அகரமுதல
வேலூர் தொகுதியில் தோற்கப்போவது யார்?
வேலூர் நாடாளுமன்றத் தொகுதித் தேர்தல் வரும் ஆடி 20/ 05.04.2019 அன்று நடைபெற உள்ளது. இங்கே முதன்மைப் போட்டி அ.தி.மு.க.விற்கும் தி.மு.க.விற்கும்தான்.
ஆரணி சொக்கலிங்கம் சண்முகம் ஆகிய ஏ.சி. சண்முகம், தான் தலைவராக இருந்து நடத்தும் புதிய நீதிக்கட்சியின் சார்பில் போட்டியிட்டாலும் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவதால் அ.தி.மு.க. வேட்பாளர் என்றே இவரைக் கூறலாம். எம்ஞ்சியார் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம், மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரி முதலானவற்றின் மூலம் பொதுக்கல்வியும் மருத்துவக் கல்வியும் பரவுவதற்குப் பணியாற்றுகிறார்.
முதலில் தான் சேர்ந்திருந்த அ.தி.மு.க.வின் சார்பில் 1984 இல் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் வென்றவர். 2014 இல் தாமரைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை யிழந்தவர்.
எளிய வேளாண் குடும்பத்தில் பிறந்து தொழில் நடத்துவோர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், கல்வி நிலையங்களின் நிறுவனர் என்ற முறையில் மக்களுக்குத் தொண்டாற்றிச் செல்வாக்கை வளர்த்துக் கொண்டவர். செல்வச்செழிப்பும் அதனால் வரும் செல்வாக்கும் இவருக்குத் துணை நிற்பவை. எனினும் இவையே இவரை எளியோரிடம் பழகுவதில் இருந்து விலக்கி வைப்பதால் தொண்டர்களால் அணுக முடியாதவர் என்ற அவப்பெயருக்கும் ஆளாகிறவர்.
1984 இல் 52விழுக்காட்டளவில் வாக்குகள் பெற்று வெற்றி எய்தியவர். 2014 மக்களவைத் தேர்தலில் 59,393 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றியைத் தவறவிட்டவர். அப்பொழுது பா.ச.க. சார்பில் போட்டியிட்டபொழுது தே.மு.தி.க, பா.ம.க., ம.தி.மு.க., இந்திய சனநாயகக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, என்.ஆர்.காங்கிரசு ஆகியவை இணைந்த கூட்டணியில் போட்டியிட்டார்.
இப்போதைய தேர்தலில் இந்த அணியில் இருந்த ம.தி.மு.க., இந்திய சனநாயகக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, என்.ஆர்.காங்கிரசு ஆகியவை தி.மு.க. கூட்டணியில் உள்ளன. அ.தி.மு.க., த.மா.க. புதிய தமிழகம் இணைந்துள்ளன. மாறிச்சென்றுள்ள கட்சியினருக்குக் கிடைக்கும் வாக்குகளைவிட இவ்வணியைத் தலைமைதாங்கும் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி பேரளவானது. எனவே, அ.தி.மு.க.வின் செல்வாக்காலும் தனிப்பட்ட செல்வாக்காலும் இவர் வெற்றி வாயிலில் எளிதில் நுழையலாம்.
தான் வெற்றி பெற்று அமைச்சராகும் கனவில் சண்முகம் உள்ளார். இதனை மறைமுகமாகத் தன் பேச்சில் வெளிப்படுத்துகிறார்.
“எதிர்க்கட்சி வரிசையில் மேலும் ஒருவர் சேர்வதால் என்ன பயன்? தான் வெற்றி பெற்றால் தலைமையமைச்சர் நரேந்திர(மோடி)உடன் உள்ள நெருக்கத்தால் தொகுதிக்கு நல்லன ஆற்ற முடியும்” என்ற நம்பிக்கையை வாக்காளர்களிடையே விதைக்கிறார். தொகுதியில் வெற்றிபெற்ற பின்னர் பொதுவாகச் செயல்படவேண்டியது மக்கள் சார்பாளர் கடமை. அதுபோல் ஆட்சி அமைத்ததும் கட்சிச் சார்பின்றி அனைத்துத் தரப்பாரின் நலன்களுக்காகப் பாடுபடவேண்டியது ஆளுங்கட்சியின் கடமை. ஆனால், இந்தக் கடமையைப் பா.ச.க. ஆற்றாது எனத் தமிழிசை முதலான தலைவர்கள் பேசுவதுபோல் இவரும் பா.ச.க. .வின் உண்மை முகத்தை உணர்த்துகிறார்.
ஆனால், மக்கள் தவறுகளைக் களைவதற்குத் துதிப்பவர்களைவிட மிதிப்பவர்களையே விரும்புகின்றனர். ஆளுங்கட்சியின் நல்லிணக்கக் கூட்டணியில் இருந்தால் தொகுதிக்குத் தேவையானவற்றிற்காகக் குரல் கொடுக்க முடியாது. ஆனால், எதிர்க்கட்சியாக இருந்தால் நாட்டின் அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்க முடியும் என்பது மக்கள் நம்பிக்கை.
சண்முகம் தோற்றால் அ.தி.மு.க.வின் தோல்வியாகக் காட்டும் பா.ச.க. இவரின் வெற்றியைத் தன் வெற்றியாகப் பறைசாற்றும். எனவே, இவர் வெற்றிபெறுவதற்கு எல்லா வகையிலும் பா.ச.க. பின்னணியில் முயல்கிறது. மத்தியத் துறைகள் மூலம் அடக்கியும் அச்சுறுத்தியும் எதிர்க்கட்சிகளைப் பணிய வைக்கும் பா.ச.க. வேலூரில் அந்த உத்தியின் மூலமே எதிர்க்கட்சியின் வெற்றியைத் தடுக்க முயல்கிறது. ஆனால், பா.ச.க. எந்த அளவிற்கு இத்தேர்தலில் ஒதுங்கி யிருக்குமோ அந்த அளவிற்குச் சண்முகம் மிகுதியான வாக்குகளைப் பெறுவார். இவரின் தனிப்பட்ட செல்வாக்கும் அ.தி.மு.க.வின் செல்வாக்கும் இவரை வெற்றியின் பக்கம் தள்ளும். ஆனால், பா.ச.க. வின் செயல்பாடுகள் இவரைப் பிடித்துப் பின்னுக்கு இழுக்கும்.
ஒற்றை நாடு, ஒற்றை ஆட்சி என்ற இலக்கை நோக்கி நடைபோட்டு நாடு முழுவதும் பா.ச.க. ஆட்சியே இருக்க விரும்பும் அதன் போக்கு மக்களின் எதிர்ப்புகளுக்குத்தான் உள்ளாகிறது. அஞ்சலகப் பணிகளுக்கான தேர்வு மொழியிலிருந்து தமிழ் முதலான அனைத்துத் தேசிய மொழிகளையும் நீக்கி இந்தித் திணிப்பைத் தொடர்ந்து எதிர்ப்பிற்குப் பின்னர் இதனை நிறுத்தியுள்ளது. முவ்விலக்கு(முத்தலாக்கு) தடைச்சட்டத்தால் இசுலாமியர் வாக்குகளை அதிமுக குறைந்த அளவு பெறுவதற்கான வாய்ப்பே உள்ளது. இவைபோன்ற பா.ச.க.வின் மதவெறிச் செயல்களும் இந்தி, சமற்கிருதத் திணிப்புகளும் அதற்கு மட்டுமல்ல, அதன் கூட்டாளிகளுக்கும் வேட்டு வைப்பதாக உள்ளது. இச்சூழலில் பா.ச.க. ஆதரவாளர் வெற்றி பெற்றால் வாய்மூடித் தன் செல்வத்தைப் பெருக்க மட்டும் வழி வகுத்துக்கொள்வார் என மக்கள் எண்ணுகின்றனர்.
தி.மு.க. வெற்றி பெற்றால் அதன் வன்முறைத் தேரோட்டத்தை நிறுத்தி முட்டுக்கட்டை போட உதவும் என எண்ணுகின்றனர்.
எப்படித் தேசிய சனநாயகக் கூட்டணியில் சண்முகம் போட்டியிட்டாலும் அ.தி.மு.க. கூட்டணி என்று சொல்லப்படுகிறாரோ அதுபோல், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் போட்டியிட்டாலும் தி.மு.க.கூட்டணி என்று சொல்லப்படுபவர் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்து.
மண்ணின் மைந்தர், நல்லன செயலாற்ற விரும்பும் துடிப்பான இளைஞர், சிறுபான்மையர் காவலர் என்றெல்லாம் பரப்புரை மேற்கொண்டு இவருக்கு வாக்குகள் திரட்டப்படுகின்றன. உண்மையில் சிறுபான்மையினரில் பெரும்பான்மையர் வாக்கு இவருக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது.
கதிர் ஆனந்து, முதுகலை வணிக ஆட்சியியல் (எம்.பி.ஏ.) பட்டத்தைப் பால்டுவின் வாலசு பல்கலைக்கழகத்தில் (Baldwin Wallace University) பெற்றவர். கிங்சுடன் பொறியியல் கல்லூரி, கிங்சுடன் பன்னாட்டுக் கல்விக்கழகம் கிங்சுடன் பதின்நிலைப்பள்ளி ஆகியவற்றை நடத்திக் கதிர் ஆனந்தும் கல்வித்துறையில் பணியாற்றி வருகிறார். எனினும் தந்தையின் வழியில் அரசியலுக்கு வந்துள்ளார்.
இவர் தந்தை துரை முருகன் தி.மு.க.வில் முதன்மைச்செயலர், துணைப்பொதுச்செயலர் முதலான பல பொறுப்புகளை வகித்து இப்பொழுது பொருளாளராக இருப்பவர். 9 முறை சட்டமன்ற உறுப்பினராகத் திகழ்ந்து மக்கள் செல்வாக்கைப் பெற்றவர். பொதுப்பணித்துறை அமைச்சராகவும் சட்ட அமைச்சராகவும் திறம்படப் பணியாற்றியவர். நகைச்சுவைப் பேச்சாலும் புள்ளி விவரங்களை அள்ளித் தெளிப்பதாலும் மாற்றுக் கட்சியினரையும் கவர்ந்தவர். எனவே, கதிர் ஆனந்து கட்சிக்குப் புதியவர் என்றாலும் தந்தையின் செல்வாக்காலும் தி.மு.க.வின் செல்வாக்காலும் வெற்றிப்பாதையில் நடைபோட வாய்ப்பு உள்ளவர்.
இவ்விருவர் தவிரப் போட்டியிடும் முதன்மையான கட்சி சீமானின் நாம் தமிழர் கட்சி. இக்கட்சி வேட்பாளர் தீபலட்சுமி வாகை சூட வாய்ப்பில்லை என்றாலும் புதிய வாக்காளர்களிடமும் இளைஞர்களிடமும் பெண்களிடமும் கணிசமான வாக்குகள் பெறுவார். தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் ஒரு பகுதி வேட்பாளர்களை வாக்குகளைக் கவரும் வாய்ப்பு உள்ளது. இக்கட்சி முன்னேற்றத்திற்கான முத்திரையைப் பதிக்கும்.
புதிய நீதிக்கட்சிக்கு வேலூர் தொகுதியை ஒதுக்கியதும், “கடந்தமுறை இரட்டை இலையை எதிர்த்துப் போட்டியிட்டவருக்கு இரட்டை இலைச்சின்னத்தில் ஒதுக்கீடா?” என அ.தி.மு.க.வில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுபோல் தி.மு.க.வின் வேட்பாளராகக் கதிர் ஆனந்து துரைமுருகன் அறிவிக்கப்பட்டதும் “தொகுதியைப்பற்றி அறியாதவருக்கா ஒதுக்கீடு” எனத் தி.மு.க.வில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். யாரை வேட்பாளராக அறிவித்தாலும் இத்தகைய சலசலப்பு எழுவது இயற்கையே! கடந்த முறை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் பொழுது பல ஊர்களில் அமைச்சர்களையே ஊருக்குள் விடவில்லை. எனினும் அ.தி.மு.க.தான் அங்கெல்லாம் வெற்றி பெற்றது. எனவே, சிலரின் எதிர்ப்பு அடிப்படையில் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியைக் கணிக்க முடியாது. ஆனால், ஒட்டு மொத்தமாக அமையும் விருப்பு வெறுப்பு அடிப்படையில் நாம் இதனைத் தெரிவிக்கலாம்.
பா.ச.க.வை விட்டு விலகி நின்றால் வெற்றி வாய்ப்பு உள்ள சண்முகம், வெற்றிக்கனியைக் கதிர் ஆனந்திடம் பறிகொடுக்கவே வாய்ப்பு உள்ளது.காரணம் பா.ச.க.வின் தமிழக நலன்களுக்கும் தமிழ் மொழிக்கும் எதிரான செயல்பாடுகளே! இவற்றிற்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். எனவே, தமிழ்நாட்டில் காலூன்ற எண்ணும் பா.ச.க. தமிழ் நலத்தில் தன் மனத்தை ஊன்ற வேண்டும்.
விற்பனைக்கு ஆளாகாத வாக்குகளும் ஊழலற்ற தேர்தலும் நடைபெற்றால்தான் மக்கள் வெற்றி பெற்றதாகக் கருத முடியும். அதற்கான வாய்ப்பு இல்லாதவரை எங்கே தேர்தல் நடந்தாலும் அங்கே வாக்காளர்கள் வெற்றியைப் பறிகொடுப்பவர்களாகவே உள்ளனர். . எனவே, வழக்கம்போல் வேலூரிலும் தோற்கப் போவது மக்களே! மக்களே! மக்களே!
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை
ஆஅது மென்னு மவர். (திருவள்ளுவர், திருக்குறள், 653)
ஆஅது மென்னு மவர். (திருவள்ளுவர், திருக்குறள், 653)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல
No comments:
Post a Comment