Thursday, August 18, 2016

பாசக்கயிறா? வேசக்கயிறா? – இலக்குவனார் திருவள்ளுவன்




தலைப்பு-பாசக்கயிறா, வேசக்கயிற-இலக்குவனார் திருவள்ளுவன் : thalaippu_paasakkayiraa_vesakkayiraa_ilakkuvanarThiruvalluvan.

பாசக்கயிறா? வேசக்கயிறா?


  தமிழ்நாட்டில் இறைநம்பிக்கை சார்ந்து காப்புக்கயிறு கட்டும் பழக்கம் உள்ளது. ‘இரட்சா பந்தன்’ என்பதும் பாதுகாப்பு தரும்  உறவை உறுதிப்படுத்துவதற்கான  காப்புக்கயிறுதான். கீற்றுகளை இணைத்து உருவாக்கப்படுவது பந்தல். முத்துகளை இணைத்து உருவாக்கப்படுவது முத்துப்பந்தல். இவைபோல் உறவுகள் இணைந்த அமைப்பே பந்தம். பாசக்கட்டினைக் குறிக்கும் பந்தம் என்பது தமிழ்ச்சொல்லே. பந்தத்திற்குரியவன் பந்தன் என்றாகியுள்ளது.
 ‘இரட்சா பந்தன்’ கொண்டாட்டத்திற்கு வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. பாரதப்போரில் கிருட்டிணனுக்குக் கையில் அடிபட்டுக்  குருதி வடிந்த பொழுது பாஞ்காலி, அவரது கையில் தன்சேலைத்தலைப்பைக் கிழித்துக் கட்டியதாகவும் இதனால் அவரைக் காக்கக் கிருட்டிணன் முடிவெடுத்ததாகவும் இதுவே இராக்கி என்றும் இரட்சா பந்தன் என்றும் அழைக்கப்படுகிறது என்பதும் புராணக் கதை.
  இராசசுதான்  பகுதியிலுள்ள சித்தூர் அரசி கருணாவதி,  குசராத்து மன்னர் பகதூர் சா, தன் நாட்டின் மீது போர் தொடுத்த பொழுது முகலாயப் பேரரசர் இயூமாயுனுக்குத் தூயக் கயிறு – இராக்கிக் கயிறு – அனுப்பினார். அதனால் அரசியைக்காக்க அரசர் முன்வந்தார் என்பது வரலாறு சார்ந்த கதை.
 போரசு மன்னரிடமிருந்து அலெக்சாண்டரைக் காப்பாற்ற அலெக்சாண்டரின் மனைவி  இரோசனா  தூய நூல் அனுப்பினார் என்றும்  அதனால் போரசு அலெக்சாண்டருக்குத் தீங்கிழைக்கவில்லை என்றும் ஒரு கதை. இவ்வாறு கூறப்படும்   கதை எல்லாம் வடநாடு சார்ந்தனவே.
 குழந்தைகளுக்கு வசம்பு வளையல் அணிவிப்பார்கள். பிள்ளை வளர்த்தி என்றும் பிள்ளை மருந்து என்றும் அழைக்கப் பெறும் வசம்பு தரும் மருத்துவப்பயன்கள்,  குழந்தைகளுக்குக் கிட்டும் என்பது மருத்துவம் சார்ந்த நம்பிக்கை. ஏறத்தாழ 15 அடி தொலைவுவரை மணம் வீசும் வசம்பு. எனவே, குழந்தைகள் மூச்சில் இம்மணம் கலந்து நோய்க்கிருமிகளில் இருந்து காக்கும்  என்பர். அதுபோல் எதையாவது வாயில் வைக்கும் பழக்கம் உள்ள குழந்தைகள் வளையல் வசம்புவை வாயில்வைப்பதால்,  வேறு எதையும் வாயில் வைக்கா. உமிழ்நீரில் கலந்து வசம்பு வயிற்றுக்குள் சென்று மருத்துவப் பயனைத் தரும் என்பதும் நம்பிக்கை. இதுவும் காப்புக் கயிற்றின்ஒரு வடிவமே!
