வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 3/4
அருட்செல்வர் கிருபானந்த வாரியார்
நான்காவதாக வா.வேங்கடராமனின் அருட்செல்வர் கிருபானந்த வாரியாரின் திருக்குறள் தொண்டு – ஒரு கண்ணோட்டம் என்னும் கட்டுரை இடம் பெற்றுள்ளது.
வாரியாரின் பிறப்பு வளர்ப்பு பணிகளைக் குறிப்பிடும் கட்டுரையாளர் கி.வா.ச. அவரை 64 ஆவது நாயன்மார் எனப் புகழாரம் சூட்டியதன் பொருத்தத்தை விளக்குகிறார்.
பன்னிரு திருமுறைகள், சைவக்காப்பியங்கள், சைவச்சித்தாந்தச் சாத்திரங்கள் எனச் சைவ நூற்புலமை மிகக் கொண்டிருந்த வாரியார், சைவக் கருத்துகளைக் கூறும் இடங்களில் எல்லாம் திருக்குறள் மேற்கோளைத் தவறாமல் கையாண்டுள்ளார் என்கிறார் கட்டுரையாளர்.
நம் நாட்டில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவற்றிற்கும் சென்று சைவப்பரப்புரை மேற்கொண்டவர் வாரியார். அவ்வாறு தாம் சென்ற எல்லா இடங்களிலும் திருக்குறள் பரப்புரையும் மேற்கொண்டு திருக்குறள் தொண்டராக வாழ்ந்துள்ளார் என்பதை நமக்குக் காட்டுகிறார் கட்டுரையாளர்.
வாரியார், திருக்குறள் சைவநூலா?, திருக்குறள் கதைகள் முதலான திருக்குறள் தொடர்பான நூல்களையும் திருக்குறள் கதைகள், வாரியாரின் வள்ளுவர் ஆகிய திருக்குறள் தொடர்பான ஒலிப்பேழைகளையும் வெளியிட்டுள்ளதைக் குறிப்பிட்டு வாரியாரின் திருக்குறள் பரப்புரையை விளக்குகிறார்.
வாரியாரின் 40இற்கு மேற்பட்ட நூல் பட்டியலையும் 25 பணிகளையும் குறிப்பிடும் கட்டுரையாளர் வாரியார் குறள்நெறிப்படி வாழ்ந்தவர் எனப் பாராட்டுகிறார்.
திருவள்ளுவர் கூறியவாறு வினையால் வினையாக்கிக்கோடும் சிறப்புடன் சைவப்பரப்புரைப் பொழிவால் திருக்குறள் பரப்புரைப் பொழிவை மேற்கொண்ட திருக்குறள் பரப்பாளர் வாரியார் என வா.வேங்கடராமன் கட்டுரையை நன்கு முடித்துள்ளார்.
பாரதியார்
ஐந்தாவதாகப் பாரதியார் குறித்த பேரா.கருவை பழனிசாமி கட்டுரை இடம் பெற்றுள்ளது.
பாரதியார் தம் கட்டுரைகளில் திருக்குறள்களை எங்கெங்கே கையாண்டுள்ளார் எனக் குறிப்பிட்டு அவரின் திருக்குறள் ஈடுபாட்டை நமக்குக் கட்டுரையாளர் விளக்குகிறார்.
திருக்குறள் கருத்துகளை உள்வாங்கியும் பாரதியார் கட்டுரைகள் படைத்துள்ளார் என்கிறார். எடுத்துக்காட்டாக
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபைகயும்
சேரா தியல்வது நாடு
என்னும் திருக்குறள் கருத்தைப் பின்வருமாறு பயன்படுத்தியுள்ளார் என்கிறார்.
“அந்நியர் ஆளும் இந்திய நாட்டில் செறுபகை தவிர ஏனைய உறுபசியும் ஓவாப்பிணியும் ஆகிய இரண்டும் உண்டு …”
எனப் பாரதியார் எழுதியுள்ளதை விளக்குகிறார்.
கான்பூர் பொதுக்கூட்டத்தில் திலகர் ஆற்றியஉரையை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார் பாரதியார். மூல உரையில் திருக்குறள் பயன்படுத்தப்படாவிட்டாலும் மொழிபெயர்ப்பில் பாரதியார் பொருத்தமான திருக்குறளைப் பயன்படுத்தி உள்ளார். இதன் மூலம் பாரதியாரின் திருக்குறள் ஈடுபாட்டைக் கட்டுரையாளர் விளக்குகிறார்.
நிறைவாகப் பாரதியாரின் திருக்குறள் மேற்கோள் திரட்டு என அவர் குறிப்பிட்ட 14 திருக்குறள் பாக்களை நமக்கு அளித்துள்ளார் கட்டுரையாளர்.
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
என்று போற்றியவரல்லவா பாரதியார். எனவே, அவரின் திருக்குறள் ஈடுபாட்டில் வியப்பெதுவுமில்லை. ஆனால் அதனை நமக்கு உணர்த்தும் முகமாகப் பேரா.கருவை பழனிசாமி இக்கட்டுரையை நலலபடியாக அளித்துள்ளார் எனலாம்.
பண்டித  மா.சி.சுப்பிரமணியனார்
ஆறாவதாகப் பேரா.பண்டித மா.சி.சுப்பிரமணியனாரின் திருக்குறள் பணிகளை வே.ச.விசுவநாதம் நமக்கு உணர்த்தியுள்ளார்.
பேராசிரியரின் பொதுவாழ்க்கை, திருக்குறள் ஈடுபாட்டின் பின்புலம் ஆகியவற்றை முதலில் கட்டுரையாளர் விளக்கியுள்ளார்.
12 ஆம் அகவையிலேயே மும்மணிமாலை என்னும் நூலை எழுதி வெளியிட்ட பேராசிரியர் தொடர்ந்து பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் திருக்குறள் பாக்களைப் பயன்படுத்தியுள்ளார். அவற்றிலும் தினகர வெண்பா, சோமேசர் முதுமொழி ஆகிய நூல்களில் முதலிரு வரிகளில் தொன்மைக் கதைகளைக் கூறி மூன்றாவது நான்காவது வரிகளில் திருக்குறளை எடுத்தியம்பியுள்ளார்.
அகரமே முதலாய் எழுத்தெல்லாம் நிற்கும்
அதுநிகர் உலகெலாம் ஆதி
பகவனே முதலாய் நிற்கும்
என்பதைச் சான்றாகக் கூறலாம். இவ்வாறு பல பாடல்களை நமக்குக் கட்டுரையாளர் படைப்புகளில் திருக்குறள் தாக்கம் என்னும் தலைப்பில் எடுத்து அளித்துள்ளார்.
பேராசிரியரின் பிற நூல்களையும் பட்டியலிட்டுள்ள கட்டுரையாளர் அவரின் திருக்குறள் அமைப்பு சார் பணிகளையும் தருகிறார்.
திருக்குறள் கருத்துகளை உள்வாங்கித் தம் படைப்புகளில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ள பேரா.பண்டித மா.சி.சுப்பிரமணியனாரை  நமக்கு அவரதுபாடல்கள் மூலமே வே.ச.விசுவநாதம் நன்கு விளக்கியுள்ளமை பாராட்டிற்குரியது.
பேரா.கா.சு.பிள்ளை
பேரா.கா.சு.பிள்ளை குறித்த பேரா.கருவை பழனிசாமியின் கட்டுரை 7 ஆவதாக இடம் பெற்றுள்ளது.
இருமொழி அறிஞரான கா.சு.(பிள்ளை) 1928 இல் எழுதிய திருக்குறள் பொழிப்புரையின் சிறப்பைக் கட்டுரையாளர் விளக்கியுள்ளார்.
“தன்மதிப்புக்கப்பல் தேசிய அரசியல் சூறாவளிக்குப் பலியாகாமல்கரைசேர வழிகாட்டிய மாலுமி
என இவரை அறிஞர் அண்ணா பாராட்டியுள்ளதைக் கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார்.
பாரதிக்கும் அண்ணாவுக்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழுக்கு முறையான முழுமையான இலக்கிய வரலாறு கண்டவர் என்கிறார் கட்டுரையாளர்.
இவரின் தமிழியக்கப் பணிகளையும் பெண்ணுரிமை, தன்மதிப்பு இயக்கப் பணிகளையும் கட்டுரையாளர் நமக்கு உணர்த்தியுள்ளார்.
சாதீயத்தைச் சுட்டுப் பொசுக்கிய புரட்சிப் பொறி திருக்குறள் எனப் பரப்பிய  கா.சு.(பிள்ளை) திருக்குறள் வரலாற்றுத் திருத் தொண்டராகத் திகழ்ந்தார்  என்பதைப் பேரா.கருவை பழனிசாமி நமக்குத் தெளிவாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.
(தொடரும்)