Tuesday, September 30, 2025

நாலடி நல்கும் நன்னெறி 15: கேடு எண்ணாதே! பொய் சொல்லாதே! – இலக்குவனார் திருவள்ளுவன்

      30 September 2025      அகரமுதல



(நாலடி நல்கும் நன்னெறி 14:  நல்லோரும் தீயோர் பக்கம் சேர்ந்தால் தீயனவே விளைவிப்பர்! – தொடர்ச்சி)

தான்கெடினும், தக்கார்கே டெண்ணற்க தன்னுடம்பின்
ஊன்கெடினும் உண்ணார்கைத் துண்ணற்க – வான்கவிந்த
வையகம் எல்லாம் பெறினும் உரையற்க
பொய்யோ டிடைமிடைந்த சொல்

(நாலடியார், பொறையுடைமை, 80)

தான் கெடினும் – தான் கெடுவதாக இருந்தாலும், அஃதாவது தனக்குக் கேடு வருவதாக இருந்தாலும்;  தக்கார் கேடு எண்ணற்க –  அக் கேட்டினை நீக்கிக் கொள்ளும் பொருட்டுச் சான்றோருக்குக் கேடு செய்ய எண்ணாதே;  தன் உடம்பின் ஊன் கெடினும் – தனதுடம்பின் தசை பசியால் வற்றிப் போனாலும்  உண்ணார் கைத்து உண்ணற்க –  நுகரத்தகாதவரது தரும் உணவை உண்ணாதே; வான் கவிந்த – வானம் சூழ்ந்த;  வையகமெல்லாம் பெறினும் – வையகம் முழுமையும் பெறுவதாயிருந்தாலும் ;  உரையற்க – சொல்லாதே ; பொய்யோ டிடை மிடைந்த சொல் – பேச்சினிடையில் பொய் கலந்த சொற்களை;

தம் இல்லத்தில் உணவு உண்ணாதவர் தரும் உணவை உண்ணக் கூடாது எனச் சிலர் விளக்கம் தருகின்றனர். வள்ளலோ சான்றோரோ உணவு தரும் பொழுது அதற்கு முன்னர் அவர் தன் வீட்டில் உணவு உண்டிருக்க வேண்டும் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? எனவே, நுகரத்தகாத, பண்பால் கீழோரானவர் தரும் உணவு எனக் கொள்ளுவதே பொருத்தமாகும்.

பிறனுக்குக் கேடு செய்வதைப் பற்றி மறந்தும் நினைக்கக் கூடாது என்பதைத் திருவள்ளுவரும்,

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.   (திருக்குறள், ௨௱௪ – 204)

என்கிறார்.

தீயனவற்றை எண்ணலும் தீது என்பதே தமிழ் நெறி. எனவேதான் பிறருக்குக் கேடு செய்யாதே என்று சொல்லாமல் செய்கைக்கு அடிப்படையான கேடு செய்யும் எண்ணமும் வரக்கூடாது என்கிறது நாலடியார்.

வாழ்தல் வேண்டிப்

பொய் கூறேன், மெய் கூறுவல்;

எனத் தான் யாருக்காகப் பரிசு பெறவந்திருக்கிறாரோ அந்தச் சுற்றத்தார் வாழ்வதற்காகக்கூடப் பொய் கூற மாட்டேன் என்கிறார் புலவர் மருதன் இளநாகனார்(புறநானூறு 139).

அதுபோல்தான் நாலடியாரும் வாழ்வற்காகப் பொய் சொல்லக் கூடாது என்கிறது.

நாமும் யாருக்கும் எதற்காகவும் கேடு எண்ணாமலும் உலகமே நமக்குக் கிடைத்தாலும் பொய் பேசாமலும் வாழ்வோம்.

செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-3(2010): இலக்குவனார் திருவள்ளுவன்

 




(செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-2(2010): தொடர்ச்சி)

#  தமிழின் காலத்தைப் பின்னுக்குத் தள்ளியும் தமிழின் சிறப்புகளைக் குறைத்தும் தமிழைப் பழித்தும் பேசியும் எழுதியும் வருபவர்கள்தாம் செல்வாக்கு பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களால் மாநாட்டின் மூலம் தவறான முடிவிற்கு வர வாய்ப்பு உள்ளது. எடுத்துக்காட்டாக மொழியியல் அமர்வில் எழுத்துச் சிதைவு பற்றிய  உரை நிகழ உள்ளது. தமிழறிஞர்கள் பலர் இருக்கப் பொறியில் படித்து விட்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ் இணையப் பல்கலைக் கழகம், தமிழ் வளர்ச்சிக் கழகம், செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனம் முதலான தமிழ் வளர்ச்சி அமைப்புகளில் முதன்மைப் பொறுப்பு வகிக்கும் செல்வாக்கு பெற்ற பொறியாளர் ஒருவர், இம்மாநாட்டின் மூலம் எழுத்துச் சீர்திருத்தத்தின் அடுத்த கட்டம் என்னும் பெயரில் எழுத்துச் சிதைவிற்கு வழிவகுக்கத் திட்டமிட்டுள்ளார். எனவே, தமிழன்பர்கள் புறக்கணித்தால், அனைவரின் முடிவு எனக் கூறித் தமிழ் எழுத்துச் சிதைவிற்கு  ஆணை பிறப்பிக்கச் செய்ய அல்லது முதற்கட்டமாக அதற்கான குழு அமைக்க முடியும். தமிழன்பர்கள் பங்கேற்று ஒன்று திரண்டு எதிர்த்தால்தான் அதனைத் தடுக்க இயலும். எனவேதான் நானும் இவ்வமர்வில் ‘வரிவடிவச் சிதைவு வாழ்விற்கு அழிவு’ என்னும் தலைப்பில் கட்டுரை அளிக்கின்றேன். மாநாட்டிற்கு முன்பே உலகளாவிய எதிர்ப்பைத் தமிழன்பர்கள் காட்டிவருவதால்தான் எழுத்துச் சீர்திருத்தம் என்னும் கருத்தமர்வுத் தலைப்பை மாற்றி மொழியியல் தலைப்பின் கீழ் அவற்றைக் கொண்டு வந்துள்ளனர். இம்மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் நடைபெறுவதால்  இணைய வழி இணையற்ற தமிழை நாம் பரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இவை தவிர தமிழ் அழிப்பாளர்களைக் காலம் வரலாற்றில் இருந்து அகற்றும் என்ற நம்பிக்கை இருந்தால் நாம் இம்மாநாட்டில் பங்கேற்பது குறித்துத் தவறாக எண்ண மாட்டோம்.

# அவ்வாறல்ல. உலகின் மூத்தமொழியான உயர்தனிச் செந்தமிழுக்கு அறிந்தேற்பு கிடைத்தது என்றால் என்னென்ன நன்மைகள் விளையும் என எதிர்பார்த்தோமோ அவற்றில் பெரும்பாலானவை இன்னும் நிறைவேறவில்லை; இனியாவது நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் நாம் செயல்படுவோம்.

