ஈழத்தமிழர்களே! ஊர்ப்பெயர்களைச் சிதைக்காதீர்கள்!
அயலவர்கள் அவர்களின் மொழி
உச்சரிப்பிற்கேற்ப நம் ஊர்ப்பெயர்களை உச்சரித்தனர். திருநெல்வேலியைத்
‘தின்ன வேலி’ என்றும் திருவல்லிக்கேணியை ‘டிரிப்பிளிகேன்’ என்றும்
சொல்வதுபோல் எண்ணற்ற ஊர்களை இவ்வாறுதான் தவறாக நாம் தமிழிலும் ஒலித்தோம். ஒருபுறம் ஆரியமயமாக்கப்பட்ட பெயர்கள் மறுபுறம் தவறான உச்சரிப்பிலான பெயர்கள் என இருபுறமும் தாக்குதல் நடைபெற்றது.
திராவிட இயக்க எழுச்சியாலும் தனித்தமிழியக்கத்தினர் தொண்டினாலும்
தமிழறிஞர்களின் ஆற்றுப்படுத்தினாலும் ஓரளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் இன்னும் தமிழ்மய மாற்றங்கள் தேவை.
இவ்வாறு நம்மிடையே குறை வைத்துக்கொண்டு, ஈழத்தமிழர்களை மட்டும் குற்றம் சொல்வதுபோல் சொல்லலாமா என்ற ஐயம் எழலாம்.
இலங்கையிலும் ஈழத்திலும் சிங்கள அரசு தமிழ்ப்பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களைப் புகுத்தியும், புத்தர் சிலைகளைத் திணித்தும் தமிழ்நிலங்கள் முந்தைய சிங்கள நிலங்கள் எனத் தவறாகப் பரப்பி வருகிறது.
தமிழ்மக்களே தமிழ்ப்பெயர்களைத் தவறாக ஒலித்தும் பெயர்க்காரணங்களை அறியாமல்
தவறாக உணர்ந்தும் வருவது சிங்கள வெறியர்களுக்கு மேலும் வாய்ப்பாக அமையும்.
நான் சனவரித்திங்கள் ஈழம் சென்றிருந்த
பொழுது உடன் வந்த நண்பர், யாழ்ப்பாணம் எப்பொழுது செல்வோம் என்றார். நான்
“நேற்றுதானே போய்வந்தோம்” என்றதற்கு நேற்று நாம் ‘Jaffna’ அல்லவா சென்று
வந்தோம் என்றார். ஒருவர்கூட அதை யாழ்ப்பாணம் என்று சொல்லாத பொழுது
அதுதான் யாழ்ப்பாணம் என்று எப்படி நாம் உணரமுடியும்?
ஒருவர் என்னிடம் நாளை ‘டிரிங்கோசு’
பார்க்கப் போகிறேன்; வருகிறேன் என்றார். ஒருமறை டிரிங்கோ என்றால்
(மிக்கிமவுசு போன்ற) கேலிப்படம் என்றும் மறுமுறை, ஏதோ கடைவளாகத்தின் பெயர்
என்றும் ஒவ்வொரு முறையும் ஈழத்தமிழ் நண்பர் சொல்லும்பொழுது நான் எண்ணிக்
கொண்டேன். திருகோணமலை செல்லுமன்று காலையில் அவரிடம் நான், “நாங்கள்
திருக்கோணமலை செல்வதாக இருக்கிறோம்” என்றேன். உடனே அவர், “நான் நேற்றுதான்
சென்று வந்தேன்” என்றார். நேற்று ‘டிரிங்கோசு’ அல்லவா செல்வதாகத் தெரிவித்தீர்கள் என்றதற்கு, “நாங்கள் திருக்கோணமலையை டிரிங்கோசு
என்றுதான் கூறுவோம்” என்றார். ஊரின் பெயர் திரி(three)கோணமாம், எனவே,
டிரிங்கோ என்று சொல்லி அது பன்மை என்பதால் டிரிங்கோசு என்கிறார்களாம்.
பல ஊர்ப்பெயர்களைத் தமிழ்ப்பெயர்கள் எனத் தமிழர்களே அறியாத வண்ணம் சிதைத்துக் கூறுகின்றனர்; எழுத்திலும் பயன்பாட்டில் கொண்டு வந்துவிட்டனர். தமிழ்நெட். என்னும் வலைத்தள இதழில் ஊர்ப்பெயர்கள் குறித்த விளக்கம் அவ்வப்பொழுது வருகின்றது.
இது போன்ற கட்டுரைகளை மாணாக்கர்களுக்குப் பாடமாக வைக்க வேண்டும். ஒவ்வோர்
ஊரிலும் ஊர்ப்பெயர் வரலாறு குறித்துப் பெயர்ப்பலகை வைக்க வேண்டும். ஆனால்
அவ்வரலாறு உண்மையானதாக இருக்க வேண்டும்.
