Thursday, December 25, 2025

தொல்காப்பியமும் பாணினியமும் – 15 : உரையாசிரியர்கள் நால்வருண விளக்கங்கள் தொல்காப்பியர் கொள்கைக்கு முரண்பட்டன



(தொல்காப்பியமும் பாணினியமும் – 14 : இடைச்செருகுநர்களின் தோல்விக்கான காரணங்கள்-தொடர்ச்சி)

 தொல்காப்பியர் காலத்தில்தான் ஆரியம் தமிழ் நாட்டில் பரவத் தொடங்கி இருக்க வேண்டும்.  தமிழகத்தில் முதன் முதலாகக் குடியேறிய வேற்று நாட்டார் வட ஆரியரே.  அவருள்ளும் மொழி நூற் புலமையும்ஒழுக்க மேம்பாடும் பிறர்க்கென வாழும் பெற்றிமையும் கொண்ட ஆரியரே தமிழகச் சான்றோருடனும் அரசர்களுடனும் தொடர்பு கொண்டனர்.  ஆரிய மொழிப் புலவரும் தமிழ் மொழிப்புலவரும் நட்புடன் அளவளாவி உறவாடினர். “கற்றாரைக் கற்றாரே காமுறுவர்அன்றோ?” எவரையும் வரவேற்று இன்ப வாழ்வு நல்கும் பண்டைத் தமிழர் வட ஆரியப் புலவரை வரவேற்று வாழ்வளித்ததில் வியப்பின்று.  தமிழரை யடிமையாக்கித் தமிழ் மொழியை ஒழிக்கும் உள்ளத்துடன் அன்று வடவாரியர் இங்கு வந்திலர்.  ஆதலின் புகலிடம் தேடி வந்த ஆரிய மொழிச் சான்றோரிடம் பொல்லாங்கு காட்டாது முகமன் கூறி வரவேற்று அகமகிழ ஆகும் உதவிகளைச் செய்தனர்.  அதனால் இருசாராரும் நெருங்கிப் பழகி ஒருவர் மொழியை ஒருவர் பயின்றனர்.  ஓரினத்தார் மற்றோரினத்தாருடன் கலந்து உறவாடுங்கால் இரு சாராரின் மொழிகளும் பண்பாடுகளும் கலைகளும் ஒன்றினுள் ஓன்று கலப்புறுவது இயற்கையேதடுக்க முடியாததும் ஆகும்.  ஆதலின் ஆரியர்கள் தமிழர்களின் மொழிபண்பாடுகலை முதலியவற்றைத் தமதாக்கிக் கொண்டது போலவேதமிழர்களும் ஆரியர்களின் மொழி பண்பாடு கலை முதலியவற்றைத் தமதாக்கிக் கொண்டனர்.  ஒருவரை ஒருவர் அடிமை கொள்ளல் வேண்டும் என்ற எண்ணம் இல்லாததால் பிற மொழி வெறுப்பும்பகைமை யுணர்ச்சியும் தோன்றவில்லைஆரியர்கள் தமிழகத்தில் செல்வாக்குத் தேட வேண்டிய நிலையில் இருந்ததால்தம் ஆரியநூல்களைத் தமிழர்கள் கற்கலாகாது என்று தடுக்கும் கொள்கையை அஞ்ஞான்று மேற் கொண்டிலர்.  தமது மொழியில் புலமை பெற்ற தமிழர்களும் வேற்றுப் புது மொழியாம்ஆரியத்தை விரைந்து கற்றனர்.  புதிய மொழியில் புலமை பெறுதலைப் பெருமையாகக் கருதுதல் என்றும் உள்ள இயல்பு.  ஆதலின் தொல்காப்பியரைச் சிறப்பித்துக் கூறப் புகுந்த பனம்பாரனார் தொல்காப்பியரின் வடமொழிப் புலமையை எடுத்துக்காட்டிச் சிறப்பித்துள்ளார். (பேராசிரியர் சி.இலக்குவனார்தொல்காப்பிய ஆராய்ச்சி :  பக்கம்: 26-27)

“ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன” என்றார் தொல்காப்பியர்.  ஆனால் உரையாசிரியர்களில் சிலர் உயர்ந்தோர் என்பதற்கு முதல் இரு வருணத்தார் (அந்தணர், அரசர்) என்றும், மூன்று வருணத்தார் (அந்தணர், அரசர், வணிகர்) என்றும் பொருள் கூறியுள்ளனர். “உயர்ந்தோ ரெனக் கூறலின் வேளாளரை ஒழிந்தோர் என்றுணர்க’  என்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளார்.  முற்றிலும் பொருந்தா உரை கூறித் தொல்காப்பியத்தை இழி நிலைக்குக் கொண்டு வந்து விட்டனர் உரையாசிரியர்கள்.  உரையாசிரியர் காலத்தில் ஆரிய முறையாம் நால்வகை வருண நெறி நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்திருக்கலாம்.  தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் இடம் பெற்றிலது.  அன்றியும் தொல்காப்பியர் தமிழக மக்கள் வாழ்வினைக் கூற வந்தனரேயன்றி, தமிழர்க்குத் தொடர்பிலாப் பிற நாட்டினர் வாழ்க்கை கூற நூல் செய்திலர்.  தொல்காப்பியர்க்குப் பிற்பட்டுத் தோன்றிய திருவள்ளுவர் உழவரை உயர்ந்தோரெனச் சிறப்பித்திருக்கவும், அவர்க்கு முன்பு வாழ்ந்த தொல்காப்பியர், உழவரை வேளாளரைஉயர்ந்தோரல்லர் என ஒதுக்கியிருத்தல் எங்ஙனம் சாலும்? ஆதலின் உரையாசிரியர்கள் நால்வகை வருணம் பற்றிக் கூறுவன வெல்லாம் தொல்காப்பியர் கொள்கைக்கும் காலத்துக்கும் முரண்பட்டன; பொருந்தாதன என்று அறிதல் வேண்டும். (பேராசிரியர் சி. இலக்குவனார்,தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 144-145 )

செம்மொழி காத்த செம்மல் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார் குன்னூரில் ஒரு நூலகம் ஆவணி 25, 1942 / செப்.10, 1911 அன்று அமைத்தவர். அங்கே தொல்காப்பியருக்குச் சிலை நிறுவியவர். இத்தகைய அறிஞர் பெருமக்களாலும் ஆன்றோர்களாலும்தான் தொல்காப்பியர் புகழ் காலந்தோறும் நிலைத்து நிற்கிறது. நாம் அவர் புகழை மேலும் உலகெங்கும் பரப்புவோமாக!

  • தொல்காப்பிய ஆராய்ச்சி, பேராசிரியர் முனைவர் சி. இலக்குவனார்
  • தொல்காப்பியர் வரலாறு, பேராசிரியர் க.வெள்ளைவாரணனார்
  • Tholkappiyar: Tholkappiyam, MS. NISHA KUTTY
  • இலக்கண வரலாறு, சோம.இளவரசு
  • ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியக் கட்டுரைகள், ஈழத்துப் பூதந்தேவனார் தமிழ்ப்புலவர் கழக வெளியீடு, நவம்ப் 2004
  • பழந்தமிழ், பேராசிரியர் முனைவர் சி. இலக்குவனார்
  • INDIAN LITERARY CRITICISM AND THEORY, 7. Panini, Math Wiki
  • உலகத்தொல்காப்பிய மன்றம். இணையத் தளம்
  • வலைத்தளங்கள்
  • விக்கிபீடியா
  • உரையாசிரியர்கள், மு. வை. அரவிந்தன்
  • Tholkappiyam in English with critical studies, Dr.S.Ilakkuvanar 
  • வடமொழி ஒரு செம்மொழியா?, முனைவர் ப.மருதநாயகம்
  • ஆய்வுலக வழிகாட்டி பேராசிரியர் ப.மருதநாயகம், இலக்குவனார் திருவள்ளுவன்
  • தமிழ்ச்சிமிழ், தொல்காப்பியம், இலக்குவனார் திருவள்ளுவன்
  • தொல்காப்பியம் ஓர் அறிமுகம், உரை, பேராசிரியர் தெ. முருகசாமி
  • தொல்காப்பிய விழா மலர், தொல்காப்பிய மன்றம், கனடா, 2023
  • தொல்காப்பியப் பொருளதிகாரமும் சங்க இலக்கியங்களும் காட்டும் பெண்களின சமூக நிலை, முனைவர ்செல்வநாயகி சிரீதாசு
  • முனைவர் இராசமாணிக்கனார்
  • https://tamilandvedas.com/
  • சான்லாக்குசு பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ் (https://www.shanlaxjournals.in/)
  • Aindra School of Grammar 
  • ஆய்வுச்சுடர்: பன்னாட்டு பன்முகத்தமிழ் மி்ன்-ஆய்விதழ்
  • இணையத்தில் இடம் பெற்ற இன்னும் சில நூல்களும் பல கட்டுரைகளும்.

000

(தொடரும்)

Saturday, December 20, 2025

குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 3.பெரியாரின் தமிழ்ப்பற்றும் தமிழ்ப்பழிப்பும் – இலக்குவனார் திருவள்ளுவன்

      21 December 2025     அகரமுஐதல



(குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 2. இந்து மதத்தை மட்டும்தான் பெரியார் எதிர்த்தாரா? – தொடர்ச்சி)

பெற்றோர் தம் குழந்தையிடம் “வெளியே போனால் காலை உடைத்து விடுவேன்” என்று சொன்னால் வெறுப்பில் சொல்லும் சொற்களா இவை. அவர்கள் தம் பிள்ளையிடம் முட்டாளே என்று சொன்னால் உண்மையிலேயே அவ்வாறு கருதுகிறீர்கள் என்ற பொருளா? உண்மையிலேயே முட்டாளாக இருந்தாலும் அறிவாளியாக எண்ணுவதுதானே பெற்றோர் இயல்பு. அதுபோல்தான் சில நேரங்களில் பெரியார் தமிழைப்பற்றியும் தமிழர்களைப்பற்றியும் சொன்னவையும். எனினும் சில நேரம் அவர் சொன்ன சுடுசாெற்களுக்கு அவர மீது பற்றுள்ள தமிழன்பர்கள் சப்பைக் கட்டு கட்டினாலும்  உண்மையிலேயே அவர் சொன்னவை தமிழுக்கு எதிரான பழிப்புச் சொற்களே. எனினும்  தமிழ்ப்பற்றுமிக்க அவர், தமிழ் மேலும் மேன்மையடைய வேண்டும் என்றும் தமிழர்கள் விடிவைக் காண வேண்டும் என்றும் பெருவிழைவு கொண்டவர். அவற்றிற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டவர். எனவே, அவரிடம் காணும் செயற்பாடுகளில் மிக்கன கொண்டு, தக்கன போற்றி, அல்லனவற்றைப் புறந்தள்ளி அவரைப் போற்ற வேண்டும்.

பெரியார் தம் வாழ்நாளில் பயணம் மேற்கொண்ட தெ்ாலைவு 13,12,00 புதுக்கல்.இது பூமியின் சுற்றளவை விட 33 மடங்கு மிகுதி; இப்பயணத்தில் அவர் ஏறத்தாழ 10,700 பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளார்; திருமணங்களில், கல்விக்கூடங்களில் என அவர் ஆற்றிய அரங்கு உரைகளைச் சேர்த்தால் இது மிகுதியாக இருக்கும்; எண்ணாயிரத்திற்கு மேற்பட்ட நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்; 21,400 மணி நேரம் உரையாற்றியுள்ளார்; 39 முறை வெளிநாடுகளுக்குச்சென்று பரப்புரை ஆற்றியுள்ளார். இவை  யாவும்  மக்கள் நலனுக்காக அவர் வாழ்வை ஒப்படைத்ததை மெய்ப்பிப்பனவே.

ஆனால், சிலர் தமிழ்த்தேசியப் போர்வையில் திராவிடத்தை ஏசுவதாகக் கருதி, ஆரியத்திற்குத் துணை நின்று பெரியாரை ஏசுகிறார்கள். பெரியாரின் தவறான கொள்கைகளையோ அவற்றின் அடிப்படையிலான செயற்பாடுகளையோ சுட்டிக்காட்டினால் தவறல்ல. அவ்வாறு எச்செயல் எத்தன்மையத்தாயினும் அச்செயலையும் செயலின் விளைவுகளையும் ஆராய்ந்து நடுநிலையுடன் பேசுவதும் எழுதுவதும் தவறல்ல. பெரியார் பெரியார்தான் என்பதை உணர்ந்து அவரின் பெருமைகளையும் போற்ற வேண்டும்.

இவைபோன்ற கருத்துகளைப் பெரியார் தம் குடியரசு இதழிலும் பகுத்தறிவு இதழிலும் வெளியிட்டுத தமிழுக்கு நலம் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்திருக்கிறார்.

தமிழறிஞர்கள் தமிழ்த்தூய்மையை வலியுறுத்தினர். பெரியாரும் , தமிழ்ப் புத்தகங்கள் தூய தமிழில் எழுதப்பட வேண்டும் என்றும் சமற்கிருதச் சொற்கள் தமிழில் கலந்தால் தமிழுக்குப் பெருமை குறைந்து போகாது என்பது தவறு என்றும், அப்படிக் கலப்பதுதான் மொழியின் முன்னேற்றம் என்று கூறுவதும் தவறு என்றும்   வலியுறுத்தியுள்ளார். தமிழின்மீதுள்ள பெரியாரின் பற்றுக்கு இவைபோன்ற கருத்துகளே சான்றாகும்.

தமிழுக்கு என்ன செய்ய வேண்டும் எனப் பெரியார் வலியுறுத்துவன யாவும் அவரின் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்துவனவே. தமிழுக்காக என்ன செய்ய வேண்டும் எனப் பிறர் கூறுனவற்றைத் தம் இதழில் வெளியிட்டு அவற்றை மக்களிடையே பரப்பினார். சான்றுக்குப் பின்வருவனவற்றைப் பார்ப்போம்.

1. தமிழர் தமிழ்ப் பெயர் இட வேண்டும்.

2. தமிழ்நாட்டுப் பிரிவு, ஊர், தெரு, வீடு பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும்.

3. வீட்டிலும் கடைத்தெருவிலும், அலுவலகங்களிலும், வழிப் போக்கிலும் ஆங்கிலச் சொல்லும், சமஸ்கிருதமும் தமிழில் கலப்பதைத் தவிர்க்க வேண்டும்.

4. தமிழில் இல்லாதவற்றிற்கு ஆங்கிலச் சொல்லைக் கலக்கலாம்.

5. தமிழில் இல்லாதவற்றிற்குப் புதிய சொல் உருவாக்க வேண்டும். அறிஞர்கள் உருவாக்கும் புதுச் சொல்லைப் பொது மக்கள் பயன்படுத்த வேண்டும்.

6. கோயில்களிலும், விழாக்களிலும் தமிழே ஒலிக்க வேண்டும்.

7. தமிழைப் பிழைபட வழங்குபவரைத் திருத்த வேண்டும்.

ஆகிய, சென்னை தமிழறிஞர் கழகத்தின் கோரிக்கைகளை 04.12.1943 குடிஅரசு ஏட்டில் பெரியார் வெளியிட்டு அவற்றிற்கான தம் உடன்பாட்டைத் தெரிவித்தார்.

பெரியாரின் தமிழ்ப்பற்றிற்கான சான்றுகளைப் பார்த்த பின்னர் அவரது தமிழ் மீதான பழிப்புரைகளையும் பார்ப்போம்.

(தொடரும்)

Friday, December 19, 2025

மொழிப்போர் வரலாறு அறிவோம்!-11 : மொழிப்போரில் மகளிர் பங்களிப்பு – 2 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-10 : மொழிப்போரில் மகளி்ர் பங்களிப்பு – 1: தொடர்ச்சி)

இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில்  பெண்களின் அளப்பரிய பங்கில் ஒரு பகுதிதான் பதிவுகளில் உள்ளன. அவற்றில் நாமறிந்த ஒரு பகுதியைத்தான் ‘பெண்களின் முதன்மைப் பங்கு’ என்னும் தலைப்பில் முன் கட்டுரையில் பார்த்தோம். எனவே, இன்னும் சொல்வதற்கு மிகுதியாக உள்ளன. எனினும் மொழிப்போரில் சிறை புகுந்த வீராங்கனைகள் பெயர்களைப் பார்ப்போம்.

மொழிப்போரில் சிறை புகுந்த வீராங்கனைகள் நிரல்

17.1.1938இல்

ஈரோடு (இ)ரங்கம்மாள்

சென்னை இலலிதாம்பாள்(இரு குழந்தைகளுடன்)

14.11.1938 இல்

மருத்துவர் தருமாம்பாள்

புதின ஆசிரியர் மூவாலூர் இராமாமிர்தத்தம்மையார்

பட்டம்மாள் (திருவாரூர் பாவலர் பாலசுந்தரம் மனைவி)

மலர் முகத்தம்மையார்(மயிலைத் தமிழ்ப்புலவர் முத்துக்குமாரசாமியார் தமக்கை)

சீதம்மாள் (மரு.தருமாம்பாள் மருமகள், மூன்று அகவையுடைய குழந்தை மங்கையர்க்கரசி, ஓர் அகவைக்குழந்தை நச்சினார்க்கினியன் ஆகியோருடன்)

21.11.1938இல்

உண்ணாமலையம்மையார் (முன்னாள் திராவிடன் ஆசிரியர் புலவர் அருணகிரிநாதர் மனைவி, தமிழரசி என்னும் ஓர் அகவைக் குழந்தையுடன்)

புவனேசுவரி அம்மையார்(தோழர் என்.வி.நடராசன் மனைவி, சோமசுந்தரம் என்னும் 2 அகவைக் குழந்தையுடன்)

சிவசங்கரி(தோழர் டி.வி.முருகேசன் மனைவி, (உ)லோகநாயகி என்கிற2 அகவைக் குழந்தையுடன்)

சரோசனி அம்மையார்(தோழர் தேவசுந்தரம் மனைவி மார்த்தாண்டம் என்கிற 2 அகவைக் குழந்தையுடன்)

கலைமகளம்மையார்(மரு.சிற்சபையின் மனைவி மரு.தருமாம்பாள் மருமகள்)

ஞானசுந்தரி அம்மையார்(விமலா என்கிற 2 அகவைக் குழந்தையுடன்)

தனக்கோட்டிஅம்மையார், சதுரங்கப்பட்டினம்

28.11.0938இல்

இராசம்மாள்(பெல்லாரி திவான்பகதூர் கோபால்சாமி முதலியார் தமக்கை; பண்டிதை நாராயணி அம்மையார் தாயார்)

கமலம்மாள்(சேக்காடு தோழர் பாலசுப்பிரமணிய முதலியார் மனைவி)

கேக்காடு அங்கயற்கண்ணி அம்மையார்

வேலூர் துளசிபாய்(பிராமணர்)

5.12.1938இல்

செயலெட்சுமி அம்மையார்(இந்தி எதிர்ப்புப் போரில் 85 மாதக்கடுங்காவல் பெற்ற சிந்தாதிரிப்பேட்டை சாமிநாதனின் சிறிய தாயார்)

12.12.1938இல்

(உ)ரோசம்மாள் (சிவாசி என்கிற 2 அகவைக் குழந்தையுடன்)

16.12.1938இல்

அம்பலூர் அபரஞ்சிதம்மாள்(குழந்தை இளங்கோவுடன்)

அம்பலூர் கோவிந்தம்மாள்

கனகாம்பாள்

ஆர்.செல்லம்மாள்

9.1.1939இல்

சேலம் தேவகி அம்மாள் (இரு குழந்தைகளுடன்)

22.01.1939 இல்

எசு.குப்பம்மாள்

பிரகாசம்மாள்

சொக்கம்மாள்

பகவதியம்மாள்

துளசிபாய்

இராசேசுவரி அம்மாள்

குணபாக்கியம் அம்மாள்

கண்ணம்மாள்(இரண்டு அகவைக் குழந்தையுடன்)

விச்சி அம்மாள்

கமலம்மாள்(கசேந்திரன் என்கிற குழந்தையுடன்)

30.01.1939 இல்

சென்னை கல்யாணி அம்மாள்

6.02.1939இல்

மீனாட்சி அம்மாள்

முத்தம்மாள்(தன் குழந்தையுடன்)

அன்னம்மாள்

அமிர்தம்மாள்

பத்மாவதி அம்மாள்

17.02.1939இல்

சென்னை ஆர்.நாராயணி அம்மையார்(பெரியாரைப் பதினைந்து நாள்களுக்குள் விடுதலை செய்க. இல்லையேல் மறியல் என்று முன்கூட்டி எச்சரிக்கை விடுத்து  முதலமைச்சர் இல்லம் முன் மறியல் செய்து சிறை புகுந்தார்.)

20.02.1939இல்

பட்டம்மாள் (பாவலர் பாலசுந்தரம் மனைவி குழந்தை ஆலங்காட் டானுடன்)

ஞானம் அம்மையார்(புலவர் மறை திருநாவுக்கரசு மனைவி. அறிஞர் மறைமலையடிகளாரின் இளைய மருமகள், குழந்தை சிறையஞ்சானுடன்)

6.03.1939இல்

மலர்க்கொடி அம்மையார்

13.03.1939இல்

இராசம்மாள்(திருவாரூர் தோழர் டி.என்.இராமனின் தாயார்)

சரோசனி அம்மையார்(மறை-மாணிக்கவாசகத்தின் மனைவி, மறைமலை அடிகளாரின் மூத்த மருமகள், குழந்தை மறைக்காடனுடன்)

திருச்சி எபினேசம்மாள்

மாயவரம் இரசாமணி அம்மாள்

26.06.1939 இல்

நெய்வேலி தாயாராம்மாள்

நாகை விசாலாட்சி அம்மாள்

17.07.1939இல்

11ஆவது சருவாதிகாரி சுத்தம் ரோசம்மாள்

குருவம்மாள்(சிறையில் உயிர்த்த வீரன் தாளமுத்துவின் மனைவி)

காமாட்சியம்மாள்

மருதம்மாள்(மீனாட்சி சுந்தரம்,அம்சவேணி என்கிற இரு குழந்தைகளுடன்)

வடிவாம்பாள்(ஐந்து அகவைக்ம குழந்தையுடன்)

மலர்க்கொடி அம்மையார்(இரண்டாம் முறை சிறைவாசம்)

இலட்சுமி அம்மாள்

24.07.1939இல்

தாயாரம்மாள் (இரு குழந்தைகளுடன்)

21.08.1939இல்

12ஆவது சருவாதிகாரி மாரியம்மாள்

நெய்வேலி பொன்னம்மாள்(நெல்லைத் தமிழ்ப்புலவர் இராமநாதர் மனைவி)

தமிழ்அன்னை (8 அகவைக் குழந்தையுடன்)

4.09.1939இல்

நாச்சியம்மாள்(இந்திப்போரில் முதன் முதல் சிறைசென்ற பல்லடம் தோழர் பொன்னுசாமியின் மனைவி, நாகம்மாள் என்கிற 10 மாதக் குழந்தையுடன்)

பூவாளுர் செல்லம்மாள்

ஈரோடு மீனாட்சியம்மாள்(மூன்று அகவை இரத்தினம், 9 மாத நாகம்மாள் ஆகிய குழந்தைகளுடன்)

அங்கமுத்து அம்மாள்

காஞ்சி இராசாமணி அம்மாள்

இந்திப் போரில் சிறை சென்ற மங்கைமார் தொகை 73, அவர்களுடன் சிறை சென்ற குழந்தைகள் தொகை 32.)

இத்தகவல்கள் முனைவர் ம.நடராசன் தொகுப்பாசிரியராகவும் மணா பதிப்பாசிரியராகவும் கொண்டு வெளிவந்துள்ள உயிருக்கு நேர் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது என நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Thursday, December 18, 2025

தொல்காப்பியமும் பாணினியமும் – 14 : இடைச்செருகுநர்களின் தோல்விக்கான காரணங்கள்-இலக்குவனார் திருவள்ளுவன்



(தொல்காப்பியமும் பாணினியமும் – 13 : இடைச்செருகல்கள் – தொடர்ச்சி)

இடைச்செருகுநர்களின் தோல்விக்கான காரணங்கள்

தொல்காப்பிய இடைச்செருகுநர்களின் தோல்விக்கான காரணங்கள் குறித்துப் பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார்  பின்வருமாறு தெரிவிக்கிறார்:- ”தொல்காப்பியர் இலக்கண முறைமைகளைத் தொடுத்துக் கூறும் அல்லது அடுக்கி வைக்கும் பாங்கு தொன்மைமிக்க  தமிழின் இலக்கணச் சீர்மையை மட்டுமின்றி, நம் முன்னோரின் சிந்தனைப்போக்கின் முதிர்ச்சியையும் ஏரணவியலின் தொன்மையையும், அறிவியல் முறைமைப்படத் தரவுகளைத் தொகுத்து வழங்கும் ஆய்வுநெறிமுறைப் பயிற்சியையும் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது.  தமிழைக் கணிணிமொழி என்று பெருமிதத்துடன் கொண்டாடிக் கொள்ளத் தூண்டுவது எழுத்துப் படலம், சொற்படலம் ஆகிய இருபடலங்களின் அமைப்புமுறையேயாகும்.  இந்தச் சங்கிலித்தொடர்ச் செய்தித்தொகுப்பின் கட்டுக்கோப்பால்தான் இடைச்செருகல் விளையாட்டுகளை இவ்விரு படலங்களிலும் தொல்காப்பியத்தின் பின்வந்தோர் நிகழ்த்தமுடியவில்லை.(நன்றி : செம்மொழிச்சுடர் இணையத்தளம்)

நூல்களில் பிராமணியத்தைத் திணித்து ஆரியத் தழுவல்களாகக் காட்டுவதை விட, நூலாசிரியர்களைப் பிராமணர்களாகக் காட்டினால் பணி எளிதாகும் எனக் கருதிய ஆரியர்கள் தமிழ்ப்புலவர்களுக்குச் சமற்கிருதப் பெயர்களைச் சூட்டினர். திரணதூமாக்கினிதான் தொல்காப்பியர் என்றும் (சிரீவல்லபர்தான் திருவள்ளுவர் என்றும்) ஆரியர்கள் கதை கட்டுகின்றனர். இது குறித்து ஏ.சி.பருனால், மெனாண்டர்(Menander) என்ற பெயரை மிலிண்டா என்றும் தெமீட்டுரியசு(Demeterius) என்பதைத் தத்தமித்திரா(Dattamitra) என்றும் மாற்றுவதுபோல் கிரேக்கப்பெயர்களைச் சமற்கிருதப் பெயர்களாக மாற்றும் மன்னிக்க முடியாத ஏமாற்றுவேலைகளில் சமற்கிருதவாணர்கள் ஈடுபட்டதைக் குறிப்பிடுகிறார். (Arthur Coke Burnell 11 சூலை 1840 – 12 அட்டோபர் 1882  தஞ்சாவூர் மாவட்ட நீதிபதியாக இருந்த பொழுது 01.11.1875 அன்று இந்நூலை வெளியிட்டார்.) இருப்பினும் அன்று முதல் இன்று வரை இடைச்செருகல்கள் ஒரு புறமும் சாதியக் கட்டுக்கதைத் திணிப்புகள் மறுபுறமுமாக நடந்துகொண்டுதான் உள்ளன.

தொல்காப்பியம் – ஒரு கவிதை இலக்கண நூல்

தொல்காப்பியம் எழுத்து, சொல் எனத் தமிழ்மொழி இலக்கணம் மட்டுமல்லாமல் கவிதைக்குரிய இலக்கணத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது வேறு எந்தமொழியிலும் காணக்கிடைக்காத ஒரு நிலையாகும். (முனைவர் ச. அகத்தியலிங்கம் : மொழியியல் நோக்கில் தமிழ்ச் செம்மொழி, உங்கள் குரல் தமிழ்ச்செம்மொழிச் சிறப்பு மலர்: பக்.29)

தொல்காப்பியர் திருவள்ளுவருககுக் காலத்தால் முற்பட்டவர்

  தமிழக ஆராய்ச்சியாளருட் சிலர் திருவள்ளுவரைத் தொல்காப்பியர்க்கு முற்பட்டவர் என்று கூறுகின்றனர்.  அங்ஙனம் கூறுவது  உலகப் பெரும் புலவர் வள்ளுவர்பாற் கொண்டுள்ள பற்றுதலால்தான் என்று கருதவேண்டியுளது.  உயர் அறங்களை உலகுக்கு அறிவிப்பதில் முதற்பாவலராய் இருப்பவர் காலத்தானும் முற்பட்டவராகத்தான் இருத்தல் வேண்டும் என்று எண்ணி விட்டனர்போலும்.  காலத்தால் முற்பட்டவர் என்பதால் பெருமையும் பிற்பட்டவர் என்பதால் சிறுமையும் உண்டு என்று கருதுவது மிக மிகத் தவறேயாகும்.  இருபெரும் புலவர்களும் இருவேறு துறைகளில் இணையற்றவர்கள் என்பதில் எட்டுணையும் ஐயமின்று.  முற்பட்ட காலத்தின் துணைகொண்டு முற்பட்டவராக விளங்க வேண்டிய நிலையில் இருவரும் இலர். ஆதலின் காய்தல் உவதல் இன்றி இருவருள்  எவர் காலத்தால் முற்பட்டவர் என்று ஆராய்தல் நமது கடனாகும்.

 தொல்காப்பியர், திருவள்ளுவருக்குக் காலத்தால் முற்பட்டவர் என்பதனை இருவர் நூல்களுமே எடுத்துக் காட்டுகின்றன. (பேராசிரியர் சி.இலக்குவனார்: தொல்காப்பிய ஆராய்ச்சி : பக்கம்:11)

தொல்காப்பியர் வரலாறு சரியாக அறியப்படாமையால் அவரது காலமும் சரியாக உணரப்படவில்லை. அறிஞர்களே மாறுபட்ட கருத்துகளைக் கூறுகின்றனர். தமிழின் சிறப்புகளைக் குறைத்துக் கூறுவதையே தொழிலாகக் கொண்டோரும் தொல்காப்பியம் குறித்துத் தவறான கருத்துகளைத் திணித்து அவையே உண்மை என்பதுபோல் பரப்பி வருகின்றனர்.

தொல்காப்பியத்தின் காலம் பற்றி அறிஞர்களிடையே வேறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன. கி.பிக்கு முந்தையது என்று பல அறிஞர்களும் பிந்தையது என்று சிலரும் குறிப்பிடுகின்றார்கள். காலக் கணக்கில் வேறுபட்ட கருத்துகள் இருந்தாலும் தோராயமாகத் தொல்காப்பியம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி இருக்க வேண்டும் என்பதைப் பெரும்பாலான அறிஞர்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள்.

தமிழுக்குக் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் எனப் போற்றப்படும் தொல்காப்பியம் காலந்தோறும் போற்றிப் பாதுகாக்கப்பட்டுள்ளது. வாய்மொழி மரபாகவும் சுவடிகள் வழியாகவும் பாதுகாக்கப்பட்டிருக் கின்றது. உரைகள் தோன்றிய பிறகு தொல்காப்பியத்தின் பெருமை மேலும் பரவலாக்கப்பட்டுள்ளது. அச்சுக்கலை வளர்ந்தபிறகு தமிழறிஞர்கள் உரையோடு கூடிய தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியங்களையும் பிற இலக்கிய, இலக்கணங்களையும் ஆர்வத்தோடு பதிப் பித்துள்ளனர். இவ்வகையான ஆன்றோர்களின் அரும் பணியாலேயே தமிழ் இன்று உலகோர் அறிந்து போற்றப்படும் நிலையைப் பெற்றுள்ளது.

தொல்காப்பியத்தின் காலத்தைப் பின்னுக்குத் தள்ளி இன்பம் காண்போர் உள்ளனர். ஆரியத்தைப்பற்றிய தவறான கற்பிதத்தை நம்புவோர் இருப்பினும் அதன் உண்மையை வெளிப்படுத்துவோரும் பெருகி வருகின்றனர்

தொல்காப்பியம் பற்றிய ஆய்வுகள் நிறைய வந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆய்வுகள் மேன்மேலும் வளரும். இவ்வகையான ஆய்வு வளர்ச்சி ஏற்படுவதற்கு அடிப்படையான முந்தைய நிலையை ஆய்வாளர் இரா. வெங்கடேசன் அரிதின் முயன்று தொல்காப்பியம் தொடர்பான கருத்துகளைத் தொகுத்துத் ‘தமிழ்ப் புலமை மரபில் தொல்காப்பியம்’ என்னும் நூலைப் பதிப்பித்துள்ளார். இந்த அரிய நூலை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் (2014) வெளியிட்டுள்ளது. தொல்காப்பிய உரைகள், பதிப்புகள், ஆய்வாளர்களின் கருத்துகள் இந்நூலில் விரிவாகத் தொகுக்கப் பட்டுள்ளன. தொடர்ந்து தொல்காப்பியத்தை ஆய்வு செய்வோருக்கும் இளம் ஆய்வாளர்களுக்கும் இந்நூல் மேலும் உதவும் வகையில் உள்ளது என உறுதியாகக் கூறலாம்.

(தொடரும்)

Followers

Blog Archive