Friday, July 7, 2017

செம்மொழி நிறுவன இயக்குநர் அ.பழனிவேலிற்குப் பாராட்டும் வேண்டுகோளும்! – இலக்குவனார் திருவள்ளுவன்


அகரமுதல 193, ஆனி 18, 2048 / சூலை 02, 2017

செம்மொழி நிறுவன இயக்குநர் அ.பழனிவேலிற்குப்

பாராட்டும்  வேண்டுகோளும்!


  செம்மொழித்தமிழாய்வு மத்தியநிறுவனம் முழுப்பொறுப்பிலான இயக்குநர் இன்றியே செயல்படுகிறது. தமிழாய்ந்த தமிழறிஞரை இயக்குநராக  அமர்த்தாமையால் மத்திய அரசு அதிகாரிகளின் கூடுதல் பொறுப்பில் இயங்கிக் கொண்டுள்ளது. (செயல்படும் தலைவர் இல்லாதபொழுது நிறுவனத்தின் நிலை இவ்வாறுதான் இருக்கும்.) அவ்வாறு கூடுதல் பொறுப்பில் வருபவர்கள் தமிழார்வலர்களாக இருக்க வேண்டும் என்றில்லை. எனினும் இப்போது திருச்சிராப்பள்ளித் தேசியத்தொழில் நுட்பக்கழகத்தின் பதிவாளர் திரு.அ.பழனிவேல், இயக்குநர் (கூடுதல் பொறுப்பாக) அமர்த்தப்பட்டுச் செயல்பட்டுவருகிறார்.
  பணிப்பொறுப்பேற்றதும் இயக்குநர் (கூ.பொ.), நிறுவனத்திற்குச் செய்யவேண்டுவன,  தமிழுக்குச் செய்ய வேண்டுவன குறித்துக் கேட்டறிந்து  ஒல்லும் வகை ஆற்ற இருப்பதுகுறித்த நம்பிக்கையை அளித்துள்ளார் என அறிய வந்தோம்.
  கடந்த மூன்றாடுகளுக்கான செம்மொழி விருதுகள் வழங்கிய பொழுது, குறள்பீட விருதுகள் வழங்கப்படவில்லை. அயல்நாட்டுத்தமிழறிஞர் ஒருவரும் செம்மொழிநிறுவனக் கண்களுக்குப் புலப்படவில்லையா? பதிவாளர் முனைவர் முகிலை இராசபாண்டியன் இது குறித்துக் கூறும்  பொழுது,   “இதில் மத்திய அரசு குறுக்கீடு எதுவும் இல்லை. தெரிவுக்குழுவினர் யாரையும் தெரிவு செய்யவில்லை. வந்துள்ள விண்ணப்பங்களில் தகுதியானவர்பற்றிய குறிப்பு இல்லை. தகுதியற்றவர்களுக்கு எவ்வாறு விருது வழங்குவது என்பது அவர்கள்  எண்ணம். முந்தைய இயக்குநர் காலத்தில் அறிவிக்கப்பட்டவை இவை. இப்போதைய இயக்குநர் செ.த.ம.நி. செயல்பாட்டில் ஆர்வமுள்ளவராக  இருக்கிறார். உங்கள் கருத்துகளை அவருக்குத் தெரிவியுங்கள். செயல்படுத்துவார்” என்றார்.  மேலும். இதுவரை வழங்கப்படாத 6 ஆண்டுகளுக்கும் சேர்த்துக் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுபற்றி அறிவிக்க இருக்கிறார் என்றார். அவ்வாறே அறிவிப்பும் வந்துள்ளது.
  இவ்வாறு சிறப்பாகச் செயல்படும் இயக்குநர் (கூ.பொ.) திரு.அ.பழனிவேல் அவர்களுக்கு உளமாரப் பாராட்டுகளைத் தெரிவிக்கின்றோம். இந்நிறுவனம் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன. அது குறித்துப் பின்னர்த் தெரிவிக்கின்றோம். இப்பொழுது விருதுகள் வழங்கப்படாமல் உள்ளமைபற்றிக் கருத்திற்குக்  கொணர  விழைகின்றோம்.
  அயல்நாட்டுத்தமிழறிஞருக்கான குறள்பீட விருது இதுவரை ஆறாண்டுகளுக்கு வழங்கப்பெறவில்லை. நம்நாட்டுத் தமிழறிஞருக்கான தொல்காப்பியர் விருது இரு முறை வழங்கப்பெறவில்லை. இளந்தமிழறிஞர் விருது, (1 + 2 என) மூவருக்கு வழங்கப்பெறவில்லை. விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படாமல் மூன்றாண்டுகள் சேர்த்து வழங்கப்படுவதும் தவறாகும்.
விருதுகள் வழங்கப்படாமைபற்றிய அட்டவணை :