எடுத்துக்காட்டிற்கு ஒன்று கூறுகிறேன்.
இலங்கையில் மட்டக்களப்பு என்னும் நகரம்
இருப்பதை அறிவீர்கள். (இதுகூட பட்டிகோலா அல்லது பட்டிகலோ(Batticaloa)தான்.)
இதன் பெயர்க்காரணம் குறித்து, விக்கிபீடியா பின்வருமாறு தெரிவிக்கிறது:
மட்டக்களப்பு எனும்
சொல் எப்படி தோற்றம் பெற்றது என்பதில் வெவ்வேறான கருத்துகள்
காணப்படுகின்றன. பல தடவைகள் மட்டக்களப்பு பிரதேசம் சிங்கள அரசின்
ஆட்சிக்குட்பட்டு இருந்ததால் சிங்களச் சொற்களின் தாக்கம் மட்டக்களப்பில்
கலந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சிங்களத்தில் சேறு என்பதைக்
குறிக்கும் “மட்ட” என்ற பதமும், வாவியால் அப்பிரதேசம்
சூழப்பட்டதால் நீர் தேங்கியிருக்கும் இடத்தினைக் குறிக்கும் “களப்பு” என்ற
பதமும் சேர்ந்து மட்டக்களப்பு எனும் சொல் உருவாகியது என்ற கருத்தும்
உள்ளது.[பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ். மட்டக்களப்பு:
ஆரணியகம். 2005. பக். 75.]
உண்மையில் இது நல்ல தமிழ்ப்பெயராகும். களப்பு என்பது ஆழமற்ற நீர்மட்டம் கொண்ட கடல் பகுதியைக் குறிக்கும். நிலத்திற்கு மட்டமாக – இணையாகக் கடல்நீர்ப்பகுதி அமைவதால் அதற்கு மட்டக்களப்பு என்ற பெயர் வந்தது. இந்த அறிவியல் காரணத்தை அறியாமல் சிங்களச்சொல் என்று சொல்வதால் வரலாறு அழிகிறது, தமிழர்க்குரிய நிலம்என்னும் உரிமையாவணமும் காணாமல் போகிறதல்லவா?
ஈச்சிலம்பற்று ஊரில் (
தை 16, 2048 / 29.01.2017 அன்று) நடைபெற்ற இலக்கியச்சந்திப்பில
ஊர்ப்பெயர் சிதைப்புகள் தீமையை விளக்கி இனிமேல் தமிழிலேயே எல்லா
மொழிகளிகலும் உச்சரிக்குமாறு வேண்டினேன். வடமாகாண அமைச்சர் திரு இயோகீசுவரன்
தொடக்கத்தில் இருந்து நிறைவு வரை இவ்விழாவில் கலந்துகொண்டார். அவரிடமும்
அரசு சார்பில் நடவடிக்கை எடுக்குமாறு (அறியாமையில்) வேண்டினேன்.
அமைச்சர் இயோகீசுவரன்
மேலும் சில ஊர்ப்பெயர்களையும் அவற்றை எப்படியெல்லாம் சிங்களமயமாக்கி அரசு
எழுதி வருவதையும் ஒவ்வொருமுறை எதிர்ப்பு தெரிவித்தாலும் பயனில்லை என்றும்
சிங்களக் குடியேற்றங்களைத் திணிக்கும் அரசு, படைவீரர்களைக் குடியேற்றும்
அரசு அவற்றை யெல்லாம் சிங்களப்பகுதி என்று பொய்யாகக் காட்டுவதற்காகவே
செய்வதாகவும் எடுத்துக்காட்டுகளுடன் நன்கு விளக்கினார். எனவே, மக்கள்
ஊர்ப்பெயர்களைத் திருத்தமாகக் குறிப்பிட்டால்தான் நம் ஊர்ப்பெயர்களை
மாற்றுகிறார்கள் என்ற உணர்வு வந்து எதிர்ப்பார்கள் என்றும் ஆட்சியில்
யாரிருந்தாலும் தமிழர்க்கு எதிரான போக்குதான் இருக்கும் என்றும் ஆனால்,
இப்போது முறையிட வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.
எனவேதான் ஈழத்தமிழர்களிடம் வேண்டுகிறோம்! – சிங்கள அரசின் நிலப்பரப்பு வேலைகளுக்கு நம் செயல்களும் அமைந்துவிடக்கூடாது அல்லவா?
எனவே,
தமிழில் பேசுக!
ஊர்ப்பெயர்களைத் தமிழிலேயே குறிப்பிடுக!
தமிழிலேயே எழுதிடுக!
தமிழ்ஈழத்தைக் காத்திடுக!
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. (திருவள்ளுவர், திருக்குறள் 392)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை : அகரமுதல 182, சித்திரை 03, 2048 / ஏப்பிரல் 16, 2017
No comments:
Post a Comment