நீலிக்கண்ணீரை நிறுத்தட்டும்
நடிப்புத் திலகம் இரசனிகாந்து!
நடிப்பையும் தோரணையையும் பொருத்தவரை
பெரும்பாலான நேயர்களின் உள்ளத்தைக் கவர்ந்துள்ளார் இரசனிகாந்து என்பதில்
ஐயமில்லை. ஆனால், அதனாலேயே அவரது சொல்லுக்குக் கட்டுப்படும் மக்கள்
பெரும்பான்மையர் இருப்பதாக எண்ணினால் தவறு. மக்கள் திலகம் ம..கோ.இரா.வின் (எம்ஞ்சியாரின்) கொடை உள்ளத்துடனும் தமிழ் உணர்வுடனும் ஒப்பிடக்கூட இயலாதவர்தான் இரசனிகாந்து என்பதில் ஐயமில்லை.
பணத்துக்கு விலை போவோரால் எழுதப்பட்ட தமிழ்உணர்வு வரிகளுக்கு இரசனிகாந்து வாயசைத்துள்ளார். ஆனால், சொந்தக்கருத்தாக எப்பொழுதும் தன்னை வாழ வைக்கும் தமிழ்நாட்டு நலன் சார்ந்தகருத்துகளைத் தெரிவித்தவர் அல்லர். மனித
நேயத்துடன் ஆற்றிய பணிகளாகக் குறிப்பிடும்படி எதுவும் செய்தவரல்லர்.
அப்படி ஏதும் செய்திருந்தாலும் மிக எளிய கலைஞர்களின் செயலுடன் ஒப்பிட்டுப்
பார்ததாலும் அதுசிறிய அளவாகத்தான் இருக்கும்.
தன் படம் வெளிவரும் பொழுதெல்லாம் ஊடகம்மூலம் பரபரப்பு செய்தி வரும் வகையில் நடந்து கொள்ளும் இவர், அடுத்து
வரும் தன் பட விளம்பர உத்திக்காக அதன் ஆக்குநர்(தயாரிப்பாளர்) நலன் கருதி
அவர் வேண்டுகோளுக்கேற்ப ஈழம் சென்று வருவதாக இருந்தது. வரும் பங்குனி 27 / ஏப்பிரல் 9 அன்று வவுனியாவில் 150 வீடுகளைப் பயனாளிகளுக்கு வழங்கும் விழாவில் பங்கேற்கவே செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் அங்கே ஈழத்தமிழர்களுக்கு நலவாழ்வு அளிப்பதாகவும் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் போலியாக உணர்த்தவே இந்த நாடகம். எனவேதான், வைகோ, தொல்.திருமா, வேல்முருகன் முதலான தலைவர்களும் தமிழுணர்வாளர்களும் இரசனி மீதுள்ள நல்லெண்ணத்தால் இந்த நாடகத்தில் சிக்க வேண்டா என்பதற்காக அங்கே போக வேண்டா என்றனர். எதிர்ப்புகள் வலுத்ததால், பட ஆதாயத்திற்கு ஊறு நேரும் என அவரும் இலங்கை செல்லும் முடிவை மாற்றிக் கொண்டார்.
இரசனி இலங்கை செல்ல விரும்பியதற்கான காரணங்கள் எனக் கூறுவது அவர் மிகப்பெரும் நடிப்புத் திலகம் எனக் காட்டுகின்றது.
“ தங்களின் இனத்துக்காக, உரிமைக்காக இலட்சக்கணக்கில் இரத்தம் சிந்தி மடிந்த, அந்த
மாவீரர்கள் நடமாடிய இடங்களைப் பார்க்க வேண்டுமென்ற வெகுநாளைய ஆசையின்
காரணமாகவும் இலங்கைக்குச் செல்ல வேண்டும் என்று ஆவலாக இருந்தேன்.
அதுமட்டுமன்றி, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறீசேனாவைச் சந்திக்க நேரம் கேட்டு, இலங்கைக்
கடற்படையால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் சிக்கலுக்கு இணக்கத்
தீர்வு காண அவரிடம் வேண்டுகோள் விடுக்கவும் எண்ணியிருந்தேன்.”
என யாரோ எழுதித் தந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். யார் எழுதியிருந்தால் என்ன? இவர் பெயரில் வந்த அறிக்கையின் செய்திகளுக்கு இவர்தானே உரியவர்!