#

  1. இந்திய அரசு செந்தமிழின் அறிந்தேற்பிற்கான ஒத்திசைவைப் பிற நாடுகளிலும் ஐ.நா.வின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பான யுனெசுகோ முதலான பன்னாட்டு அவைகளிலும் பெற்றுச் செம்மொழியாம் தமிழைப் பரப்ப முழு நிதியுதவி பெற்றுத் தரும் என்ற எதிர்பார்ப்பு  ஈடேறும் நாள் என்று எனத் தெரியவில்லை.
  • அனைத்துநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் தமிழியல் துறை தொடங்க  இந்திய அரசும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏட்டளவில்தான் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் மிகச் சிலவாக உள்ள பிற நாட்டுப் பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ்த்துறைகள் மூடும் நிலையில்தான் உள்ளன என்னும் நிலைமை என்று மாறும் என்பது தெரியவில்லை.
  • இந்தியாவில் உள்ள பிற மாநிலப் பல்கலைக்கழகங்களில் தமிழியல் துறை தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு காற்றோடு கலந்து விட்டதோ எனக் கவலை அளிக்கிறது.
  • அஞ்சல்வழியாக இந்தியைப் பரப்புவது போல் மத்திய அரசு அஞ்சல்வழிகளில் தமிழைப் பரப்பும்; ஒவ்வொரு பல்கலைக்கழகம் ஒவ்வொரு மொழியின் மூலம் தமிழைக் கற்பிக்கும் என்ற திட்டத்தில் அனைத்து மொழிகளின் வாயிலாகத் தமிழ் கற்பிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் வெறுங்கனவாய்ப்போய்விடுமோ என்று வருந்த வேண்டியுள்ளது.
  • பிற நாட்டுப் பல்கலைக்கழகங்களில் அமைக்கப்படும் தமிழியல் துறைகள் மூலம், அந்தந்த நாட்டு மொழிகளில் தமிழ் இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்பட்டு அவற்றைப் பிறநாட்டுப் புலவர்கள் வணங்கும் நாள் வெகு தொலைவில்கூடத் தெரியவில்லை.
  • தமிழ்க்கலைகளின் பயிற்சி, வளர்ச்சி, பரப்புதல், பேணுதல், ஆவணமாக்கல் முதலான முயற்சிகளுக்கு நிதியுதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏமாற்றத்தில்தான் முடியுமோ என்று தெரியவில்லை.
  • தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் 1. தமிழ் இலக்கியப் பீடம், 2. தமிழ் இலக்கணப் பீடம், 3. தமிழ்க் கலைச் சொல்லாக்க ஆய்வுப் பீடம்,  4. தமிழ் மொழி பெயர்ப்புப் பீடம், 5. தமிழ் ஒப்பிலக்கியப் பீடம், 6. தமிழ்க் கலைப் பீடம் எனப் பல்வேறு தமிழ்ப்பீடங்கள் நிறுவப்படும் என்ற எதிர்பார்ப்பு எண்ணமுடியாத தொலைவிற்குச் சென்றுவிட்டதோ எனத் தெரியவில்லை.
  • செம்மொழித் திட்டத்தின் கீழ்ச், சமசுகிருத வளர்ச்சிக்காக என ஆயுர்வேத மருத்துவத்திற்குப் பல கோடி உரூபாய்கள் நிதி ஒதுக்கப்படுவதுபோல் தமிழ் மருத்துவ வளர்ச்சிக்கெனத்  தமிழ் மருத்துவம் படிக்கவும், தமிழ் மருத்துவ நூல்கள் வெளியிடவும், தமிழ் மருத்துவக் கட்டுரைகளை வெளியிடவும், உலகத் தமிழ் மருத்துவக் கருத்தரங்கங்கள், மாநாடுகள் நடத்தவும், தமிழ் மருத்துவ இதழ்கள் வெளியிடவும்  தனி நிதியம் ஏற்படுத்தி இதற்காகும் மூல வைப்புத் தொகையை இந்திய அரசு வழங்கும் என  எதிர்பார்த்த நிதி ஒதுக்கீட்டைப்பற்றிய எண்ணமே அரசுகளுக்கு இல்லை என்பது வருத்தமாக உள்ளது.
  • மத்திய இடைநிலைக் கல்விக் கழகம் சார்பில் இந்தியா உட்பட 19 நாடுகளில் 9275 பள்ளிகள் உள்ளன. இங்கு சமற்கிருதம் முதல்மொழியாகவும் விருப்ப மொழியாகவும் கற்பிக்கப்படுகின்றது. செம்மொழித் தமிழுக்கும் இவ்வாய்ப்பு கிட்டும் என எதிர்பார்த்தோம். ஆனால், அது பற்றிய எண்ணமே அரசுகளுக்கு இல்லை என்பது வேதனை அளிக்கின்றது.
  1. ஏறத்தாழ 800 சமசுகிருதப் பயிலகங்களுக்கு 75 விழுக்காடு நிதியுதவி வழங்கி வருவதுபோல், தமிழ்ப் பயிலகங்களுக்கும் தாய்த்தமிழ்ப் பள்ளிகளுக்கும் நிதியுதவி வழங்கப்படும் என்று அடைந்த மகிழ்ச்சி  இருந்த இடம் தெரியாமல் போகும் அளவிற்கு இவை புறக்கணிக்கப்படுகின்றன.

(தொடரும்)

Saturday, September 27, 2025

தொல்காப்பியமும் பாணினியமும் – 5 : மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம் – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(தொல்காப்பியமும் பாணினியமும் – 4 : முதனூல்  – தொடர்ச்சி)

இது குறித்துப் புலவர் செந்துறைமுத்து (பரிபாடல் பழக்க வழக்கங்கள்: பக். 14) பின்வருமாறு தெரிவிக்கிறார்:

