Showing posts with label Ilakkuvanar Thiruvalluvan. akaramuthala. Show all posts
Showing posts with label Ilakkuvanar Thiruvalluvan. akaramuthala. Show all posts

Tuesday, April 30, 2019

தனித்தனிப் பரப்புரைகளைத் தடை செய்து வேலூரில் தேர்தலை நடத்துக! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

தனித்தனிப் பரப்புரைகளைத் தடை செய்து வேலூரில் தேர்தலை நடத்துக!

 வேலூரில் மட்டும்தான் வாக்கு வணிகம் நடைபெற்றதுபோல் தேர்தல் ஆணையம் அங்கே தேர்தலை நிறுத்தி விட்டது. வாக்கு வணிகம் நடைபெறாத தொகுதி என்று ஒன்றைச் சொல்ல முடியுமா? அல்லது வாக்கு வணிகர்கள் தேர்தலில் பஙகேற்கா வண்ணம் தேர்தல் ஆணையம்தான் எங்காவது நடவடிக்கை எடுத்துள்ளதா? ஒன்றும் இல்லை. அவ்வாறிருக்க, வேட்பாளர்களின் செல்வமும் உழைப்பும் மக்களின் வரிப்பணமும் நேரமும் வீணடிக்கப்படும் வகையில் தேர்தலை நிறுத்தியது ஏன்?
வேலூரில்  தேர்தலை நிறுத்தியதற்கு எல்லாக் கட்சியினரும் தமிழக அரசும் எதிர்ப்பு காடடியுள்ளனர். குற்றச்சாட்டிற்கு உள்ளானவரைத் தகுதி நீக்கம் செய்யாமல் ஒட்டு மொத்தத் தேர்தலை நிறுத்தியது தவறு என ஆளும் கட்சிக் கூட்டணியினர் சார்பாகவும் வேண்டுமென்றே திட்டமிட்டு வெற்றியைத் தடுக்கத் தேர்தல் ஆணையம் சூழ்ச்சி செய்வதாக எதிர்க்கூட்டணியினரும் தெரிவிக்கின்றனர். எனினும் தேர்தல் நடைபெறும். எப்பொழுது? பொதுத் தேர்தல் முடிவுகள் வந்த பின்பாகக் கூட இருக்கலாம்.
தேர்தலை விரைவில் தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும். ஆனால், இனிமேல் தனித்தனிக் கட்சி மேடைகளில் பரப்பவும் வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்கவும் தடை விதிக்க வேண்டும். கூட்டத்திற்கு ஆள் சேர்க்கும் வகையிலும் வாக்குகள் வாங்கப்படுகின்றன. வீடு வீடாகச் செல்வதன் மூலமும் வாக்குகள் வாங்கப்படுகின்றன. இவற்றை நிறுத்த வேண்டும் என்றால் இவ்விரண்டிற்கும் தடை விதிக்க வேண்டும்.
தேர்தல் ஆணையமே குறிப்பிட்ட இடங்களைத் தேர்ந்தெடுத்து வேட்பாளர்களின் பரப்புரைகளுக்கு வாய்ப்பு தந்து, அவற்றைத் தொலைக்காட்சிகள் மூலம் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இதனால் வேட்பாளர்கள் தத்தம் கருத்துகளைத் தெரிவிக்கவும் வாய்ப்பு தந்ததாக அமையும். வாக்கு வணிகத்திற்கான வாய்ப்புகளுக்குக் கதவு மூடப்பட்டதாகவும் அமையும்.
வேட்பாளர்களிடம் விண்ணப்பங்கள் பெறுதல்  என முதலில் இருந்து தேர்தல் நடைமுறைளைத் தொடங்கக் கூடாது. முன்னரே பதிந்து இறுதி வடிவம் எடுக்கப்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடத்தான் வாய்ப்பு தரவேண்டும். இதனால் வீண் செலவுகள் தவிர்க்கப்படும்.
அரசியல்வாதிகள் பேச்சில் வாய்மை இல்லை. எனவே, செய்யாததைச் செய்ததாகக் கூறுவர்.  செய்யமாட்டோம் என அறிந்தே செய்யப்போவதாகக் கூறுவர். அடுத்தவரை ஏசிப்பேசி இன்பம் காணும் அரசியல் சொற்பொழிவாளர்களும் உள்ளனர்.
