தாய்மொழி நாளுக்கு வாழ்த்திய முதல்வருக்குப் பாராட்டுகள்!
உலகத்தாய்மொழி நாளை முன்னிட்டுத் தமிழக முதல்வர் எடப்பாடி க.பழனிசாமி இம்முறை வாழ்த்துச் செய்தி அளித்துள்ளார். உண்மையிலேயே இது வரவேற்க வேண்டிய ஒன்றாகும். இம்முறை ஊடகங்களிலும் உலகத் தாய்மொழி நாள் குறித்த கட்டுரைகள், பேச்சுகள் தமிழின் சிறப்பை உணர்த்தும் வகையில் இடம் பெற்றுள்ளன. பல்கலைக்கழகங்கள், அரசு நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், தமிழ் அமைப்புகள் சார்பில் உலகத்தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டுள்ளது. இஃது ஒரு வளர்நிலையாகும். எனவே அதற்கு முதல்வரும் வாழ்த்துச் செய்தி அளித்துள்ளது தாய்மொழி நாள் மகிழ்ச்சிக்கு மகுடம் சூட்டுவதாக உள்ளது.
தாய் மொழி நாளுக்கு வாழ்த்திய முதல்வருக்குப் பாராட்டுகள்! எனவே, தமிழக முதல்வர் விளம்பரத்திற்காக அல்லாமல் உள்ளத்திலிருந்து எழுந்த வாழ்த்துணர்வு என்பதை மெய்ப்பிக்கவும் தமிழ் நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளதைக் காட்டவும் பின்வருமாறு செயல்பட வேண்டுகிறோம்.
1.நாட்டுமக்களுக்கு முன்னோடியாகத் திகழ்வதற்காக அமைச்சரவையினரும் அரசும் முன்முறையாகத் திகழ வேண்டும். எனவே, அனைவரது பெயர்களில் முன் எழுத்து அல்லது முன் எழுத்துகளைத் தமிழிலேயே குறிக்க வேண்டும்.
- அமைச்சர்கள் பெயர்கள் கிரந்த எழுத்துகளின்றிக் குறிக்கப்பெற வேண்டும்.
- அமைச்சர்களின் ஊர்திகளின் எண்கள் அரசாணைக்கிணங்கத் தமிழில் குறிக்கப் பெற வேண்டும்,
- அமைச்சர்களின் குடும்பத்தினரின் பிள்ளைகள், அரசுப் பள்ளிகளிலும் தமிழ் வழியிலும் சேர்க்கப்பட வேண்டும்.
- மடலேடுகளில் தலைப்பில் தமிழ் உரு முத்திரைகள் மட்டுமே இடம் பெற வேண்டும்.
- தலைமைச்செயலகம் எனக் குறிக்காமல் ‘செயிண்ட் சார்சு கோட்டை’ எனக் குறிக்கப் பெறுவது நிறுததப்பட வேண்டும்.
- முதலமைச்சர், அமைச்சர்கள் கையொப்பங்கள், சுருக்கொப்பங்கள் யாவும் தமிழிலேயே இருக்க வேண்டும்.
- பதவிப் பெயர், அலுவலகப் பெயர் முத்திரைகள் யாவற்றையும் தமிழிலேயே பயன்படுத்த வேண்டும்.
- தமிழ் வளர்ச்சி தொடா்பான அரசாணைகள் அனைத்தையும் முதலமைச்சர், அமைச்சர்கள் யாவரும் பின்பற்ற வேண்டும்.
- அனைத்துத் துறைகளிலும் தமிழ் முழுமையாகப் பயன்படுத்தப் பெற அமைச்சர்களே நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- உலகத் தாய்மொழி நாளை ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். சித்திரை நாளில் வழங்கும் விருதுகள் இவ்வாண்டில் மாசியிலேயே/ பிப்பிரவரியிலேயே வழங்கப்பட்டுள்ளன. இனி அதே பிப்பிரவரியில் இடம் பெறும் உலகத்தாய்மொழி நாளில் அவ்விருதுகள் வழங்கப் பெற வேண்டும்.
- பாட நூல்களில் தமிழுக்காக உயிர் நீத்தவர்கள், சிறை சென்றவர்கள்பற்றிய பாடங்கள் இடம் பெற வேண்டும்.
- தமிழ்ப்புலவர்களுக்கு உரிய மதிப்பு கொடுத்து ஆண்டுதோறும் சிறப்பிக்க வேண்டும்.
- மொழிப்போர் வரலாறு பாட நூல்களில் இடம் பெற வேண்டும்.
- ஆங்கிலக் கல்விக்கு வரவேற்புப் பா பாடுவது நிறுத்தப்பட வேண்டும். எல்லா நிலைகளிலும் தமிழ்வழிக்கல்வியே திகழ உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- தனியார் அலுவலகங்கள் அயல்மொழி நிறுவனங்கள் என்ற வேறுபாடு இராமல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அலுவலகங்கள் நிறுவனங்கள் யாவற்றிலும் தமிழே அலுவல் மொழியாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- உலக நாட்டுத் தூதரகங்களில் தமிழ் அறிந்தவர் ஒருவராவது இருக்க மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அயல்நாட்டுத் தூதர்களில் பத்தில் ஒருவராவது தமிழராக இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தமிழ்நாட்டுக் கல்வியகங்களில் இப்போதைய முறையிலான அயல்மொழிக்கல்வி முறை நிறுத்தப்பட வேண்டும். 6 ஆம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் கற்பிக்கப்பட்டால் போதுமானது. 3 ஆவது மொழி என்பது பிற மொழியினருக்கு மட்டுமே இருக்க வேண்டும். எனவே, கல்வி நிலையங்களில் எந்த வகையிலும் இந்தி, சமக்கிருதத் திணிப்பு இல்லாதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நவோதயா பள்ளிகளுக்குரிய முழுத் தொகையையும் தமிழக அரசேபெற்று முழுமையான தரமான தமிழ்வழிக்கல்வி நிலையங்களாகச் செயல்பட ஆவன செய்ய வேண்டும்.
- மத்திய அரசின் திட்டம் எதுவாயினும் தமிழ்ப்பெயரில்தான் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப் பட வேண்டும்.
- மத்திய அரசின் திட்டங்களில் பத்தில் ஒன்றுக்காவது தமிழ்ப்பெயர் சூட்டப்பட வேண்டும்.
- முதல்வர் தலைமையில் இயங்கும் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை உருப்படியாகச் செயல்படச் செய்து அதன் மூலம் அயல்மாநில, அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் செந்தமிழ் கற்பிக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முதல்வரை அதன் நெறியாளர் என மாற்றித் தமிழறிஞர்கள் தலைவராக இருக்கும் வண்ணம் செம்மொழித் தமிழாய்வு நிறுவன விதிமுறையை மாற்ற வேண்டும்.
- கொச்சைத் தமிழையும் கலப்புத் தமிழையும் பயன்படுத்தும் ஊடகங்கள் தடை செய்யப்பட வேண்டும்.
- உரிமம் கொடுத்தல், பதிதல் முதலான தொடக்க நிலை விண்ணப்பங்களிலேயே வணிக நிறுவனங்களின் பெயர்கள், திரைப்பட நிறுவனங்களின் பெயர்கள், திரைப்படங்களின் பெயர்கள் தமிழில் உள்ளனவா எனக் கேட்டுஅவ்வாறிருந்தால் மட்டுமே இசைவு தர வேண்டும்.
- வழிபாடு என்றால் தமிழ் வழிபாடுதான் என்னும் நிலையைச் செயற்படுத்த வேண்டும்
- இசை என்றாலும் கலை என்றாலும் தமிழ்தான் என்னும் நிலையை உருவாக்கிட வேண்டும்.
- தமிழில் தமிழ்க்கையொப்பங்களுடன் உள்ள பட்டியல்கள், ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள், ஆணைகள் முதலானவை மட்டுமே செல்லத்தக்கன என அறிவித்தால் போதும். தமிழ் ஆட்சி மொழிச் செயலபாடு முழுமை யடையும்.
- தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் வழங்கப்படும் விருதுகள், நிதி யுதவிகள் ஆகியவற்றைத் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் வழங்கச் செய்ய வேண்டும்.
- மாவட்டந் தோறும் மாவட்ட நீதிபதிகள் தலைமையில் தமிழ்ச் செயலாக்க ஆணையம் அமைக்க வேண்டும். இதன் மூலம் தமிழ் ஆட்சிமொழியைக் கண்காணிக்கவும் நெறிப்படுத்தவும் முடியும்.
- எனவே, தமிழ் வளர்ச்சி இயக்ககத்தை மூட வேண்டும்.
தலைமையின் சரியான செயலோட்டம் அடிமட்டம் வரை பாயும் அல்லவா? எனவே, இனியேனும் தமிழ்நாடு தமிழ் வழங்கும் நாடாகத் திகழத் தமிழக முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.
செல்லும்வாய் நோக்கிச் செயல்.
(திருவள்ளுவர், திருக்குறள் 673)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல
No comments:
Post a Comment