      “தமிழ் இலக்கிய உலகு மிகவும் பழமைபட்டது; பரந்து பட்டது; பெருமைபட்டது. தமிழ் இலக்கியங்களைத் தமிழ் உலகு எனவும் தமிழ் கூறும் இலக்கிய உலகு எனவும் கூறலாகும். காலவரையறையைக் காண வியலாத பழமையையும் பெருமையையும் கொண்டது  தமிழ் உலகு. தமிழ் உலகில் வழங்கும் நூல்களில் தொல்காப்பியம் மிகவும் பழமை வாய்ந்தது. அந்நூலின் பெயரே அதன் பழமையைக் காட்டுவதாயுள்ளது. தொல்காப்பியத்துக்கு முன் அகத்தியம் இருந்தது என்பர். ஆனால், அந்நூல் முழுமையும் கிடைக்கப் பெறாமையின், கிடைத்துள்ள நூல்களுள் மிகவும் பழமை வாய்ந்ததாயுள்ளது தொல்காப்பியம். “

தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் நமக்குக் கிடைத்தில

தொல்காப்பியத்திற்கு முதல்நூல் அகத்தியம் என்று கொள்வதற்கு இடமில்லை. மாறாகச் செய்யுள் வழக்கினும், உலகோர் வழக்கினும் பல காலமாய் இடம்பெற்ற பல செய்திகளும், தொல்காப்பியரால் எடுத்தாளப் பெற்றிருத்தல் இயல்பே எனலாம். ஆயினும், எழுத்து, சொல், பொருள் மூன்றன் இலக்கணமும் விவரித்திடும் விரிவானதொரு நூல், அக்காலத்தில் வேறு இல்லையாதலின் அதுவே முதல்நூல் ஆகும் என்பதில் ஐயமில்லை.” என்கிறார் பேராசிரியர் க.அன்பழகனார்: (கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா: அணிந்துரை: பக்கம் 11)

பாணினியம் முதல் நூலல்ல

“ஐந்திரம்” என்னும் நூலே, தொல்காப்பியத்திற்கு முந்தைய தமிழ் இலக்கண நூலாகும். இந்தத் தமிழ் ஐந்திரத்தைத் தழுவியே, வடமொழிகளுக்கு எழுத்துகளும், இலக்கணங்களும் வடிக்கப்பட்டன. வடமொழிகளான, மாகத, பாகத(பிராகிருத) மொழிகளின் இலக்கணங்களைக் கற்கப் புகுவோரெல்லாம் தமிழ் ஐந்திரத்தை முதலில் கற்றேயாக வேண்டும் என்னும் நிலை கி.பி.11 ஆம் நூற்றாண்டு வரையிலும் இருந்தது. இதனைக் கருநாடகத்தின் கொப்பளத்தில் கண்டெடுக்கப்பட்ட அருகச் சமயக் குரவர்களைப் பற்றிய கல்வெட்டொன்று உறுதிப்படுத்துகிறது.(அத்திப்பட்டு முரளிதரன் முகநூல்) எனவே பாணினியத்திற்கும் வழிகாட்டி ஐந்திரமே. அவ்வாறிருக்க பாணினியத்தைத் தொல்காப்பியத்தின் மூல நூலாகக் கூறுவது தவறல்லவா?

பாணினியத்தின் காலம்

இந்தியவியலாளர் கோல்ட்சுடக்கர், பண்டார்கர், முனைவர் இராதா குமுத்து முகர்சீ, பாடக்கு ஆகியோர் பாணினி வாழ்ந்த காலம் கி.மு ஏழாம் நூற்றாண்டு என்றும்,வரலாற்றுப் பேரறிஞர் கே.ஏ. நீலகண்ட சாத்திரி கி.மு ஆறாம் நூற்றாண்டுக்கு முன் என்றும் உறுதிபட நிறுவியுள்ளனர் என்கிறார் ஒருவர். ஆனால், அவர் தொல்காப்பியர் காலத்தைக் கி.மு.120 என வேண்டுமென்றே தவறாகக் கூறுகிறார். எனவே, நடுநிலை தவறிய இவரது கருத்து ஏற்கத் தக்கதல்ல.

விக்கிபீடியாவில் உள்ளவாறு பாணினியின் காலம் பொ.ஊ.மு.520க்கும் பொ.ஊ.மு.460க்கும் இடையே இருக்கலாம் என அறிஞர்கள் கூறும் காலமும் தவறு.

பாணினி காந்தார நகரத்தில் தோன்றியதாகக் கூறுகின்றனர். கிமு 330-இல் பழைய காந்தார நகரத்தை அலெக்குசாண்டிரிய அரச்சோசியா எனும் பெயரில் (Alexandria Arachosia) நிறுவியவர் பேரரசர் அலெக் குசாந்தர் ஆவார். காந்தார நகரம் உருவானபொழுதே பாணினி தோன்றியவராக இருந்தாலும் அவரது காலம் கி.மு.330இற்குப் பிற்பட்டதே. எனவே அதற்கு முந்தையதாகக் கூறுவனவெல்லாம் கட்டுக்கதைகளே. பாணினியின் காலம் கி. மு. 300 என்பர் முனைவர் பந்தர்க்கார். நகர வரலாற்று அடிப்படையில் இக்கருத்து ஏற்கக்கூடியதாக உள்ளது.

(தொடரும்)

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 22 : ஆராய்ந்து நட்பு கொள்; நட்பு கொண்டபின் ஆராயாதே! – இலக்குவனார்திருவள்ளுவன்

 



(பொருளைத் தேடு. வாழ்வின் பொருளை இழக்காதே! – சங்கப்புலவர்கள் பொன்னுரை 21 : தொடர்ச்சி)

 “…பெரியோர்

நாடி நட்பின் அல்லது,

நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே…”

                  – கபிலர், நற்றிணை 32: 7 – 9

பதவுரை: நாடி = ஆராய்ந்து; நட்பின் = நட்பு கொள்வது ; நட்டு = நட்புகொண்டு;  நாடார் = ஆராயார்; ஒட்டியோர் = நட்பு கொண்டோர்

ஒருவரின் பண்பு, செயல், ஒழுக்கம் முதலியவற்றை ஆராய்ந்து நட்புகொள்ள வேண்டுமேயன்றி ஆராயாமல் நட்பு கொண்டு பின்னர் ஆராயக் கூடாது என்பது பெரியோர் வாக்கு என்கிறாள் தோழி.

தலைவியிடம், நீ முதலில் தலைவனுடன் நட்பு கொண்டு பின்னர் மாறுபடுவது தவறு எனச் சொல்லும் தோழி பெரியோர் கூற்றைத் தெரிவிக்கிறாள்.

ஒருவருடன் நட்பு கொண்ட பின் அதிலிருந்து விடுபட முடியாது. எனவே ஒருவரின் பண்பு நலன்களை ஆராயாமல் நட்பு கொண்டால் அதுபோல் கேடு தருவது வேறில்லை என்கிறார் திருவள்ளுவரும்.

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்

வீடில்லை நட்பாள் பவர்க்கு. 

            – திருக்குறள் , ௭௱௯௰௧ – 791

ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும் என்று விளக்குகிறார் கலைஞர் மு.கருணாநிதி. ஆராயாமல் மேற்கொள்ளும் காதலும் அப்படித்தானே!

காதலித்தவன் கயவன் என்று தெரிந்த பின், கேடுகள் விளைவிக்கும் தவறான காதலைக் கைவிடவும் முடியாமல், காதலைத் தொடரவும் முடியாமல் காதலி தவிப்பது இயற்கைதானே!

கண்டதும் காதல், முதல் பார்வையிலேயே காதல் என்றெல்லாம் சொல்வார்கள். காதலும் நட்புபோல்தான்.

காதலிக்க விரும்பும் முன், அவன் ஏற்றவன்தானா? நற்குணங்கள் நிறைந்தவான்தானா? ஏமாற்றிக் கைவிட்டுச் சென்று விடுவானா? கடைசிவரை உடனிருப்பவனா?

வாழ்விலும் தாழ்விலும் உற்ற துணைவனாக இருப்பானா என்றெல்லாம் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்பதற்காகத் தோழி, பெரியோர் கூறுவதுபோல் ஆராயாமல் நட்பு கொள்ளக் கூடாது, காதலிக்கக் கூடாது என்கிறாள்.

காதலித்தபின் கைவிட்டால் அதைப்போல் கேடு தருவது வேறில்லை என்கிறாள்.

நட்பின் நிலைப்பாட்டைக் கூறுவதன் மூலம் காதலின் நிலைப்பாட்டைக் கூறுகிறாள் தோழி.

மேலே குறிப்பிட்டுள்ள கடைசி மூன்று அடிகளின் முந்தைய அடிகள் (நற்றிணை 32, அடி1-7) வருமாறு,

”மாயோன் அன்ன மால் வரைக்கவாஅன்,

வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி

அம் மலைகிழவோன் நம் நயந்து என்றும்

வருந்தினன்” என்பது ஓர் வாய்ச் சொல் தேறாய்;

நீயும் கண்டு, நுமரொடும் எண்ணி,                       

அறிவு அறிந்து அளவல் வேண்டும்; மறுதரற்கு

அரிய வாழி, தோழி!

