20 நவம்பர் 2016 கருத்திற்காக..
பணம் செல்லாமை : இன்னலுக்கு ஆளாக்கப்படுபவர்களையே
பொன்மாலை சூட்டச்செய்யும் நரேந்திரர்(மோடி) 1/2
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். (திருவள்ளுவர், திருக்குறள் 504)
எந்த ஒரு திட்டத்திலும் நல்லனவும்
தீயனவும் கலந்தே இருக்கும். எவை மிகுதியாக உள்ளன? எவை நிலைத்த தன்மையுடையன?
என்பனவற்றின் அடிப்படையிலேயே அத்திட்டத்தின் தேவையை நாம் உணர இயலும்.
கடந்த ஐப்பசி 23, 2047 / நவம்பர் 08, 2016 அன்று இந்தியத் தலைமையர் நரேந்திரர்(மோடி) 500 உரூபாய், 1000 உரூபாய் பணத்தாள்கள் செல்லா
என அறிவித்தார். இது குறித்து வரவேற்பும் எதிர்ப்பும் உள்ளன. ஆனால்,
வரவேற்பவர்களும் செயல்படுத்தும் முறை குறித்துக் குறைகள் கூறி வருகின்றனர்.
அரசின் செல்வாக்கால் ஊடகங்களில் இதனை
வரவேற்று எழுதுபவர்களும் வலைத்தளங்களில் கடுமையாக எதிர்ப்பைத் தெரிவித்து
வருகின்றனர். வரவேற்புக் கட்டுரை அல்லது செய்திகளிலேயே இதனால் மக்கள்
அடையும் துன்பங்களையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
அதே நேரம், இதனால் இன்னலுக்குள்ளாகி அல்லல்பட்டு ஆற்றாது அழும் ஏழை எளிய, நடுத்தர மக்களின் கண்ணீர், பா.ச.க. அரசை அறுக்கும் இரம்பமாக மாறி வருவதைப் பா.ச.க. ஆட்சி உணர்ந்ததாகத் தெரியவில்லை.
பணத்தாள்களை மொத்தமாகவோ குறிப்பிட்ட மதிப்பு உள்ளனவற்றையோ செல்லாமல்
ஆக்குதல் புதிய புரட்சித் திட்டமன்று. பிற நாடுகளிலும் நம் நாட்டிலும் முன்னரே நடைமுறைப்படுத்தப்பட்டு மக்களின் வாழ்க்கையைச் சிக்கலாக்கிய திட்டம்தான்.
பணம் செல்லாதனவாக்கப்படுவதாக அறிவித்த பொழுது பாக்கித்தான் கள்ளப்பணம்
அடித்து நம் நாட்டில் புழங்க விடுவதாகவும் அதனால்தான் ஐந்நூறு, ஆயிரம்
ஆகிய பணத்தாள்களைச் செல்லாதனவாக அறிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
பின்னரே கருப்புப்பணமும் காரணமாகத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அயல்நாடு, நம் நாட்டில் கள்ளப்பணங்களைப் பயன்பாட்டில் விடுவதாகத் தெரிந்தும் அதைத்தடுக்க இயலவில்லை என்றால் அது நம் அரசின் கையாலாகத்தனத்தையே காட்டுகிறது. ஆனால், இக்காரணம் எந்நத அளவில் உண்மை என்று புரியவில்லை.
ஏனெனில், இதுவரை அன்றாடம் நாடு முழுவதும் பழைய பணத்தாள்கள் மாற்றப்பட்டவற்றில், ஒன்றுகூட கள்ளப்பணமாக இருக்க வில்லை. எனவே, பாக்.மீது பழி போடும் செய்தியாகவே இருக்க வேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
மேலும், பாக்கித்தான் கள்ளப்பணத்தை நம்
நாட்டில் புகுத்துவதால், ஆண்டிற்கு 500 கோடி உரூபாய் ஆதாயம் அடைவதாக
இப்பொழுது தெரிவிக்கின்றனர். ஆனால், பாராளுமன்றத்தில் அளித்த
அறிக்கையின்படி, ஆண்டிற்கு உரூபாய் 50 கோடி அளவிலான கள்ளப்பணம்தான்
பயன்பாட்டிற்கு விடப்படுகிறது. எனவே, பாக்கித்தான் பூச்சாண்டியைக் காட்டி
மக்களை அச்சுறுத்த ஆள்வோர் எண்ணுகின்றனர் என்பது புரிகின்றது.
நம் நாட்டில் உரூபாய் பத்து இலட்சம் பணத்தாள்களில் 250 பணத்தாள்கள் கள்ளத்தாள்கள்.
