தேசியக் கல்வித் திட்டம் 2019 –
புதிய கல்லறையில் பழைய பெட்டி
மனிதனை மனிதனாக வாழச் செய்வது கல்வி. கல்வி அவரவர் பண்பாட்டுச் சூழலுக்கு ஏற்ப அமைந்தால்தான் கல்வியில் சிறந்து சிறந்த மனிதனாக வாழ முடியும்.
இந்தியா பல தேசிய இன வழி மாநிலங்கள் இணைந்த ஆட்சிப் பரப்பாக உள்ளது. எனவே, கல்வியும் தேசிய இனங்களுக்கேற்ப மாறி அமையும். ஆனால், ஒரே நாடு, ஒரே மொழி என்ற சட்டத்திற்குள் கல்வியை மாற்ற முயலும் பொழுது கல்வி முறை சீரழிகிறது. மனிதக் குலமும் நலங்குன்றுகிறது.
மத்திய அரசு தன் நோக்கத்தை நிறைவேற்ற இந்தியா முழுமைக்குமான புதிய கல்வித்திட்டத்தை வகுக்க 2015 இல் முடிவெடுத்தது. இதன்படி, மேனாள் அமைச்சரவைச்செயலர் திரு தி.சீ.இர.சுப்பிரமணியன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. மே 2016 இல் இக்குழு அறிக்கை அளித்தது. இதில் சில உள்ளீடுளைமத்திய அரசு சேர்த்தது. உள்ளீடுகள், முன்வைப்புரைகள் அடிப்படையில் அறிக்கை அளிக்க முனைவர் கத்தூரிரங்கன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இதில் தலைவருடன் 7 உறுப்பினர்களும் ஒரு செயலரும் உள்ளனர். இக்குழு திசம்பர் 15, 2018 இல் மத்திய அரசிற்கு அறிக்கை அளித்தது. இதன் அடிப்படையிலான கருத்துகளையே மத்திய அரசு இப்பொழுது கேட்டுள்ளது.
புதிய கல்வித்திட்டம் 2019இன் வரைவு மனித வள மேம்பாட்டுத் துறை இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
“பண்டைய இந்தியாவில் முதன்முதலில் முகிழ்த்த கல்விமுறை வேதம் சார்ந்த கல்வி முறை என்று அறியப்படுகிறது” என 2016 ஆம் ஆண்டு கல்விக் கொள்கை கூறுகிறது. இத்தவறான எடுகோளின் அடிப்படையிலான இப்போதைய அறிக்கை எங்ஙனம் கண்ணோட்டமின்றி நடுவுநிலைமையுடன் ஆராய்ந்து இருக்க முடியும்? மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் இந்தி, சமற்கிருதத் திணிப்புக் கொள்கையில் மாற்றம் இருக்காது என்பது தெரிந்ததுதான். எனவே,இத்திட்ட வரைவில் உள்ள இந்தி, சமற்கிருத மொழித்திணிப்புகளைத் தனியே பார்க்கலாம். இப்பொழுது இத்திட்டம் சமச்சார்பில் இலலை என்பதையே சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
திட்டவரைவை வெளியிட்டுக் கருத்து கேட்கும் மத்திய அரசு முதலில் என்ன செய்து இருக்க வேண்டும்? திட்ட வரைவு முடிவாகும் முன்னரே மக்களிடம் வினா நிரல் அளித்துப் புதியக் கல்வித்திட்டம் குறித்த கருத்துருக்களைப் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை.
திட்ட வரைவு உருவாக்குவதற்காக மத்திய அமைச்சுத் துறைகள், அமைப்புகள், நிறுவனங்கள் என 74 அமைப்புகளிடம் கலந்து பேசியுள்ளது. இவற்றில் ஒன்றுகூடத் தமிழ் நாட்டில் இல்லை.
217 வல்லுநர்களிடம் கலந்து பேசியுள்ளது. அவர்களுள் எண்மர் தமிழ்நாட்டவர். எண்மரில் நால்வர் வேலூரில் உள்ளவர்கள். சென்னையிலுள்ள இந்தியத் தொழில் நுட்பக்கழகத்தில் இருந்து இருவரும் திருச்சிராப்பள்ளியில் உள்ள இ.தொ.க.(ஐ.ஐ.டி.)-இல் இருந்து ஒருவரும் மதுரை காமரசார் பல்கலைலக்கழகத்தில் உள்ள மனிதவளமேம்பாட்டு மையத்தில் இருந்து ஒருவரும் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழ்க்கல்வியாளர் ஒருவரும் கலந்து பேசப்படவில்லை. இந்தியாவில் உள்ள உலக மூத்த செம்மொழியான தமிழ்க்கல்வி பற்றி ஆராயாத திட்ட அறிக்கை எப்படி நடுவுநிலைமையுடன் இருக்கும்?
கல்வியில் மொழி, கலை, பண்பாடு முதன்மைப் பங்கு பெற வேண்டும். எனவேதான், திட்ட அறிக்கை சமற்கிருதத்தில் உள்ள அறிவுப்புலங்களைப் போற்றுகிறது.
பிற மொழிக்கல்வி என்னுமிடத்தில் எடுத்துக்காட்டிற்காகத் தமிழைக் குறிப்பிடும் கல்வித் திட்டக்குழுவினர் தமிழை அறியாதவர்கள் எனக் கூற இயலாது. ஆனால், என் செய்வது? இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி என்பது மத்திய அரசின் கொள்கையாக உள்ளது. அதற்கேற்ப இந்தி, சமற்கிருத முதன்மையில் புதிய கல்வித் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதுதானே இலக்காக இருக்க முடியும்? அதனைச் செவ்வனே செய்துள்ளனர்.
புதிய கல்வித் திட்டக் குழுவினருக்குத் தமிழ்நாட்டில் தமிழ்ப்பல்கலைக்கழகம் இருப்பது தெரியாதா? வேறு பல்கலைக்கழகங்கள் இருப்பதுதான் தெரியாதா? இருந்தால் அவர்களுக்கு என்ன என்கிறீர்களா? ஆமாம், இப்பல்கலைக்கழகம் சார்ந்தவர்களைக் கலந்து பேசவேண்டும் என்பது அவர்கள் தலையெழுத்தா என்ன?
புதிய கல்வித்திட்டம் மாநிலக் கல்விக்கு – மண்ணின் மக்களுக்கு உரிமை கொடுக்கும் வகையில் அமையவில்லை. அவ்வாறிருக்க எதற்கு இவர்களைக் கேட்டு நேரத்தை வீணாக்குவத? எனவேதான் புதிய கல்வித் திட்டக்குழுவினர் தமிழறிஞர்களையோ தமிழ்க்கல்வியாளர்களையோ கலந்து பேசவில்லை. எனவே, புதிய கல்வியில் தமிழுக்குப் பாதுகாப்பு இல்லை.
தொடக்கத்தில் குறிப்பிட்டதுபோல், தேசியக் கல்வித்திட்டம் எந்தெந்த வகைகளில் இந்தியையும் சமற்கிருதத்தையும் திணிக்கிறது? அயல்மொழித் திணிப்புகளுக்காகத் தாய்மொழியைச் சிதைத்து மாணவர் கல்விக்கு எவ்வாறு கேடு விளைவிக்கிறது? மாணாக்கர்கள் மேல் எவ்வாறு மொழிச் சுமையை ஏற்றுகிறது? பைந்தமிழ் கொண்டு பாராண்ட தமிழினத்தை எங்ஙனம் பாழ்படுத்துகிறது? என்பனபற்றித் தனியே பார்ப்போம். வாய்ப்பிருப்பின் உரையரங்கம் நடத்துவோம்.
நாம் அறிய வேண்டியதெல்லாம் தேசியக் கல்வித் திட்ட உருவாக்கத்தில் தமிழாய்ந்த தமிழறிஞர்களின் கருத்துகளைக் கேட்கவில்லை. எனவே, நாம் இதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
சமநிலையில் கருத்தறிந்து திட்டமிடப்படாத தேசியக் கல்வித் திட்டத்தால் தேசிய மொழியினர் எதிர்த்துத் திரள்வது ஆட்சிக்கு முடிவு கட்டுவதாக அமையும். எனவே, ஆட்சியைத் தற்காத்துக் கொள்ளவாவது கல்வித்திட்டத்தை மாநிலப்பட்டியலில் சேர்த்து மாநிலத் தன்மைக்கேற்ப கல்வித் திட்த்தை வகுக்க ஆவன செய்ய மத்திய அரசை வேண்டுகிறோம். மத்திய அரசின் இணக்கத்தில் உள்ள தமிழக அரசும் இதற்கான முன் முயற்சி எடுக்க வேண்டுகிறோம்.
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.( திருவள்ளுவர், திருக்குறள் 435)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல
No comments:
Post a Comment