(குறள் கடலில் சில துளிகள் 19. குற்றம் சிறிதாயினும் பெரிதாய் அஞ்சு! – தொடர்ச்சி)

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே

அற்றம் தரூஉம் பகை

(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்குற்றங்கடிதல்குறள் எண்: 434)

அழிவுதரும் உண்மையான பகை குற்றச் செயலே ஆகும். அதனால் குற்றமில்லா வாழ்க்கையை இலக்காகக் கொண்டு காத்திடுக என்கிறார் திருவள்ளுவர்.

குற்றத்தையே பகை எனக் கருதி நீக்கி வாழ்ந்தால் குற்றவாழ்வு இல்லாமல் போகும் எனத் தண்டனையியலாளர்கள் கூறுகின்றனர்.

அற்றம்=இறுதி, முடிவு. அற்றம் தருஉம் பகை=வாழ்க்கையை முடிவு கட்டும் பகை. ‘குற்றமே காக்க’ என்றால் ‘குற்றத்தையே பாதுகாக்க’ என்று பொருளல்ல.  ‘குற்றமே தன்னிடம் வாராமல் காத்துக்கொள்க’ என்று பொருளாகும். பரிமேலழகர் ‘தீமை காக்க’ என்பது ‘தீமை வாராமற் காக்க’ என்று எப்படிப் பொருள்படுமோ, அப்படிக் ‘குற்றமே காக்க’ என்பது ‘குற்றமே வாராமல் காக்க’ என்ற பொருள்தரும் என விளக்குகிறார்.

காலிங்கர், “குற்றம் நிகழாமல் கருதிப் பாதுகாத்துக் கொள்க” என்கிறார். பரிமேலழகர், “குற்றம் வாராமையே பயனாகக் கொண்டு காக்கவேண்டும்” என்கிறார். “குற்றம் உண்டாகாமல் இருக்கும நிலையைச் செல்வத்தைப் பாதுகாப்பதுபோல் கவனித்துக் கொள்ள வேண்டும்” என்று இன்றைய ஆசிரியர்கள் விளக்குகின்றனர். நாட்டையும் வீட்டையும் காக்க வேண்டும் என்றால் பொறுப்பில் உள்ளவர்கள். தம்மிடம் குற்றம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும். சிறு பொறியும் பெரு நெருப்பாவதுபோல் சிறு குற்றமும் பெருங்கேடாய் மாறும். குற்றம் என்பது சட்டத்திற்கு மாறான செயல்கள் மட்டுமல்ல. அறத்திற்கு முரணான பண்பற்ற செயல்களுமாம். எனவே, நற்பண்பு கொண்டு நல்லொழுக்கத்துடன் திகழ்ந்தால் அழிவு தரும் பகை உருவாகாது.

நாம் பகைவர்களாகக் கருதுபவர்களை விடக் குற்றச் செயலே அழிவு தரும் பகை; நம்மை மட்டும் அல்லாமல் நம்மைச் சார்ந்துள்ளவர்களையும் அழிக்கும் பெரும்பகை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். எனவேதான், குற்றச் செயலை விலக்கி வைப்பதற்காகக் குற்றங்கடிதல் எனத் தனி அதிகாரத்தையே திருவள்ளுவர்  அளித்துள்ளார்.