(குறள் கடலில் சில துளிகள் 18. இம்மூன்றும் குற்றங்களாம் – தொடர்ச்சி)

தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்

கொள்வர் பழிநாணு வார்

(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்குற்றங்கடிதல்குறள் எண்: 433)

பழிக்கு அஞ்சுவோர், தம்மிடம் தினையளவு சிறு குற்றம் நேர்ந்தாலும் பனையளவாகக் கருதி வருந்துவர் என்கிறார் திருவள்ளுவர்.

சிறிய குற்றங்களையும் பெரிய குற்றங்களாகக் கருதி அஞ்சி வாழ்ந்தால் குற்றங்கள் குறையும் எனத் தண்டைனயியலறிஞர்கள் கூறுகின்றனர்.

தினை, பனை என்பன அக்கால அளவுப்பெயர்கள். தினை அரிசி மிகச் சிறியது. எனவே, சிறிய அளவைக் குறிக்கத் தினையளவு எனப்படுகிறது. பனை மரம் பேரளவினது. எனவே, பெரிய அளவைக் குறிக்கப் பனை அளவு எனப்படுகிறது. துணை என்னும் சொல் அளவைக் குறிக்கிறது. நாணுவார் = வெட்கப்படுவார்.

பண்பாளர்களால்தான் உலகம் நிலைத்து நிற்கிறது என்றுகூறும் கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி என்னும் பாண்டிய மன்னன், பண்பாளர்கள்,

பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்” (புறநானூறு 182) என்கிறார். அஃதாவது, பழிவரும் என்றால் உலகம் முழுவதையும் ஒருங்கே தந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்கிறார்.

அத்தகையோர் ஒருவேளை தினையளவு குற்றம் ஏதும் தம் செயலில் நேர்ந்தாலும் பனை அளவாக எண்ணி வெட்கப்பட்டு வருந்துவர்.  தினைத்துணை உதவி செய்தாலும் பனைத்துணையாகக்  கொள்ள வேண்டும் என்ற திருவள்ளுவர் (குறள் 104) அதே அளவுமுறைகளையே குற்ற அளவிற்கும் குறிக்கிறார். இதன்மூலம் தினையளவு குற்றமும் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனத் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.

ஒவ்வொருவருமே தம்மிடம் குற்றம் நேராமல், தவறியும் குற்றச் செயல் புரியாமல் காத்துக் கொள்ள வேண்டும். என்றாலும் ஆட்சியில் உள்ளவர்கள், நிறுவனங்கள், தொழிலகங்கள், கல்வியகங்கள் முதலானவற்றை நடத்துவோர் பெரிதும் கண்ணுங்கருத்துமாக இருந்து சிறு குற்றமும் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், இவர்களது சிறு குற்றமும் இவர்களைச் சார்ந்துள்ள மக்களுக்குப் பேரளவு தீமை விளைவிக்கும். செய்த குற்றம் சரி செய்ய முடியாத பெருந்துன்பத்தையும் விளைவிக்கும். ஆனால் இன்றைய அரசியலாளர்கள்  இது குறித்துக் கவலைப்படுவதில்லை. குற்றங்களையும் தண்டனைகளையும் வெற்றி மாலையாகக் காட்டிக் கொள்கின்றனர். இந்த அவலம் ஒழியும்போதுதான் குற்றமில்லா மன்பதையைக் காண முடியும்.