தலைப்பு-கனவல்ல தமிழீழம், இலக்குவனார் திருவள்ளுவன், இதழுரை l thalaippu_kanavalla_thamizheezham_thiru_ithazhurai
கனவல்ல தமிழீழம்!  மெய்யாகும் நம்பிக்கை!
  தமிழீழம் என்பது கனவல்ல!  நேற்றைய வரலாற்று உண்மை. நாளை நிகழப்போகும் உண்மை வரலாறு! போராளிகளாக, விடுதலைப்புலிகளாக, வான்புலிகளாக, கடற்புலிகளாக, உயிர்க்கொடைஞர்களாக, எனப் பல்வகை ஈகையர் தங்கள் மனக்கண்ணில் கண்ட உண்மையே தமிழ் ஈழம்!
  அது வெறும் கனவல்ல! அருந்தமிழ் உணர்வும்  அறிவுச் செம்மையும் அறிவியல்  புலமையும்  போர்வினைத்திறமும்  மாந்த நேயமும் பண்பு நலனும் கடமை உணர்வும் கொண்ட  ஈழத்தமிழர்கள் போர்க்களங்களிலும் பிற வகைகளிலும்  தம் உயிரைக்  கொடுத்ததன் காரணம் வெறும் கனவல்ல! பழந்தமிழர்கள் தனியரசாய் ஆட்சி  செய்ததை நினைந்து, மீண்டும் தமிழராட்சியை அடைய முடியும் என்ற நம்பிக்கை யே!
   தங்களின் நம்பிக்கை நட்சத்திரமான மேதகு வே.பிரபாகரன் ஆட்சி செய்யும் பாங்கினைக் கண்டதால் தமிழீழ நம்பிக்கை எழுந்தது! அந்த நம்பிக்கையால் தத்தம் உயிர் கொடுக்கவும் போராளிகளும்  களப்பணியாளர்களும் முன்  வந்தனர். அந்த நம்பிக்கை கைகூடும் வேலை,  அடிமைப்பட்டுக் கிடக்கும்  தமிழகத் தமிழர்களின் கையாலாகாத் தனத்தாலும் இந்தியாவின் முன்னெடுப்பினாலும் உலக நாடுகள் பலவும்  மாந்த நேயம் துறந்து சிங்களக்காடையருக்கத் துணை நின்ற அவலம் நிகழ்ந்தது.
  நெஞ்சுறுதியும் விடுதலை வேட்கையும் கொண்ட புலிகளையும் மக்களையும் போரால் கொல்ல முடியாது என்பதால் இனப்படுகொலை நிகழ்த்தி நம்பிக்கை நிறைவேற்றத்தை ஒத்திப் போட்டுள்ளனர். ஆம், தமிழ் ஈழம் மலர்வது ஒத்திபோடப்பட்டுள்ளதே தவிர, வெற்றியைக் கொலையாளிகள் எட்டவுமில்லை!  ஈழத்தமிழர்கள்,   தோல்வியைத் தழுவவுமில்லை.  விடுதலைப்போர் முற்றுப்பெறாத பொழுது இடையிலே ஏற்பட்ட தடங்கலை எவ்வாறு தோல்வி எனச் சொல்ல முடியும்?
  நம்பிக்கை வித்து வரலாறாக மாறப்போவதற்கான உரம்தான்  போர் வேள்வியில் மாண்ட  மா வீரர்களையும் மக்களையும் போற்றி வணங்கும் நிகழ்வுகள்.
  போரினால் கொல்ல முடியாது என்பதை இருக்கின்றோர், மானமிகு உயிர்  ஈகையர் மனக்கண்ணில் கண்டவற்றை உலகம் காண உணர்வுடன் உள்ளனர்.
  “எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். சிறப்பிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு  இயல்பானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது
எனத் தமிழ்ஞாலத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் கூறியுள்ளவாறு சிறப்பான பங்களிப்பிற்குரியவரை நாம் சிறப்பிக்க வேண்டுமல்லவா?
வீர வணக்கங்களுடன், உலகில் இருந்து உள்ளத்திற்கு இடம்மாறிய  வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவுதல், அவர்களையும் வணங்கிப் போற்றுதல்  முதலான வழிகளிலே நாம் சிறப்பிக்க வேண்டும். அதுதான் நமக்காக இன்னுயிர் ஈந்தவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகும்.
பகைவன் தீங்கிழைக்கும் பொழுது பட்டெனச்சினந்து ஆற்றலை இழந்திடார் அறிவுடையார். உள்ளத்தில் வெற்றிக்கான கனலை வளர்த்து உரிய காலத்தில்  வெளிப்படுத்தி வெற்றி காண்பர். இதனைத் திருவள்ளுவர்
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்(திருவள்ளுவர், குறள் 487)
என்கிறார்.
  ஈழத்தமிழர்கள் தாயகத்தில் இருந்தாலும் புலம் பெயர்ந்து இருந்தாலும் அவர்கள் உள்ளங்களில் நீறுபூத்த நெருப்பாக விடுதலைக் கனல் உள்ளது. அந்தக் கனலில் இனப்படுகொலையாளிகள் வீழ்வது உறுதி!  ஈழத்தமிழர்கள் வெல்வது உறுதி! தமிழ் ஈழம் மலர்வது உறுதி!
விரைவில் சந்திப்போம் தமிழ் ஈழத்தில் நாம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 161, கார்த்திகை 05, 2047 / நவம்பர் 20, 2016
அகரமுதல முழக்கப்படம்02 :Akaramuthala-Logo
eezham-with-prapakaran01