இந்தியைத்திணிப்பது மத்திய அரசின் கடமை!

அஃதை ஏற்பது நம் மடமை!

  “மெல்ல மெல்லப் படரும் நோய்போல இந்தி எல்லாச் சந்துபொந்துகளிலும் நுழைகிறது; குழைகிறது; நமது தன்மானம் பறிபோகிறது” எனப் பேரறிஞர் அண்ணா அன்றே  எச்சரித்துள்ளார்.
 இன்று, இந்தி எல்லா இடங்களிலும் ஆழமாக வேரூன்றிக் கிளை பரப்பிக் கொண்டுள்ளது; அதைக்கூடப் புரிந்துகொள்ளாமல் “எல்லைக்கற்களில் இந்தி” என ஆர்ப்பாட்டம் செய்து என்ன பயன்?
 வஞ்சகமாய் வெல்வதுதான் ஆரியத்தின் வழக்கம். அதுபோல்தான் இந்தியும் பொய்யான தகவல்கள் மூலமும் முறையற்ற செயல்கள் மூலமும் மத்திய அரசின் அலுவல்மொழியாக மாறியுள்ளது.
  இந்தி  நாட்டிலுள்ளவர்களில் பாதிக்கு மேற்பட்ட மக்களால் பேசப்படுவதால் இந்தியைத் திணிப்பதால் தவறில்லை என மொரார்சி போன்றவர்கள் கூறினர். அப்புள்ளிவிவரம் தவறு என்றதும் 42 விழுக்காட்டு  மக்களால் பேசப்படும் மொழி என்றனர் . அதுவும் தவறு என்றதும் இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்றனர். உயர்நீதிமன்றமே இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்று அழைக்கப்படக்கூடாது என்று சொல்லி  விட்டது.
  சுரேசு கச்சாடியா(Suresh Kachhadia) என்பவர் 2009 ஆம் ஆண்டில்  தொடுத்த பொதுநல வழக்கில் குசராத்து தலைமை நீதிபதி முகோபாத்தியாயா(Mukhopadhaya) தலைமையிலான நீதிபதிகள், இந்தி தேசியமொழி அல்ல என்பதை ஆணித்தரமாகக் கூறியுள்ளனர். இருப்பினும் இந்தி நம் தேசிய மொழி என மத்திய அமைச்சர்களும் சில கட்சியினரும் ஊடகத்தினரும் பாடநூல் எழுதுவோரும் தவறாகத் தெரிவித்து வருகின்றனர்.
  இந்தியை நாட்டின் அலுவல் மொழியாக அறிவிக்கவேண்டும் என்பதற்காகப் பிற மொழிகளைத் தாய்மொழியாக உடையவர்களிடம் இந்தியைத் தாய்மொழியாகத் தெரிவிக்குமாறு துண்டறிக்கைகள் அளித்தும் வேறு வகைகளிலும் பரப்புரை மேற்கொண்டனர். அப்படியும் வெற்றி பெற முடியாமல் பிற மொழிகள் பேசுவோரை இந்தி மொழிபேசுவோராகத் தவறான புள்ளிவிவரம் காட்டியுள்ளனர். மத்தியப்பிரதேசத்தில் மட்டும் 81 மொழிகள் இவ்வாறு இந்தி மொழி பேசுவோர் எண்ணிக்கையாகத் தவறாகக் காட்டப்பட்டுள்ளன என்றால் நாடு முழுவதும் எத்தனை மொழிகளை இவ்வாறு இந்தியாகக் காட்டியிருப்பார்கள் என எண்ணிப்பாருங்கள். இந்தப் புள்ளிவிவரம் மத்திய அரசின் கணக்கெடுப்புத்துறை கூறுவதாகும்.(“பெரும்பாலோர் மொழி இந்தி’’ என்பது உண்மைக்கு மாறுபட்டது – மே.சி.சிதம்பரனார்: குறள்நெறி:  வைகாசி 02, 1995 / 15.05.1964 பக்கம் 3-5 ;தரவு, அகரமுதல – மின்னிதழ்) ஏறத்தாழ 14.5 விழுக்காட்டு மக்கள் பேசும் இந்தி மொழி, இவ்வாறான தவறான புள்ளிவிவரச்சேர்க்கையால் 42 விழுக்காடாகக் காட்டப்பட்டுள்ளது என்பதும் மத்திய அரசின் கணக்கெடுப்பு அறிக்கையேயாகும்.
