அகரமுதல 194, ஆனி 25, 2048 / சூலை 09, 2017
செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின்
தனித்தன்மையைக் காத்திடுவோம்!
நூறாண்டு போராட்டத்தின் வெற்றி, தமிழின் செம்மொழித்தன்மைக்கு அறிந்தேற்பு அளித்தது. அதன் தொடர்ச்சியாகச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைத்ததும் அதனைத் தமிழ்நாட்டில் இயங்கச் செய்ததும். கலைஞர் கருணாநிதியும் சோனியாகாந்தியும் மேற்கொண்ட முயற்சியால் கிடைத்த நன்மை பறிபோகின்றது, (நன்மை செய்த இவர்களே செம்மொழிக் காலத்தை மாற்றியதன் விளைவே இன்றைய தீமையும்!)
இந்நிறுவனத்தின் செயல்பாடுகள்
எதிர்பார்த்த அளவு இல்லாமல் இருக்கிறது. அதற்காக அதன் பணிகளைக் குறைத்து
மதிப்பிடக்கூடாது. தலைவர் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து
அறிஞர்களுடன் கலந்துபேசி உரியதிட்டங்கள் தீட்டிச் செயற்படுத்தினால்
எதிர்பார்க்கும் இலக்கை எட்டும்.
இணையவழி உ.வே.சா. செம்மொழித் தமிழ்த் தரவகம், இணையவழிச் செவ்வியல் தமிழ்த் தொடரடைவு,
செம்பதிப்புத் திட்டம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன மின்னணு
நூலகச் செவ்வியல் சுவடிகளின் அட்டவணை, செவ்வியல் சுவடிகளின் பட்டியல் எனப்
பலவற்றை இந்நிறுவனம் வழங்கி வருகின்றது. இவை ஆய்வாளர்களுக்கும்
மாணாக்கர்களுக்கும் பேருதவியாக அமைவன.
தொல்காப்பியம், திருக்குறள், பத்துப்பாட்டு இலக்கியங்களைக் குறுவட்டுகளாக இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது; இலக்கிய வளர்ச்சிக்கும் இசை வளர்ச்சிக்கும் உதவும் அருந்திட்டமாகும். இவற்றின் தொடர்ச்சியாக மேலும் பல இலக்கியங்கள் குறுவட்டுகளாகவும் முற்றோதலுக்கு உதவும் வகையிலும் வெளி வர இருக்கின்றன.
இலக்கியப்பாடல்களைக் காணொளிக் காட்சிகள்
மூலம் விளக்கும் நற்பணியும் பாராட்டும் வகையில் நடைபெறுகிறது. (ஆனால்,
Classical Tamil Visual Episodes என்னும் இதன் தலைப்பை நல்ல தமிழில்
குறிக்க வேண்டும்.)
இணைய வழிச் செம்மொழித்தமிழ் என்னும் திட்டத்தின் மூலம் உலக மக்கள் இருந்த இடத்திலிருந்தே தமிழ் கற்கவும் செம்மொழி நிறுவனம் வாய்ப்பளித்து வருகிறது.
முனைவர் பட்டம், முனைவர்பட்ட மேலாய்வு ஆராய்ச்சியாளர்களுக்கு உதவித்தொகை அளிப்பதன் மூலம் தமிழ் ஆராய்ச்சியில் மாணாக்கர்களை ஈடுபடச் செய்து வருகிறது.
அறிஞர்களுக்கும் இளம் ஆய்வாளர்களுக்கும் செம்மொழி நிறுவனம் மூலம்தான் விருதுகள் வழங்கப்படுகின்றன.
250இற்கும் மேற்பட்ட கருத்தரங்கங்கள்
செம்மொழி நிறுவனம் மூலம் நாடெங்கும் நடைபெற்று வந்துள்ளன. சில
கருத்தரங்கங்கள் தமிழுக்கு எதிரான கருத்தைக் கூறும் களங்களாக மாறிய அவலம்
ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பொதுவாக, மாணவர்கள் தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்களை அறியவும் ஆராயவும் இவை தூண்டுதலாக அமைகின்றன என்பதை மறுப்பதற்கியலாது.
செம்மொழி நிறுவனம் தரும் உதவித்தொகையால்
பல்வேறு ஆய்வேடுகள் உருவாகியுள்ளன. முழுமையாய் அவை அச்சிற்கு வரவேண்டிய பணி
நிலுவையில் உள்ளது.
இவ்வாறு பல்வகையிலும் செம்மொழி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இப்பொழுது இதனைத் திருவாரூரிலுள்ள மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பதன் நோக்கம் இதன் செயல்பாட்டு அடிப்படையில் அல்ல.
அவ்வாறு சிலர் தவறாக எண்ணிக்கொண்டு சரியாகச் செயல்படாததை மாற்றினால் என்ன
என்பதுபோல் பேசுகின்றனர். அதற்காகத்தான் செம்மொழி நிறுவனம் செயல்பட்டு
வருவதைக் குறிப்பதற்காக இவற்றைத் தெரிவிக்க வேண்டியுள்ளது. பையன் சரியாகப்
படிக்கவில்லை என்றால் பள்ளிக்கூடத்தை விட்டு நீக்குவதோ மாற்றுவதோ
முறையாகாது. சரியாகப் படிக்க வைக்க வேண்டும். எனவே, செம்மொழி நிறுவனம் சரியாகச் செயல்படவில்லை எனில் சரியாகச் செயல்படுதவற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உண்மைக்காரணம் அதுவல்ல. செம்மொழித்தன்மை இல்லாமலே செம்மொழியாக அறிவிக்கப்பட்ட மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஒரியா, வங்காளம், முதலான பிற மொழியினரும் தமிழுக்கு உள்ளதுபோல் தத்தம் மொழிக்கும் தனி நிறுவனம் வேண்டும் என்கிறார்களாம்.