இன்றைய அரசியல் சொற்பொழிவாளர்கள் எப்படி உள்ளனர்? பேதை நாக்கு குறித்து நாலடியார் விளக்குவதுபோல் இருக்கின்றனர்.
“பேதை நாக்கு  பிறரைத் திட்டுவதால் பயன் இல்லை என அறிந்தாலும் திட்டித் தின்னும்; திட்டுவதனால் ஏதோ பெற்றவன் போலத் திட்டும்; வஞ்சம் கொண்டு திட்டும்; காரணம் எதுவும் இல்லாமலே திட்டும்; எதிர்த்துப் பேச வாய்ப்பு இல்லாதவரையும் திட்டும்; சினம் பொங்கத் திட்டும்; இல்லாததும் பொல்லாததும் கோத்துக் கூறித் திட்டும்; நல்ல நாளிலும் திட்டும்; ஏதும் திட்டாவிட்டால் நாக்கு அவனையே தின்பது போன்று இருக்கும் எனத் திட்டும்” என்கிறது நாலடியார்.
பெறுவதொன் றின்றியும் பெற்றானே போலக்
கறுவுகொண் டேலாதார் மாட்டும் – கறுவினால்
கோத்தின்னா கூறி உரைக்காக்காக்கால் பேதைக்கு
நாத்தின்னும் நல்ல தினத்து. (நாலடியார்  335)
இவற்றை எல்லாம் தடுப்பதற்கு உதவுவது தனிப் பரப்புரைகளுக்கான தடையாகும். தனித்தனிப் பரப்புரைகளுக்குத் தடை விதிப்பதால் ஒலி மாசும் கட்டுப்படுத்தப்படும்;  மனமாசும் கட்டுப்படுத்தப்படும். எனவே, பரப்புரைகளுக்கான இடங்கள், நேரங்கள் ஆகியவற்றை வரையறுத்துக் கொண்டு அறிவித்த ஐந்து நாளில் தேர்தல் நடைபெறும் வண்ணம் தேர்தல் நாளை அறிவிக்க வேண்டும்.
நேர்மையான தேர்தல் என்பது வாக்காளர்களைப் பொறுத்தே அமையும். நன்மை கிடைத்தாலும் ஆதாயம் அடைந்தாலும் நடுவுநிலைமை தவறிப் பெறும் பணம் அல்லது பொருள் பெறும் நிலைக்கு வாக்காளர்கள் ஆளாகக் கூடாது. வாக்காளர்கள் நேர்மையாக இருந்தால் வேட்பாளர்களும் நேர்மையாக இருப்பர். கொடுப்பதால்தான் வாங்குகிறோம்” என்னும் நிலை மாறி “வாங்காததால் கொடுக்கவில்லை” என்னும் நிலை வர வேண்டும்.
எனவே, வாக்காளர்கள் நேர்மையாக நடந்து கொள்வதற்கான சூழலை உருவாக்கியும் வாக்கு வணிகத்தில் ஈடுபடும் விற்போர், வாங்குவோர் என இரு தரப்பாருக்கும் தண்டனை என்னும் நிலையை நிலைநாட்டியும் விரைவான நேர்மையான  தேர்தல் நடைபெறத் தேர்தல் ஆணையம் நடுவுநிலைமையுடன் செயல்பட வேண்டும். தொலைந்து போகக் கூடிய மத்திய  ஆளுங்கட்சியின் கைப்பாவையாக இருந்து அதற்கு முட்டுக் கொடுக்கும் வகையில் கட்சிக்கொரு நீதி என்ற தவறான செயல்பாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
எனவே, நடுவுநிலைமையுடன் செயல்பட்டு உடனடியாக வேலூர் தொகுதிக்கான நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையத்தை வேண்டுகிறோம்!
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.  (திருவள்ளுவர், திருக்குறள்)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல

Monday, April 15, 2019

அ.தி.மு.க. ஆட்சியைக் கலைக்க வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

.தி.மு.ஆட்சியைக் கலைக்க வேண்டா!

