இந்தித்திணிப்பு அல்ல, இந்தியே கூடாது!
மத்திய அரசின் துணையுடன் இந்தி, ஆழமாக
வேரூன்றித் தன் நச்சுக்கிளைகளைப் பரப்பி வருகிறது. நம்மை எதிர்ப்பவரை நாம்
எதிர்க்கவோ, நம் இனத்தை அழிக்க முயல்பவனை நாமும் வேரறுப்பதிலோ தவறில்லை.
உலகெங்கும் நடைபெறும் உரிமைப்போரின் அடிப்படையே இதுதான். ஆனால், அவ்வாறு
இந்தியை எதிர்க்க நம்மவர்களுக்கு அச்சம். அதனால், இந்தியை எதிர்க்கவில்லை; இந்தித்திணிப்பைத்தான் எதிர்க்கிறோம் என்கின்றனர். இது தவறான கூற்று.
இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்,
தங்கள் மாநிலத்தில் இந்தியை வளர்க்க எல்லா உரிமையும் உண்டு. அதனைப் பரப்ப
எண்ணினாலும் தங்கள் பணத்தைக் கொண்டு அதற்கான நடவடிக்கையை எடுக்கலாம்.
ஆனால், அடுத்தவர்கள் பணத்தில் அடுத்தவர்கள் இல்லங்களில் இந்தியை நுழைக்க உரிமை கிடையாது.
இந்தி இனிமையான மொழி என்றெல்லாம் கதை
அளந்து அதைப் படிப்பதால் என்ன தவறு என்றும் சிலர் எழுதுகின்றனர். அம் மொழி
இனிமையானதா இல்லையா என்பதல்ல பேச்சு. அதனை விருப்பப்பாடம் என்ற போர்வையில்
நம்மிடம் திணித்து நம் மொழியையும் நம்மையும் அழித்து வருவதை நாம்
எதிர்த்துத்தான் ஆக வேண்டும். அதற்கு நாம் இந்தியை எதிர்த்துத்தான் ஆக
வேண்டும். நாம் இந்தியை எதிர்த்தால்தான் இந்தி மொழியருக்கு அச்சம் ஏற்பட்டு இந்தித்திணிப்பைக் கை விடுவர்.
சிலர் “இந்தியைக் கற்பது என் உரிமை.
அதற்கான வாய்ப்பை நல்க வேண்டியது அரசின் கடமை” என்றெல்லாம் உளறுகின்றர்.
ஒவ்வொரு குடிமகனும் விரும்பும் மொழியை எல்லாம் கற்றுத் தருவது அரசின் வேலை
அல்ல. தாய்மொழியையும் தாய்மொழியிலான கல்வியையும் தருவதுதான் அரசின் கடமை.
அவரவர் விரும்பினால் அவ்வாறு தனிப்பட்டுப் பயில்வதற்கு எவ்வளவோ வழிகள்
உள்ளன. அவற்றில் ஒன்றைப் பின்பற்றிக்கொள்ள வேண்டும்., அதற்காகப் பிறர் பணம்
செலவழிக்க விரும்பக்கூடாது. ஏனெனில், அவ்வாறு . இந்தியைக் கற்பது பிறர்
பணத்தில்தான். (இங்கே இந்திக்குக் கூறுவது சமக்கிருதத்திற்கும் பொருந்தும்.)
முதலில் நாம் தமிழ்நாட்டில் இருந்து ‘தட்சிண இந்தி பிரச்சாரச் சபை’ என்ற பெயரில் இயங்கும் பரப்புரை அவையத்தை மூட வேண்டும்.
தமிழ்நாட்டில் எந்தப் பள்ளிக்கூடமாயினும் விருப்பப்பாடம் அல்லது பகுதி 1,
2, 3, 4 என்று ஏதாவது போர்வையில் இந்தி மொழிக்கல்வி கற்றுத் தருவதை
நிறுத்த வேண்டும். அப்படி என்றால் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்
இந்தியை எப்படி படிப்பது என்ற கேள்வி எழலாம். சிறிது காலத்திற்கு அவர்கள்
தங்கள் மாநிலத்திற்குச் செல்ல வேண்டியதுதான். இந்திமொழியைப்
பிற மாநிலங்களில் அடியோடு நிறுத்திய பின்னர், இந்தியைத்
தாய்மொழியாகக்கொண்டவர் எனச்சான்று பெற்று இந்தி பயில இசைவு தரலாம்.
இப்படி எல்லாம் சொல்ல வேண்டியதன் காரணம் என்ன? என்று எண்ணலாம்.
மத்திய அரசின் புதிய முடிவின்படி
நாட்டின் குடியரசுத்தலைவர் முதலான உயர் பொறுப்பில் உள்ளவர்கள், மத்திய
அமைச்சர்கள், ஆளுநர்கள் என யாராயினும் பொது நிகழ்ச்சியில்
இந்தியில்தான் உரையாட வேண்டும். இந்தியை எல்லா மாநிலங்களிலும் அன்றாடப்
பயன்பாட்டு மொழியாக மாற்ற வேண்டும் என்பது நடைமுறைக்கு வருகிறது.
