அகரமுதல 188, வைகாசி 14, 2048 / மே 28, 2017
அரசியல் தலைவர் விழாவில்
அரசியல் பேசாமல் வேறு என்ன பேசுவது?
கலைஞர் கருணாநிதியின்
94 ஆம் பிறந்தநாள் பெருமங்கலத்துடன் சட்டமன்றப்பணிகளின் மணிவிழாவும்
நடைபெற உள்ளது.(60 ஆண்டினைக் குறிக்கும் இதனை மணிவிழா என்றுதான் சொல்ல
வேண்டும். வைர விழா என்பது தமிழர் மரபல்ல.) இவ்விழா அரசியல் சார்புடையது
எனப் பொன்.இராதாகிருட்டிணன், தமிழிசை முதலான பா.ச.க.தலைவர்கள்
கூறுகின்றனர். தன் வாழ்வில் பெரும்பகுதியை அரசியல் உலகில் செலவிட்டவரின் பிறந்தநாளின்பொழுது அரசியல் பேசாமல் எப்படி இருக்க இயலும்?
அரசியல் தலைவர்கள் தேநீர்
அருந்தும்பொழுதும் இணைந்து உண்ணும்பொழுதும் அங்கே அரசியல் பேசப்பட்டு
முதன்மையான முடிவு எடுக்கப்படுவது வழக்கமான ஒன்று. இந்திய அளவிலான
தலைவர்கள் ஒன்றுகூடும்பொழுது வெறும் சந்திப்பாக அல்லது வாழ்த்திப்பேசும்
நிகழ்வாக மட்டுமல்லாமல், மதவெறியும் மொழி வெறியும் கொண்ட மத்தியஆட்சியை அகற்றுவது குறித்துப் பேச ஒரு நல்ல வாய்ப்பு அமைகின்றது அல்லவா? இதற்கெனத்
தனியாகக் கூட்டம் போடத் தேவையில்லையே! இ்ங்கே மத்திய ஆட்சியை அகற்றும்
திட்டம் குறித்துப்பேசி, அதன்தொடரச்சியாக வேறு கூட்டம் நிகழ்த்தலாம்.
ஆனால்,வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்து சந்திக்கும் தலைவர்கள், இப்பொழுது
அமைதி காத்துவிட்டுப் பின்னர் இது குறித்துப்பேச நாள் ஒதுக்கலாம் எனில்,
அதனினும் அறியாமை மிக்கதான செயல் ஒன்று இருக்குமோ! இப்படிப்பட்ட
சந்திப்புகளை அரசியல் ஆய்வுக் களமாக மாற்றுவதுதானே வழக்கமான அறிவார்ந்த
செயலாகும்.
அரசியல் நடைமுறைகளைப் புரிந்துகொள்ளாமல், அரசியல்
காரணமாகக் கூட்டப்படுவதாகக் கூக்குரல் இடுவது தவறு. அதனினும் பெரும் தவறு
தி.மு.க.செயல்தலைவர் தாலின் அதனை மறுப்பது! ஆட்சிமாற்றத்திற்கான விதையிடும்
களமாகப் பிறந்தநாள் பெருமங்கலக்கூட்டம் அமையும் என நம்பிக்கையுடன் சொல்லவேண்டுமே தவிர, மறுத்து மழுப்பக்கூடாது.
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று. (திருவள்ளுவர், திருக்குறள் 678)
ஒரு யானையைக் கொண்டு மற்றொரு யானையைப்
பிடிப்பதுபோன்று ஒரு செயலில் ஈடுபடுமபொழுது தொடர்புடைய மற்றொரு செயலையும்
முடிக்க வேண்டும் என்கிறார் உலகப்புலவர் திருவள்ளுவர். இதனைத் திறம்பட முடிக்கத் திட்டமிடும் தாலின் அஞ்சாமல் “அரசியல்தான் பேசுவோம்” எனச்சொல்ல வேண்டும். சொல்வதுடன் நில்லாது பாசக ஆட்சியை அகற்ற வரைவுத்திட்டம் உருவாக்க வேண்டும்.
சமற்கிருதத் திணிப்பாலும் இந்தித்திணிப்பாலும் இத்துணைக்கண்டத்து அனைத்துத் தேசிய மொழிகளுக்கும் அழிவுதான் என்பதை உணரும் வகையில் அதனை முறியடிக்கத் திட்டம் தீட்டப்படவேண்டும்.
தமிழ்நாட்டில் உண்டாக்கிய பண்பாட்டு மீறலான சல்லிக்கட்டிற்குத் தடை என்பதுபோன்று அனைத்து மாநிலங்களிலும் நிகழும் பண்பாட்டிற்கு எதிர்ப்பான செயல்களைப் பட்டியலிட வேண்டும்.
நெடுவாசலில் நீர்மக்கரியத்திட்டத்தை
நிறைவேற்ற முயல்வதுபோன்று மக்களுக்கு எதிரான மத்தியஅரசின் திட்டங்களைத்
தொகுத்து அவற்றை நிறுத்தப் பொதுவான செயல்திட்டம் வகுக்கவேண்டும்.
மாநில ஆட்சிகளில் குறுக்கீடு போன்ற மாநில உரிமைகளுக்கு எதிரான பா.ச.க.செயல்பாடுகளுக்கு எதிரான பணித்திட்டத்தை உருவாக்க வேண்டும்.
இவ்வாறாக, மத்திய ஆட்சி மாற்றப் பொதுத்திட்டம் என ஒன்றை வகுத்துத் திறமாக நிறைவேற்றி மக்கள் பகை ஆட்சியை அகற்றி மக்கள் நல அரசை நிறுவவேண்டும்.
அதே நேரம், பிற கட்சிகள் தாங்கள், மக்களுக்கு எதிராக இதற்கு முன்பு ஈடு பட்ட செயல்களுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
கலைஞர் கருணாநிதியால் தமிழுணர்வு
பெற்றவர்களே இன்றைக்கு அவருக்கு எதிராக இருக்கிறார்கள். தமிழ்நாட்டின்
அன்றாடப் பயன்பாட்டிலிருந்து தமிழ் விலகிச் செல்வதற்கு எதிரான
நடிவடிக்கைகளில் ஈடுபடாமை, எங்கும் தமிழ் என்பதை வெற்று முழக்கமாக ஆக்கியமை, தமிழ் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைகளைக் கண்டும் காணாமல் உடந்தையாக இருந்தது போன்ற அவரின் செயல்களே இதற்குக் காரணம். எனவே, இவற்றிற்காகத் தி.மு.க.வும் பேராயக்கட்சியும்(காங்கிரசு) மன்னிப்பு கேட்க வேண்டும்.
எதிர்க்கட்சிகள் தத்தம் தவறுகளை
ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டு, இன்றைய மக்கள் பகை மத்திய அரசை நீக்கத்
திட்டமிட இப்பெருமங்கலவிழா பயனுள்ளதாக அமையட்டும்!
எழுததாளர், திரைக்கதை ஆசிரியர்,
பாடலாசிரியர், திரைப்பட ஆக்குநர், கவிஞர், கட்டுரையாளர், சட்டமன்ற
உறுப்பினர், மேலவை உறுப்பினர், எதிர்க்கட்சித்தலைவர், அரசின்
தலைவர், அமைச்சர், முதலமைச்சர் எனப் படைப்பாற்றலும் பன்முகத்திறன்களும் கொண்ட கலைஞர் கருணாநிதி, இழந்த நினைவுகளைப் பெற்று நூறாண்டு வாழ வாழ்த்துகிறோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment