தினகரன் நிழல்  அமைச்சரவை அமைக்கட்டும்!


   ‘‘எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை’’ என அதிமுக தலைவர்கள் கூறினாலும் அதிமுகவைத் தடுமாற்றத்தில் தள்ளி இயக்கிக்கொண்டிருப்பது பாசக தலைவர்கள்தாம் என்பது அனைவரும் அறிந்ததே! ஆளுங்கட்சிக்கு இணையான வலிமை உடைய எதிர்க்கட்சித்தலைவரைக்கூடச் சந்திக்காத தலைமையர் நரேந்திரர்(மோடி), பத்துபேர் கூட இல்லாத  சிறு பிரிவின் தலைவரை அடிக்கடி சந்திப்பதன்  காரணமும் இதுதானே!  வேளாண்மை நாட்டின் தலைவக இருந்து கொண்டு  வாழ்வாதாரத்திற்காகப் போராடும் வேளாண்குடிப் பெருமக்களைச் சந்திக்க மறுத்துவிட்டுப் பதவிகளுக்காகப் போராடுபவர்களைச் சந்திப்பதன் காரணமும் என்ன? அதிமுகவில் பிளவை உணடாக்க மேற்கொண்ட முயற்சிகள் சலசலப்பை உருவாக்கினாலும் எதிர்பார்த்த பிளவு வராமையால் அதை எப்படியும் நிறைவேற்றித் தமிழ்நாட்டை இந்துவெறி, இந்தி நாடாக மாற்ற வேண்டும் என்பதுதானே!
  செயலலிதா மருத்துவமனையில் இருந்த பொழுதும் இறந்த பொழுதும் இல்லாத  சசிகலா குடும்ப எதிர்ப்பு உறுதி திடீரென்று முளைத்ததன் காரணம் என்ன? அதிகார வலிமையால், குறுக்கு வழிகளில் மிரட்டப்படுவதும் இணங்கினால் தரப்படுவதாகக் கூறப்படும் பதவி நலங்களும் பிற வளங்களும்தானே!
  அதிமுக இயல்பாகக் கரைந்தால் ஒன்றும் தீமையில்லை. ஏனெனில், அதில் தமிழ் உணர்வாளர்கள் இருந்தாலும் அக்கட்சி ஒன்றும் தமிழ்நலன் சார்ந்து இயங்கும் கட்சியில்லை. (முதன்மைக்கட்சிகள் யாவுமே இவ்வாறுதான்  உள்ளமையால், இதைமட்டும் குறைகூறிப் பயனில்லைதான்.) ஆனால், வஞ்சக வலையில் சிக்கிச் சீரழிவது அக்கட்சிக்கு மட்டுமல்ல நாட்டிற்கும் நல்லதல்ல. எனவேதான் நாம் இதனை எதிர்க்க  வேண்டியுள்ளது.
  அதிமுகவில் பெரும்பான்மையர் தன் பின்னால் உள்ளதாகப் பன்னீர்செல்வம் கூறினாலும் அஃது உண்மையில்லை என்பதை இப்பொழுது் உணர்ந்திருப்பார். அவர் தொகுதி மக்கள் நடத்திய  குடிநீர்க்கிணற்றுக் காப்புப் போராட்டமும் இதை உறுதிசெய்கின்றது. என்னதான் பாசக  பின்னணியால் வலிமையாக  இருப்பதாகக் காட்டினாலும் அது நிலைக்காது.
 அதே போல், எடப்பாடி பழனிச்சாமி பாசகவின் துணையுடன் தன்பக்கம் அமைச்சர்களை ஈர்த்து வைத்திருந்தாலும் அதுவும் நிலைக்காது. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள நினைப்பவர்களும்  காற்று அடிக்கும் திசையில் மாறிச் செல்வர்.
  வேறு வழியின்றித் தங்களை  உயரத்தில் ஏற்றியவர்களையே எதிர்க்கும் இவர்கள், மனம்மாறி கட்சி நலன் குறித்து எண்ணப்போவதில்லை.
  இன்றைய நிலையில் தொண்டர்கள் தினகரன் பக்கம் இருக்கிறார்கள். மேலூரில் அவர் நடத்திய கூட்டமே அதற்குச் சான்று.  பணம் கொடுத்துத் திரட்டியதாகச் சிலர் கூறுகின்றனர். இதுதான் இன்றைய கூட்ட இலக்கணம் என்றான பின்னர் அவ்வாறு கூறிப் பயனில்லை. மேலும், அவ்வாறுதான் பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் கூட்டத்தைத் திரட்டமுயன்று இயலாமல் போயுள்ளது.
 எனவே, தினகரன் தன் முயற்சியில் வெற்றி பெற்றுக் கட்சியைக் காப்பாற்ற வேண்டுமெனில்,  அரசைக் கலைப்பார் என்ற அச்சத்தில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியை விடுவிக்க வேண்டும். எந்த அளவிற்கு அச்சம் வருகிறதோ அந்த அளவிற்கு அவர் பாசகவின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வார்.  தரையளவு வீழந்து பணிந்து வாழ்ந்தவர்களுக்கு அதற்கும் கீழேயும் வீழ்வது ஒன்றும் இயலாததல்ல. எனவே, கவிழ்ப்பு அச்சத்திலிருந்து விடுவிக்கும் வகைகளில் தினகரன் செயல்பாடு இருக்க வேண்டும்.
  அதேநேரம், கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற நிழல் அமைச்சரவை அமைக்க வேண்டும்.
  பொதுவாக நிழல் அமைச்சரவை எதிர்க்கட்சியினரால் அமைக்கப்படும். இப்பொழுது அவரை எதிரர் ஆக அரசு எண்ணுவதால்,  நிழல் அமைச்சரவை அமைக்கலாம்.
  நிழல் பேரவை என்ற பெயரில் இதனை அமைத்து அதன் ஒருங்கிணைப்பாளராக இருக்க வேண்டும். துறைவாரியான நிழல் அமைச்சர்களையும் மாவட்ட வாரியான நிழல் அமைச்சர்களையும்  அமர்த்தி நாட்டுப்பணியில் கருத்து செலுத்த வேண்டும். இதில் பங்கேற்க விரும்பும்  கட்சி சாராதவர்களையும் இதில் இணைக்கலாம்.
 நிழல் பேரவையினர்,  அதிகார மமதையில் செயல்படக்கூடாது என்றும் மக்கள் தொண்டர்களாகத்தான் செயல்பட வேண்டும்என்றும் அறிவுறுத்தி அவ்வாறு செயல்படவேண்டும்.
அரசின் திட்டங்கள் மக்களுக்கு எளிதில் கிடைக்க உதவ வேண்டும்.
கட்சி  சார்பான  ஏசல்களையும் அவதூறுகளையும் தவிர்க்க வேண்டும்.
தேர்தல் நேரத்தில் தங்கள் பணிகளைக் கூறிக்கொள்ளலாமே தவிர,நிழல் பேரவையில் செயல்படும் பொழுது் அதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடக்கூடாது.
தமிழ்க்காப்பு, தமிழ்வழிக்கல்வி, தமிழ்வழி இறைவழிபாடு எனத் தமிழ்நலன்சார்ந்த பரப்புரைகளிலும் பேரவை ஈடுபட வேண்டும்.
  அவரோ கட்சிப் பொறுப்பாளர்களோ கட்சிப்பணிகளில் ஈடுபட இப்பணிகள் தடையாக இருக்கா.  அதே நேரம் மக்கள் பணியால் கட்சி மேலும் இவர் தலைமையில் வலிவு பெறும்.
  இதனால் அரசின் நலத்திட்டங்கள் விரைவில் மக்களுக்குப் பயனளிக்கும்; ஊழல்கள் தடுக்கப்படும்; அதிமுகவின் அரசிற்கு நல்ல பெயர் கிட்டும். இதற்குக் காரணமான தினகரன் போற்றப்பட்டுத் தன் கனவை விரைவில் நிறைவேற்ற இயலும்.
  அரசை ஆட்டுவிக்கும்  அதிகாரச் செல்வாக்கில் இருந்த பொழுது  செய்யத்தவறிய இலவச உயர் கல்வி, இலவச மருத்துவ உதவி, வேலைவாய்ப்புப் பெருக்கம் போன்றவற்றிலும் கருத்து செலுத்த வேண்டும்.
  அவரிடமும் கட்சியினரிடமும் இருக்கும் செல்வத்தில் இதனை ஆற்ற  இயலும். இவ்வாறு தொடர்ந்து ஈடுபட்டால் மக்களும் உதவுவர்.
  எனவே, அதிமுகவின் துணைப்பொதுச்செயலர் தினகரன் நிழல் பேரவையை உருவாக்கி மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டு வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
     கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
    தூக்கங் கடிந்து செயல். (திருவள்ளுவர், திருக்குறள் 668)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை :  அகரமுதல 200, ஆவணி 04, 2048  / ஆகத்து 20, 2017