தலைப்பு-காசுட்டிரோ முன்பே மறைந்து விட்டார், இதழுரை,இலக்குவனார் திருவள்ளுவன் ; thalaippu_castro_munbe_maraindhuvittar_ilakkuvanarthiruvalluvan

புரட்சித்திலகம் காசுட்டிரோ முன்பே மறைந்து விட்டார்!


  விடுதலைப் போராளி,  உலகை ஆட்டிப் படைக்கும் அமெரிக்காவையே ஆட்டிப்படைத்த மாவீரன், 638 தடவை  அமெரிக்க எமனிடமிருந்து மீண்டவன், ஒடுக்கப்பட்டவர்களின் குரலோன், நாட்டில் கல்லாமையை ஒழித்த செயற்பாட்டாளன்,  பரப்பளவில் சிறியதான கியூபாக் குடியரசு அல்லது கூபாக்குடியரசு நாட்டைப் பெரிய நாடுகளுக்கு இணையாக மாற்றிய தலைவன், இவ்வாறான பல அடைமொழிகளுக்குச் சொந்தக்காரர் புரட்சித்திலகம் பிடல் காசுட்டிரோ (Fidel Alejandro Castro Ruz  :  ஆடி 28,  தி.பி. 1957 / ஆகத்து 13, 1926 – கார்த்திகை 10, 2047 / நவம்பர் 25, 2016) மறைந்தார்.
  அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர், நாட்டினர், அன்பர்கள் அனைவருக்கும் இரங்கலைத் தெரிவிக்கிறோம்.  அதே நேரம், அவரது  பூத உடல் இப்பொழுதுதான் மறைந்தது; ஆனால்,  அவர்  கொள்கை உள்ளம் என்றோ மறைந்து விட்டது என்பதை எண்ணாமல் இருக்க முடியவில்லை.
  தன் தாய்நாட்டை நேசிக்கும் எந்த ஒருவனும்  தத்தம் தாய்நாட்டை நேசிக்கும் பிறரையும் நேசிக்க வேண்டும்.  தன்நாட்டிற்கு எதிரான ஒற்றை வல்லாண்மைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஒவ்வொருவனும்  பிற நாட்டிற்கு எதிரான ஒற்றை வல்லாண்மைகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும். தன் பகைநாடுகளின் வல்லாண்மையை எதிர்த்துக் கொண்டு தன் நட்பு நாடுகளின் வல்லாண்மையை ஆதரிப்பது அறிவின்மை மட்டுமல்ல! நாணயமின்மையுமன்றோ!
  பிடல் காசுட்டிரோவைப் புகழாதவர்கள் பழிக்கப்படவேண்டியவர்கள் என்பதுபோல் ஒவ்வொருவரும் அவரைப் புகழ்ந்து கொண்டிருக்கும் போது இப்படி எழுதலாமா எனச் சிலர் கேட்கலாம்.
  “பெரியோரை வியத்தலும் இலமே” (கணியன் பூங்குன்றனார், புறநானூறு 192.12) என்பதுதான் நம் நெறி.  புகழ்ச்சிக்குரிய செயல்களைப் பாராட்டும் நாம் இகழ்ச்சிக்குரிய செயல்களையும் கண்டிக்க வேண்டுமல்லவா? நற்செயல் புரிந்தவர் என்பதற்காக ஒருவரின் தீவினைகளையும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பது அறமாகுமோ?
   நாட்டின் முழக்கமாகப் பிடல் காசுட்டிரோ அமைத்தது “தாய்நாடு  அல்லது மரணம்” என்பதுதான். ஆனால், இதே முழக்கத்தைச் செயலில் காட்டி விடுதலைப்புலிகளும் ஈழத்தமிழர்களும் தாய் நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட பொழுது உதவிக்கரம் நீட்டாமல் இருந்திருக்கலாம். ஆனால், பயங்கரவாதிகள் என்றும் பிரிவினை வாதிகள் என்றும்  குற்றம் சுமத்தி எதிராளிகளுடன் நட்பு கொள்ளலாமா? உலகின் ஒடுக்கப்பட்ட இனங்களுக்காகக்  குரல் கொடுப்பவர் என்னும் பெயர் வாங்கிக்  கொண்டு ஒடுக்கி அழிப்போருடன் இணைந்து செயல்படலாமா?  தன் நட்பு நாடுகளையும் இணைத்துக்  கொண்டு தமிழினப் படுகொலைகளுக்கு உடந்தையாக இருந்ததை நாம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
 இந்தியாவின் நட்பு நாடு கியூபா. எனவே, மத்திய ஆளும் பொறுப்பிலிருந்த எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் நண்பனாக இருந்தவர் காசுட்டிரோ. மத்தியில் யார் இருந்தாலும் இந்தியஅரசு தமிழினத்தை ஒடுக்குவதில் குறியாகவே உள்ளது. அதனால்தான் ஈழத்தமிழர்களையும் பகையாகக் கருதியது. எனவே, இந்தியாவின் எதிரி கியூபாவிற்கும் எதிரியானது. எனவே, தமிழினத்தை அழிக்கும் முயற்சியில் தன் கொள்கைகளுக்கு மாறாக உடந்தையாக இருந்தது கியூபா.
