மத்தியப் பாடத்திட்டம் தமிழக நலனுக்கு எதிரானது!
இந்திய அரசியல் யாப்பின்
இணைப்புப்பட்டியல் 7 இன்படி மத்திய மாநில அரசின் அதிகாரங்கள் குறித்து அ.)
ஒன்றியப்பட்டியல், ஆ.) மாநிலப்பட்டியல், இ.) பொதுப்பட்டியல் என 3
பட்டியல்கள் உள்ளன. தொடக்கத்தில் மாநிலப்பட்டியலில் இருந்த துறைகள் 66.
அதில் இருந்து ஒவ்வொன்றாகப் பிடுங்கப்பட்டு வருகிறது. கல்வித்துறை மாநில அரசின் அதிகார வரம்பில் வரிசை எண் 11இல் இருந்தது.
அதனைப் பொதுப்பட்டியலாக்கி மத்திய அரசின் அதிகார வரம்பிற்குக்
கொண்டுவந்தபொழுதே பலரும் எதிர்த்தனர். இதனை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.
மாநிலக் கல்விக்கொள்கையில் தலையீடு இருக்காது; மாநில அரசுகளுக்கு
உதவுவதற்குத்தான் என்றும் மழுப்பினர். ஆனால், நாளைடைவில் மத்திய அரசின்
அதிகார வரம்பு மிகுதியாகி விட்டது. சில ஆண்டுகளில் முழுமையும் மத்திய
அரசின் கட்டுப்பாட்டில் கல்வித்துறை வரும் என்பதில் ஐயமில்லை.
பெயரளவிற்கு பொதுப்பட்டியல் எனப்பெறும் இரட்டை அதிகாரப்பட்டியலில் வைத்துக்கொண்டு மத்திய அரசே முழுமையும் பறித்துக் கொள்ளும்.
அவற்றின் அடையாளம்தான் தேசியத்தகுதி-நுழைவுத்தேர்வு(NATIONAL ELIGIBILITY
CUM ENTRANCE TEST) எனப்பெறும் மருத்துவக்கல்லூரிப்பொது நுழைவுத்தேர்வு.
அதன் மற்றொரு வடிவம் அதனைக் காரணம் காட்டி மாநிலக் கல்விப்பாடத்திட்டத்தைத்
தரமுயர்த்துவதாகக் கூறி மத்திய அரசின் பாடமுறையைப் பின்பற்றுவது.
மத்தியஅரசுக் கல்வித்திட்டத்தின்படி மாநிலக் கல்வித்திட்டத்தில் பயின்றவர்கள் எழுத இயலவில்லை என்கிறார்கள் அல்லவா? மாநிலக் கல்வித்திட்டத்தின்கீழ்த் தேர்வு நடத்தினால் மத்திய அரசுக் கல்வித்திட்டத்தின்படி பயின்றவர்களால் எழுத முடியாது. உண்மை இதுதான். இதைக்கொண்டு மத்திய அரசின் பாடத்திட்டம் தகுதி கூடியதாகக் கூறுவது தவறு.
மத்தியக்கல்வித்திட்ட வரலாற்றுப் பாடங்களில் தமிழக வரலாற்றுக்கே இடமில்லை.
புவியியல் அல்லது சுற்றுப்புற அறிவியல் முதலான பாடங்களில் குறிஞ்சி,
முல்லை, மருதம், நெய்தல், பாலை முதலான தமிழகத்தின் ஐந்திணை குறித்து அறிய
வாய்ப்பில்லை. பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்திப்பாடத்தில் பாண்டியன்
நெடுஞ்செழியன் குடிபோதையில் கோவலனுக்கு மரணத் தண்டனை விதித்ததாகப் பாடம்
வந்தது. அம்பேத்கார், மொழிப்போர் போராட்டம்பற்றி யெல்லாம் தவறான தகவல்கள் மத்தியப்பாடத்தில் இடம் பெற்றதை நாமறிவோம்.
தமிழ்த்தேசிய உணர்வு மலர்ந்து மொழிப்போர்
வரலாறு பாடங்களில் இடம் பெற வேண்டும் என்ற உணர்வு வரத்தொடங்கியுள்ளது.
ஆனால், மத்தியப்பாடத்திட்டத்தில் அதற்கான வாய்ப்பில்லை.
தமிழகத் தலைவர்களைப்பற்றி யறியவும்
வாய்ப்பில்லை. வரலாறு தெரியாதவர்கள் வரலாற்றைப் படைக்க முடியாது. வரலாறு
தெரியாத் தலைமுறைகளை உருவாக்கும் பாடத்திட்டமாக மத்தியப்பாடத்திட்டம்
அமையும். வரலாற்றை மறைத்தும் திரித்தும் பொய்யான வரலாற்றுச் செய்தியைப் புகுத்தியும் ஆள்வதே பா.ச.க.வின் பண்பாடு. அவ்வாறிருக்க மத்தியப்பாடத்திட்டம் எப்படி அமையும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இப்பொழுது மத்தியப்பாடத்திட்டத்தைத் தழுவி மாநிலப்பாடத்திட்டத்தை அமைத்தால், பின்னர் நாடு முழுவதும் ஒரே பாடமுறைதானே எனத் தேர்வுத்திட்டத்தையும் மத்திய அரசு கையில் எடுத்துக் கொள்ளும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு ஒரே நாடு, ஒரே கல்வி முறை, ஒரே பாடத்திட்டம் என்ற வலையில் தமிழக அரசு சிக்கக்கூடாது.
