முத்தொகுதித் தேர்தல்கள்: சில எண்ணங்கள்
அரவக்குறிச்சி, கிருட்டிணகிரி
ஆகிய தொகுதிகளில் நடைபெறும் தேர்தல்களை மறு தேர்தல் என்றோ இடைத்தேர்தல்
என்றோ குறிப்பிடுகின்றனர். இரண்டு பொதுத்தேர்தலிடையே நடை பெறும் தேர்தல்
இடைத்தேர்தல் என்ற வகையில் இது சரிபோல்தான் தோன்றும். தேர்தல் நடைபெற்று
– அஃதாவது வாக்குப்பதிவு முடிந்தபின்னர் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில்
அல்லது தொகுதியில் நடைபெறும் தேர்தல்தான் மறு தேர்தல். தமிழ்நாட்டில், திருப்பரங்குன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப்பினர் மறைவால் நடைபெறும் தேர்தலும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதியில் ச.ம.உ. விலகியதால் ஏற்படும் தேர்தலும் இடைத்தேர்தல்கள்.
அரவக்குறிச்சி, கிருட்டிணகிரி ஆகிய 2
தொகுதிகளில் குறிப்பிட்ட நாளில் தேர்தல் நடைபெறும் முன்னரே தேர்தல்
ஒத்திவைக்கப்பட்டது. எனவே, இப்போது அத் தொகுதிகளில் நடைபெறுவது
ஒத்திவைக்கப்பட்ட தேர்தல். ஆனால், தேர்தல் ஆணையமே இவற்றை இடைத்தேர்தல்
என்கிறது. தேர்தலின் வகையைக்கூடச் சரியாகக் குறிப்பிடுவதில் கருத்து செலுத்தாத தேர்தல் ஆணையம் வேறு எவற்றில்தான் சரியாகக் கருத்து செலுத்தியிருக்கப் போகிறது?
இரு தொகுதிகளில் எக்காரணங்களால் தேர்தல்
ஒத்திவைக்கப்பட்டது? வரையறுக்கப்பட்ட செலவினத்திற்கும் பன்மடங்கு
மிகுதியாய்ப் பண ஆறு, அத்தொகுதிகளில் பாய்ந்தமைதானே காரணம்!
வாக்காளர்களுக்குப் பரிசு மழை பொழிந்ததைக் கண்ட தேர்தல் ஆணையம் அதைத்
தடுத்த நிறுத்த இயலாமல் தேர்தலை ஒத்தி வைத்ததை நாடறியுமே!
ஒத்திவைக்கப்பட்ட தேர்தலில்
முதன்மைக்கட்சிகளின் வேட்பாளர்களாக முன்பு அறிவிக்கப்பட்டவர்கள்தாம்
மீண்டும் நிற்கின்றனர். கட்சியினர் வேறு வாக்காளர்களை நிறுத்தினால்
வாக்காளர்களை விலைக்கு வாங்கும் முயற்சிகளில் ஈடுபட்டதாகக் கூறும்
குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதாக ஆகும். மேலும், முதலில் வேட்பாளர்கள்
பெருமளவு செலவழித்திருப்பர்; பிறரை நிறுத்தினால், ஒத்துழையாமைச் சிக்கல்
வரலாம். எனவே, பரிவின் அடிப்படையிலும் அதே வேட்பாளர்களையே கட்சிகள்
நிறுத்துவது அவர்களுக்குத் தவிர்க்க இயலாததாகும்.
இங்கே கடமை தவறியது தேர்தல் ஆணையம்தான்.
எந்தக் காரணங்களுக்காக இத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டனவோ, அச்சூழல்கள்
மீண்டும் எழாமல் இருக்க குற்றச்சாட்டிற்குரிய கட்சிகளை ஒத்தி வைக்கப்பட்ட
தேர்தலில் நிற்கத் தடை விதித்திருக்க வேண்டும். அந்த நெஞ்சுரம் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு இல்லை
என்பது தெரிந்த உண்மை. ஆனால், குற்றச்சாட்டிற்குரிய வேட்பாளர்கள்
மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட தேர்தலில் நிற்கத் தடை விதித்திருக்கலாம்
அல்லவா? அவ்வாறில்லாமல் தேர்தல் ஆணையம் கடமை தவறியதால், முந்தைய வேட்பாளர்களையே நிறுத்தியுள்ள கட்சித்தலைமைகளைக் குறை சொல்ல இயலாது.
வாக்காளர்கள்
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். (திருவள்ளுவர், திருக்குறள் 517)
என்பதை உணர்ந்து வாக்காளர்கள்,
தக்கவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், பெரும்பான்மையர்
கட்சித்தலைமைக்குக் கொத்தடிமைகளாக இருக்கும் நிலை மாறும்வரை இதற்கான
வாய்ப்பு இல்லை.
தி.மு.க.