“தேர்தல் முடிவு வந்ததும் மத்தியில் ஆட்சி மாறும். அடுத்த நொடி இங்கே அதிமுக ஆட்சி கலைக்கப்படும்” எனத் தி.மு.க.தலைவர் தாலின் கூறி வருகிறார். மக்களாட்சிக்கு எதிரான கருத்தை அவர் வெளிப்படுத்தத் தேவையில்லையே!
தி.மு.க. கூட்டணியினரும் ஆதரவாளர்களும் எதிர்பார்ப்பதுபோல் இடைத் தேர்தல்களில் தேவையான தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றால் இயல்பாகவே இந்த ஆட்சி போய்த்தான் ஆகும்.  அவ்வாறிருக்க ஆட்சியைக் கலைக்க வேண்டிய தேவை என்ன? பன்னீர் அணியினர் பதினொருவர் மீதான கட்சிமாறி வாக்களிப்பு வழக்கிலும் தீர்ப்பு வந்து அவர்கள் பதவி செல்லாதது ஆகி விடும். அப்பொழுதும் ஆட்சிக் கலைப்பிற்குத் தேவை இல்லையே!
ஒருவேளை – ஒருவேளைதான் – குறுக்கு வழிகளில் பா.ச.க மத்திய ஆட்சியைக் கைப்பற்றி இங்கே தி.மு.க.விற்குப் பெரும்பான்மை கிடைத்தும் தில்லு முல்லு விளையாட்டுகளில் ஈடுபடலாம். அப்பொழுது தி.மு.க. கட்சி அடிப்படையில் போரிடாமல் மக்களைத் திரட்டிப் போரிட்டு நீதிமன்றத்தின் துணையுடன் ஆட்சியில் அமரலாம். எனவே, அத்தகைய சூழல் இல்லாத பெபாழுது ஆட்சிக்கலைப்பு என்ற பேச்சு தேவையில்லையே!
தி.மு.க.வின் எதிர்பார்ப்பு பொய்த்து அ.தி.மு.க. இடைத்தேர்தல்களில் வேண்டிய எண்ணிக்கையிலான தொகுதிகளில்  வெற்றி பெறலாம். அப்பொழுதும் ஆட்சிக் கலைப்பு தேவையில்லையே!  அத்தகைய சூழல் நேர்ந்தால், ஊழல் குற்றச்சாட்டு அடிப்படையில் மத்திய அரசின் துணையுடன் ஆட்சியைக் கலைக்க எண்ணுகிறாரா? அவ்வாறாயின் குறைவாண்டு ஆட்சிக்காக அடுத்து வர இருக்கும் நிலையான ஆட்சியை அவர் இழப்பதாக ஆகாதா?
மற்றொரு சூழலும் உருவாகலாம். இன்றைய நிலையில் பதவி பறிக்கப்பட்ட ச.ம.உறுப்பினர்கள் மீளவும் வெற்றி பெறுவர். அவ்வாறு வெற்றி பெற்றால் அ.ம.மு.க. வின் செயல்பாட்டிற்கேற்பத்தான் ஆட்சியின் ஆயுள் இருக்கும். தினகரன் தி.மு.க.வுடன் இணைந்து ஆட்சியைக் கவிழ்த்தால் அம்மா ஆட்சியைக் கவிழ்த்தார் என்ற அவப்பெயர் வரும் என்றுதான் அமைதி காத்தார். அந்த நிலைதான் தொடரும். ஆனால், மத்திய ஆட்சி மாற்றத்தால் ஆளுநர் மாறி பெரும்பான்மை ஆதரவு இல்லாத எடப்பாடியார் ஆட்சியைப் பதவி விலகச் செய்யலாம். அப்படி ஒரு நிலை வருவதாக இருந்தால் எடப்பாடி பழனிச்சாமி தினகரனிடம் சரணடைந்து விடுவார்.
சிறப்பான பின்புலம் இல்லாமல் முதல்வர் பதவியில் அமர்ந்து காட்சிக்கு எளியராக விளங்கித் திறமையாகச் செயல்படும் வல்லவராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். அரசியல்வாதிகளுக்குரிய ஊழல் இலக்கணத்தைப் புறந்தள்ளிப் பார்த்தால் அவரை ஆட்சிக் கட்டிலில் இருந்து முறையற்ற முறையில் தள்ள வேண்டிய தேவை இல்லை. 
 இப்போதைய சூழலில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே ஆட்சி மாற்றத்திற்கான வாய்ப்பைத் தெரிவிக்கிறது.  அவ்வாய்ப்பு கைகூட வேண்டுமெனில், பரப்புரையை மேலும் தீவிரப்படுத்தி வெற்றி காண வேண்டும். வெறும் குறுக்கு வழிக்கான கனவுகளால் பயனில்லை. மூன்றில் இரண்டு பங்கு ஆட்சி மாற்றத்திற்கு எதிரானதாக உள்ளது என்பதை எண்ணி அதற்கேற்பத் திட்டமிட வேண்டும்.
எனவே, தி.மு.க. சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்று நேர் வழியில் ஆட்சியில் அமரலாம். அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனால் மக்கள் வழங்கிய 5 ஆண்டுப் பதவிக்காலத்திற்கும் அ.தி.மு.க. அரசே நீடிக்க உதவுவதே சிறப்பாகும்.
 இந் நேர்வில், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளில் ஈடுபடாமல் மத்திய ஆட்சியில் பங்கேற்றுத் தமிழ் நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் வேண்டிய நற்செயல்களில் ஈடுபட்டு, அடுத்த தேர்தலுக்கான ஆயத்த வேலைகளில் ஈடுபடுவதே தாலினுக்குப் பெருமை சேர்க்கும்.
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.(திருவள்ளுவர்,திருக்குறள் 473)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை -அகரமுதல

Sunday, April 14, 2019

தேர்தல் கணக்குகள் சரியே! விடைகள் தவறாகும். – இலக்குவனார் திருவள்ளுவன்



தேர்தல் கணக்குகள் சரியே! 

விடைகள் தவறாகும்.

 கட்சிகள் எண்ணிக்கை குறைய வேண்டும். அவற்றின் முதற் கட்டமாகக் கூட்டணி அமைத்துப் போட்டியிட வேண்டும் என்று பேரா.சி.இலக்குவனார் கூறியுள்ளார். அவர் சொன்னது, ஓரளவேனும் ஒத்துப்போகும் கொள்கைகளின் அடிப்படையில் கூட்டணி அமைப்பது. ஆனால், செல்வ வளத்தைப் பெருக்க அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையிலேயே கூட்டணி அமைவதால் நாட்டு நலனுக்கு எதிராக அமைகிறது.
தனித்துப் போட்டியிடுவதை விடக் கூட்டணி அமைப்பதால் சில வெற்றிகளையாவது சந்திக்கலாம்; தோல்வி யடைந்தாலும் கணிசமான வாக்குகளைப் பெறலாம் என்று கருதுவதாலேயே  கட்சிகள் கூட்டணி அமைக்கின்றன.
வெற்றிதான் இலக்கு என்னும் பொழுது அதை நேர் வழியில் பெற வேண்டும்; ஒத்த கருத்து உள்ளவர்களுடன் இணைந்து பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தைத் தவற விட்டு விடுகின்றனர். இலக்கும் நேர்மையானதாக இருக்க வேண்டும். அதை அடையும் வழியும் நேர்மையானதாக இருக்க வேண்டும் என்பதே தமிழர் நெறி.  எந்த வழியிலேனும் நினைத்ததை முடிக்க வேண்டும் என்பதே ஆரிய நெறி. மகாபாரதத்தில் கண்ணன் அதைத்தான் செயல்படுத்திக் காட்டியுள்ளான்.
அறநெறியிலிருந்து விலகி வாழும் அரசியல்வாதிகளிடம்  அந்த முறையைத்தான் நாம் எதிர்பார்க்க முடியும். எனவே, கூட்டணி முறை குறித்து ஊடகங்களும் மக்களும் எதிராகக் கூறுவது தேவையற்றதே!
பாசக கூட்டணியில் என்ன தவறு? முதலில் அதிமுக பாசக -வுடன் கூட்டணி வைத்ததைப் பார்ப்போம்.
 ஒவ்வொரு கட்சியின் கூட்டணிகள் குறித்துப் பிற கட்சிகள் அக்கட்சியின் பழைய நிலைப்பாடுகளையும் கட்சித்தலைவர்களின் பேச்சுக்களையும் சொல்லி எதிர்க்கின்றன. ஆனால் அவ்வாறு எதிர்த்துக் குறை கூறுபவர்களும் அவ்வாறு தடம் புரண்டவர்கள்தாம். அவ்வாறிருக்க அவர்களுக்குச் சொல்லும் தகுதி இல்லை. எனினும் மக்களின் மறதியைப் பயன்படுத்தித் தவறாகப் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, கட்சிகள் கூட்டணி அமைந்த வகை குறித்து அலசுவதை நிறுத்த வேண்டும்.  தமிழ், தமிழ் மக்கள், தமிழ்நாடு நலன் சார்ந்த கொள்கைகளை வலியுறுத்தி அவற்றின் அடிப்படையில் பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.
இன்று பாசகவை எதிர்க்கும் கட்சிகள் பலவும் நேற்று அதனுடன் கூட்டணி வைத்தவையே! அதிகாரச் சுவையிலும் ஆதாயம் அடைந்தவையே!  நாளையும் கூட்டணி வைக்கலாம். எனவே, அதனுடன் கூட்டணி வைத்ததைக் காலத்தின் கட்டாயம் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்்
ஆனால், குசராத்தைப்பற்றிய பொய்யான படப்பிடிப்பை மக்களிடம் அவிழ்த்து விட்டு, ஏராளமான பொய்களின் மூலம் தேர்தலில் அறுவடை செய்த கட்சிதான் பாசக. கடந்த தேர்தலில்  வெற்றி பெற்றதும் கூட்டணிக் கட்சிகளை அவமதித்துப் புறக்கணித்த கட்சிதான் அது.
அதனால் புறக்கணிக்கப்பட்டவர்களே மீண்டும் அதனுடன் எப்படித்தான் நட்பு பாராட்டுகிறார்களோ என்றுதான் தெரியவில்லை. மத வெறி, சமக்கிருத வெறியால் மட்டுமல்ல, தமிழக நலன்களுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படும் அதனைத் தமிழக மக்கள் வேரறுக்க எண்ணுகிறார்கள். அப்படி இருக்க கூட்டணிப் பேரத்தில் அமைச்சர் பதவியும் அடங்கும் என்பதுதான் வியப்பாக உள்ளது. பாசக  மீளவும் அரசு அமைக்கும் என எப்படி நம்புகிறார்கள் என்றுதான் புரியவில்லை.   
