ஒரு சொல்-பல் பொருள்,
கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல்
1/3
ஒரே பொருளைச் சுட்டும் பல்வேறு
சொற்களும் பல்வேறு பொருள்களை உணர்த்தும் ஒரே சொல்லும் உள்ள நிலைமை அனைத்து
மொழிகளிலும் காணப்பெறும் இயல்புதான். இந்நிலைமையைத் தமிழிலும்
மிகுதியாய்க்; காண்கிறோம். இடத்திற்குத் தகுந்தாற்போல் பொருளை உணரும் நிலை
வெளிப்படையாய் இருப்பின் குறையொன்றும் இல்லைதான். ஆனால், அதே நேரத்தில்
பொருளை உணரும் இடர்ப்பாடு இருப்பின் சொற்களஞ்சியத்தை வளப்படுத்த வேண்டியது
இன்றியமையாதது அல்லவா?
ஒரு சொல்-பல்பொருள் என்ற நிலைமை கலைச்சொற்களைப் பொருத்தவரை தவிர்க்கப்பட்டாக வேண்டும். கலைச்சொற்கள் குழப்பமின்றித் தாம் உணர்த்தும் பொருட்களை வெளிப்படுத்துவனவாக இருக்க வேண்டும்.
ஒரு பொருளை ஒவ்வொருவர் ஒவ்வொரு சொல்லில்
கையாளுவதும் ஒரே சொல்லைப் பல்வேறு பொருள்களில் வழங்கிவருவதும் இன்றைய
தமிழ்உலகின் நிலைமையாய் உள்ளது. இதனால் ஏற்படும் இடர்ப்பாடுகளை உணர்ந்து
தேக்க நிலையை நீக்க வேண்டும்.
சொல்லாக்க வல்லுநர்களும் மொழியியல், கலையியல், அறிவியல் அறிஞர்களும் ஒன்றுகூடிப் பல்வேறு சொல்லில் வழங்கும் ஒரே சொல்லுக்கு மாறாக வெவ்வேறு சொற்களைக் காணுதல் வேண்டும். இவற்றை உலகறியச் செய்து மேலும் திருத்தமும் செம்மையும் அடைந்தபின் கலைச்சொல் பயன்பாட்டில் சீர்மை நிலையை உருவாக்க வேண்டும்.
இது குறித்த இன்றைய நிலையையும் இருக்க வேண்டிய கலைச்சொல் வளமையையும் சில எடுத்துக்காட்டுகள் மூலம் நாம் காண்போம்.
Police, Security, Warden, Warder போன்ற பல
சொற்களுக்கும் பொதுவாக நாம் காவலர் என்ற சொல்லையே கையாண்டு வருகிறோம்.
அதனால் குழப்பம் ஏற்படுவது கண்கூடு. மாறாக நாம் காவல் என்ற அடிப்படையில்
வெவ்வேறு சொற்களை உருவாக்கினால் குழப்பம் நீங்குவது உறுதி.
Police | காவலர் |
Warder | அரணாளர் |
Warden | பேணாளர் |
Guard | காப்பாளர் |
Guardian | ஓம்புநர் |
Security | பாதுகாக்குநர் |
Gate-keeper | வாயிற் காப்போர் |
Watchman | காவலாள், காவலாளி |
இவ்வாறாக நாம் வகைப்படுத்திக்
கொண்டால், காவலர், சிறைக்காவலர், விடுதிக்காவலர், ஊர்க்காவலர், பாதுகாவலர்
என இணைச்சொற்களைப் பயன்படுத்துவதைவிட எளிமையும் சொற்சிக்கனமும் இருக்கும்
அல்லவா?
Police என்பது துறையைக் குறிக்கையில் காவல் என்கிறோம்.
Inspector General of Police என்றால் காவல்
துறைத்தலைவர் என்கிறோம். ஆனால், Head of the Department என்பதற்குத்
துறைத்தலைவர் என வழங்கிவருவதுதான் பொருத்தமாக உள்ளது.
I.G. என்பவர் துறைத்தலைவராக இருப்பினும் துறைத்தலைவர் என்பது பதவி நிலையைக்குறிப்பதாக அமையாது. எனவே,
Inspector General | ஆய்வுத் தலைவர் |
Inspector General of Police | காவல் ஆய்வுத் தலைவர் |
Inspector General of Prison | சிறை ஆய்வுத் தலைவர் |
Inspector General of Registration | பதிவு ஆய்வுத் தலைவர |
என்று வருவது பொருத்தமாக இருக்கும்.
இவை போல்
Director General of Police – காவல்துறைத் தலைமை இயக்குநர் என்கிறோம்.
ஒன்றுக்கு மேற்பட்ட இயக்குநர் இருந்து
ஒருவர் தலைமைப்பொறுப்பில் இருந்தால், அவரைத் தலைமை இயக்குநர் என்பது
பொருததமாக இருக்கும். இங்கு அவ்வாறு இல்லை. எனவே,
Director General | நெறித் தலைவர் |
Director General of Police | காவல் நெறித்தலைவர் (ஆய்வுத் தலைவரையும் நெறிப்படுத்துபவர்) |
Director General of Prison | சிறை நெறித் தலைவர |
Director General of Registration | பதிவு நெறித் தலைவர் |
என்பனபோல் உருவாக்குவது சிறப்பாக இருக்கும் அல்லவா?
(தொடரும்)
. இலக்குவனார் திருவள்ளுவன்
ஆறாவது உலக தமிழ் மாநாட்டில் அளிக்கப் பெற்ற கட்டுரை, கோலாலம்பூர், மலேசியா
No comments:
Post a Comment