கல்வித்திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்பதில் பள்ளிக்கல்வியமைச்சர் செங்கோட்டையன் உறுதியாக இருக்கிறார். பள்ளிக்கல்விச்செயலர் த.உதயசந்திரன் இ.ஆ-ப. கல்வி வளர்ச்சியில் ஈடுபாடு காட்டுவதுடன் தமிழார்வமும் மிக்கவர். இப்போதைய வல்லுநர் குழு என்ன முடிவெடுத்திருந்தாலும் தமிழ்நலன்
சார்ந்த கல்வி முறையை அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் காட்டி அதற்கேற்பவும்
குழு அமைத்துப் பாடத்திட்டத்தை வகுக்க வேண்டும்.
முன்பே குறிப்பிட்டபடி, ஆங்கிலம் முதலான பிற மொழிப்பாடங்களிலும் தமிழ் இலக்கியம், தமிழ்க்கலை, தமிழ்ப்பண்பாடு, தமிழ் வரலாறு முதலானவை இடம் பெற வேண்டும். பிற மொழிப்பாடங்கள் படிக்கிறார்கள் என்பதற்காகத் தமிழகம் பற்றி அறியாமல் தமிழகத்தின் இளந்தலைமுறையினர் வருவாக்கப்படுவது நாட்டு வளர்ச்சிக்குப் பெருங்கேடாகும்.
அறிவியல் பாடங்களில் தொடர்புடைய
தமிழ்இலக்கியச்செய்திகள் இடம் பெற வேண்டும். தவாரங்களுக்கு உயிர்உண்டு
என்னும் பாடத்தில் தொல்காப்பியர் குறிப்பிடும் “ஒன்றறிவதுவே” எனத்தொடங்கும்
நூற்பா இடம் பெற வேண்டும். தெர்மாசு குடுவைபற்றிய பாடத்தில் தமிழர்களின்
சேமச்செப்பு இடம் பெற வேண்டும். மாற்றுச்சக்கரம்(stepney) பற்றிய
பாடத்தில் பழந்தமிழரின் சேமஅச்சு இடம் பெற வேண்டும். இவ்வாறு இன்றைய அறிவியல்பற்றிய பாடங்களில் தொடர்பான பழந்தமிழர் அறிவியல் கருத்துகளும் இடம்பெறும் வகையில் பாடத்திட்டம் அமைய வேண்டும்.
தமிழக மாணாக்கர்கள் தமிழ்வழியில்தான் பயில வேண்டும் என்ற நிலை உருவாக வேண்டும். இருப்பினும் ஆங்கிலக்கல்விமுறை இருந்தது எனில், தமிழகம் சார்ந்தே பாடத்திட்டம் அமைய வேண்டும்.
மாநிலத்தன்னாட்சி எனப் பேசும்
தமிழகக்கட்சிகள் மத்தியக்கட்சிகளிடம் அடிபணிந்து தஞ்சமடைவதில் காட்டும்
விரைவைத் தமிழக உரிமைகளைக் காப்பதில் காட்டுவதில்லை. இவ்வாறு ஒவ்வொரு துறையாக மத்திய அரசின் தலையீடு இருப்பது நாளடையில் இந்தியா முழுமையும் ஒற்றையாட்சி நிலை வர வழிவகுக்கும்.
எனவே, கல்வி நலனுக்காக மட்டும் என்றில்லாமல் ஒவ்வொரு துறையாக மாநில
உரிமைகள் பறிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவும் மத்திய அரசின்
கல்வித்தலையீட்டை நிறுத்த வேண்டும். ஒன்றியப்பட்டியலில் 100 இனங்கள்
என்றிருப்பதை மிகவும் குறைத்து மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவரச் செய்ய
வேண்டும். பொதுப்பட்டியலில் உள்ள 52 இனங்களைப் பாதியாகவாவது குறைக்க
வேண்டும். மாநில உரிமைகள் காக்கப்பட்டால்தான் கல்விஉரிமையும் காக்கப்படும் என்பதை அரசியலாளர்கள் உணரவேண்டும்.
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது. (திருவள்ளுவர், திருக்குறள் 671)
தமிழகக்கல்விநலன் காக்கவும் மாநில உரிமைகளைக்காக்கவும் ஆராய்ந்து முடிவெடுத்துத் துணிவுடன் நிறைவேற்றுக!
தமிழகம்சார்ந்தகல்விமுறையை உருவாக்குவோம்!
மாநில உரிமைகளை மீட்டெடுப்போம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 196, ஆடி07, 2048 / சூலை 23, 2017
No comments:
Post a Comment