அதிமுகவைப் பொறுத்தவரை ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும். எனவே, சிறு குறையும் நேராமல் கவனமாக இருக்க வேண்டும். அ.ம.மு.க.விற்கு உள்ள வரவேற்பால் அது பெறும் வெற்றியும் வெற்றி பெறா இடங்களில் பெறும் வாக்குகளும் அதிமுகவிற்கு அடிக்கும் சாவு மணியாகும். எனவே, அதனை முறியடிப்பதற்காக எதனையும் பொருட்படுத்தாது பேரளவு கூட்டணி வைத்த எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர் செல்வமும் பாராட்டிற்குரியவர்களே!
அரசியலில் “இன்றைய நண்பன், நாளைய பகைவன், இன்றைய பகைவன் நாளைய நண்பன்” என்பதை மறந்து கண்டபடிப் பேசுகிறார்கள். என்றாலும் இதைப் பொருட்படுத்தாது எதிர்த்தவர்கள் இணைகிறார்கள். கருத்து மோதல் உறவாக மாறினால் தவறில்லை. ஆனால், ஆட்சியை அகற்ற ஊழல் பட்டியல் உட்பட பலவற்றைத் தெரிவித்த பா.ம.க. அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது.  பாசக ஆதரவுடன் அதிமுக வலிமையான பேரத்திற்குள் அதனைக் கட்டிப் போட்டு விட்டது. பா.ம.க. தி.மு.க.உடனும் பேரம் பேசியதைக் குற்றமாகக் கூறுகிறார்கள். வணிகம் என்று வந்தபின்னர் எது ஆதாயமானது எனப் பார்ப்பதுதானே இயற்கை. எனவே, அதனைக் குற்றமாகச் சொல்ல முடியாது.
நேற்றைய கூடா நட்பு. இன்றைய வாடா நட்பு. அதுதான் தி.மு.க.-பேராய(காங்.)கட்சிக் கூட்டணி. மத்திய மாநில ஆளுங்கட்சிகளின் எதிரான இக்கட்சியினருக்கு வேறு வழியில்லை.
ஈழத்தமிழர்களின் படுகொலைகளுக்கு நீதி கேட்ட ம.தி.மு.க. பேராயக் (காங்.)கட்சிக்கு மாற்றாகப் பாசகவைக் கடந்த தேர்தலில்  ஆதரித்தது. எனினும் எப் பயனும் இல்லை. தான்தோன்றித்தனமான ஆணவப்போக்கில் அக்கட்சி நடந்து கொள்வதாக எண்ணியதாலும் மக்கள் மன்றங்களில் கட்சியின் குரல் முழங்காமல் கட்சி நடத்திப் பயனில்லை என்பதாலும் தி.மு.க.- பேராயக் (காங்.)கட்சிக் கூட்டணியில் ஐக்கியமாகி விட்டது. கடந்த முறை மக்கள் நலக் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. ஒற்றைத் தொகுதியையே அல்லாடிப் பெறவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. எனவே, ம.தி.மு.க.வின் கூட்டணிச் சேர்க்கைக்கு அதனைக் குறைகூறிப்பயனில்லை. அந்த நிலைக்குத் தள்ளிய மக்களை வேண்டுமென்றால் குறை கூறலாம்.
இவ்வாறு கட்சிகளின் கடந்த கால நிலைப்பாடும் இன்றைய செயற்பாடும் முரணாகத்தான் உள்ளன. ஆனால், இதைப்பற்றி நிலை மாறிய கட்சிகளே குறை சொல்வதுதான் வேடிக்கை. இத்தகைய பேச்சை நிறுத்தி விட்டு இனி என்ன செய்யப் போகிறார்கள் என்று பரப்புரை மேற்கொள்வதே சிறந்தது. எத்தனை ஆண்டுகள் இந்தக் கூட்டணி இருக்கும் என்று ஒப்பந்தம் போட்டாலும் நலலதுதான். ஆனால், அடுத்த தேர்தலிலேயே தங்களை மாற்றிக்கொள்ளப்போகும் கட்சிகளால் அது முடியாது.
தோல்விகளைத் தவிர்க்கவும் தோல்வியைடந்தாலும் மதிப்பிற்குக் கேடு வராத வகையில் வாக்குகளைப் பெறவும் நாடாளுமன்றத்தில் குரல் ஒலிக்கவும் இடைத்தேர்தலில் மக்கள் செல்வாக்கைக் காட்டவும் தங்களுக்கு ஏற்றது எனக் கருதும் வகையில் கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன.
மக்கள் கட்சிகள் அடிப்படையில் வாக்காளர்களைத் தேர்ந்தெடுக்காமல் வேட்பாளர்களின் செயற்பாடுகள் அடிப்படையில் தக்க வேட்பாளர்களை மக்கள் மன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆதாயங்களுக்கேற்ப, ஆதரவையும் எதிர்ப்பையும் முடிவெடுக்கும் கட்சித் தலைமைகள், நாட்டு நலன் அடிப்படையில் ஒன்றிணையும். கட்சிகளின் கூட்டணிக் கணக்கில் எதிர்பார்க்கும் விடைகளை அளிக்காவிட்டால்தான் அடுத்தேனும் நல அரசியலை நாம் காண முடியும்.
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.  (திருவள்ளுவர், திருக்குறள் 791)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை -அகரமுதல

Friday, February 22, 2019

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 11-20 -இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல,

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 11-20

(குறள்நெறி)

  1. உலகிற்கு நலம் பயக்கும் மழையே அமிழ்தம் என அறி!
  2. உணவை உருவாக்குவதும் உணவாவதும் மழையே என உணர்!
  3. மழை பொய்த்தால் பசி உலகத்தவரை வாட்டும் என உணர்!
  4. மழை இல்லாதுபோனால் உழவரும் உழார் என அறி!.
  5. கெடுப்பதும் கொடுப்பதும் மழையே என்பதை உணர்!
  6. மழைத்துளி இல்லையேல் புல் பூண்டும் இல்லை என அறி!
  7. கடல்நீர் மழையாக மாறாவிடில் கடல் வளமும் குறையும் என உணர்!
  8. வானம் வறண்டால் வானவர்க்கும் பூசை இல்லை என்பதை அறி!
  9. வானம் வழங்காவிடில் தானமும் தவமும் இல்லை என உணர்!
  10. நீரின்றி உலகமும் வான் மழையின்றேல் ஒழுக்கமும் இல்லை என உணர்!
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

Monday, September 3, 2018

வல்லமையாளர் தாலின் வெல்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

 

வல்லமையாளர் தாலின் வெல்க!