அதற்கு நிதி ஒதுக்க இயலவில்லையாம். எனவே, தமிழ் நிறுவனத்தை மத்தியப்
பல்கலைக்கழகத்துடன் இணைக்கிறார்களாம். (அவ்வாறு போட்டியிட்டவர்கள்
சமற்கிருதத்திற்குப் பல்லாயிரம்கோடி ஒதுக்குவதுபோல் தங்களுக்கும் ஒதுக்க
வேண்டும் என்று போராடியிருந்தால், நாமும் இணைந்து போராடலாம்.)
மத்தியப்பல்கலைக்கழகத்தில் இணைப்பதாக
வைத்துக்கொள்வோம். அங்குள்ள ஒவ்வொரு துறையினரும் “தமிழ்த்துறைக்குமட்டும்
கூடுதல் தொகை ஒதுக்குகிறீர்களே! எங்களுக்கும் அதே அளவு ஒதுக்குங்கள்”
என்று கேட்கமாட்டார்களா? அப்பொழுது என்ன செய்வார்கள்? ஆகவே, இதைக் காரணம்
கூறி மத்தியப்பல்கலைக்கழகத்தில் இணைப்பது தமிழை வளரவிடாமல் செய்யும் முயற்சி என்றுதான் கருத வேண்டும்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் என்பது நாடாளுமன்ற ஏற்பு, குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெற்று அரசமைப்புச்சட்டத்திற்கு இணையாக உருவாக்கப்பட்டது. இதனை அவர் கேட்கிறார், இவர் கேட்கிறார் என்றெல்லாம் கூறி மாற்றிட இயலாது. அதையும் மீறிச்செய்தால் தமிழகம் பொங்கிஎழும் என்பதை மத்திய அரசு உணரவேண்டும்.
ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு சமயம்(மதம்) என்ற தவறான கொள்கையில் பற்றுக் கொண்ட பா.ச.க.வின் தமிழ் அழிப்பு முயற்சியாகவே உலக மக்கள் எண்ணுவர். ஆனால், உண்மையில் அவ்வாறில்லை என்றும் அதிகாரிகள் அளவிலும் துறையளவிலும் எடுக்கப்பட்ட முடிவு என்றுஅறிய வருகிறோம்.
எவ்வாறிருந்தாலும், தொடர்புடைய நிறுவனத்தினருக்கும் அதன் தலைவர் என்ற முறையில் தமிழ்நாட்டு முதல்வருக்கும் தெரியப்படுத்தாமல், திருவாரூர் மத்தியப்பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்ட தீர்மானமாக இது உள்ளது என்பது அறங்கோடிய செயலாகும். முடிவு எடுத்தபின்னர் இதனைத் தெரிவிக்கலாம் என்பதும் சதிச்செயலுக்கு ஒப்பானதாகும். நிறுவனத்தினரும் தமிழக அ்ரசினரும் முடிவு தெரிவிக்கும் வரை அமைதி காப்பதும் நன்றன்று.
ஆட்டைப் பலியிடும்பொழுது் அதன் இசைவைக்கேட்பதில்லையல்லவா?
அதுபோன்றதுதான் இத்தகைய செயல். செ.த.ம.நிறுவனம் தொடர்பான நடவடிக்கை எனில்
அதன் பொறுப்பாளர்களுடன் கலந்துபேசி முடி வெடுப்பதுதான் முறை என்பதைப்
புரிந்து கொள்ள வேண்டும்.
மனித வள மேம்பாட்டுத்துறை, மத்திய அரசிற்குக்களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டுத் தமிழழிப்பு முயற்சியில் ஈடுபடக்கூடாது. இதற்கு முன்பெல்லாம் அவர்களது நடைமுறைக்கு மாறான கருத்துகளைத் தெரிவித்த பொழுது ஏற்றுக்கொண்டு செயல்பட்டிருக்கிறார்கள்.
முன்பே குறிப்பிட்டதுபோல் “தமிழ்விழாவில்
தமிழுக்கு இடமில்லையா” எனக் கேட்டதும் தவற்றினை ஒப்புக்கொண்டு தமிழிலும்
அறிவிக்கச் செய்தார்கள். “செம்மொழி அறிஞர்களைத் தேர்ந்தெடுக்கச் சிறுகதை
எழுத்தாளர்கள், தமிழ் அறியாவர்கள் எல்லாம் தகுதியற்றவர்கள்” எனச்
சுட்டிக்காட்டியதும் குழுவை மாற்றி யமைத்தார்கள். இவ்வாறு நாம் மனித வள மேம்பாட்டுத்துறையினரின் செயல்பாட்டுத் தவறுகளைச் சுட்டிக்காட்டியதும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இப்பொழுது நாம் வேண்டுவதையும் கேட்பார்கள் என நம்புகிறோம்
புகழையும் நன்மையையும் தராத செயல்களை எக்காலத்திலும் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும் என்கிறார் தெய்வப்புலவர்
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை. (திருவள்ளுவர், திருக்குறள் 652)
மத்திய அரசு என்பது தமிழருக்கும்
தமிழுக்கும் உரியதுதான் என்ற வகையில் புகழையும் நன்மையையும் தராத
செயல்களைக் கைவிட்டுத் தமிழ்காக்கும் பணிகளில் தன்னை இணைத்துக் கொள்ள
வேண்டுகின்றோம்..
செம்மொழித்தமிழாய்வுமத்திய நிறுவனத்தை
மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் முயற்சியைக்கைவிடுக!
அதன்தனித்தன்மையைக் காத்திடுக!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை : அகரமுதல 194, ஆனி 25, 2048 / சூலை 09, 2017
No comments:
Post a Comment