எனவே, மத்தியப்பொறுப்பாளர்கள், ஆளுநர்,
மக்களவை, மாநிலங்களவை ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசின்
அதிகாரிகள், மத்திய நிறுவன அதிகாரிகள் என மத்திய அரசுடன் தொடர்புடையவர்கள் யாவரும் தமிழ்நாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றால் இந்தியில்தான் பேச வேண்டு்ம்.
அது பொதுக்கூட்டமாக இருந்தாலும் தொலைக்காட்சி உரையாடலாக இருந்தாலும்
நலஉதவித்திட்ட நிகழ்ச்சியாக இருந்தாலும் எதுவாயினும் இந்தி இந்தி
இந்திதான் அங்கே இருக்க வேண்டும்.! இந்தி அமரும்பொழுது எவ்வகை சிறு முயற்சியுமின்றித் தானாகவே இங்குள்ள தமிழும் பிற மொழிகளும் இடம் பெயர்ந்து அழியும். இந்திதான்
நம் பயன்பாட்டு மொழி எனில், நாம் விரைவிலேயே தமிழர் என்ற நிலை மாறி
ஃகிந்தியர் என்று மாறிவிடும். பிறகு எதற்குத் தமிழ்நாடு என்ற பெயர்?
அதுவும் மாறத்தானே செய்யும்!
இந்தி இப்போது தமிழ்நாட்டில் திணிக்கப்படுவது வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
அதற்குக்காரணம் இந்தி பெரும்பான்மையர் மொழி என்ற தவறான கூற்றும் இந்தி
படித்தால் வேலை கிடைக்கும் என்ற பொய்யான பரப்புரையுமாகும்.
இந்திப்பகுதிகளில் உள்ள வேலையில்லாத் திண்டாட்டமும் இந்திமொழிபேசுவோர்
நாளும் வேலை தேடி, இங்கே வருவதும் நன்கறிந்த தமிழ் மக்கள் இனியும் அதை
நம்பமாட்டார்கள் எனலாம். எனவே, மொழியறிவு என்று தவறாக எண்ணி வேண்டத்தகாத
இந்தியைப்படித்து நம் உயிரினும்மேலான தமிழ்மொழி அழிவிற்கும்அதன் மூலமான இன
அழிவிற்கும் தமிழகமக்களே ஆளாக வேண்டா!
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு. (திருவள்ளுவர், திருக்குறள் 821)
உள்ளத்தில் பொருந்தி வராமல், வெளியே
பொருந்தி வருவதுபோல் வரும் நட்பு எத்தகையது? கேடு செய்வதற்கு வாய்ப்பு
அமையும்பொழுது, பொருளைத் தாங்கி உதவுவதுபோல் காட்சியளித்து, அப்பொருளை
வெட்டி எறிவதற்கு உதவும் பட்டடை போன்றது. இந்நட்பைத் தூக்கி எறிய வேண்டும்
என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
பொதுமொழி, தேசிய மொழி, அலுவலக மொழி,
நாட்டுமொழி என்றெல்லாம் பொய்யான உடையணிந்து நட்பு பாராட்டும் இந்தியும்
கேடு செய்யக்கூடியதே! நம்மைத் தாங்குவதுபோல் தோன்றி நம்மை அழிப்பதே! கேடு
செய்து வருவதே! எனவே, நாம்அதனைத் தூக்கி எறிய வேண்டும்!
எனவே,
இந்தி எப்போதும்வேண்டா! வேண்டவே வேண்டா!
என ஆணித்தரமாகக்கூறி
இந்தியை எதிர்ப்போம்!
நம்மைக் காப்போம்!
அன்புடன் இலக்குவனார்திருவள்ளுவன்இதழுரை : அகரமுதல 183, சித்திரை 10, 2048 / ஏப்பிரல் 23, 2017
இவற்றையும் காண்க!:
வேண்டவே வேண்டா சமற்கிருதமும் இந்தியும்
வீட்டிற்குள் நுழையும் இந்தி! விரட்டியடிப்போம்!
இலக்குவனார் பிறந்த நாளில் அயல்மொழித் திணிப்புகளை அகற்ற உறுதி் கொள்வோம்!
முடியவில்லை மொழிப்போர்! முடித்து வைக்க வேண்டாவா மொழித்திணிப்புகளை!
இணைய வழி ஊடகங்களிலும் இந்தித்திணிப்பு! தமிழகக்கட்சிகள் உறங்குவது ஏன்?
இந்தியைத்திணிப்பது மத்திய அரசின் கடமை! அஃதை ஏற்பது நம் மடமை!
தி.மு.க.வின் இந்திப்பாசம் தவறு! தமிழுக்குத் தேவை முன்னுரிமையல்ல! முழு உரிமையே!
No comments:
Post a Comment