வாக்காளர்களிடம் மனித நேயம் இருந்தால்
ஈழத்தமிழர் படுகொலையில் முதன்மைப்பங்கு வகித்த காங்.உடன் இணைந்துள்ள
தி.மு.க.விற்கு வாக்களிக்கமாட்டார்களே! ஆனால், இதைவிடத் தங்கள் தலைவர் மீது
வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையும் பற்றுறுதியும் மேலோங்கி இருப்பதால், வெற்றியை எட்டிப்பிடிக்கும் வகையில் திமுகவினர் செயல்படுகிறார்கள்.
தி.மு.க. ஒரு தொகுதியில் வெற்றி பெற்றால்கூட, அடுத்த தேர்தலுக்கு முன்னரே ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற நம்பிக்கையில் செயல்படத் தொடங்கி விடுவார்கள்.
அந்த எண்ணமே அவர்களுக்கு உற்சாகத்தை அளித்து ஊக்கமுடன் தேர்தல் பணிகளைப்
பார்க்கிறார்கள். தோற்றால், இருக்கவே இருக்கிறது முறையாகத் தேர்தல்
நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு.
அதிமுக
வெற்றி நமக்குத்தான் என்ற நம்பிக்கையில்
அதிமுகவினர் செயல்பட்டு வருகிறார்கள். அதிமுக வெற்றி பெற்றால் “அம்மா,
படுத்துக்கொண்டே வெற்றியைத் தந்து விட்டார்” என்பார்கள்.
வெற்றிக்குக்காரணம் விரும்பாதவர்களுக்குப் போகக்கூடாது எனக் கருதி உட்பூசலில் செயல்பட்டால் இரண்டிலாவது வெற்றி கிட்டுமா என்பது ஐயமே!
தோற்றுவி்ட்டால், “அம்மா தேர்தல் களத்தில் இல்லாததால் வெற்றிவாய்ப்பு
பறிபோயிற்று. திமுக முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றது” என்றும்
சொல்வார்கள்.
மக்கள் நலக்கூட்டணி
ஒத்திவைக்கப்பட்ட தேர்தல்களைப்
புறக்கணித்தது சரி. ஆனால், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலைப் புறக்கணிக்கத்
தேவையில்லையே! திருப்பரங்குன்றத்தில் போட்டியிட்டிருந்தால் தங்கள்
வலிமைகளை ஒருமுகப்படுத்திக் களப்பணி ஆற்றினால் கணிசமனா வாக்குகள்
பெற்றிருக்க வாய்ப்பு உண்டே! இதனால் தொண்டர்கள் உற்சாகம் பெற்றுக் கூட்டணி
மலர்ச்சியடையுமே!
ஒரு தொகுதியில் போட்டியிடக்கூட வகையற்றவர்கள், பொதுத்தேர்தலைக் கருதலாமா? மாறாக, ஒட்டுமொத்தமாகத் தேர்தல்களிலிருந்து விலகி, இயக்கமாகப் பணியாற்றலாம்.
தே.மு.தி.க.
மேசையைத் தட்டுவதற்கும் வெளிநடப்பு
செய்வதற்கும் எதற்குவாக்களிக்க வேண்டும் என்னும் தேமுதிகவின் கேள்வி
சரிதான். ஆனால், வெற்றி பெற்றதும் கட்சி மாறப் போகிறவருக்காக எதற்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்கள் எண்ணுவார்கள் அல்லவா?
ம.ந.கூட்டணியிடம் வாக்களிக்க வேண்ட
மாட்டார்களாம்! அவர்களாகப் பொதுநலம் கருதி ஆதரிக்க வேண்டுமாம்!
கட்சிக்குரிய உண்மையான செல்வாக்கை அறியத்தான் இந்த முடிவு என்றால்
வரவேற்கலாம். இல்லையேல் இந்த வீம்பு வேண்டா. ஒத்திவைப்புத் தேர்தல்
புறக்கணிப்பை ஏற்றுக்கொண்டு திருப்பரங்குன்றம் தொகுதியில்மட்டுமாவது
ஆதரவைக்கேட்கலாம். இதன்மூலம் பெரிய கட்சிகளைத் தவிரப் பிற கட்சிகளை மக்கள்
ஓரளவாவது வரவேற்கிளறா்களா? இல்லையா என அறிந்து கொள்ளலாம்.
வாக்காளர்களால் இத்தேர்தல்களில் ஆர்வம்
காட்ட இயலவில்லை. எனினும் அமைதியாக இருந்து தேர்தல் நாளில் தங்கள் முடிவை
வெளிப்படுத்தி விடுவார்கள்.
யார் வெற்றி பெற்றாலும் தோல்வி வாக்காளர்களுக்குத்தான் என்னும் பொழுது இது குறித்து விரிவாக எழுதிப் பயனில்லையே!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல 159, ஐப்பசி 21, 2047 / நவம்பர் 06, 2016
No comments:
Post a Comment