 குறை களைந்து நிறை  காண விரும்பும் இயக்குநர் வழங்கப்பெறாத ஆண்டுகளுக்கான குறள்பீட விருதுகளையும் தொல்காப்பியர் விருதுகளையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அயல்நாட்டுத்தூதரகங்கள் மூலமும் அயல்நாட்டுப்பல்கலைக்கழகங்கள், குறிப்பாகத் தமிழ்த்துறை / இந்திய மொழிகள் துறை / ஆசியமொழிகள் துறை  மூலமும் அறிவிப்பு செய்து விளம்பரப்படுத்தித் தக்கவர்களுக்கு உரிய விருதுகள் வழங்க இயன்றன செய்ய வேண்டுகின்றோம்.
  மத்திய அரசு 1956 ஆம் ஆண்டிலிருந்து சமற்கிருதம், அரபி, பெர்சியன் மொழிஅறிஞர்களுக்கு வாணாள் முழுமைக்கும் ஆண்டுதோறும் உரூபாய் 50,000 அளிக்கும் விருதுகளை வழங்கி வருகிறது. 1996 இலிருந்து பாலி, பிராகிருதம் மொழி அறிஞர்களுக்கும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. இவ்விருதுகள் ஆண்டுதோறும் 15 சமற்கிருத அறிஞர்களுக்கும் அரபி,பெர்சியன் மொழி அறிஞர்கள் மும்மூவருக்கும் பிற மொழிகளில் ஒவ்வொருவருக்கும் என வழங்கி வருகிறது.
  தொலைநோக்கு அறிஞரான பேரா. முனைவர் சி.இலக்குவனார் அப்பொழுதே தொன்மையான மொழியான தமிழுக்கும் இத்தகைய சிறப்பு வழங்கப்பெறவேண்டும் தமிழறிஞர்களுக்கு  வாணாள்  உதவித்தொகை விருதுகள் வழங்கப்பெற வேண்டும் என வலியுறுத்தினார். உயர்தனிச்செம்மொழியான தமிழின் செம்மொழிக்கு ஏற்பு வழங்கப்பெற்று, இதற்கெனத் தனி நிறுவனம் அமைக்கப்பட்ட பின்னரும், இவ்வாறு தமிழறிஞர்களுக்கும் வாணாள் தொகை விருதுகள் வழங்கப்பெறும் என நாடாளுமன்றத்தில் அறிவித்த பின்னும் எந் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தைப் பொருத்தவரை, இதற்கு முன்பு  பொறுப்பு அலுவலராகப் பணி நிறைவுற்ற முனைவர் க.இராமசாமி,  பதிவாளராகப் பணியாற்றிய முனைவர் மு.முத்துவேலு ஆகிய இருவருமே   செம்மொழி நிறுவனம் தொடர்பான கருத்துகளைத் தெரிவிக்கும் பொழுது குற்றம் காண்பதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். உடன் நடவடிக்கை எடுப்பார்கள். மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறையிலும் பாகுபாடின்றிப் பார்த்து வேண்டுகோளை நிறைவேற்றுகின்றனர்.
  விருது வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியபொழுதும், விருதுத்தொகை தமிழ்நாட்டில் வழங்கி, விருது வழங்கப்படா நிலை இருந்த பொழுதும் மாலைமுரசு,  நட்பு இணைய இதழ், தமிழக அரசியல், அகரமுதல மின்னிதழ் முதலான இதழ்கள் மூலம்  தெரிவித்த பொழுது உரிய நடவடிக்கை எடுத்தனர்.
 தமிழறிஞரைத் தெரிவு செய்யக் கதை எழுத்தாளர்கள் தகுதியானவரல்லர் எனத் தெரிவித்த பொழுதும் அதனை ஏற்றுத் தெரிவுக் குழுவை மாற்றினர்.
  செம்மொழி விருது விழா தமிழிலும் நடைபெற வேண்டும் எனத் ‘தமிழக அரசியல்’ இதழ் வழி  வேண்டிய பொழுது  இயக்குநர் (பொ) திருவாட்டி பூமா, பதிவாளர் முனைவர் முத்துவேல், பொறுப்பு அலுவர் முனைவர் இராமசாமி ஆகியோர் தொடர் நடவடிக்கை எடுத்தனர்.  எனவே விருதுகளின் பெருமை குறித்தும், விருது பெறும் அறிஞர்கள் குறித்தும் தமிழ் மொழியில் குறிப்பு வாசிக்கப்பட்டு முதன் முறையாகத் தமிழ் -இந்தியல்லாத பிற  மொழி – குடியரசுத்தலைவர் விருது விழாவில் இடம் பெற்றது (அட்டோபர் 2013); இந்நிலை தொடர்கின்றது.
  இவ்வாறுநாம் தொடர்ந்து வலியுறுத்தும் பொழுது அவர்களும் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி உரிய நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். இருப்பினும் வாணாள் விருது என ஒன்று இல்லை என எண்ணி இதற்கு முன்பிருந்தோர் நடவடிக்கை எடுக்கவில்லை
  வினையூக்கம்கொண்டு முனைப்புடன் செயலாற்றும் எண்ணம் கொண்ட இயக்குநர் அ.பழனிவேல் தனிக் கருத்து செலுத்திக் கடந்த  ஆண்டுகளுக்கும் சேர்த்து 2005 ஆம் ஆண்டிலிருந்தே ஆண்டிற்கு 30  மூத்த தமிழறிஞர்களுக்குக் குறையாமல் குடியரசுத்தலைவர்  விருதுச்சான்றிதழ்(Presidential Award of Certificate)  வழங்க    நடவடிக்கை எடுக்க அன்புடன் வேண்டுகின்றோம்
    ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
    செல்லும்வாய் நோக்கிச் செயல் (திருவள்ளுவர், திருக்குறள் 673).
இலக்குவனார் திருவள்ளுவன்

No comments:

Post a Comment

Followers

Blog Archive