Friday, December 12, 2025

நாலடி நல்கும் நன்னெறி 21: – கற்காத, ஈயாத, அறம் செய்யாத நாள் நாளில்லை: இலக்குவனார் திருவள்ளுவன்

 




(நாலடி நல்கும் நன்னெறி 20: – பிறன் மனைவியை விரும்பாதே: தொடர்ச்சி)

கல்லாது போகிய நாளும், பெரியவர்கண்
செல்லாது வைகிய வைகலும், – ஒல்வ
கொடாஅ தொழிந்த பகலும், உரைப்பின்
படாஅவாம் பண்புடையார் கண்  

நாலடியார் பாடல் 169

பண்புடையவ ர்கள் படிக்காமல் இருக்கும் நாள் இல்லை;
பெரியவர்களிடம் சென்று பழகாத நாள் இல்லை; 
தன்னால் முடிந்ததைப் பிறருக்குக் கொடுக்காத நாள் இல்லை. 

பதவுரை:

கல்லாது=கற்க வேண்டிய நூற்களைக் கற்காது; போகிய=போன; நாளும்=நாள்களும்; பெரியவர்கண்=பெரியோரிடத்து; செல்லாது= போகாது; வைகிய=இருந்த; வைகலும்= நாள்களும் ஒல்வ=முடியக் கூடியவற்றை; கொடாது=கொடுக்காது; ஒழிந்த=வீணே கழிந்த; பகலும்=நாள்களும்;உரைப்பில்=சொல்வதாயின்;படாஅவாம்=இருக்காவாம்; பண்புடையார் கண் = நற்குணம் உடையாரிடத்து.

கற்க வேண்டிய நூல்களைக் கற்காமல் வீணாகக் கழிக்கும் நாளும், பெரியவர்களிடம் சென்று பழகி அறிவு பெறாது வீணாய்க் கழிந்த நாளும், தன்னால் முடிந்த அளவு பொருளை இரப்பவர்களுக்குக் கொடுக்காமல் பயனின்றிப் போன நாளும் பண்புடையவர்களிடம் இல்லை. இத்தகைய சிறப்பு மிக்கப் பெரியாரைப் பிழையாது அவர்சொற்கேட்டலே சிறப்பு என்கிறது இப்பாடல்.

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையுங் கல்லாத வாறு  (திருக்குறள் ௩௱௯௰௭ – 397)

என்கிறார் திருவள்ளுவரும்.

கற்றவர்க்கு எந்த நாட்டிற்குச் சென்றாலும் எந்த ஊருக்குச் சென்றாலும் சிறப்பு கிட்டுகிறது. அவ்வாறிருக்க ஒருவன் சாகும் வரையிலும் கற்காமல் வீண் காலம் கழிப்பது ஏன் என வினவுகிறார். இதன் மூலம் கற்பதற்குக் கால வரம்பு இல்லை. சாகும் வரை நாளும் கற்க வேண்டும் என்கிறார். அதனையே நாலடியாரும் கற்காமல் வீண் காலம் கழிப்பது ஏன் என்கிறது.

பெரியாரைத் துணைக்கோடல், பெரியாரைப் பிழையாமை அதிகாரங்கள் மூலம் திருவள்ளுவர் பெரியாரைப் பேணி வாழ வேண்டும் என்கிறார்.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாஞ் செயல்.   (திருக்குறள், ௩௰௩ – 33)

என்று திருவள்ளுவரும்  கூறியுள்ளார்.

ஆற்றவும் கற்றார் அறிவுடையார்,அஃது உடையார்

நாற்றிசையும் செல்லாத நாடில்லை — அந்நாடு

வேற்று நாடு ஆகா, தமவே ஆம், ஆயினால்

ஆற்று உணா வேண்டுவது இல். 

என்று பழமொழி நானூறும் கற்றவர்க்குச் சென்றவிடமெல்லாம் தம் நாடே என்கிறது.

மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர்தூக்கின்,

மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன் — மன்னற்குத்

தன்தேசம் அல்லால் சிறப்பு இல்லை,கற்றோற்குச்

சென்ற இடம் எல்லாம் சிறப்பு.

என்று மூதுரையில் ஒளவையாரும் கற்றவர்க்குச் சென்றவிட மெல்லாம் சிறப்பு என்கிறார்.

அறம்பொருள் இன்பமும் வீடும் பயக்கும்

புறங்கடை நல்இசையும் நாட்டும் – உறுங்கவல்ஒன்று

உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்குஇல்லை

சிற்றுயிர்க்கு உற்ற துணை.

என்று நீதிநெறி விளக்கத்தில் கல்வியே உயிருக்கு உற்ற துணையாக அமையும். வேறு துணை ஏதும் இல்லை என்கின்றார் குமரகுருபர அடிகள்

இவ்வாறு கல்வியின் சிறப்பைப் பலரும் கூறியுள்ளார்கள். அதுபோல்,

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதிய மில்லை உயிர்க்கு (திருக்குறள் ௨௱௩௰௧ – 231)

என்கிறார் திருவள்ளுவரும்.

ஆற்றும் துணையும் அறஞ்செய்க” என்று பழமொழியும் இயன்ற வகையில் எலலாம் அறம் செய்ய வலியுறுத்துகிறது. 

Thursday, December 11, 2025

தொல்காப்பியமும் பாணினியமும் – 13 : இடைச்செருகல்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்



(தொல்காப்பியமும் பாணினியமும் – 12 : பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரும் மோசடி– தொடர்ச்சி)

இடைச்செருகல்கள் இருவகை

இடைச்செருகல்களை நாம் இருவகைகளாகக் குறிக்கலாம். ஆரிய நூல்கள் தம் நூல்களில் இல்லாச் சிறப்புகளை இருப்பதுபோல் காட்டுவதற்காகப் பிற நூல்களிலுள்ள நல்ல கருத்துகளை உட்புகுத்துவது. இதன் மூலம் ஆரிய நூல்களைச் சிறப்பானதாகவும் செம்மையானதாகவும் பிற நூல்களுக்கு முன்னோடியாகவும் காட்டுவது. மற்றொரு வகை தமிழ் நூல்களின் சிறப்புகளைக் குறைப்பதற்காகவும் காலத்தைப் பின்னுக்குத் தள்ளுவதற்காகவும்  சமற்கிருத நூல்களின் வழி நூலாக அல்லது சமற்கிருத நூல்களில் இருந்து கருத்துகளை எடுத்துக் கொண்டதாகத் தவறாகக் காட்டப்படுவத்றகாகத் திணிக்கப்படுபவை. இத்தகைய இடைச்செருகல்கள்தாம் தமிழுக்கு இழுக்குத் தேடி வருகின்றன.

எனவே, தமிழ் நூல்களிலான இடைச்செருகல்கள் அதன் அழகையும் மதிப்பையும் குறைக்கவும் ஆரியத்தைத் திணிக்கவும் உண்டாக்கப்பட்டவை;. சமற்கிருத நூல்களில் உள்ள இடைச்செருகல்கள் அவற்றுக்கு இல்லாச் சிறப்புகளை இருப்பதுபோல் காட்டுவதற்காகத் திணிக்கப்பட்டவை எனலாம். இடைச்செருகல்கள் மூலம் சமற்கிருத நூல்களில் இந்தியர்கள் செய்த துமோசடிகள் வெளிப்படையாகக் கண்டுகொள்ளக் கூடியவை என்கிறார் ஏ.சி.பருனல்(The Ainthira school of sanskrit grammarians , பக்.102)

 தொல்காப்பியத்தில் பிற்காலத்தோரால் சேர்க்கப்பட்ட இடைச்செருகல்கள் ஆங்காங்குள்ளன. தொல்காப்பியத்தைக் கற்போர் அவ் விடைச்செருகல்களை எளிதில் அறிந்துகொள்வர். அவ் விடைச்செருகல்கள் வடமொழித் தொடர்புடையோரால் சேர்க்கப்பட்டன. ஆதலின் வடமொழிச் சார்புடையனவாக இருத்தலில் வியப்பில்லை. 

சமற்கிருதச் சார்புடையார் தமிழினத்திற்கும் தமிழ்மொழிக்கும் பழந்தமிழ் இலக்கியங்களுக்கும் இழைத்த அழிகேட்டுப் பணிகளில் ஒன்றுதான் தொல்காப்பிய இடைச்செருகல். 1871இலேயே சாருலசு கோவர் (Charles E.Gover) என்பார், ‘தென்னிந்தியாவின் நாட்டு்ப்புறப்பாடல்கள்’ என்னும் நூலின் முன்னுரையில் தமிழ் இலக்கியங்கள் திட்டமிட்டுச் சீரழிக்கப்பட்டமையை உள்ளக்குமுறலோடு கூறியுள்ளதையும் நமக்குத் தருகிறார். பிராமணர்கள், தமிழ் நூல்களை அழிப்பது, இயலாவிட்டால் சிதைப்பது (The Brahmins corrupted what they could not destroy.)என ஈடுபட்டதைக் கோவர் கூறுகிறார். இவர்போன்ற அறிஞர்கள் கூற்றுகளின் மூலம் தொல்காப்பியத்திலும் இடைச்செருகல்கள் ஏற்பட்டமையைப் பேராசிரியர் ப.மருதநாயகம் புரிய வைக்கிறார்

தொல்காப்பியத்தில்  இடைச்செருகல்கள் உள்ளமையை முதலில் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் வெளியிட்டார் தொல்காப்பிய அறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் மாணவப்பருவத்திலேயே தொல்காப்பிய வகுப்பு நடத்திய முதல்வரின் இடைச்செருகல்கள் குறித்த தவறான கருத்துகளுக்கு எதிராக உண்மைகளை உரைத்து வாதிட்டவர். இதழ்களிலும் தொல்காப்பிய இடைச்செருகல்கள் குறித்து எழுதியவர். அவர் தம் தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பு-திறனாய்வு நூலில் தொல்காப்பியத்தில் சதிகாரர்களால் நேர்ந்த இடைச்செருகல்கள் குறித்து விரிவாக எழுதியுள்ளார். அதன்பின்னர் பிற தமிழ் அறிஞர்களும் இது குறித்து எழுதியுள்ளனர்.

மெய்ப்பாடுகுறித்த கருத்துகள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே தெளிவான விளக்கம் பெற்றிருந்தன என்பதை நூற்பாவே தெரிவிக்கிறது. ஆனால், இவை பரதமுனிவரின் நாட்டிய சாத்திரத்திலிருந்து பெறப்பட்டவை என்று தமிழின் உட்பகைவரகளும் புறப்பகைவர்களும் பொய்கூறிக்காலந் தள்ளுகின்றனர். எனக் குறிப்பிட்டு அறிஞர் பி.வி.கனே போன்றோர் கருத்துகளையும் துணைகொண்டு தமிழ்கூறும் மெய்ப்பாட்டின் தொன்மையையும் சிறப்பையும் பேராசிரியர் ப.மருதநாயகம் எடுத்துரைக்கிறார்.

இடைச்செருகல்களையும் சேர்த்து வெளியிட்டுப் பின்னர் அவற்றை இடைச்செருகல்கள் என்பதை விட அவை இல்லாமல் தொல்காப்பியத்தை வெளியிடுவதே சிறப்பு. எனவே, அவ்வாறு இந்நூலில் இடைச்செருகல்களை நீக்கிய பதிப்பாக இதனை வெளியிட்டுள்ளார்.

தொல்காப்பியம்: முதல் முழு மொழிநூல்’(2019)

தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் இடம் பெற்று அவற்றின் குறிப்பாக மட்டுமே இடைச்செருகல் விவரம் தெரிவிக்கப்பட்டது. தொல்காப்பியத்தில் தெரிந்தே இடைச்செருகல்களுக்கு இடம் கொடுக்க வேண்டுமா என அறிஞர் ப.மருதநாயகம் வருந்தினார். எனவே, இடைச்செருகல்களை நீக்கிய முழு நூலாகத் ’தொல்காப்பியம்: முதல் முழு மொழிநூல்’ என இடைச்செருகல்கள் நீக்கப்பெற்ற செம்பதிப்பை வெளியிட்டார்.

இந்நூலின் முதல் இயலாக ‘ஒப்பில் தொல்காப்பியம்’ என்னும் கட்டுரையை அளித்துள்ளார். தொல்காப்பியத்தின் சிறப்பு, சமற்கிருத நூல்களில் இதன் தாக்கம் ஆகியவற்றுடன் இல்லாத கற்பனைச் சொற்களைச் சேர்த்துப் பாணினி எழுதியுள்ளதை மேனாட்டு அறிஞர்களின் ஆய்வுரை அடிப்படையில் பலவகைகளில் பேராசிரியர் ப.மருதநாயகம் சிறப்பாக விளக்கியுள்ளதை இக்கட்டுரை தெரிவிக்கிறது.

