(குறள் கடலில் சில துளிகள் 21. வருமுன் காத்திடு! – தொடர்ச்சி)

 

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்பிற்பின்

என்குற்றம் ஆகும் இறைக்கு

(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்குற்றங்கடிதல்குறள் எண்: 436)

தன் குற்றம் கண்டறிந்து நீக்கிப் பிறர் குற்றம் காண்பவனுக்கு எக்குற்றமும் வராது என்கிறார் திருவள்ளுவர்.

ஆளுமையியலாளர்கள், பிறர் குற்றங்களைப் பார்க்கும் முன்னர் முதலில் உன்னைப் பார் (Look at yourself first, before looking on to others) என்கின்றனர்.

பரிமேலழகர், “அரசனுக்குத் தன் குற்றம் கடியா வழியே பிறர் குற்றம் கடிதல் குற்றமாம், அது கடிந்தவழி முறை செய்தலாம் என்பார், என் குற்றம் ஆகும் என்றார். எனவே தன் குற்றம் கடிந்தவனே முறைசெய்தற்கு உரியவன் என்பதாயிற்று.” என விளக்குகிறார்.

தன்னைத் திருத்திக் கொண்டபின் பிறரைத் திருத்த முற்படுபவனை யாரும் குறை சொல்ல மாட்டார். எனவே, ஒவ்வொருவரும் முதலில் தம்மிடம் உள்ள குறைகளை அறிந்து போக்கிக் கொள்ள வேண்டும். பிறரை வழிநடத்தும் பொறுப்பிலுள்ளவர்கள், தலைமை நிலையில் உள்ளவர்கள், தம்மிடம் எக்குற்றமும் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படியும் ஏதும் குற்றம் உண்டானால் முதலில் அதைப் போக்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு தம்மிடம் உள்ள குற்றத்தைப் போக்காமல் பிறர் குற்றம் குறித்துக் கூறினால்  “நீ என்ன ஒழுங்கு” என ஏளனத்திற்கு ஆளாக நேரிடும். பிறரும் தம்மைத் திருத்திக் கொள்ள மாட்டார். ஆனால், வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் இருந்து தம் குற்றத்தை நீக்கிக் கொண்டபின்னர் அடுத்தவர் குற்றம் குறித்துக் கூறினால் யாரும் இகழவோ பழிசொல் சொல்லவோ மாட்டார். மேலும் கூறப்படும் கருத்திற்கு மதிப்பளித்துச் சொற்படிக் கேட்பர்.

தன் குற்றம் என்றால் தன்னால் இயற்றப்படும் சட்டத்திலுள்ள குற்றம் எனக் கொண்டு, முதலில் சட்டத்தைத் திருத்தி அதன்பின்னனர் மக்களைத் திருத்த முற்பட வேண்டும் என்பாரும் உள்ளனர்.

அரசனாக இருந்தாலும் ஆள்வோனாக இருந்தாலும் தான் முதலில் எடுத்துக்காட்டாகச் செம்மையாகத் திகழ வேண்டும் என்பதே தமிழர் நெறி. அதிகாரம் மிக்க தன்னை யார் குற்றம் சொல்ல முடியும்? என்ன செய்ய முடியும்? என்று ஆணவத்தில் இருந்தால், ஆட்சியும் அழியும். ஆட்சிப் பொறுப்பிலுள்ளவனும் அழிவான்.