எப்பொழுதும் தமிழுணர்வை வெளிப்படுத்தும் சத்தியராசு போன்ற நடிகர்கள் அலலது கலைஞர்கள் இப்படித் தெரிவித்திருந்தால் அதில் பொருளுண்டு. அல்லது வாய்ப்புள்ள பொழுது மேதகு பிரபாகரனைப் பாராட்டி கருத்துகளைத் தெரிவிக்கும் பிரகாசுராசு, கத்தூரிபோன்ற நடிகர், நடிகையர் இவ்வாறு தெரிவித்திருந்தாலும் அவர்கள் செல்ல விரும்புவதன் காரணம் உண்மை என நம்பலாம்.
ஆனால், ஈழத்தில் பெரும் அவலம் ஏற்பட்ட
பொழுது அமைதி காத்தவர், கிட்டத்தட்ட இரு நூறாயிரம் – இரண்டுஇலட்சம் –
மக்கள் அழிக்கப்பட்டபொழுது கவலைப்படாதவர், மாவீரர் வீரவணக்கநாளின்
பொழுதுகூடத் தன் உணர்வை வெளிப்படுத்தாதவர், இங்குள்ள ஈழத்தமிழர்கள் துயர் துடைக்கத் துரும்பையும் எடுத்துப் போடாதவர், முள்ளிவாய்க்கால் அவலத்தின் நினைவாக அமைக்கப்பட்ட முள்ளிலவாய்க்கால் முற்றம்பக்கம் எட்டிக்கூடப் பார்க்காதவர், தன் அன்பர்களைக்கூட இத்தகைய உணர்வை வெளிப்படுத்த வழிகாட்டாதவர், மாவீரர்கள் நடமாடிய இடங்களைப் பார்க்க ஆசைப்படுவதாகக் கூறுவது அவருக்கே பொருத்தமில்லாத நடிப்பு என்று தெரியவில்லையா?
தான் பார்க்க ஆசைப்படும் மாவீரர்
துயிலிடங்களைச் சிங்கள அரசு சிதைத்துச் சின்னாபின்னமாக்கியதே! அப்பொழுது
எங்கே உறங்கிக்கொண்டிருந்தார்? படைத்துறையினரிடமிருந்து தங்கள் நிலங்களை
மீட்க கேப்பாப்புலவு மக்கள்தொடர்நது போராடிக்கொண்டு்ள்ளார்களே, அவர்களது கண்ணீரைத் துடைக்கச் சிறிதாவது அசைந்து கொடுத்துள்ளாரா? உணர்வைக் கொட்ட வேண்டிய நேரத்தில் எல்லாம் பெருங்கல்லாக நின்று கொண்டிருப்பவர், உதவிக்கரம் நீட்ட வேண்டியநேரங்களில் எல்லாம் கைகட்டி வாய்பொத்திக் கிடப்பவர், தன் வேடம் கலையும் பொழுது நடிக்கமுற்படுவது வேடிக்கைதான்!
இவை மட்டுமல்ல! “இனிவரும் காலங்களில் புனிதப்போர் நிகழ்ந்த அந்த பூமியைக் காணும் பாக்கியம் கிடைத்தால்”,
அதைத்தடுக்கக்கூடாதாம். முன்னதான வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
புனிதப்போர் எனச் சிங்களப்படையினரின் இனப்டுகொலைகளைத் திரித்துக்கூறுகிறாரா
எனத் தெரியவில்லை! தமிழர்களின் சார்பில் இனவிடுதலைப்போரை அவ்வாறு இவர்
சொல்ல வாய்ப்பில்லை. ஈழத்தமிழர்கள் நடத்திய விடுதலைப்போருக்கு எதிராகக் கொடூரமான
படுகொலைச் செயல்களை அரங்கேற்றியது சிங்கள அரசு! அதற்குத் துணை நின்றது
இந்திய அரசு! அதற்குவாய்மூடி அமைதி காத்தது தமிழக அரசு! அப்பொழுதெல்லாம்
சிறிதும் அசைந்து கொடுக்காதவர், இப்பொழுது வாய்திறப்பது, அவரின் இப்போதையஇயக்ககுநர் சரியில்லை என்பதைக் காட்டுகிறது!
