அகரமுதல 199, ஆடி28, 2048 / ஆகத்து 13, 2017
பதவி நலன்களுக்காக அடிமையாகிக்
கட்சியைச் சிதைக்காதீர்!
“அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்” (ஔவையார், மூதுரை 17) இருப்பவர்களே, அரசியல்வாதிகள் என்பது இன்றைய இலக்கணமாகி விட்டது. எனவே,
“ஒருவீர் தோற்பினும் தோற்பதுநும்
குடியே”(கோவூர்கிழார், புறநானூறு 45) எனப் பிறர் அறிவுறுத்த வேண்டிய
நிலையில் அதிமுக தலைவர்கள் உள்ளனர்.
இயல்பான போக்கில் அதிமுக வளர்ந்தாலும் தளர்ந்தாலும் ஒன்றுமில்லை.
ஆனால், அதிகாரச் சுவையைப் பறிப்பதாகவும் தருவதாகவும் அச்சுறுத்தியும்
ஆசைகாட்டியும் தமிழர் நலனுக்கு எதிரான ஒரு கட்சி அதனைச் சிதைத்துக்
கொண்டுள்ளது. இதனால், அடிமைத்தனத்தின் உச்சக் கட்டத்தில் அதன் தலைவர்கள் இருப்பது அக்கட்சிக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கும் கேடு தருவதாக உள்ளது.
மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதில் தவறில்லை. ஆனால், நம் உரிமைகள் பாதிப்பிற்கு உள்ளாகும் பொழுதும் உரிமைக்குக் குரல் கொடுக்காமல் போலி உறவில் கட்டுண்டு கிடப்பதில் பயனில்லை. வாதாடிப் பெற முடியாதவற்றைப் போராடியாவது பெற வேண்டும் என்ற உணர்வு இல்லாததால், தமிழக உரிமைகள் பறிபோகின்றன. எனவே, நாம் தமிழக ஆளுங்கட்சியான அதிமுகவின் ஒற்றுமை குறித்துக் கூற வேண்டியுள்ளது.
புராணக்கதையில் வரும் பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பின்நிலைதான் பன்னீர் செல்வம் நிலை. அவர் ஓரிலக்க எண்ணிக்கை உறுப்பினர்களை வைத்துக் கொண்டு கட்சியையும் ஆட்சியையும் கேட்பதன் காரணம் அதுதான்.
செயலலிதா மறைந்ததும் சசிகலாவின் காலில் விழுந்து கெஞ்சிக்கதறி அவரைக் கட்சித்தலைமைக்கு அழைத்தவர், இப்பொழுது அவரது குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க வேண்டுவது பித்தலாட்டம்தான். அப்பொழுதே இந்த முடிவை அறிவித்திருந்தார் என்றால் உளப்பூர்வமான எண்ணம் என ஏற்றிருக்கலாம்.
அதுபோல்தான் எடப்பாடி பழனிச்சாமியும். ஆட்சிக்கட்டிலைப் பிணைத்துவைத்துக் கொள்ளும் திறமை மிக்கவராக அவர் இருக்கின்றார். ஆனால், கூவத்தூரில் ச.ம.உ.கள் ஆதரவு அவரது தனிப்பட்ட செல்வாக்கிற்குக் கிடைத்ததில்லை என்பதை உணரவில்லை. அந்த நேரத்தில் வேறு யாரைச் சசிகலா அடையாளம் காட்டியிருந்தாலும் அவர்தான் முதல்வராகியிருப்பார்.
அப்பொழுது சசிகலா ஆதரவால் கிடைக்கும் முதல்வர்பதவி வேண்டா எனத் தூக்கி
எறியவில்லை. இன்றைக்கு மத்தியக் கட்சியின் தூண்டுதலால் அவ்வாறு கூறுகிறார்.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதியில் தினகரன்,
இரட்டை இலையை மறக்க வைக்கும் அளவிற்குத் தன் தேர்தல் குறியீடான தொப்பியைப்
புகழ்பெறச்செய்தார். அத்தேர்தல் பரப்புரையில் தினகரனைத் தலையில் தூக்கி
வைத்துக் கொண்டாடியவர், இன்றைக்கு பாசகவின் ஆசைகாட்டலுக்கு அடிபணிந்து
தூக்கி எறிகிறார்.
இடைத்தேர்தலில் தினகரன்தோற்பார் எனப்
பாசக கருதியிருந்தால், அவரது செல்வாக்கு இவ்வளவுதான் என்று சொல்லி
ஓரங்கட்ட வாய்ப்பாக இருந்திருக்கும் எனத் தேர்தலை நடத்தியிருக்கும்.
ஆனால், வெற்றிப் பட்டம் அவருக்கே மக்கள் அணிவிக்க ஆயத்தமாக இருப்பதைப் பாசக உணர்ந்தது; எனவேதான் இடைத் தேர்தலை ஒத்தி வைத்தது. தினகரனை வழக்குகள் மூலம் அகற்றச்செயல்படுகிறது.
இடைத்தேர்தலின் பொழுது தினகரனின்காலில்
தவமிருந்தவர்கள் இப்பொழுது அவரை வெளியேற்றிப் பாசக திருகும் திறவுகோலுக்கு
ஏற்பத் தாளம்போடுகிறார்கள்.
சசிகலா குடும்பத்தினரை வெளியேற்றவேண்டும் என்பது பாசகவின் திட்டமே! அதிமுகவினர் கருத்தல்ல! எனவேதான் அவர்களை அண்டியே வாழ்ந்தவர்கள் இன்றைக்குப் பாசகவின் ஊதுகுழலாக மாறியுள்ளார்கள். ஆனால், இந்த
அடிமைத்தனம் அதிமுக தொண்டர்களுக்குப் பிடிக்கவில்லை. தினகரனுக்கு எதிராக
இருந்தவர்கள்கூட இன்றைக்கு அவர் பக்கம் திரும்பியுள்ளார்கள் எனில், இதுதான் காரணம்.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியை இழந்தார் எனில், அவரும் மற்றொரு பன்னீர்செல்வம்தான். கொங்கு மண்டலத்தினர்கூட அப்பொழுது துணைநிற்க மாட்டார்கள்.
பதவியில் இல்லாத பொழுதும் தினகரனுக்கு ஆதரவு உள்ளது எனில் அதிமுக தொண்டர்கள் அவர் ஆளுமையை விரும்புகிறார்கள் என்றுதானே பொருள்.
தினகரனும் பாசகவிற்கு இணங்கிப் போக முன்வந்தாலும் பாசக அதனை விரும்பாது. ஏனெனில், பிறரைப்போல நல்ல அடிமையாக அவர் இருக்க மாட்டார். மத்திய ஆட்சியைக்கூடத் தன்வயப்படுத்தினாலும் படுத்துவார் என்ற அச்சம் உள்ளது.
வேலியில்போகும் ஓணானை வேட்டியில் விடுவானேன்! அவரை ஆதரித்து உள்ளதை
இழப்பானேன் என்ற எச்சரிக்கை உணர்வால் அவரையோ சசிகலாவையோ விரும்பவில்லை.
அவர்களை வழக்குகள் மூலம் அச்சுறுத்துவதன் காரணங்கள் அரசியலை விட்டு ஒதுங்கவைப்பதும் செயலலிதாவின் சொத்துகளைக் கவருவதும்தான்.
திறமைமிக்க நடராசனையே ஓரங்கட்டச்
செய்துள்ள தினகரனைத் தன் கூட்டணியில் சேர்த்து வீண் வம்பை விலைக்கு வாங்க
அது முன்வரவில்லை. எனவேதான் சசிகலா குடும்பத்தினரை அகற்றும் ஒற்றை முழக்கத்தை அதிமுக மூலம் பாசக முன் வைக்கிறது. இதன் மூலம் சசிகலாவிற்குத்தான் ஆதரவு பெருகுகிறது என்பதை அஃது உணரவில்லை.
இராசீவு காந்தி அதிமுக ஒற்றுமை குறித்து
வலியுறுத்திய போது அதில் நேர்மை இருந்தது. இப்பொழுது பாசக அதிகமுவின்
ஒன்றுமை குறித்துக் கூறுவதில் வஞ்சகம் இருக்கிறது. இந்த வஞ்சக வலையில் சிக்கிக் கொண்டு அதிமுக தலைவர்கள், தாங்கள் கடந்து வந்த பாதையைமறந்து முழங்கிக் கொண்டுள்ளனர்.
சசிகலா குடும்பத்தினரால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டவர்கள் அமைதி காக்கின்றனர். ஆனால், அவர்களால் எல்லா நலன்களையும் வளங்களையும் பெற்றவர்கள்தாம் இன்றைக்கு அவர்களால் கட்சிக்குக் கேடு என்று கூறி வருகின்றனர்.
இத்தகையவர்களை அறிமுகப்படுத்தி ஆளாக்கியதுதானே அவர் செய்த தவறு. அதைத்தானே
தொண்டர்கள் விரும்பவில்லை. அவ்வாறிருக்க எலலாப் பயனையும் அடைந்தவர்கள்,
பொல்லாக் குடும்பத்தினராக அவர்களைக் கூறுவதை மக்கள் எப்படி ஏற்பர்?
நாளைக்குச் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் முதல்வர் என்னும் நிலைவந்தால், இவர்கள் புது முகமூடி அணிவர்.
தங்களின் அடிமன எண்ணத்திற்கு மாறாகக் கூறவும் செயல்படவும் தூண்டியவர்களால்
அவ்வேடம் போட்டோம் எனப் புது வேடம் கட்டுவர். அப்பொழுதும் இவர்கள்தாம்
பயன்பெறுவர். அந்த நம்பிக்கையில்தான் தற்போதைய பாசகவின் முயற்சிகளுக்குக்
கை கொடுக்கின்றனர். வென்றால் நன்று. இல்லையேல் பழுத்த மரம்நாடிச் செல்வதில்
தவறில்லை என்பதே இவர்களின் எண்ணம்.
அதிமுக தலைவர்கள், அதிகாரப்போட்டியில் தங்களுக்குள் அடித்துக்கொண்டால் நாளை, அரசியலை விட்டே அகற்றப்படுவர்
என்பதை உணரவேண்டும். சிறு குழுவைப் பெரும் அணியாகக் காட்டுவது தங்களையே
அழித்துக்கொள்ளும் அறியாமை என்பதை அறிய வேண்டும். அதிகாரத்தால் ஒட்டிக்
கொண்டிருப்பவர்களை ஆதரவாளர்களாக எண்ணுவதும் பேரறியாமை என்பதைப் புரிந்து
கொள்ள வேண்டும்.
“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்பதால் ஒன்றிணைந்து தமிழக நலனுக்குப் பாடுபடவேண்டும். இதற்கு மாறாக அடிமைத்தனத்தில் மூழ்கி இருப்போரைத் தொண்டர்களும் மக்களும் இடம்தெரியா நிலைக்குத் தள்ள வேண்டும்.
ஆளுங்கட்சியினரின் ஒற்றுமை தமிழகத்திற்கு வலிமைசேர்க்கட்டும்! வளம்சேர்க்கட்டும்!
மக்கள் பகையினரைத் தூக்கி எறியட்டும்!
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது (திருவள்ளுவர், திருக்குறள் 1075)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 199, ஆடி28, 2048 / ஆகத்து 13, 2017
No comments:
Post a Comment