ஆரியத்தழுவலாகத் தொல்காப்பியத்தைக் காட்டுவதற்காகவும் தொல்காப்பியர் ஆரிய இலக்கணங்களை ஒப்பியல் நோக்கில் கையாண்டுள்ளார் எனப் போலியாகப் பாராட்டுவதுபோலவும் இடைச்செருகல்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான்

காமக்கூட்டம் காணும்காலை

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே

என வரும் நூற்பா.  இந்நூற்பாவை இடைச்செருகல் எனப் பேராசிரியர் ப.மருதநாயகம் ஐயந்திரிபறக் கூறுகிறார்.

ஆரியர்களைப் பார்த்துத் தமிழர்கள் தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டனர் எனத் தொல்காப்பியம் உணர்த்துவதுபோல் திரித்துக் கூறும் பழக்கம் ஆரியப் பிராமணர்களுக்கு இருக்கிறது. இந்த வகையில் பி.சா.சுப்பிரமணிய சாத்திரிகள் கற்பியல் குறித்து விளக்கும் பொழுது அறியாமையாலோ குறும்புத்தனத்தாலோ ஒருவனுக்கு ஒருத்தி என்னும் நெறி ஆரியரிடமிருந்து தமிழர் பெற்றது என எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டு அதனை வன்மையாகப் பேராசிரியர் ப.மருதநாயகம் மறுக்கிறார். வடமொழி இலக்கியங்களை வரலாற்றுக் காலத்தை நிறுவுவதற்குப் பயன்படுத்தல் பெருந்தீங்கை விளைவிக்கும் என்றும் அவை யெல்லாம் பலவாறாகப் பல காலங்களில் பலரால் சிதைக்கப்பட்டவை யென்றும் அவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழியை வைத்தும் எம்முடிவிற்கும் வர முடியாதென்றும் பண்டிதர்கள் தங்கள் மனம்போன போக்கில் மாற்றங்களைச் செய்துள்ளார்களென்றும்(ப.105) பருனால் கடுமையாகச் சாடுகிறார்.(ப.மருதநாயகம், வடமொழி ஒரு செம்மொழியா?, பக்.607)

(தொடரும்)

Monday, December 8, 2025

பிறருக்காக வாழும் பேரருள் நெஞ்சம்! – இலக்குவனார் திருவள்ளுவன், தாய் மின்னிதழ்




 ******

பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு

காமர் பொருட்பிணிப் போகிய

                           நற்றிணை 186 : 8-9

முழுப் பாடல்:

கல்லூற்று ஈண்டல கயன்அற வாங்கி
இரும்பிணர்த் தடக்கை நீட்டி நீர்நொண்டு
பெருங்கை யானை பிடியெதிர் ஓடும்
கானம் வெம்பிய வறம்கூர் கடத்திடை
வேனில்ஓதி நிறம்பெயர் முதுபோத்துப் 5
பாண்யாழ் கடைய வாங்கிப் பாங்கர்
நெடுநிலை யாஅம் ஏறும் தொழில்
பிறர்க்கென முயலும் பேரருள் செஞ்சமொடு
காமர் பொருட்பிணிப் போகிய
நாம்வெங் காதலர் சென்ற ஆறே! 10

நற்றிணை: 186

இயற்றிய புலவர் : பெயர் தெரியவில்லை

திணை : பாலை

துறை : பிரிவிடை மெலிந்த தோழிக்குத் தலைவி சொல்லியது

சொற்பொருள் :

கல் ஊற்று=கல்லின் இடையே உள்ள ஊற்று; ஈண்டல நீர்=அவ்வூற்றில் சேர்ந்து நிரம்பும் நீர்; கயன்=ஊற்றுநிலை; அற வாங்கி=அவ்விடத்து நீர் முற்றிலும் இல்லாது போகுமாறு; இரும்பிணர்த் தடக்கை=பெரிய மடிப்புப் பிடிப்புகள் கொண்ட வளைந்த கை;

நீட்டி=அந்நீண்ட துதிக்கையை நீட்டி; நொண்டு=மொண்டு; பெருங்கை யானை=பெரிய கையையுடைய யானை; பிடி எதிர் ஓடும் – தன் பெண்யானையினெதிரே ஓடும்; கானம்=காடு; வெம்பிய=வெப்பமடைந்த; வறம்=வறட்சி; கூர்=மிகுந்த; கடத்து இடை=காட்டிடையே;

வேனில்=வேனிற்காலம்; ஓதி=ஓந்தி; நிறம் பெயர்= மாறி மாறித் தன்னிறத்தை மாற்றிக் கொள்கிற; முது போத்து=முதிய போத்து; பாண்=பாணர்; யாழ் கடைய வாங்கி=யாழ் வாசிப்ப; பாங்கர்=பக்கத்தில்; நெடுநிலை=உயர்ந்து நிற்கும்; யாஅம்=யாமரத்தின் மீது;

ஏறும் தொழில்=ஏறுந்தொழிலையுடைய; பேர் அருள் நெஞ்சமொடு=பெரிய அருள் மிக்க நெஞ்சுடனே; காமர்=அழகிய; பொருட்பிணி போகிய=பொருளாசையைப் போக்கிய; நாம்வெங் காதலர்=நாம் விரும்பும் காதலன்; சென்ற ஆறே=சென்ற வழி.

பிணர் என்றால் சருச்சரை என்றே குறிப்பிடுகின்றனர். இது சரிதான் என்றாலும் இக்காலத்தில் இச்சொல் புரியா நிலையில் உள்ளதால், சொர சொரப்பான எனக் குறித்துள்ளேன்.

நிறம் மாற்றிக் கொள்ளும் ஓந்தி என்பதால் பச்சோந்தி எனப் புரிந்து கொள்ளலாம்.

எளிய சுனையில் நீர் எடுக்காமல் கல்லூற்றிலிருந்து நீர் எடுப்பதால், அந்த அளவிற்கு சுனையில் நீர் இல்லாமல் வறட்சி மிகுந்த காலம் எனப் புரிந்து கொள்ளலாம்.

யா மரம் வறண்ட பாலை நிலங்களில் வளரும். எனவே, வறட்சியான பாலை நிலத்தில் தலைவன் செல்வதைப் புரிந்து கொள்ளலாம்.

பிடி என்றால் பெண் யானை. எனவே இதில் குறிப்பிடும் யானை ஆண் யானை. களிறு என்றால் ஆண்யானை.

ஆனால், ஆண் பன்றியையும் களிறு என்றே குறிப்பிடுகின்றனர். ஆதலின் வேறுபடுத்த களிற்று யானை என விளக்குகின்றனர்.

பொருளாசையும் நோய் போன்றதே. எனவேதான் பொருட் பிணி எனப் புலவர் குறித்துள்ளார்.

பாடற் பொருள்:

கல்லின் இடைய உள்ள ஊற்றில் நீர் சுரக்கிறது. ஊற்றில் நீர் நிரம்பாத வகையில் யானை தன் சொரசொரப்பான துதிக்கையை நீட்டி, நீரை முகந்து கொண்டு பெண் யானைக்குக் கொடுக்க ஓடும். அது வேனிற்காலம்.

ஆண் பச்சோந்தி தன் முதுகை யாழ்போல் வளைத்துக் கொண்டு உயர்ந்த யா மரத்தில் ஏறுகிறது.

அந்த வழியில்தான் காதலராகிய தலைவன் நீர் வறட்சியுடைய அத்தகைய காட்டில் தன் வாணாளும் ஈட்டும் பொருளும் பிற எல்லாமும் பிறருக்காகத்தான் என்ற முடிவுடன் முயற்சி மேற்கொண்டு சென்று கொண்டுள்ளார்.

புறநானூற்றுப் பாடல் ஒன்றில், கடலுள் மாய்ந்த இளம்பெரும்வழுதி,

“உண்டால் அம்ம இவ்வுலகம்” எனத் தொடங்கும் பாடலில் அதற்கான காரணத்தைத்

தமக்கென முயலா நோன்தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மை யானே

என முடிக்கிறார்.

“தமக்காக வாழாமல், பிறருக்கென முயலும் பேருள்ளம் கொண்டவர்கள் உலகில் இருப்பதால்தான் இந்த உலகம் நிலைபெற்று இயங்குகிறது” என்கிறார் அவர்.

ஈதல் இசைபடவாழ்தல்” (திருக்குறள் ௨௱௩௰௧ – 231) எனத் திருவள்ளுவர் கூறுவதே பிறருக்குக் கொடுத்து வாழ வேண்டும் என்பதற்காகவே.

தன்னலமின்றிப் பிறர் நலம் பேணி வாழ வேண்டுமெனெவே சான்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழர் நெறியும் நாம் உழைக்க வேண்டியது நமக்காக அல்ல. பிறருக்காக என்பதே. பல சங்கப் பாடல்களும் இதனை வலியுறுத்துகின்றன. அதையேதான் இப்பாடல் மூலம் நாம் உணரலாம்.

எனவே, நாம்,

            பிறர் நலத்திற்காக வாழ்வோம்!

Sunday, December 7, 2025

குறட் கடலிற் சில துளிகள் 37 : சிறுமைப்பண்புகளில் இருந்து விலகி இரு! – இலக்குவனார்திருவள்ளுவன்


 (குறட் கடலிற் சில துளிகள் 36 : நல்லார் தொடர்பைக் கைவிடாதே! – தொடர்ச்சி)

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்

சுற்றமாச் சூழ்ந்து விடும்.   (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௧ – 451)

பெருமைப்பண்பு சிற்றினத்தைக் கண்டு அஞ்சும்; சிறுமைப்பண்பு சிற்றினத்தையே சுற்றமாகக் கொள்ளும்.

பதவுரை: சிற்றினம்-சிறுமைக் குணத்தை ; அஞ்சும்-அஞ்சி ஒதுங்கும்;  பெருமை-பெருமைப் பண்பு;  சிறுமைதான்-சிறுமைப்பண்பு ; சுற்றமா-சிறுமைக் குணத்தையே உறவாக; சூழ்ந்துவிடும்-சூழவும் பிணைத்துக் கொள்ளும்.

பெருமை என்பதற்குப் பெருமைப்பண்பு உடைய பெரியோர் என்றும் சிறுமை என்பதற்குச் சிறுமைக் குணம் உடைய சிறியோர் என்றும் அனைவரும் விளக்குகின்றனர்.

தீயனைக் கண்டால் தூர விலகு” என்பர். எனவே, சிறுமைக் குணம் உடைய தீயவனைக் கண்டு ஒதுங்க வேண்டும் எனவே, பெருமைப் பண்புடையோர் கருதுவர். பெரியோர் என்று கருதாமல் பெருமைப் பண்பு உடைய யாரும் அவ்வாறுதான் நடந்து கொள்வர் எனக் கருத வேண்டும். எனவேதான் பெரியோர் என்று சொல்லாமல் பெருமைப்பண்பு எனக் கருத வேண்டும். அதைப்போல்தான் சிறியோர் என்று கருதாமல் சிறுமைப்பண்பு எனக் கருத வேண்டும்.  அதனாலதான் தெய்வப்புலவர் திருவள்ளுவர் பெரியோர், சிறியோர் என்று கூறாமல் பண்பின் அடிப்படையில் பெருமை, சிறுமை எனக் கூறியுள்ளார்.

“இனத்தோடே இனம்சேரும்” என்கிறார் சொக்கநாதப் புலவர்

அல்லி பெற்ற பிள்ளை(1959) என்னும் திரைப்படத்தில் பாடலாசிரியர் அ. மருதகாசி

“எசமான் பெற்ற செல்வமே!” எனத் தொடங்கும் பாடலில்

தீயவரோடு நீ சேராதே நம்பி!

என எழுதியிருப்பார்.

“இனத்தை இனம் சேரும்”

“இனத்தை இனம் தழுவும்”

“இனம் இனத்தோடே”

“இனம் இனத்தோடு சேரும்”

என்பன பழமொழிகள்.

நாம், நல்லோரை அறிந்து நல்லோர் கூட்டத்தில் சேர வேண்டுமே தவிர, தீய இனத்தவருடன் சேரக் கூடாது. எனவேதான் உலகநாதரும் உலகநீதியில்,

“வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டா”

என்கிறார். சிறுமைப்பண்பினர்தானே வஞ்சனைகள் செய்வர்.