(வரை = மலை; கவாஅன் = மலைப்பக்கம்)

இதன் பொருள் வருமாறு:

வாலியோன் போன்ற வெண்ணிற அருவி உள்ள மாயோன் போன்ற பெரிய மலைக்கு உரிய அவன், உன்மீது அன்புகொண்டு அது கிடைக்கப்பெறாமல் வருந்துகிறான்.

நீயும் இசைந்து பேசு. உன் குடும்பத்தினருடன் கலந்து பேசி, அவனைக் கண்டு, அவனுடன் அளவளாவ வேண்டும். இதனை மறுத்தற்கு ஒன்றுமில்லை.

தோழி ஆராய்ந்தறிந்து அவன் நல்லவன் என உணர்ந்து அவனுடன் பேசுமாறு கூறுகிறாள்.

நாமும் சங்கப் புலவர்கள் பொன்னுரையைப் பின்பற்றி, நட்பு கொண்ட பின் ஆராய்ந்து பயனில்லை. ஆதலின் ஆராயாமல் நட்பு கொள்ள வேண்டா!

தாய் 27.09.25

Friday, September 26, 2025

குறட் கடலிற் சில துளிகள் 32. தக்கவர் இனத்தில் இணைந்தால் பகைவரால் யாது செய்ய இயலும்? – இலக்குவனார்திருவள்ளுவன்

 




(குறள் கடலில் சில துளிகள் 31 – அறிஞர்களே கண்கள்; அவர்களைத் துணையாகக் கொள்க! – தொடர்ச்சி)

குறட் கடலிற் சில துளிகள் 32. தக்கவர் இனத்தில் இணைந்தால் பகைவரால் யாது செய்ய இயலும்?

தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச்

செற்றார் செயக்கிடந்தது இல்

(திருவள்ளுவர், திருக்குறள், பெரியாரைத் துணைக்கோடல்,  எண்: ௪௱௪௰௬ – 446)

தக்கார்- அறிவு ஒழுக்கங்களால் தகுதியுடையார்; ஒழுகுதல்-அறநீதிகளின் நெறி வழுவாமல் நடத்தல்; வல்லானை-திறமையுடையவனை; செற்றார்-பகைவர்; செய-செய்ய; கிடந்தது-கூடியது; இல்-இல்லை.

‘தான்ஒழுக வல்லானை’ என்றதற்குப் பரிமேலழகர் வழியில் பெரியார் சிந்தனை ஓட்டத்தைத் ‘தானும் அறிந்து பின்பற்ற வல்லவரை என்பர்.

 வஞ்சித்தல், கூடினவரைப் பிரித்தல், வேறு பகை விளைத்தல் என்ற இவற்றானும், வலிமையாலும் பகைவர் செய்யுந் துன்பங்கள் பலதிறத்த. ஆயினும், தானும் அறிந்து, தக்கவர் கூட்டத்தில் இணைந்து அவர் வழியில் நடப்பவனுக்குப் பகைவரால் எத்தீங்கும் விளையாது.

திருக்கோவில்களில் பூசை, வருவாய், நகை முதலியவற்றைப் பொறுப்பாகக் கவனித்துக் கொள்ள, அரசால் பணியமர்த்தம் செய்யப்படுபவர்களுக்கும் தக்கார் என்றுதான் பெயர்.

இக்குறளுக்கு விளக்கம் தரும் பரிமேலழகர் முதலான ஒரு சாரார் அரசருக்கே அறிவுரை கூறுவதாக விளக்குகின்றனர். ஆனால், அரசருக்கு   மட்டுமில்லை. ஆளும் பொறுப்பில் உள்ளவர்க்கும் தனி மனிதருக்கும்கூடப் பொருந்தும். யாராய் இருந்தாலும் தக்கவர் கூட்டத்தை விட்டு விலகாமல் இருப்பின் பகைவரால் அவர்க்குத் தீங்கு எதுவும் வராது என்பதே திருவள்ளுவர் நெறியுரை.

செறு என்றால் வேறுபடுதல் என்றும் பொருள். எனவே, செற்றார் என்பது வேறுபட்டு நிற்பவர் என்றும் பொருளாகும். எனவேதான், தக்கார் இனத்தவருடன் சேர்ந்து இருப்பவரை அவரிடம் இருந்து வேறுபட்டு நிற்பவர்கள், அவருக்கு எதிராகத் தீய நிலையில் இருப்பவர்கள் என்ன தீங்கு இழைத்தாலும் தக்கார் இனமே தக்கார் இனத்தவரைக் காப்பாற்றி விடும் என்பர்.