மீனவர் நலனுக்காக அதிபர் சிறீசேனாவைச்
சந்தித்து இணக்க முடிவு காண விரும்புகிறவர், தமிழக மீனவர்கள், இதுவரை
குண்டடி பட்டு உயிரிழந்த பொழுதும் உறுப்புகளை இழந்தபோதும், படகுகளை
இழந்துபோதும் எந்த உலகத்தில் இருந்தார்? அப்பொழுது இவர் வாய் தைக்கப்பட்டிருந்ததா?
உண்மையிலேயே இரசனிகாந்திற்குத்தமிழக மீனவர்கள் மீதும், ஈழத்தமிழர்கள் மீதும் பரிவு இருந்ததால், அவர் இங்கிருந்தே செய்ய வேண்டியன:
- அவரது நண்பர் நரேந்திர(மோடி)யிடம் கூறி, இந்திய அரசு தமிழ் ஈழத்தை ஏற்கிறது/அங்கீகரிக்கிறது என அறிவிக்கச் சொல்லட்டும்.(அவ்வாறு அறிவித்தால் பொதுவாக்கெடுப்பு தேவையில்லை.)
- தமிழ் ஈழ மக்களுக்கு இந்திய அரசு செய்த கொடுஞ்செயல்களுக்காகத் தமிழ் ஈழ அரசிடம் இழப்பீட்டுத் தொகை தரச்சொல்லட்டும்!
- இந்தியா ஈழ அரசை ஏற்றுக்கொண்டாோலயே ஐ.நா.போக்கு மாறும். உடனே இனப்படுகொலையாளிகள் மீது பன்னாட்டு உசாவல் நடத்த ஏற்பாடு செய்யட்டும்!
- 1.01.1600 அன்று இலங்கையில் தமிழர் வாழ்ந்த பகுதிகள் யாவும் தமிழ் ஈழம் என அறிவிக்கட்டும்!
- தாய்மண் காத்து உயிர் துறந்தவர்கள் நினைவாக நம் நாட்டில் பெரும் நினைவுக்கோபுரம் எழுப்பட்டும்!
- சிங்களப்படையால் உயிரிழந்த, பாதிப்புற்ற தமிழக மீனவர் குடும்பத்தினருக்குச் சிங்கள அரசிடமிருந்து இழப்பீட்டுத்தொகை வாங்கித்தரட்டும்!
- நம்நாட்டில் வாழும் ஈழத்தமிழர்கள் அனைவரும் கொத்தடிமைபோல் அடக்கப்படாமல், முழு உரிமையுடன் வாழ வகை செய்யட்டும்!
இவ்வாறு ஈழத்தமிழர்களின் துயரங்களைப்
போக்கவும் அவர்களது உரிமை உணர்வுகள் வடிவம் காணவும் தமிழக மீனவர்கள்
எத்துயருமின்றி வாழவும் வகை செய்யட்டும்! இவற்றை எல்லாம் செய்த பின்னர்,
அல்லது குறைந்தது இவற்றுக்கான முயற்சி மேற்கொண்டு தன் கருத்துகளைத்
தெரிவிக்கட்டும்!
அல்லது நீலிக்கண்ணீரால் மக்கள் ஏமாற்றம் அடையமாட்டார்கள் என்பதை உணர்ந்து அமைதி காக்கட்டும்!
இவரை அழைத்த இலைக்கா நிறுவனத் தலைவர்
சுபாசுகரன், இங்குளள் தமிழ் உணர்வாளர்கள், இரசினி வருகையைத்
தடுத்துவிட்டார்கள் என அவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதுபோல்
நாடகம் நடத்தி வருகிறார். அப்பொழுதுதான் வீடுகிடைக்கும் என்று
கட்டாயப்படுத்தி, இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் என அங்குள்ளவர்களே
கூறிவிட்டனர்.
எனவே, தவவேடத்தைக் கலைத்து,
ஈழத்தமிழர்கள்பால் உண்மையான பரிவும் அன்பும் கொண்டு மனிதநேயத்துடன் நடந்து
கொள்ளுமாறு இரசினிகாந்திற்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்!
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும் (திருவள்ளுவர், திருக்குறள் 822).
(உற்றவராக இல்லாமல் உற்றவர் போல் நடிப்பவர் நட்பு, உள்ளொன்றும் புறமொன்றுமாகஇருக்கும் விலைமகளிர் மனம்போல் மாறுபடும்.)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment