காசுமீர்போல் தமிழகத்தைப் பிரிக்கட்டும்!
பெரிய மாநிலங்களைப் பிரித்து மாநிலங்களின் எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டிருந்தது மத்திய அரசு. இப்பொழுது மாநிலங்களின் எண்ணிக்கையில் ஒன்றைக் குறைத்துள்ளது. அதே நேரம், ஒன்றியப் பகுதிப் பட்டியலில் இரண்டைச் சேர்த்துள்ளது.
மாநிலங்களைப் பிரிக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் இருந்தாலும் அது பிரிக்கப்படும் மாநிலங்களின் கருத்திற்கேற்ப அமைய வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் தீர்மானத்திற்கேற்ப இருக்க வேண்டும். இப்பொழுது (ஆடி 20, 2050 / 05.08.2019) காசுமீர், இலடாக்கு என ஒன்றியப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது அவ்வாறல்ல. காசுமீர்ப் பிரிப்பு ஆணையில் சம்மு காசுமீர் அரசின் உடனிசைவுடன் (with the concurrence of the Government of State of Jammu and Kashmir) அறிவிக்கப்படுவதாக உள்ளது. பொய்யை முதலீட்டாகக் கொண்ட பா.ச.க. ஆணையிலும் பொய்யைப் பயன்படுத்தத் தயங்கவில்லை.
இந்திய அரசியல் யாப்பு விதி 3இன் கீழ் மாநிலப் பிரிவின் அதிகாரம் இந்தியப் பாராளுமன்றத்திற்கு இருக்கிறது. இருக்கின்ற மாநிலத்தைப் பிரித்துப் புதிய மாநிலம் அமைத்தல், ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களை இணைத்துப் பெரிய மாநிலமாக உருவாக்கல், வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பகுதிகளை இணைத்துப் புதிய மாநிலமாக ஆக்குதல் ஆகிய அதிகாரங்கள் இந்திய நாடாளுமன்றத்திற்கு உள்ளது. அதிகாரம் இருந்தாலும் அதை முறைப்படி செய்திருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இல்லாத பொழுது அரசை நடத்தும் ஆளுநருக்கும் தெரியாமல் பிரிவினைச் சட்டம் இயற்றியது தவறு என்றே அரசியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவைப் பிரிக்க ஆந்திர அரசு ஒப்புக்கொள்ளவில்லை. அதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது. தொடர்ந்து எதிர்த்த ஆந்திர அரசு ஆந்திரப் பிரிவினைக்காள சட்ட வரைவையும் சட்டமன்றத்தில் எதிர்த்தது. ஆனால், அப்போதைய மத்திய அரசு தெலுங்கானாவைப் பிரித்தது. எனினும் ஆணையில் நாடாளுமன்றம் குடியரசுத்தலைவரின் ஒப்புகையைப் பெற்று (received the assent of the President) ஆணை பிறப்பிப்பதாகக் குறிப்பிட்டதே தவிர, ஆந்திர அரசின் ஒப்புதலைப் பெற்றதாகத் தவறான தகவலைத் தரவில்லை.
பாசகவின் நோக்கம் எப்படி இருந்தாலும் திட்டமிட்டுச் செயலாற்றுவதில் வல்லமை மிக்கது. காசுமீர்ப் பிரிவினையைக் கமுக்கமாக வைத்திருந்தது பாராட்டிற்குரியது. ஆனால், சட்டப்படித் தெரியவேண்டிய தொடர்புடையவர்களுக்கே தெரியாமல் அவர்களின் ஒப்புதல் இருப்பதாகக் காட்டி ஆணை பிறப்பித்தது தவறு. அரசின் ஒப்புதல் என்றால் இன்றைய சூழலில் ஆளுநர் ஒப்புதல் என்றாகிறது. ஆனால், அவரோ அவருக்குத் தெரியாது என்பதைச் சொல்லாமல் சொல்லி விட்டார்.
காசுமீர் மாநிலத்தில் படையணிகள் குவிக்கப்பட்டதும் பாக்கித்தானுடன் போர் என்றோ பாக்கித்தான், சீனாவின் பிடியில் உள்ள காசுமீரை மீட்பதற்கான போர் என்றோ மக்கள் எண்ணவில்லை. கமுக்கமான செய்தியாக இருந்தாலும் சூழலைப் புரிந்து கொண்டு காசுமீர், சம்மு, இலடாக்கு என மூன்றாகப் பிரிக்கப்படும் என ஊடகங்களில் செய்திகள் வந்தன.
காசுமீருக்குச் சிறப்புத் தகுதி அளிக்கும் இந்திய அரசியல் யாப்புப்பிரிவு 370 ஐ நீக்கப் போவதாகவும் காசுமீரைப் பிரிக்கப்போவதாகவும் எதிர்க்கட்சி பரப்புவது தவறு என்று தெரிவித்திருக்கிறார். அது மட்டுமல்ல காசுமீர்ப் பிரிவினைச் சட்டத்தை நிறைவேற்றியுள்ள முறை தவறு என்பதை அக்கட்சியின் ஊதுகுழலாகவும் தான்தான் தமிழ்நாட்டில அக்கட்சியின் எல்லாமும் என்று சொல்லிக் கொண்டிருப்பவர் எழுதியதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.