பெரியார் சிந்தனையின் அலைவரிசையில் தானும் செயல்படுவோருக்கு எத்தீங்கும் நேராது என்பதே வள்ளுவர் வாக்கு.

பெரியாரைத் துணையாகக் கொள்வோர் மேன்மை யடைவர், துன்பங்களிலிருந்து காப்பாற்றப்படுவர் என்றெல்லாம் அறிவுறுத்தவே ‘பெரியாரைத் துணைக்கோடல்’ என்னும் அதிகாரத்தைத் திருவள்ளுவர் வகுத்துள்ளார். நாமும் பெரியாராகிய

தக்கவர் இனத்தில் சேர்ந்து தக்கவராய் வாழ்ந்தால்

பகைவரால் வரும் தீமை எதுவும் இல்லை.

Thursday, September 25, 2025

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 8 : ஓரெழுத்தொரு மொழிகளுக்கு அடுத்தும் கிழமைகளுக்கு அடுத்தும் வல்லினம் மிகும்



(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 7: தொடர்ச்சி)

இக்கோப்பில்,

“கை குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து கொடுக்கப்படும்’ என உள்ளது.

“கை’ என்பது  ஓரெழுத்து ஒரு மொழி எனப்படும். ஓரெழுத்துச் சொல்லிற்குப் பின்பும் வல்லினம் மிக வேண்டும்.

கைக்குழந்தை

தீத்தடுப்புப் பயிற்சி

தைத்திங்கள்

ஈத்தொல்லை

கேள்வி: ஓரெழுத்து ஒரு மொழி’ சிலவாகத்தானே இருக்கும்.

பதில் : இல்லவேயில்லை.

ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாய் அமையும் சிறப்பு தமிழில் தான் மிகுதியாக உள்ளது. நன்னூலார், நெடில் எழுத்துக்களில் உயிர், 6 மகர வரிசை 6 குறில் எழுத்துகளில் நொ, து ஆகிய சேர்ந்து 42 என்கிறார்.

 கு.கௌ, பி, வே எனச் சிறப்பில்லாதன 4 உள்ளன என்றும் குறிப்பிடுகின்றார்.

உயிர் நெடிலில்

 ஆ- பசு, ஈ- உயிரினம்; கொடுத்தல், ஊ-இறைச்சி, ஏ- அம்பு, ஐ -அழகு; தலைவன், ஓ-மதகு நீர் தாங்கும் பலகை எனப் பொருள். ஒள என்றால் “கடிதல்’ என்றும் “பூமி’ என்றும் பொருள் உள்ளனவாதலின் இதுவும் “ஒரெழுத்து ஒரு சொல்லே.

க, ச, வ வரிசைகளில்

நன்னான்கு

கா-சோலை

கூ-கூவு

கை – உடலின் உறுப்பு:

கோ- அரசன்

சா- இறப்பு

சீ- இகழ்ச்சி வெறுப்புகளின் குறிப்பு, சீழ்

சே-எருது

சோ-மதில்

வா – வரச்சொல்லுதல்

வி -விசும்பு, காற்று

வீ-வீழும்பூ,

வை- வைத்தல், கூர்மை,

வெள-கவருதல்

(ஐந்தாவதாக வி சேர்க்கப்பட்டுள்ளது.)

த, ந, ப வரிசைகளில்

ஐந்தைந்து

தா-தரச் சொல்லுதல்:

தீ -நெருப்பு:

து-உப்பு:

தூ-ஊன்:

தே-தெய்வம்;

தை-தைத்திங்கள்:, தைத்தல்:

நா-நாக்கு:

நீ -முன்னிலைச்சுட்டு;

நே-அன்பு;

நை-நொந்துபோதல்;

நொ-துன்பப்படுதல்;

நோ-நோய்;

பா-பாட்டு,

பூ-மலர்,

பே-நுரை,

பை-நிறம்; அழகு; பொருள்வைப்பதற்குரிய பை

போ-போதல்

மா-மாமரம்; பெரிய,

மீ-மேல்,

மூ-முதுமை

மே-அன்பு,

மை-கண்மை; அச்சு மை;

மோ-முகருதல்)

யா வரிசையில் 1

யா-யாவை, மர வகை, கரி மரம்

குறில் எழுத்துகளில், அ, இ, உ மூன்றும் அப்பக்கம், இப்பக்கம், உட்பக்கம் எúச் சுட்டுப் பொருள் தருவன.