  திமுகவின் தலைவர் பொறுப்பேற்றதும் தாலின் ஆற்றிய உரை, அருமையான உரை எனப் பல தரப்பாரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இதில் பாசகவிற்கு எதிராகப் பேசியிருக்கவேண்டா எனச் சிலர் கூறுகின்றனர். கட்சியின் நிலைப்பாட்டை உறுதி செய்து தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்கு அக் கருத்தும்தேவையான ஒன்றாக அமைந்துள்ளது. எனவே, புதியதாகப் பிறந்தவரின் புதிய உரையைப் பாராட்டலாம்.
  திமுக தன் கொள்கைப் பாதையில் சறுக்கிக் கொண்டுள்ளது. எனவேதான் சிலர், திமுக தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் எனத் துணிவுடன் அறிவுரை கூறுகின்றனர். அவ்வாறு திமுக, தன்மானம், தன்மதிப்பு, மொழிப்பற்று, இனப்பற்று முதலான தன் கொள்கைகளைக் கைவிடுவதைவிடக் கட்சியைக் கலைத்துவிட்டு இதற்கு எதிரான கட்சியில் சேர்ந்து விடலாம். ஆனால் அவ்வாறு கூறும் நிலைக்குத் திமுக ஏன் வந்தது எனச் சிந்திக்க வேண்டும்.
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்(திருவள்ளுவர், குறள் 466)
ஆதலின் செய்ய வேண்டிய பணிகளை ஆற்றாமலும்  செய்யக்கூடாதவற்றைச் செய்தும் திமுகவிற்கு அழிவை உண்டாக்கக் கூடாது.
  பல நேர்வுகளில் அமைதியைக் கடைப்பிடித்து வெல்லும் திறமை உடையவர் தாலின். எனவே, தேவையற்றவற்றைப் பேசுவதில் இருந்து விலகி இருக்க வேண்டும். சான்றுக்கு ஒன்று. கலைஞர் கருணாநிதிக்கு நல்லடக்கம் செய்ய முதலில் அண்ணா சதுக்கத்தில் இடம் தரவில்லை எனச் சொல்லிக் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும். அண்ணாவின் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும் எனத் ‘தம்பி’ விரும்பினார் எனக் கேட்பது சரியல்ல. தனக்கு அல்லது தன் குடும்பத்தினருக்குச் சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட விரும்பி அதற்கு அரசு குறுக்கே நின்றால் பாயலாம். இத்தகைய விருப்பமே “எனக்கு அறிஞர் அண்ணாவிற்கு எழுப்பியது போன்ற நினைவகம் அமைக்கப்பட வேண்டும்” என்பதாகத்தான் பொருள். செயலலிதா பதவியில் இருந்தால்  இசைவு கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை. திமுக ஆட்சியில் இருந்தால்  செயலலிதாவிற்கு அரசு முறையில் அடக்கம் செய்யவும் இடம் தந்திருக்காது. வழக்கு தொடுத்திருப்பவர்கள் எங்ஙனம் அதற்கு இசைந்திருப்பார்கள்?
  திராவிடக் கட்சிகளின் முதல்வர்கள் மறைவிற்கு இடம் தந்ததுபோல் ஐந்து முறை முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கும் இடம்தர வேண்டும் என்பதுதான் முறை. அந்தக் கண்ணோட்டத்தில்தான்  தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யாமல் அரச இசைவு தந்துள்ளது. நல்லடக்கத்திற்கான ஏற்பாடுகளையும் அரசு முறையில் செய்தது. மீண்டும் மீண்டும் இது குறித்துப் பேசுவது மக்களிடையே  எதிரிடையான எண்ணத்தையே தோற்றுவிக்கிறது. எனவே, இப்பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைப்பதே நன்று. இதுபோன்றவற்றில் அமைதி காப்பதே மக்களின் ஆதரவிற்கு வழி வகுக்கும்.