“‘காசுமீரில் என்ன நடக்கிறது?’: ….. இந்தக் கடுமையான நடவடிக்கைகளால் நிலைகுலைந்து போன எதிர்க்கட்சிகள், காசுமீருக்கு விசேட அந்தத்து அளிக்கும் அரசியல் சாசனப் பிரிவுகள் 370, பாகித்தானிலிருந்து காசுமீருக்கு வந்த 1.5 இலட்சம் இந்து அகதிகளுக்குக் குடியுரிமை கிடையாது என்று கூறும் 35-ஏ ஆகிய இரண்டையும் இரத்து செய்யவும், காசுமீரை மூன்றாகப் பிரிக்கவும் சதி நடக்கிறது என்று கிளப்பிய பெரும் புரளியை காசுமீர் ஆளுநர் மறுத்திருக்கிறார்.
அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ இரத்து செய்வதற்குப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மட்டும் போதாது. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல், அரசு ஆணை மூலமாக 1954 இல் பிரிவு 35-ஏ அரசியல் சாசனத்தில் முறையற்று நுழைக்கப்பட்டது. அதை நீக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது. காசுமீரை மூன்றாகப் பிரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை. எனவே, அரசியல் கட்சிகள் அந்தப் பிரச்சினைகளை எழுப்புவது முறையல்ல. எனவே, பாதுகாப்பு நடவடிக்கைகளில் அரசியலைக் கலக்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ஆளுநர். காசுமீர் போன்ற சிக்கலான பிரச்சினைகளில், அனைத்துக் கட்சிகளும் பொறுப்புடனும், பொறுமையுடனும் இருப்பது நாட்டுக்கு நல்லது.” (துக்ளக்கு நாள் 4.8.2019).
சட்டப்படி நிறைவேற்ற இயலாது என்றால் நிறைவேற்றியது சட்ட மீறல்தானே! எதிர்க்கட்சிகள் கூறியபடி மூன்றாகப் பிரிக்கவில்லை என்றாலும் இரண்டாகப் பிரித்துள்ளதுதானே! அதுவும் ஒன்றியப் பகுதிகள் மாநிலத் தகுதியைக் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுது காசுமீரீன் மாநிலத் தகுதியைப் பறித்தது ஏன்?
மாறாக மத்திய அரசு, சட்டமன்றத்தேர்தலில் காசுமீர்ப் பிரிவினையைத் தேர்தல் முழக்கமாகக் கொண்டு மக்களின் கருத்தை அறிந்து அதற்கேற்ப முடிவெடுத்திருக்கலாம்.
நாடெங்கும் தாமரை மலரப் பிற மாநிலங்களையும் பிரிக்கட்டும்!தென்தமிழகம் எனத் தமிழ்நாட்டைப் பிரித்து அதற்குப் பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினால் அதிமுக சிக்கலும் தீரும். அல்லது இதுவும் பெரிய பகுதி, தாமரை மலராது என எண்ணினால், பாண்டியநாடு, சோழநாடு, கொங்கு நாடு, பல்லவ நாடு எனத் தமிழ்நாட்டைப் பிரித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம். பா.ச.க.விற்கு இடம் கொடுக்காத கேரளாவையும், திருவனந்தபுரம் முதலான தமிழ் மக்கள் மிகுதியாக உள்ள பகுதிகளை இணைத்துச் சேர நாடு அமைக்கலாம். கருநாடகாவிலும் மைசூர், பெங்களூரு, கோலார் முதலான தமிழ்பேசுவோர் பெரும்பான்மையர் இருந்த பகுதிகளை இணைத்து வடதமிழ்நாடு என ஒன்றியப் பகுதியை உருவாக்கலாம்.
அல்லது வட கருநாடகம், துளு நாடு ஆகியவற்றுக்கான மக்களின் கோரிக்கைகளை ஏற்று அவற்றை உருவாக்கலாம். அசாமில் இருந்து கமதாபூர், திரிபுராவில் இருந்து திப்பரலாந்து, மேற்கு வங்கம் தார்சிலிங்கு பகுதியில் கூர்க்காலாந்து, மணிப்பூரில் இருந்து குகிலாந்து, வடக்கு வங்கத்தைப் பிரித்துக் காமத்பூர், மகாராட்டிராவைப் பிரித்து விதர்பா, குசராத்தைப் பிரித்து செளராட்டிரா என்று தனி மாநிலக் கோரிக்கைகளை ஏற்று அவற்றை ஒன்றியப் பகுதிகளாக அமைக்கலாம். இவ்வாறு 50 புது மாநிலங்கள் உருவாவதுடன் அரசே பெரிதாக இருக்கும் தன் கட்சிச் செல்வாக்கு இல்லா மாநிலப் பகுதிகளைப் பிரித்து 100 ஒன்றியங்களை உருவாக்கலாம். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்னும் பா.ச.க.வின் இலக்கு எளிதில் நிறைவேறும்.
மாநிலப்பகுதிகளின் வளர்ச்சிகளைக் காரணங்காட்டித் தங்கள் வளர்ச்சிக்காகவும் பா.ச.க. இவ்வாறு நடவடிக்கை எடுத்தால் வியப்பதற்கில்லைதானே!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல
No comments:
Post a Comment