 “உ’கரச் சுட்டு இப்பொழுது பயன்பாட்டில் இல்லை எனினும், “ஊழையும் உப்பக்கம் காண் பர்’ எனும் குறள்அடிபோன்று “ஒ’ என்றால் “ஒற்றுமையாயிரு’ “தகுதியாயிரு’ எனப் பொருள்கள் உள்ளன. எனவே 12 உயிர் எழுத்துமே ஓரெழுத்து ஒரு சொல் ஆகும்.

பின்னர் வந்தவர்கள் மேலும் சில ஓரெழுத்தொரு மொழிகளைக் குறித்துள்ளனர்.

இவ்வாறு வேறு எந்த மொழியிலும் ஓரெழுத்து ஒரு மொழிகள் மிகுதியாக இல்லை என்பதும் தமிழுக்குரிய சிறப்புகளில் ஒன்றாகும்.

கேள்வி: தைத்திங்கள் என்பது போன்று பிற மாதங்களுக்கு அடுத்து வல்லினம் மிகாதா?

பதில்: தைத்திங்கள் என்பது இருபெயரிட்டு பண்புத் தொகையாகும். மாரிக்காலம், முல்லைப்பூ போன்றவையும் இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகும்.

அனைத்து மாதங்களின் பெயர்களும் திங்கள் என்பதுடன் சேருகையில் “இருபெயரெட்டுப் பண்புத் தொகையாய்’ விளங்கி வல்லெழுத்து மிகும்.

தைத்திங்கள் மாசித்திங்கள், “பங்குனித் திங்கள், சித்திரைத் திங்கள், வைகாசித் திங்கள், ஆனித் திங்கள், ஆடித் திங்கள், ஆவணித் திங்கள், புரட்டாசித் திங்கள், ஐப்பசித் திங்கள், கார்த்திகைத் திங்கள், மார்கழித் திங்கள் என வரும்

கேள்வி: கிழமைகளில் இவ்வாறு வல்லின எழுத்து மிகுதியாய் வருமா?

பதில்: ஞாயிறு என்பதுடன் “கிழமை’ சேரும்பொழுது, ஞாயிற்றுக் கிழமை என வரும்.

செவ்வாய்க் கிழமை

வெள்ளிக் கிழமை

சனிக்கிழமை அல்லது காரிக்கிழமை

எனப் பிற கிழமைகளில் வல்லின எழுத்து இடையில் வரும்.

மேலும்

மழைக்காலம்

கோடைக்காலம்

பிச்சிப் பூ

மல்லிகைப்பூ

தாமரைப்பூ

அல்லிப்பூ

எனபன போல், பிற இடங்களிலும் வரும்.

மாதம் தமிழ்ச் சொல்லா?

வானியல் அறிவியல் மிகச்சிறந்த நிலையில் தமிழர்கள் இருந்துள்ளனர். நிலா பூமியைச் சுற்றும் கால அளவைக் கொண்டு ஒரு காலப்பகுப்பை வகுத்துள்ளனர். திங்களை அடிப்படையாகக் கொண்ட கால அளவைக் கொண்டு ஒரு காலப்பகுப்பை வகுத்துள்ளனர். திங்களை அடிப்படையாகக் கொண்ட அளவு என்பதால் “திங்கள்’ எனப் பெயரிட்டனர். நிலவின் மற்றொரு பெயர் மதி. மதியை அடிப்படையாகக் கொண்டு “மதியம்’ “மாதம்’ என உருவாகியுள்ளது. “மதியம்’ என்றால் நண்பகலன்று.

மாதம் மாசம் ஆனது இருப்பினும்

திங்கள் என்பது சிறப்பான சொல்லாகும்.

கேள்வி: ஆங்கில மாதங்களில் பெயர்களுக்குப் பின்னும் வல்லினம் மிகுமா?

மார்ச்சு, ஏப்பிரல், சூன், ஆகசுட்டு ஆகிய 4 மாதங்கள் நீங்கலாகப் பிற மாதங்களில்

சனவரித் திங்கள், பிப்ரவரித் திங்கள், மேத் திங்கள், சூலைத் திங்கள், செப்டம்பர்த் திங்கள், அக்டோபர்த் திங்கள், நவம்பர்த் திங்கள், திசம்பர்த் திங்கள் என வல்லின எழுத்து மிகுதியாய் வரும்.

Followers

Blog Archive