நூற்றுக்கு ஒன்றுக்கும் குறைவாக (.025) பணத்தாள்கள்தாம் கள்ளத்தாள்கள்.
இவை முழுவதுமே பாக்கித்தான் அச்சடித்துப் புழக்கத்தில் விடும் பணத்தாள்கள்
என வாதத்திற்கு எடுத்துக் கொண்டால்கூட மிக மிகக் குறைவான அளவுதான். இவை
முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், குறைவான விழுக்காட்டு எண்ணிக்கையில் உள்ள கள்ளப்பணத்தாள்களுக்காக மிகுதியான மக்களைத் துன்புறுத்துவது சரியல்ல அல்லவா?
இவ்வாறு, கள்ளப்பணம் அச்சடித்து நாட்டில்
நடமாட விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பிற மக்களை
இன்னலுக்குள்ளாக்குவது முறையல்ல. மேலும், திறமையாக நம் நாட்டில்
கள்ளப்பணத்தைப் பயன்பாட்டில் கொண்டு வரும் பாக்கித்தான் புதிய பணத்தாள்களையும் அவ்வாறுதானே கள்ளத்தனமாக அடித்துப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும். அப்பொழுது மீண்டும் புதிய தாள்களையும் செல்லாது என்பார்களா?
முதலில் கள்ளப்பணம் எனக் கூறிய அரசும் அரசு ஆதரவாளர்களும் இப்பொழுது கருப்புப்பண ஒழிப்பிற்காகத்தான் இந்த நடவடிக்கை என்கின்றனர். கருப்புப்பணத்தைக் காரணமாகக் கூறி அப்பாவி மக்களைத் துன்புறுத்துவதும் அறமற்ற செயல்.
கருப்புப்பணம் யார் யாரிடம் உள்ளது என்பதை அரசு அறியும்.
அதில் பெரும்பகுதி வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்டு வெள்ளைப்பணமாக நம்நாட்டிற்குள் வருகிறது என்பதையும் அரசு அறியும்.
கருப்புப்பணம் என்பது இந்தியப்
பணத்தாள்களாக இல்லாமல், மனைகளாக, மாளிகைகளாக, தொழிலகங்களாக,
தங்கக்கட்டிகளாக, அயல்நாட்டு நாணயங்களாக, அயல்நாட்டு வைப்பாக,
அயல்நாட்டுச் சொத்தாக எனப் பலவகையில் உருமாறி பதுக்கப்படுவதும் அரசு
அறியாததல்ல!
ஆள்வோருக்கு நெருக்கமாக இருப்பவர்கள் எல்லாம் கருப்புப்பண முதலைகளாகத்தான் உள்ளனர் என்பதையும் அரசு அறியும்.
கருப்புப்பண முதலைகளின் சார்பாளர்களாகத்தான் அவர்களது பணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மக்கள் சார்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதையும் அரசு அறியும்.
அவ்வாறிருக்க ஏழை எளிய நடுத்தர மக்களிடம் கருப்புப்பணம் இருப்பதுபோல் அரசு நடவடிக்கை எடுத்திருப்பது எவ்வாறு முறையாகும்?
இங்கே நாம் மற்றொன்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
பெரிய மதிப்பிலான பணத்தாள்களைச் செல்லாமல்
ஆக்குவது குறித்து அவ்வப்பொழுது திரைப்படங்களில் வந்துள்ளது.
செய்தியிதழ்களிலும் அரசியல் மேடை உரைகளிலும் பெருமதிப்பு பணத்தாள்களைச்
செல்லாதன என அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். அப்பொழுதெலலாம்
இதனைப் புரட்சித்திட்டமாகக் கருதி மக்கள் வரவேற்றுள்ளனர்.. ஆளால், இதற்கு
எதிரான கருத்துகள், திரைப்படங்களிலோ இதழ்களிலோ (பத்திரிகைகளிலோ) யாராலும்
தெரிவிக்கப்பட்டதில்லை. அவ்வப்பொழுது பணம் செல்லாமை ஆக்கப்படுவதால்
ஏற்படும் பயனின்மை, தீங்குகள், இடர்ப்பாடுகள் குறித்தும் தெரிவித்து
வந்திருந்தால், ஆள்வோர் இதைப் புரட்சித்திட்டமாக உருவகப்படுத்தி மக்களை
ஏமாற்றும் நிகழ்வு நேர்ந்திருக்காது. குறைந்தது இதனை எவ்வாறு கையாள
வேண்டும் என்ற விழிப்புணர்வையாவது ஏற்படுத்தியிருக்கும்.
(தொடர்ச்சி காண்க 2/2)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
நன்றி:
No comments:
Post a Comment