தமிழுக்கும் தமிழர்க்கும் பகையெனில் நமக்கும்  பகையே என்பார் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார். அப்படியாயின் தமிழர்க்கு – ஈழத்தமிழர்க்கு –  வெளிப்படையான பகையாக நடந்து கொண்ட பிடல் காசுட்டிரோவை நாம் பகையாகக் கருதுவதில் தவறில்லை.
  காசுட்டிரோவின் போராட்ட வரலாறு கண்டு போற்றுகிறோம்! புரட்சி முழக்கங்களை வரவேற்கிறோம்! அதே நேரம், கொள்கையில் தடுமாறி இன அழிப்பு நாடான சிங்களத்துடன் கை கோத்ததை நாம் எவ்வாறு ஏற்றுக் கொள்ள இயலும்?
   பிடல் காசுட்டிரோ 1959 இல் ஆட்சி பொறுப்பேற்றதும் இலங்கையை நட்பு நாடாக ஏற்றுக் கொண்டு இணைந்து செயல்பட்டது. ஆனால், நண்பன் தவறு செய்யும் பொழுது இடித்துரைத்து வழிகாட்டுபவன்தானே உண்மை நண்பனாக இருக்க முடியும்?  ஒடுக்கப்பட்டவர்களின் நண்பன் என்னும் முகமூடியை அணிந்து கொண்டு ஒடுக்குபவர்களின் கரங்களுடன் தம் கரங்களை இணைத்துக்  கொண்ட பொழுது,  காறி உமிழ்ந்திருக்க வேண்டாவா?
   எப்பொழுது இனப்படுகொலையாளி சிங்களத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டாரோ அப்பொழுதே பிடல் காசுட்டிரோ மறைந்து விட்டார் என்று சொல்வதில் என்ன தவறு உள்ளது?
  இந்தியா, அமெரிக்க வல்லாண்மைக்கு எதிராகச் சோவியத்து ஒன்றியத்தின் பக்கம் நின்ற நாடு; அணி சேரா நாடு எனத் தனி அணி கண்ட நாடு; விடுதலைக்குரல் எங்கெல்லாம் ஒலித்ததோ அங்கெல்லாம் தானும் குரல் கொடுத்து எதிரொலித்த நாடு; என்றபோதும் தமிழரைப் பகையாகக் கருதுவதால்தானே அதை எதிர்க்கிறோம். தமிழ் ஈழ மக்களைக் கொல்வதற்குத் துணை நின்றதால்தானே எதிர்க்கிறோம். இந்திய அமைப்பில் இருந்து கொண்டே அதன் அறமற்ற செயல்களுக்காக எதிர்க்கும் நாம் அயல்நாடான கியூபாவின் அறமற்ற செயல்களுக்காக அதை எதிர்க்கத்தானே வேண்டும்?
 முன்பு ஈழத்தமிழர் விடுதலை போராட்டத்திற்குத் துணை நின்றது பேராயக்கட்சி(காங்கிரசு). பின்பு அதுவே சிங்களத்துடன் இணைந்து கொண்டு அதன் சார்பில் இன அழிப்புப் போரை நடத்தியது. முந்தைய பணிக்காக அதைப் பாராட்டாமல் பிந்தைய கொடுமைக்காக அதனை வேரொடு கில்லி எறிய வேண்டும் என்று சொல்லவில்லையா?
 ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுதததாகத் தி.மு.க.வையும் அதன் தலைவர் கலைஞர் கருணாநிதியையும் தவிர வேறு கட்சியையோ தலைவரையோ சொல்ல இயலுமா? அற்றை நிலைப்பாட்டிற்கு மாறாகக் குடும்ப நலன் கருதி நாட்டு நலன் துறந்து பேராயக்கட்சியுடன் இணைந்து தமிழினப் படுகொலையில உடந்தையாக இருந்த பிற்றை நிலைப்பாட்டிற்காகத்தானே கலைஞர் கருணாநிதியை எதிர்க்கின்றோம்?