சிற்றினச் சேர்க்கையால் தீயனவே விளையும் என்பதால்தான், பெருமைப் பண்பினரும் பெரியோரும்  சிறியவரோடு பழக அஞ்சுவர்; கீழ்மக்களின் கூட்டத்தோடு சேர மாட்டார்கள். ஆனால், சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பதுபோல் அந்தக் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள்.

சிறுமைப் பண்புகளினால் நாம் ஈர்க்கப்படாமல் இருக்க வேண்டுமானால், நாம் பெருமைப் பண்புகளுடன் திகழ வேண்டும். அப்போதுதான் சிறியாரோடு சேராமல் இருக்க முடியும்.

எனவே, சிறுமைப் பண்புகளில் இருந்து விலகி இருப்போம்!

Saturday, December 6, 2025

சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!?- 7: இலக்குவனார் திருவள்ளுவன்



(சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!?- 6: தொடர்ச்சி)

செம்மொழி அரசு ஏற்பால் தமிழ் பெறும் பயன்கள் என்று பல்வேறு அறிஞர்கள் கட்டுரை அளித்தார்கள். நானும் கட்டுரை யளித்தேன். அது மலேசிய இதழ் ஒன்றிலே வந்திருந்தது, புதிய பாரதம் இதழிலும் ஒரு கட்டுரை அளித்தோம். ஆனால் அவை அனைத்தும் கற்பனை! கற்பனை! கற்பனைதான்! அவற்றில் கதை அளந்திருப்போம். எங்கெங்கெல்லாம் தமிழ் வளரும் என்று பத்தாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் தமிழ் வளரும், பல்கலைக்கழகங்கள், கல்விக்கூடங்கள், பன்னாட்டு அமைப்புகள், மொழி கலை பண்பாட்டு அமைப்புகள், இலக்கிய படைப்புகள், தகவல் ஊடகங்கள் எங்கு பார்த்தாலும் இங்கே தமிழ் வளரும் செழிக்கும் என்று எழுதினோம். ஆனால் ஒன்றும் நடைபெறவில்லை. ஏதோ இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விடுவது போன்று காற்று வாக்கில் போவது போல் ஆகிவிட்டது. ஆனால் அவர்கள் தவறான கருத்தைத் தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள். மறுப்பு தெரிவித்தோம். தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும்? உண்மையான தமிழ் ஆய்ந்த தமிழ் அறிஞர்களைக் கொண்டு, ஏன் உண்மையான என்றால் தமிழ் அமைப்பு என்றால் தமிழ் பயின்றவர்க்கு முதலிடம் தர மாட்டார்கள். தமிழர்கள் இடம் பெற மாட்டார்கள்எந்தக் கட்சி ஆட்சி நடத்தினாலும் தமிழ் பயின்றவர்க்கு முதலிடம் தர மாட்டார்கள். அது அப்படி யாரேனும் தமிழ் அறிந்தவர்கள் வந்திருந்தால் அவர்கள் தன் அறிவுத்திறனை வெளிப்படுத்தாமல் அரசிடம் ஆதாயம் பெறுவதற்காக ஏதும் ஒரு செல்வாக்கு, செல்வத்தை அடைய வந்தவர்களாக இருப்பார்கள். தமிழுக்குக் குரல் கொடுக்க மாட்டார்கள். அவ்வாறல்லாமல் தமிழாய்ந்த தமிழ் அறிஞர்களைக் கொண்டு ஒரு பெரிய குழுவை நியமிக்க வேண்டும். நியமித்து இந்த ஒன்றிய அரசின் மூலமாக என்னென்ன செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு என்னென்ன செய்ய வேண்டும். தமிழுக்கு எவ்வாறெல்லாம் நிதி ஒதுக்கீடு கேட்க வேண்டும் என்றும் அதன் அடிப்படையிலே நாம் ஒன்றிய அரசை நிதி கேட்க வேண்டும். நிதி கேட்காமல், நிதி கொடுத்தார்களா கொடுத்தார்களா என்று கேட்காதே, அதேபோல் மீண்டும் சொல்கிறேன் ஒன்றிய அரசு நிதி கொடுப்பது தவறு அல்ல. ஏன் தவறு அல்ல என்றால் சமற்கிருதத்திற்காக அத்தனைத் திட்டங்களைச் செயல் படுத்துகிறார்கள். அதற்குப் பணம் தேவைப்படுகிறது. அதே நேரம் என்ன தவறு என்றால் இத்தனைத் திட்டங்களும் தேவையற்ற திட்டங்கள், மக்களை ஏமாற்றும் திட்டங்கள், போலித் திட்டங்கள், சமற்கிருதத்தை உயர்வாகச் சொல்லக்கூடிய திட்டங்கள் . ஆக அந்த வகையிலே தேவை இல்லைதான், ஆனாலும் கூட நடைமுறையில் இருக்கும் வரை செய்யத்தானே செய்வார்கள். அந்த நடைமுறைத் திட்டங்களைத் தூக்கி எறிய வேண்டும். ஒரேடியாக இல்லாவிட்டாலும் படிப்படியாக சமற்கிருத நிறுவனங்களை எல்லாம் குறைக்க வேண்டும். எண்ணிக்கை குறைத்து அவ்வாறு குறைப்பதன் வாயிலாக அந்த இடங்களில் தமிழைக் கொண்டு வர வேண்டும் .இவ்வாறு திட்டங்கள் தீட்ட வேண்டும். ஆக அரசு அமைக்கிற ஆணையமோ அமைப்போ என்ன செய்ய வேண்டும். முதலில் குறிப்பிட்டது போன்று மாநிலங்கள் தோறும் தமிழ்ப் பல்கலைக்கழகங்கள் எப்படி அமைப்பது- எப்படி தமிழ்க் கல்வி நிறுவனங்களை அமைப்பது எனச் சிந்தித்து ஆயிரக்கணக்கான கல்வி நிறுவனங்கள் நிறுவ வேண்டும்.

இந்த மேத் திங்கள் அமித்துசா அவர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில்தான் புதுதில்லி முதலமைச்சர் அவர்கள் தெய்வ மொழி சமற்கிருதம் என்று மீண்டும் பேசினார். அது என்ன நிகழ்ச்சி தெரியுமா? 2008 ஆவது சமற்கிருத உரையாடல் நிகழ்ச்சி. தில்லியில் உள்ள 2000 பேருக்கிடையேயான சமற்கிருத உரையாடல்- பேசுவது எப்படி?, பிற மொழிக் கலப்பின்றி சமற்கிருதத்தில் பேசுவது எப்படி? என்ற நிகழ்ச்சி. இது நாடெங்கிலும் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் இருக்கிறது. சென்னையிலும் இருக்கிறது. அது மட்டுமல்ல அந்த பத்து நாள் உரையாடல் முகாம் முடிந்த பிறகு அவர்களை வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்று அரசின் – சொந்த செலவில் அழைத்துச் சென்று – தங்க வைத்து அங்கு முழுக்க முழுக்க சமற்கிருதத்தில் பேச வேண்டும் என்று பயிற்சி கொடுக்கிறார்கள். இவ்வாறெல்லாம் செய்து கொண்டு இருக்கிறார்கள். இங்கு எங்கே தமிழைப் பேசுகிறார்கள். அலைபேசியில் தமிழ் இல்லை ,தொலைக்காட்சியில் தமிழ் இல்லை , தமிழைக் கொலை பண்ணால்தான் தொலைக்காட்சி வாய்ப்பு என்றாகி விட்டது. இப்பொழுதெல்லாம் ஊடகங்களில் தமிழே இல்லாமல் இருக்கிறது. இதற்கெல்லாம் அரசு பயிற்சி தருவது மட்டும் அல்ல பயிற்சிக்கான நிதி ஒதுக்கீடும் தரவேண்டும் . ஆகத் தமிழாய்ந்த தமிழ் அறிஞர்களைத் தலைவராகக் கொண்டு, தமிழாய்ந்த தமிழ் அறிஞர்களை உறுப்பினராகக் கொண்டு, தமிழுக்குச் செய்ய வேண்டியன என்ன என்ன என்று திட்டம் தர வேண்டும். அ’தாவது இதுவரை பலர் எழுதி இருக்கிறார்கள் அதில் இருந்து கருத்துகளை வாங்கிக் கொண்டு அல்லது எடுத்துக் கொண்டு திட்டத்தைக் கொடுக்க வேண்டும்.

(தொடரும்)

இணைய வழி உரையின் எழுத்தாக்கம்

13.07.2025

Followers

Blog Archive