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து. (திருவள்ளுவர், திருக்குறள் 879)
என்று திருவள்ளுவர்,   முள்மரத்தைத் தொடக்கத்திலேயே வெட்டாவிட்டால் முதிர்ந்தபின் நம்மைத் துன்புறுத்தும் என  எச்சரிக்கிறார். நாம் இந்தி என்னும் முள் மரத்தை   வெட்டி எறியாக் காரணத்தால அது நம்மைப் பல வழிகளிலும் துன்புறுத்திக்கொண்டுள்ளது.
  மத்திய அரசின் உள்துறை, அலுவல் மொழிகள் துறை  குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற்று,  எண் 20012/01/2017  அ.மொ.(கொ) / O.L.(policy)  நாள் மார்ச்சு 31, 2017 இற்கிணங்க 100க்கு மேற்பட்ட கட்டளை யிடுகைகளைச் செயற்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இவற்றில்,
 எல்லா மத்திய அரசின் அலுவலகங்களிலும் ஓர் இந்தி அலுவலர் பணியிடமாவது உருவாக்க வேண்டும்(எண 22),
இந்தியில் தொழில்நுட்பப்பாடநூல்களை உருவாக்க வேண்டும்(எண் 38).
பள்ளிமுதல் பட்டமேற்படிப்புவரை எல்லா நிலைகளிலும்   கற்பிப்பு, பயிற்சித் தரவுகளை இந்தியில் உருவாக்க வேண்டும் (எண் 39),
 அலுவலர்கள், பணியாளர்களிடையே இந்தியில் படைப்புத்திறனை ஊக்கப்படுத்த வேண்டும் (எண் 59),
 இந்தியை ஐ.நா.வின் அலுவல்  மொழியாக ஆக்குவதற்குக் காலவரம்புடன் கூடிய திட்டத்தை வரையறுத்து வெளித்துறை செயல்படுத்த வேண்டும் (எண் 72),
 இந்தியில் பேசவும் படிக்கவும் தெரிந்த குடியரசுத்தலைவர், அமைச்சர்கள் முதலான யாவருமே இந்தியில் மட்டுமே பேசவும் அறிக்கை அளிக்கவும் வேண்டும்.(எண் 105)
 முதலானவை குறிப்பிடத்தக்கனவாகும்.  இதில் குறிப்பிட்டவாறு இந்தியை ஐ.நா.வின் அலுவல் மொழியாக ஆக்க முயல வேண்டியது பொறுப்பில் உள்ளவர்கள் கடமை. இதனை இப்பொழுதே நீக்க  முயலாமல் இறுதிக்கட்டத்தில் பெயரளவிற்கு எதிர்த்து என்ன பயன்?
   இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தியும் ஆங்கி்லமும் இருந்தாலும் இந்தியை முழுமையாகப் பயன்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
  பெங்களூரு, கொச்சி, மும்பை, கொல்கத்தா,  கௌகாத்தி, போபால், தில்லி காசியாபாத்துநகரங்களில் மண்டல இந்திச் செயல்திட்ட அலுவலகங்களை இந்திய அரசு அமைத்துள்ளது.  இவ்வலுவலகங்கள் மூலம் மத்திய அரசு அலுவலகங்களிலும்  பொதுத்துறை நிறுவனங்களிலும் இந்தியை முழுமையாக நடைமுறைப்படுத்துவதைக் கண்காணித்து விரைவு படுத்துகிறது.
  1967ஆம் ஆண்டில் கேந்திரிய இந்தி சமிதி  என  அலுகலங்களில் இந்தியின் பயன்பாட்டைக் கண்காணிக்க ஏற்படுத்தியுள்ளது.
  பத்து  மத்திய அரசு அலுவலகங்கள் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் நகர அலுவல்மொழிச் செயல்திட்டக் குழுவை அமைத்துள்ளது. இந்தியைப் பயன்படுத்தும் பணியாளர்களுக்கு இதன் மூலம் பரிசுகளும் ஊக்கத்தொகைகளும் வழங்கப்படுகின்றன.
  அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் இந்தி்ப்யன்பாட்டை  அதிகரிக்க இந்திப்பிரிவு அமைத்துள்ளது.
  இவற்றின் மூலம் இந்தித்திணிப்பு என்பது வழக்கமாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. எப்பொழுதாவது இவற்றில் ஏதேனும் ஒரு செயல்பாடு தெரிய வந்தால், ஏதோ, அந்த ஒன்றில் மட்டும்தான் இந்தி, திணிக்கப்படுவதுபோல் கூக்குரலிடுவதும் பிறகு அடங்கிவிடுவதும் நம் வழக்கமாக உள்ளது.
  இந்தி, கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் எந்த அளவிற்குத் திணிக்கப்பட்டுள்ளது  என்பதற்கு வேலைவாய்ப்பு விளம்பரங்களே சான்றுகளாகும்.
 இன்று ஒருநாள் மட்டுமே அரியானா, ஆந்திரப்பிரதேசம்,  உத்தரப்பிரதேசம்,  ஒரிசா,  கருநாடகா, குசராத்து, தமிழ்நாடு, தில்லி,  பஞ்சாபு, மகாராட்டிரம், மேற்குவங்காளம்  ஆகிய 11 மாநிலங்களில் மட்டும் இந்திதெரிந்தவர்களைக் கேட்டு, 1945 பணியிடங்களுக்கான விளம்பரங்கள் வந்துள்ளன. சென்னையில் வங்கிகள், மத்திய  அரசு நிறுவனங்கள் முதலியவற்றில் 259 பணியிடங்களுக்கு இந்தி தேவை என விளம்பரங்கள் வந்துள்ளன. இவற்றுள் சிலவே  மொழிபெயர்ப்புப் பணியிடங்கள். பிற  விற்பனைப்பிரிவு, மனிதவளம்,  கணக்குப்பிரிவு, காப்பீட்டுப்பிரிவு,  களப்பணி, மக்கள்  தொடர்பு, மேலாண்மை முதலிய பிரிவுகளுக்கானவை. மத்திய அரசின் இந்தித்திணிப்புக் கொள்கையால் ஏற்பட்ட மாற்றமே இது. தமிழ்நாட்டில் இத்தகைய பணிகளைப் பார்க்க இந்தி எதற்குத்  தேவை?
  இவற்றை எல்லாம் நாம் ஆழமாகப் பாராமல் வெற்றுக் கூச்சலிடுவதை மத்திய அரசு பொருட்படுத்துவதில்லை. அவ்வப்பொழுது் ஏதும் மறுப்பு தெரிவித்தாலும் தன் இந்தித்திணிப்புப்பணிகளைச் செவ்வனே ஆற்றி வருகின்றது.
  ஒரே நாடு! ஒரே மதம்! ஒரே மொழி! என்பது தேசிய இனங்களை ஒடுக்கும் பாசகவின் கொடூரக் கரங்கள். எனவே, சமற்கிருதத்தையும் இந்தியையும் ஒல்லும்வகையெல்லாம் திணிப்பதே அதன் இலக்காகும். ஆனால்,  இந்தியை இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் பிற நாடுகளிலும் பரப்புவதற்கெனத் துறை அமைத்து, பல்வேறு அமைப்புகள் மூலம் அதனைச் செயல்படுத்துகையில் நாம் எதிர்க்க வேண்டியது அக்கொள்கையைத்தானே! எப்பொழுதோ ஒரு முறை நாம் வெடித்து என்ன பயன்?
  இந்தியைத் திணிப்பது மத்திய அரசின் கடமையாக உள்ளது. அதை நாம் ஏற்றுக் கொண்டிருப்பது நம் மடமையைக்  காட்டுகின்றது. எந்த வடிவிலும் எந்த வகையிலும் இந்தி வராமல் இருக்கப் போராடிய தமிழ்ப்போராளி பேரா.சி.இ்லக்குவனார்  வழி நாம் ஆழமாகச் சிந்தித்துக் கட்சி வேறுபாடின்றி ஒன்று பட்டு எதிர்த்தாலன்றிப் பயன் விளையாது!
வேறுபாடின்றிப் போராடுவோம்!
 இந்தித்திணிப்பை வேரொடு சாய்ப்போம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 180,  பங்குனி 20 , 2048 / ஏப்பிரல் 02, 2017