோல் பேசியுள்ளார்.
முதல்வருக்குத் தமிழ் தெரியாது என்கிறாரா? தான்பேசுவது முதல்வருக்கு
மட்டும்தான், சட்ட மன்ற உறுப்பினர்களுக்காக அல்ல என்கிறாரா? தன் தொகுதி மக்களுக்குப் புரியும் வண்ணம் தமிழில் பேசுவது தன் கடமையல்ல என்கிறாரா? தேர்தல் பரப்புரையின்பொழுது ஆங்கிலத்தில் வாக்கு கேட்டிருக்க வேண்டியதுதானே! வேறு யாராவது தமிழ் தெரிந்தவர் வெற்றி பெற்றிருப்பாரே!
“இவரை எல்லாம் சட்ட மன்ற உறுப்பினராக
ஆக்கியிருக்க வேண்டுமா?” எனத் தி.மு.க.அன்பர்களே பேசும் அளவிற்குச் ச.ம.உ.
தியாகராசன் பேசியுள்ளார். என்ன செய்வது? செல்வமும் செல்வாக்கும் தானே வேட்பாளர்களை முடிவு செய்கிறது!
மேலும், “எனது தாத்தாதான் மதுரை
தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கி நிதி கொடுத்துப், பல வகையிலும் தமிழை
வளர்த்துவந்தார்.” என்று தவறான தகவலைத் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் தவறான கருத்து தெரிவித்துள்ளதற்காகச் சட்டப்பேரவைத்தலைவர் இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“முந்தைய தமிழ்ச்சங்கங்கள்போல ஒரு
தமிழ்ச்சங்கத்தை நிறுவுவேன்“ என 1901 இல் வள்ளல் பாண்டித்துரை(த் தேவர்)
அவர்களால் நிறுவப்பெற்றதே மதுரைத் தமிழ்ச்சங்கம். தமிழ்ச்சங்கம் அமைக்க
வேண்டும் எனக் கனவுகொண்டிருந்த இவரது ஒன்றுவிட்ட உடன்பிறப்பான மன்னர்
பாசகரசேதுபதியவர்கள் தொடக்கநாளில் 10,000 வெண்பொன் அளித்துள்ளார். http://maduraitamilsangam.com/founder.html
இணையத்தளத்தில் இவ் விவரம் காணலாம். இதில் 1954 இல்தான் பொன்னம்பலம்
தியாகராசனாகிய பி.டி.இராசன் துணைத்தலைவராகவும் பின்னர் இதன் தலைவராகவும்
இருந்துள்ளார். ஆனால், இவரே நிதி கொடுத்து மதுரைத் தமிழ்ச்சங்கத்தைத்
தொடங்கினார் எனத் தவறாகப் பேசியுள்ளார். எனவே, இத்தலைமுறையினரும் வரும்
தலைமுறையினரும் பி,டி.ஆர். எனப்படும் பொன்னம்பலத்தியாகராசன்தான் மதுரைத்
தமிழ்ச்சங்கத்தை நிறுவியவர் என்று தவறாகக்கருதும்
நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, ஆங்கிலத்தில் பேசியதற்குக்
காரணமாகத் தமிழை இழிவுபடுத்தும் வகையில் கூறிய சட்ட மன்ற உறுப்பினர்
பழனிவேல் தியாகராசனைத் தமிழ் அமைப்புகள், தமிழன்பர்கள் சார்பில்
கண்டிக்கின்றோம். வள்ளல் பாண்டித்துரை(த் தேவர்) நிறுவிய நான்காம்
தமிழ்ச்சங்கத்தைத் தன் தாத்தா நிதி கொடுத்து நிறுவியதாக இவர் பேசிய
பேச்சைச் சட்டமன்றக் குறிப்பிலிருந்து நீக்குமாறும் தவறான தகவல் தந்த இவர்
மீது நடவடிக்கை எடுக்குமாறும் மாண்புமிகு பேரவைத்தலைவரை வேண்டுகின்றோம்.
அ்ன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 146, ஆடி 23 , 2047 / ஆக.07, 2016
No comments:
Post a Comment