  ஒருவேளை இந்திய நிலப்பகுதி முழுவதும் பரவி இருந்த தமிழர்களின் காப்புக்கயிறு கட்டும் பழக்கமே  இவ்வாறு மாறியிருக்க வாய்ப்பு உள்ளது. இதற்கான காரணங்களாக அவரவர்கள் தத்தமக்குத்தோன்றிய கதைகளை அவிழ்த்துவிட்டிருக்கலாம்.
  காப்புக்கயிறு கோயில் திருவிழா நாள்களில் கட்டப்படுவதால் வெவ்வேறு நாளில் நடைபெறும். நேர்த்திக்கடன் அடைப்படையில் கட்டப்படும் இதனால் கட்டுப்பாடும் நம்பிக்கையும் ஏற்படுகின்றன. அதே போல் ஐயப்பன் கோவில் போன்ற இடங்களுக்குச் சென்று வந்தவர்கள் தருகிறார்கள் என்றும் கடைகளில் வாங்கியும் மஞ்சள், கருப்பு, நீல நிறக் கயிற்றினைக் கட்டுவது மூடநம்பிக்கையே அன்றி வேறல்ல.
   ஆனால்,  கயிறு கட்டும் வட நாட்டுப் பழக்கம் இப்பொழுது ஆவணி வெள்ளுவா நாளான ஒளி நிலவு நாளில் நடைபெறுகிறது. உடன்பிறப்பு அன்பின் வெளிப்பாடாக இது கருதப்பட்டாலும், அரசியல்வாதிகளாலும் சமயவாதிகளாலும் வெற்றுச்சடங்காக மாற்றப்பட்டுள்ளதுதான் கொடுமை. இதற்கு என் மனத்தில் நிழலாடும் ஒரு நிகழ்வைக் குறிப்பிட விரும்புகின்றேன்.
 1998 காப்புஉறவுக் கயிறுகாட்டும் நாளில் மூன்று பெண்கள் எங்கள் அலுவலகத்திற்கு வந்தார்கள். நான் “எனக்கு இதில் நம்பிக்கை இல்லை. எனவே  நன்றி” எனத் தெரிவித்துத் திரும்பிச் செல்லக் கூறினேன். இது குறித்து விளக்க வேண்டும் என்ற அவர்களிடம் உணவு இடைவேளையின்பொழுது வருமாறும் வேலை நேரத்தில் வர  வேண்டாமென்றும் தெரிவித்தேன். மீண்டும் அவர்கள் இந்நிகழ்வு குறித்து விளக்க முற்பட்ட பொழுது |”உணவு இடைவேளையின்பொழுது மீண்டும் வர நேரமில்லையேல்  கவலைப்படாமல் சென்று வாருங்கள்” என்றேன். உணவு  நேரம் எப்பொழுது எனக் கேட்ட பொழுது அறையில் இருந்த ஊழியர்,  “இவர் சாப்பிட மாலை 4 அல்லது 5 ஆகும்” என்றார். “அதுவரை காத்திருக்க வேண்டா;” அலுவலக இடைவேளை நேரமான 1.00 மணி யளவில் வாருங்கள்” என்று கூறினேன்.
   வந்தவர்கள் பிரம்மகுமாரிகள் எனக் கூறிக்கொண்டு பேசத் தொடங்கினர். “உங்கள் இயக்கத்தைப்பற்றி நானறிவேன். தமிழில் பேசத் தெரியும் நீங்கள் பொதுக் கூட்டங்களில்மட்டும் தமிழில் பேசாமல் இந்தியில் பேசுவதேன்” என்றேன்.  ஏதோ மழுப்பிவிட்டு “இனிமேல் தமிழில் பேசுகிறோம்” என்றனர்.
 கடந்த 10 ஆண்டுகளாக இங்கே உள்ள அதிகாரிகளுக்கு இராக்கிக் கயிறு கட்டுவதாகவும் உடன்பிறப்பு உறவை வலியுறுத்தும் இதைப் புறக்கணிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்கள்.
