(குறள் கடலில் சில துளிகள் 20. குற்றம் என்னும் பகை – தொடர்ச்சி)

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்

(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்குற்றங்கடிதல்குறள் எண்: 435)

குற்றம் வரும் முன்னர்க் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை நெருப்பின் முன் உள்ள வைக்கோல் போல அழியும் என்கிறார் திருவள்ளுவர்.

ஆட்சியியல், வணிகவியல், இயந்திரவியல், மின்னியல், பயிரியல் முதலான பல துறை அறிஞர்களும் வரும் முன்னர்க் காத்திடுமாறு கூறுகின்றனர்.

வைத்தூறு=வைக்கோற்போர்; வைக்கோல் குவியல். வருமுன்னர் என்றால், துன்பம் வருவதன் முன் என மணக்குடவரும் பரிப்பெருமாளும் பரிதியும் கூறுகின்றனர். காலிங்கர் குற்றம் எய்துவதன் முன் என்கிறார். குற்றங் கடிதல் என்னும் அதிகாரத்தில் உள்ளதால்  குற்றம் வரும் முன் என்கிறார் பரிமேலழகர். குற்றத்தால் வரும் துன்பம் என்று எடுத்துக் கொள்ளலாம்.

வைக்கோல் எளிதில் தீப்பற்றிக் கொள்ளக் கூடியது. பொதுவாகப் பொதுவெளியிலேயே குவித்து வைக்கப்படுகிறது. சிறு தீ வைக்கோலில் பற்றிக் கொண்டாலும் விரைந்து பரவி வைக்கோல் குவியல் முழுவதும் அழியும். அது மட்டுமல்ல அதன் சுற்றுப்புறத்திலும் தீ பரவி மிகுந்த கேடு விளைவிக்கும். எனவே, வைக்கோல் பக்கம் தீப்பொருள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதுபோல்தான் குற்றச் செயல் வராமல் காத்துக் கொள்ள வேண்டும். குற்றச் செயலில் ஈடுபட்டால் பொருளும் அழியும், புகழும் அழியும்.

குற்றச்செயலால் துன்பம் வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம்  என்றால் அதை உணரும் முன்னரே அழிவு வந்து விடும். எனவேதான் வரும் முன்னரே இக்குற்றச் செயலைச் செய்தால் இன்னவகைத் துன்பம் வரும் என்பதை அறிந்து குற்றச் செயலில் இறங்காமல் காத்துக் கொள்ள வேண்டும்.