 கருணா முதலான வஞ்சகர்கள் / இரண்டகர்கள் / துரோகிகள் ஒரு காலத்தில்  தங்கள் உயிரையும் துச்சசெமனக்கருதித் தாய் நாட்டு விடுதலைக்காகப் போரிட்டவர்கள்தாமே! ஆனால், வஞ்சகர்களாக மாறியதும் அவர்களை எதிர்க்கவில்லையா?
 அப்படியானால் பிடல் காசுட்டிரோவிற்கும் இது பொருந்தும் அல்லவா?  பொதுவுடைமைவாதிகளுக்குத் தலைவர்களே பிறநாட்டினர்தாம். அவர்கள் போற்றுவார்கள். ஆனால், தமிழ் உணர்வு மிக்கவர்கள்  எப்படிப்போற்ற இயலும்?
  தமிழர்கள் என்ன காசுட்டிரோவிற்கு அல்லது கியூபாவிற்கு எதிரானவர்களா? தமிழ்நாட்டில் பொதுவுடைமைக் கருத்தைப் பரப்பியதில் திராவியட இயக்கங்களுக்கு முதன்மைப் பங்கு உண்டு. அதனால்தான் பொதுவுடைமைக் கடசிகள் தமிழ்நாட்டில் வளர முடியவில்லை. பிற நாட்டுத் தலைவர்களைவிடத் தமிழ் மக்கள் மிகுதியும் அறிந்தது பிடல் காசுட்டிரோவைத்தானே! அவரது படங்களை ஆடைகளில் அச்சிட்டும் பிள்ளைகளுக்குப் பெயரிட்டும் அவரது முழக்கங்களைப் பரப்பியும் தம் அன்பைக் காட்டுபவர்கள் ஆயிற்றே! ஈழத்தமிழர்கள் போற்றிய தலைவர்களுள் ஒருவரல்லவா, பிடரல் காசுட்டிரோ! தம் மீது அளவுகடந்த அன்பு கொண்ட தமிழர்களுக்கு எதிராகச்  செயல்பட எப்படி மனம் வந்தது என்றே தெரியவில்லையே! சிங்கள நாட்டை நட்பு நாடாகக் கருதுவதால் அவர் என்ன செய்திருக்க வேண்டும்? இருவருக்கும் இணக்கம் ஏற்பட உதவியிருக்க வேண்டுமல்லவா? அவ்வாறில்லாமல் தன் கொள்கைகளுக்கு எதிரானவர்களுடன்,  அமெரிக்க  வல்லாண்மைக்கு எதிரி என்ற பொய்யான புரட்டுரைக்காக, இணைந்து நின்று இனப்படுகொலைகளுக்கு உடந்தையாகவும் பன்னாட்டு மன்றத்தில் கொலையாளிகள் தப்பிக்கக் கேடயமாகவும் திகழ்ந்தது கொள்கை  வீரனுக்கு இழுக்கல்லவா?
 “ நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே” என்ற நெறிவந்த நாம் இந்தியா முதலான நாடுகளின் குற்றத்தை எதிர்த்துக் கொண்டு கியூபாவின் குற்றத்தை ஏற்கலாமா?
  ஒடுக்கப்படுவோர்களுக்கு வழிகாட்டியாக மட்டும் அவர் வரலாறு நமக்குப் பாடமாக அமையவில்லை. நாம் கண்மூடித்தனமாக ஆதரிப்பதை நிறுத்தினால்தான் தலைவர்கள் திருந்துவார்கள் என்பதற்குப் பிடல் காசுட்டிரோவின் வாழ்க்கையும் நமக்குப்பாடமாக அமையட்டும்!
  ஒருபுறம் பிடல் காசுட்டிரோவின் மறைவிற்கு விழிநீர் திரண்டு அஞ்சலி செலுத்தினாலும் அவரது அழிசெயல்களை எண்ணாமல் இருக்க முடியவில்லை!
  உலகம் உள்ளளவும் பிடல் காசுட்டிரோவின் புகழ் இருக்கும்!  தமிழின விடுதலைக்கு எதிரான அவரது களங்கமும் கறையாக இருக்கும்!
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. (திருவள்ளுவர், திருக்குறள் 957)
கண்ணீருடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை : அகரமுதல 162, கார்த்திகை 12, 2047 / நவம்பர் 27, 2016
அகரமுதல முழக்கப்படம்02 :Akaramuthala-Logo                                                           முழக்கம் - தமிழர்க்குப் பகை, சி.இலக்குவனார் ; muzhakkam_thamizhpakai_s-ilakkuvanar