அகரமுதல 193, ஆனி 18, 2048 / சூலை 02, 2017
செம்மொழி நிறுவனத் தலைவராகச் செயல்பட
முதல்வருக்கு வேண்டுகோள்!
முதல்வர் எடப்பாடி க.பழனிச்சாமி, மேனாள் முதல்வர், தங்கள் தலைவி செயலலிதா வழியில்
செயல்படுவதாகக் கூறுகிறார். ஆனால், மாறுபட வேண்டிய நேர்வுகளில்
மாறுபட்டுச் செயல்படுகிறார். காட்சிக்கு எளிமை, பிற கட்சிகளுடனான
அணுகுமுறைகளில் மாற்றம், எனப் பலவற்றைக் கூறலாம். தனக்குச் சரியெனப்பட்டதைச் செய்து தன் தனித்தன்மையை நிலைநாட்டிவருவது பாராட்டிற்குரியது.
தமிழக முதல்வர் பதவி வழி, செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத் தலைவராவார். மேனாள் முதல்வர்கள் தங்களுக்கு முந்தைய எதிர்க்கட்சியைச் சேர்ந்த முதல்வர் வழியில் செல்வதைத் தன்மான இழுக்காகக் கருதும் தவறான மனப்பாங்கு உடையவர்களாகவும் இருந்துள்ளனர். எனவேதான்,
மேனாள் முதல்வர் செயலலிதா, கருணாநிதி “நட்டுவைத்த செடிக்குத்தான் தண்ணீர்
ஊற்றவேண்டுமா?” எனக்கூறிச் செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தைப்
புறக்கணித்தார். அவர் புறக்கணித்தது கலைஞர் கருணாநிதி வீட்டு நிறுவனத்தை அல்ல! உலகத் தமிழ் மக்களுக்கான மத்திய நிறுவனத்தை! இதன் காரணமாகத் தலைமையின்றி இந்நிறுவம் முழுமையாக இயங்க இயலவில்லை.
இந்நிறுவனத்திற்குத் தலைவராக முதல்வர் இருக்க வேண்டிய தேவையில்லை.
நெறியாளராக வேண்டுமென்றால் இருக்கலாம். கலைஞர் கருணாநிதி, தாம் தலைவராக
இருக்க வேண்டும் என்பதற்காகத் தமிழக முதல்வரைத் தலைவராக்கும்
தவற்றினைச்செய்தார். அவர், தன்னைப் பதவிவழித் தலைவராக ஆக்கிக்கொண்டதற்கு
மாற்றாகப் பெயர் வழித் தலைவராக ஆக்கியிருந்திருக்கலாம். செம்மொழித்
தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர் கருணாநிதி எனில், அவர் இருக்கும்
வரை அல்லது விரும்பும் வரை தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் அவர்தான் தலைவர். தன்னால் உருவாக்கப்பட்ட அமைப்பு என எழுச்சியுடன் செயல்பட்டிருப்பார். அப்படிச்சொன்னால் பதவி ஆசை என்பார்கள் என இவ்வாறு பதவிவழித் தலைவராக்கிக் கொண்டார்.
செயலலிதாவின் செயல்படாத்தலைமையால், முதல்வருக்கு மாற்றாகத் தமிழறிஞர் ஒருவரைத் தலைவராக்கலாம்
என்ற கருத்து மத்திய அரசிற்கு அறிஞர்கள் பலராலும் எடுத்துச்
சொல்லப்பட்டது. ஆனால், இவ்வாறு அறிவிப்பது மாநில-மத்திய அரசுகளுக்கிடையே
பிணக்கை உண்டாக்கும் என்றும் முதல்வராகவே அவ்வாறு தெரிவித்தால் அதை
ஏற்கலாம் என்றும் மத்தியஅரசு கருதியதாகத் தெரிய வருகிறது.
அமைதியாகத் திட்டமிட்டு, எண்ணியவாறு செயல்படும் முதல்வர் செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில் அந்நிறுவனத்திற்குச் சென்று செந்தமிழ்வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருக்க வேண்டும். அவர் இந்தப்பொறுப்பிற்குரிய அதிகாரத்தைச் செயல்படுத்தினால் சிறப்பாகவே செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது
இந்தியாவில் உள்ள அனைத்துப்
பல்கலைக்கழகங்களிலும் தமிழ்த்துறை, தமிழாய்வுத்துறை தொடங்கப்படுவதற்கும்
ஆண்டிற்கு 20 அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை
தொடங்கப்படவும், தமிழர் வாழும் பகுதிகளில் தமிழ் கற்பிக்கப்படவும்
பரப்பப்படவும் ஏற்ற திட்டங்களைச் செயல்படுத்தவும் வழிகாட்டித் தமிழுக்குப்
பெருமை சேர்த்துத் தனக்கும் பெருமை சேர்த்துக் கொள்ளலாம். . இதனால் வையம்
உள்ளளவும் வான்புகழ் பெற்றுத் திகழ்வார்.
ஒருவேளை அவர், விரும்பவில்லை எனில்,
மத்திய அரசிற்குத் தலைவர் பதவிக்குத் தமிழறிஞர் ஒருவரை அமர்த்தலாம் என்றும்
தமிழக முதல்வர் நெறியாளராக இருப்பார் என்றும் தெரிவித்து அக்கருத்துருவை
ஏற்கச்செய்யலாம். அவ்வாறெனில் இந்நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டுத்
தமிழ்ப்பணி தொடர வாய்ப்பு ஏற்படும்.
எவ்வாறாயினும் செம்மொழித்தமிழாய்வு மத்தியநிறுவனம் செயல்படுவது மாண்புமிகு தமிழக முதல்வர் கைகளில்தான் உள்ளது.
மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் அவர்களே!
உலகத்தமிழர் நலனுக்காக
விரைந்து செயல்படுக!
விண்வரை தமிழ்ப்புகழ் பரப்புக!
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்
(திருவள்ளுவர், திருக்குறள் 648)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை : அகரமுதல 193, ஆனி 18, 2048 / சூலை 02, 2017
No comments:
Post a Comment