‘தருமம்’ தமிழே!
–இலக்குவனார் திருவள்ளுவன்
‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப் பலர் எண்ணுகின்றனர். நான் அண்மையில் பார்த்த காணொளி ஒன்றில், பேரா.சுப.வீரபாண்டியன், தருமமும் அறமும் ஒன்றுக்கொன்று எதிரானவை என்கிறார். இதுபோல் தருமமும் அறமும் வெவ்வேறானவை. காலப்போக்கில் இரண்டும் ஒன்று எண்ணம் வளர்ந்து விட்டது. இவற்றைத்தான் இக்கட்டுரையில் நாம் காணப் போகிறோம்.
‘தருமம்’ என்னும் சொல்லை ஒலிக்கையில் முதல் எழுத்தை (ந்)த என்பதுபோல் வலிந்து ஒலிப்பதால் இது தமிழ்ச்சொல் அல்ல என்ற எண்ணம் பலருக்கு உள்ளது. தருதல் என்பதன் அடிப்படையில், பயன்கருதாமல் பிறருக்குத் தருவது தருமம் எனப்படுகிறது. நிழல் தரும் மரம் ‘தரு’ எனப்படும். இதுபோல் நற்பயன் தரும் செயல் ‘தருமம்’ என ஆயிற்று.
தமிழர்க்குத் தருமம் வழங்குவதில் பாகுபாடு கிடையாது. ஆனால் ஆரியத் தருமம் சாதி அடிப்படையிலானது. மனுநீதி, சாதி அடிப்படையிலான உழைப்பைச் சாதித் தருமமாகக் கூறுகிறது. ஆரியத் தருமம் என்பது சாதிக்குச் சாதி மாறுபடும்; காலத்திற்குக் காலம் மாறுபடும்.
மனு நீதி, ‘கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம்’ ஆகிய உகந்தோறும் தருமம் வேறுபடுவதாகக் கூறுகிறது; சூத்திரனுக்கு மூன்று வருணத்தாருக்கும் பொறாமையின்றிப் பணி செய்வதையே முதன்மைத் தருமமாகக் கூறுகிறது. காலந்தோறும் சாதிதோறும் மாறும் தருமம் எப்படி அறமாகும்? தமிழ்த்தருமம் கால, சாதிப் பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான நெறியாகும். சாதி உருவாகாக் காலத்தில் ஏற்பட்டத் தமிழ்த் தருமத்தில் சாதிக்கு இடமில்லை.
பெண்ணை இழிவாகவும் போகப்பொருளாகவும் கூறுவது ஆரியத் தருமம். “பெண்ணின் பெருந்தக்க யாவுள?” என்று பெண்ணைப் போற்றுவது தமிழ் அறம். கொல்லாமையையும் அவ்வாறு பிறர் கொன்றதால் கிடைக்கும் புலாலை உண்ணாமையையும் திருவள்ளுவர் அறமாகக் கூறுகிறார். வேள்வி மூலம் உயிர்களைக் கொல்வது ஆரியத் தருமம்.
தக்கவர்க்குத் தக்க நேரத்தில் தருவது குறித்த முறையைக் கூறுவதால் தருமம் என்னும் சொல் தரும நெறியையும் குறிக்கலாயிற்று. பின்னர் அற நெறி என்ற பொருளிலும் பயன்படுத்தி வருகின்றோம். ‘அறம்’ என்பதை விளக்கும் தனிச்சொல், சமசுக்கிருதம் முதலான பிற மொழிகளில் இல்லை. இல்லாத ஒன்றை அங்கே தேடுவது தவறு. எனினும் அங்கே இருக்கின்ற தருமமும் இங்கேஇருக்கின்ற தருமமும் வெவ்வேறு என்பதை ஒப்பிட்டு உணர முடியும்.
ஆனால், தருமம் வேறு, அறம் வேறு. அறம் என்றால் என்ன? மனஅழுக்கை அறுத்துப்போக்குவது அறம். இதில் உள்ள ‘அறு’ என்பதற்கு அறுத்துச் செல், வழி உண்டாக்கு, உருவாக்கு, துண்டி, வேறுபடுத்து என்று பல பொருள்கள் உள்ளன. நல்லனவற்றை உருவாக்குதலும் அல்லனவற்றைத் துண்டித்தலும் அறமாகிறது.
தருமம் என்பது உருவம் சார்ந்தது. அறம் என்பது அருவமானது. மனத்தில் குற்றம் இன்றி இருத்தல் அறம். “மனத்துக்கண் மாசிலனாதல் அறன்” என்கிறார் திருவள்ளுவர்(திருக்குறள் 34). மனமாசின்மையை எப்படிப் பார்க்க முடியும்?
அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் (திருக்குறள் 35)
எனப் பொறாமை, பேராசை, சினம், இன்னாச் சொல் நான்கும் அறம் என்கிறார் திருவள்ளுவர்.
தருமமும் அறமும் வெவ்வேறு என்று சொல்லப்படுவதன் காரணம் என்ன?தமிழ்த் தருமமும் ஆரியத் தருமமும் வெவ்வேறு என்பதை உணராமல் மக்கள் இரண்டையும் ஒன்றாகக் கருதுவதால் ஏற்படும் குழப்பத்தினால்தான். இதன் காரணமாக மக்கள் ஆரியத் தருமத்தைத் தமிழ்அறநெறியாக எண்ணக்கூடாதல்லவா?
திருக்குறள் யாவும் அறத்தை வலியுறுத்துவதால்தான் அஃது அறநூல் எனப்படுகிறது. எனினும் திருவள்ளுவர் ‘அறன் வலியுறுத்தல்’ எனத் தனி அதிகாரம் வகுத்து அறத்தின் முதன்மையை நமக்கு உணர்த்துகிறார். அறவழியில் செயல்பட்டு, அறத்தின் அடிப்படையில் பொருள் ஈட்டி, அறவழிப்பொருளால் இன்பம் காணவேண்டும் என்பதே தமிழர் அறநெறி.
அற (2), அறத்தான் (1), அறத்திற்கும் (1), அறத்திற்கே (1), அறத்தின் (2), அறத்து (2), அறம் (19), அறமும் (1), அறவினை (2), அறவோர் (1), அறன் (17), அறனும் (2), அறனே (2), என 51 இடங்களில் அறம்பற்றித் திருவள்ளுவர் கூறுகிறார். (‘அற’ என்னும் சொல் 8 இடங்களில் வந்தாலும் அறம் என்னும் பொருளில் 2 குறட்பாக்களில்தான் வருகிறது.)
“அன்று அறிவாம் என்னாது அறம் செய்க”(குறள் 36) எனத் தருமம்பற்றித் திருவள்ளுவர் கூறவில்லை. ஒருவர் மன மாசு, பேராசை, இன்னாச்சொல், சினம் முதலியவற்றால் அடுத்தவர்க்குத் தீங்கு செய்கிறார். எனவே இவற்றை விலக்கி அறம் பேணினால் நல்லெண்ணமும் நற்செயல்களுமே நிகழும். எனவே, பிறருக்குத் தீங்கு விளைவிக்காமல் இருக்கும் நற்பண்புகளான அறங்களையும் தள்ளிப்போடாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
இல்வாழ்க்கையை அறமாக, இல்லறமாகத் தமிழர்கள் கூறுவதன் காரணம் என்ன? திருமணத்திற்குப் பின்னர் வாழ்க்கை இணையர்கள் மற்ற துணைக்காக, பிள்ளைகளுக்காக, வழி வழி மரபினருக்காக என வாழ்கிறார்கள். இங்ஙனம் தன்னலம், தன்னைச் சார்ந்திருப்பவர்களுக்கான பொதுநலமாக மாறுவதால் இல்லறம் என்கின்றனர். அது மட்டுமல்ல இல்வாழ்க்கையில் விருந்தோம்புதல் முதலான பண்புகளைப் பின்பற்றுகின்றனர், பொது மக்களுக்கு உதவும் வாழ்க்கையைப் பின்பற்றுகின்றனர். எனவேதான் இல்லறம் ஆயிற்று இல்வாழ்க்கை. ‘புத்’ என்னும் நரகத்தைக் கடப்பதற்காகப் புதல்வரைப் பெறவே சேர்ந்து வாழ்தல் என்னும் ஆரியத்தருமத்திற்கும் “அறவாழ்வு வாழவே இல்லறம்” என்று வலியுறுத்தும் தமிழ் அறத்திற்கும் வேறுபாடு உள்ளது.
“ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்”(குறள் 131) என ஒழுக்கம் ஒருவர்க்கு உயிரைவிட மேலானது என்கிறார் திருவள்ளுவர். ஒருவன் உயர்நிலையில் இருந்தாலும் ஒழுக்கம் தவறினால் வீழ்வான் என்பதே குறள்நெறி. ஆனால் ஆரியத் தருமம், மக்களிடையே சமன்மை இன்மையை ஏற்படுத்துகிறது; உயர்ந்தவர்களாகக் கற்பிக்கப்பட்டவர்களின் ஒழுக்கக் கேட்டை ஏற்றுக் கொள்கிறது; இதனால் சாதிக்கொரு நீதிசொல்வதைத் தருமம் என்கிறது. தருமம் என்றால் ஆரியத் தருமம் கண்முன் நிற்பதால், தருமமும் அறமும் எதிரானவை என்ற எண்ணம் ஏற்படுகிறது.
பிறர் குறை தீர்ப்பதற்காக அவர்கள் கேட்டுத் தருவது தருமம்.
‘தா’ என் கிளவி ஒப்போன் கூற்றே (தொல்காப்பியம், எச்சவியல், 50.1)
என்கிறார் தொல்காப்பியர். எனவே, பொருளைப் பெறுபவரையும் தாழ்வாகக் கருதாமல் இணையாகக் கருதித் தருவது தருமம். ஆகவே சொல் விளக்கம் ‘தருமம்’ என்னும் சொல் தமிழே என்பதை மெய்ப்பிக்கிறது.
தருமம் என்பது செயல் சார்ந்தது. அறம் என்பது அகப்பண்பு சார்ந்தது. அகப்பண்பு சார்ந்த அறம் என்பது எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் சேர்ந்த ஒன்றாக விரிவடைந்தது.
அற எண்ணங்களை வெளிப்படுத்துவன நற்செயல்களே! நற்செயலும் அறம் எனப்பட்ட போது, தருமமும் அறமும் ஒன்று என எண்ணும் பழக்கம் வந்து விட்டது. ஆகவே இன்றைய சூழலில் அறமும் தருமமும் வேறு வேறு எனப் புரிந்து கொள்ளாவிட்டாலும் தமிழ்த்தருமமும் ஆரியத் தருமமும் வேறு வேறு எனப் புரிந்து கொள்ளலாம்.
தருமம் சாற்றும் சாரணர் தோன்ற (சிலப்பதிகாரம், 1.10.163)
தரும முதல்வன் தலைவன் தருமன் (சிலப்பதிகாரம், 1.10.178)
தருமம் சாற்றும் சாரணர்–தம் முன் (சிலப்பதிகாரம், 2.15.155)
தரும வினைஞரும் தந்திர வினைஞரும் (சிலப்பதிகாரம், 3.26.41)
என்று சிலப்பதிகாரம் தருமம்பற்றிக் கூறுகிறது.
தவமும் தருமமும் சார்பின் தோற்றமும்
(மணிமேகலை,21.163)
தருமம் கேட்டு தாள் தொழுது ஏத்தி (மணிமேகலை, 25.39)
அதிசயம் பிறழா வாய்மை தருமம் சாற்றும் சாரணர்
தவத் திறம் பூண்டு தருமம் கேட்டு (மணிமேகலை, 30.263)
(இங்கு வாய்மை ஆகிய தருமம் (வாய்மைத்தருமம்) என்னும் பொருள் இல்லை. வாய்மையான – உண்மையான தருமநெறி என்னும்பொருளில் வந்துள்ளது.) என்று தருமம்பற்றி மணிமேகலை கூறுகிறது.
புத்தசமயத்தின் ‘தம்மம்’ என்னும் கொள்கையின் தாக்கத்தால் தருமம் என்னும் சொல் நிலைகொள்ளல் ஆயிற்று. அறமும் தருமம் ஒன்றென நோக்கும் போக்கு இக் காலத்தில் வந்துவிட்டது எனலாம்.
அறம் விரிந்த பொருள் கொண்டது. அறத்தினுள் தருமம் அடங்கும். தருமத்துள் அறம் அடங்காது.
தருமம் என்னும் சொல்லை விளக்கவந்து, தருமத்திற்கும் அறத்திற்கும் உள்ள வேறுபாடுகளைக் கூறக்காரணம், இவ்வேறுபாடுகளால்தான் தருமம் தமிழல்ல என்னும் எண்ணம் ஏற்பட்டது என்பதை உணர்த்தத்தான். எனவே, தமிழ், ஆரியத் தருமவேறுபாடுகளைப் புரிந்து கொண்டு, ‘தருமம்’ என்பது தமிழ்ச்சொல் என உணர்ந்து பயன்படுத்துவோம்!
தருமம் வெல்க! அறம் ஓங்குக!
இலக்குவனார் திருவள்ளுவன்
மின்னம்பலம், பகல் 1, ஞாயிறு, 4 ஆக 2019
No comments:
Post a Comment