  “குடியரசுத்தலைவர், தலைமையாளர், ஆளுநர், முதல்வர் முதலான உயர் பதவிகளில் உள்ளவர்களுக்குக் கொள்ளுப்பேத்தி என்று சொல்லப்படவேண்டிய சிறுமிகளைக் கொண்டு இக்கயிற்றை அணிவிக்கிறீர்கள். இவர்களிடையே உறவிருப்பின் அதனை, உடன்பிறப்பு உறவு என்ற சொல்ல முடியுமா? அங்கு செல்லும் உங்களைப் போன்றோர் ஏன், அங்குள்ள பிற ஊழியர்களுக்குக் கயிறுஅணிவிப்பதில்லை. இங்கும் அதிகாரிகளுக்குக் கயிறு கட்டும் நீங்கள் ஏன், பிற ஊழியர்களுக்கு இக் கயிற்றை அணிவிப்பதில்லை. பத்தாண்டுகளாக வந்து கயிற்றை அணிவிப்பதாகக்  கூறுகிறீர்களே! ஒருவர் பெயரையாவது கூறுங்கள். நீங்கள்  கயிறு அணிவித்தபின்னர் அவர் எந்நிலையில் உள்ளார் என அறிந்ததுண்டா? அவர்கள்தான் உங்களின் துன்பங்களில் பங்கேற்று உதவினார்களா? அல்லது இன்றைக்கு  உங்களால் கயிறு அணிவிக்கப்பட்டவர்களில் ஒருவர்பற்றியாவது கூறுங்கள். இனியேனும் யாரேனும் ஒருவருக்குமட்டும் இதனை அணிவித்து வாணாள் முழுவதும் உடன்பிறப்புறவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஆண்டுதோறும் அணிவிக்க விரும்பினாலும் அவரிடமே உடன்பிறப்பு உறவைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள். அல்லது வேறு யாருக்கு அணிவித்தாலும் அவரையும் வாணாள் முழுவதற்கும் மறவாதீர்கள். சடங்குபோல் எல்லார்க்கும் அணிவித்து நீங்கள் பெருமையாகக் கூறும் இந்தநாளைச் சிறுமைப்படுத்தாதீர்கள்.” என்றேன். “ உலகமே போற்றும் இதனை இப்படிச் சொல்கிறீர்களே!” என்றனர்.
 “சொந்த அக்கா, தங்கைகளையே காப்பாற்ற வக்கற்றவர்கள்,  பிற பெண்களைக் காப்பாற்ற முன்வருவதென்பது கற்பனை. எனினும், உறவுமுறையிலும் நட்பு முறையிலும் அறிந்தவர்களுக்கு அணிவிப்பது இயல்பானது. கல்விக்கூடங்களிலும் பள்ளிக்கூடங்களிலும் அணிவிப்பது பெண்களை உடன்பிறப்புப் பார்வையில் நோக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினால் வரவேற்கத்தக்கது.  விளம்பரத்திற்காக அணிவதை நான் விரும்பவில்லை. இதுவரை அறிமுகமில்லாத, இனியும் அறிமுகத்திற்கு வாய்ப்பில்லாதவர்கள் இடையே பந்தக்கயிற்றை அணிவிப்பதால் என்ன பயன்? எனவே, என் கருத்தை மதித்து நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்” என்றேன். இப்படிப்பேசிவிட்டானே என எண்ணித் திரும்பினாலும் அதன்பின்னரும் ஊழியர் யாருக்கும் பந்தக்கயிற்றை அணிவிக்கவில்லை. அது மட்டுமல்ல அந்தப்பக்கம் அதன்பின் வரவேயில்லை.
  அன்றைக்குக் கூறியது இன்றைக்கும் பொருந்தும் என்பதால் நினைவைப் பகிர்கின்றேன்.
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும். (திருவள்ளுவர், திருக்குறள் 525)
கொடுப்பதாலும் இன்சொல் கூறுவதாலும்  உருவாகும் சுற்றம் கயிற்றை அணிவிப்பதால் உருவாகுமா?
வடநாட்டிலிருந்து இறக்குமதியான பந்தக்கயிற்றை அணிபவர்களே! சிந்தித்துச் செயலாற்றுக!
இலக்குவனார் திருவள்ளுவன்

No comments:

Post a Comment

Followers

Blog Archive