இன்றைய தேவை குறுஞ்சொற்களே!

  ‘நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக்’ கலைச்சொற்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் ஒரு பான்மை கூட்டுச்சொற்களாக அமைகின்றன. சொலலாக்கம் கூடியவரை தனிச்சொற்களாக அமைக்கப்பட வேண்டும். இவையும் மூன்று அல்லது நான்கு எழுத்துகளுக்கு உட்பட்டக் குறுஞ்சொற்களாய் இருத்தல் வேண்டும்.  நெடுஞ்சொல் அஞ்சி அயல்மொழியிலுள்ள குறுஞ்சொல்லையே எடுத்தாளக் கூடாது என வலியுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.
எளிமையும் வழமையும்
  அயற்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை உருவாக்குகையில் பெரும்பாலானவை பொருள் விளக்கமாக அமைகின்றன. இதனால் வினைவடிவம், பெயர் வடிவம் போன்று வெவ்வேறு சொல்வடிவங்களில் இதுபோன்ற சொற்களைக் கையாளுகையில் இடர்ப்பாடு ஏற்படுகின்றது. இதுபொல் முன்னொட்டு அல்லது பின்னொட்டு சேர்க்க வேண்டிய நேர்வுகளிலும் கூட்டுச்சொற்கள் உருவாக்க வேண்டிய நேர்வுகளிலும் சொல் மறைந்து தொடரே ஆட்சி செய்கின்றது. ஏழெழுத்துகளுக்கு மேல்சொற்கள் இல்லாத தமிழ்மொழியில் ஈரெழுத்து மூவெழுத்துச்சொற்கள் அடிப்படைச் சொற்களாய் அமைந்துள்ள தமிழ்மொழியில் உருவாக்கப்படும் தொடர் சொற்கள் உரிய பயன்பாட்டை இழந்து விடுகின்றன. தமிழில் சுருக்கமாகக் கூறமுடியவில்லை. விளக்கமாகவே கூற வேண்டியுள்ளது. எனவே சுருக்கமான அயற்சொல்லே வழக்கத்தின் காரணமாக எளிதாக உள்ளது எனப் பலர் கூறுவதால் எளிமை, வழமை என்னும் போர்வைகளில் அயற்சொற்களே நிலைத்துவிடுகின்றன.
சொல்லாக்க நெறிமுறைகள்
  எந்த ஒரு சொல்லும் தான் பயன்படும் இடத்திற்கேற்ப உள்ள பொருளைச் சுமந்து செல்லும் ஊர்திதான். எனவே, (மூலச்)சொல்லுக்கு நேரான(பெயர்ப்புச்) சொல்லை அமைக்காமல் (மூலப்)பொருளுக்கு ஏற்ற(பெயர்ப்புச்)சொல்லையே ஆக்க வேண்டும். சொல் செறிவாயும் செவ்விதாயும் இருத்தல் வேண்டும். பண்பாட்டுப்பின்னணியைக் கருத்தில் கொண்டு ஆக்கப்பெற வேண்டும். ‘குன்றக்கூறல்’ முதலான நூல் குற்றங்கள் பத்தும் ‘சுருங்கச் சொல்லல்’ முதலான நூல் அழகுகள் பத்தும் சொல்லுக்கும் மிகப்  பொருந்தும்.
சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை
வெல்லும் தன்மை யறிந்து
எனும் திருக்குறளை நினைந்து தக்க சொல்லைத் தெரிவு செய்ய வேண்டும். அயற் சொல் கலப்பை அறவே நீக்க வேண்டும். உரிய சொல் கண்டறியும் இடை நேரத்தில் அயற் சொல்லைப் பயன்படுத்த வேண்டிய தவிர்க்க இயலா நேர்வுகளில்  பெயர்ப்பு மொழியின் வரிவடிவிலேயே எழுத வேண்டும். இவைபோன்ற நெறிமுறைகள் குறித்து ஈண்டு ஆராயாமல் தலைப்பு குறித்தே காணப்போகின்றோம்.
சொல்லின் பயன்பாடு
  பயன்பாடு இல்லாத சொல் இருந்து பயன் என்ன? நாம் கலைச்சொற்களை உருவாக்குவதன் நோக்கம் அவை அயற்சொற்களை யகற்றி அல்லது அயற்சொற்களுக்கு இடந்தராமல் நின்று நிலைத்துப் பொருள்  தர வேண்டும் என்பதுதான். அதைக் கருத்தில் கொண்டு எளிய பயன்பாட்டிற்கு வழிவகுக்கும் வகையில் சொல்லாக்கத்தில் ஈடுபடவேண்டும்.
  1938இல் சென்னைமாகாணத் தமிழ்ச்சங்கம் வெளியிட்டுள்ள கலைச்சொல் பட்டியில்கூட, வெடியம்(நைட்டிரசன்), நீறியம்(கால்சியம்), நிறமியம்(குரொமியம்), பசியம்(குளொரின்) முதலான தனிக்குறுஞ்சொற்கள் இருந்துள்ளன. ஆனால், நாம் இப்போது உருவாக்கும் சொற்கள் பல சுருங்கிய வடிவில் அமையாதது ஏன்? அயற்சொல் தமிழ் ஆக்கப்படும்பொழுது சொல்லுக்கு நேரான பொருளை உணர்த்தும் சொல்லைக் குறிப்பிடுவதில்லை. சொல்உணர்த்தும்பொருள் விளக்கத்தை அல்லது அதன் பயன்பாட்டுப் பொருளைக் கூட்டுச்சொற்களாகப் படைத்து விடுகின்றனர். எடுத்துக்காட்டு காண்போம்.
  • caliper – முடம் நீக்க உதவும் சாதனம்
இவ்வாறு சொற்சேர்க்கையைப்பயன்படுத்துவதை விட ஆங்கில ஒற்றைச்சொல்லே எளிமையாக உள்ளது என மக்கள் அதனைத்தான் பயன்படுத்துகின்றனர்.
 முடம் நீக்க உதவும்  கருவிகள் அல்லது பொருள்கள் பல உள்ளன. (காலிபர் என்பதற்கும் வெவ்வேறு பொருள்கள் உள்ளன. இருப்பினும்) இந்த இடத்தில் caliper(calliper) மட்டுமே இவ்வாறான பொருளாகக் குறிக்கப்படுவது பொருந்தாது. மேலும் சில நேர்வுகளில் குறுங்காலம் இதனைப் பயன்படுத்துவதன் மூலம் முடம் நீங்கலாம். பல நேர்வுகளில் அதன் துணை கொண்டு நடக்கவே இயலும்.  எனவே, பயன்பாட்டுப்பொருளும் முழுமையாய் அமையவில்லை. காலூன்றி நடக்க உதவும்கோலை ‘ஊன்றுகோல்’ என்பதுபோல் காலணியுடன் இணைத்துக் காலில் அணிந்து காலூன்றி நடக்கப் பயன்படும் இதனை ‘ஊன்றணி’ எனலாம்.
caliper ஊன்றணி
(தொடரும்)
. இலக்குவனார் திருவள்ளுவன்
எட்டாவது உலக தமிழ் மாநாடு , 1995,
 தஞ்சாவூர், தமிழ்நாடு