 பதவியில் இல்லாதபொழுது ஒன்று பேசுவதும் பதவியில் இருக்கும்பொழுது வேறொன்றைச் செயல்படுத்துவதுமே அரசியல் வாதிகளின் இலக்கணமாகி விட்டது. அதனை மாற்ற வேண்டும். ஆட்சிக்கு வந்தால் செய்ய இருப்பதாகக் கூறும் திட்டங்களை இயன்ற வகைகளில் இப்பொழுதே செயல்படுத்தலாம்.
 பேராயக்கட்சியாகிய காங்.ஆட்சியில் பள்ளிகளிலாவது தமிழ் வழிக்கல்வி இருந்தது. திராவிடக்கட்சி ஆட்சிகளால் இப்பொழுது மழலை நிலையிலிருந்தே தமிழ் ஒழிக்கப்பட்டுவருகிறது. ஆட்சிக்கு வந்தபின் முழுமையான தமிழ்வழிக்கல்வியைச் செயல்படுத்தப்போவதற்கு முன்னோடியாகத் திமுக கட்சியினர் நடத்தும் பள்ளிகளைத் தமிழ்வழிக் கல்வி நிலையங்களாக மாற்ற ஆவன செய்ய வேண்டும். தமிழ்வழிப்பள்ளிகள் சிறப்பாகச் செயல்பட ஒல்லும்வகையெலாம் உதவ வேண்டும்.
  இராசீவு கொலைவழக்கில் சிக்கவைக்கப்பட்ட எழுவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறை வாழ்க்கையில் உள்ள இசுலாமியர், பிறர் ஆகியோர் விடுதலைக்காக எப்பொழுதாவது குரல் கொடுத்தால் போதாது. ஆட்சிக்கு வந்தால் விடுதலை செய்வது குறித்த உறுதியை அளிக்க வேண்டும். எல்லா வகையிலும் முயன்று இவர்களின் விடுதலைக்கு வழி வகுக்க வேண்டும். அத்துடன் இவ்வாறு சிறையில் துன்புறுவோர் குடும்பத்தினருக்கு மாதந்தோறும் திமுக நிதியிலிருந்து உதவித் தொகை அளிக்க வேண்டும்.
  ஈழ ஏதிலியர் முகாம்களில் உள்ளவர்களுக்கான மறுவாழ்வுப்பணிகளில் கட்சி சார்பாக இப்பொழுதே ஈடுபட வேண்டும்.
  தமிழ்ஈழம் மீது நம்பிக்கை இருந்தது என்றால், பரப்புரைக் குழுக்களை அமைத்து, உலகெங்கும் பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.
  இவற்றை எல்லாம் கட்சி சார்பாகவே மேற்கொள்ள இயலும். அவ்வாறு செய்தால் ஆட்சி வந்தால் எளிதில் இவற்றை நிறைவேற்ற இயலும்.
  இறை நம்பிக்கை என்பதும் தமிழர் பண்பாடுதான். ஆனால், தமிழ்நெறிக்கு மாறான மூடநம்பிக்கைகளும் வேள்விகளும் சாமியார் வழிபாடுகளும் அறவே நீக்கப்பட வேண்டும். பேரறிஞர் அண்ணா வழியில், திருமூலர் கூறியவாறு “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்”  என்பனவே நெறி எனில் அதனைத் தொண்டர்கள்பின்பற்றச் செய்ய வேண்டும்; மக்களிடம் பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.
  பதவிக்கு வேள்வி, அதற்கு வேள்வி, இதற்கு வேள்வி என அதிமுக போல் திமுகவும் செயல்படுகின்றது. வேள்வியே வாழ்விற்கான வழி என நம்பினால் தெளிவாக அறிவித்து அதைப் பின்பற்றட்டும். அதனைப் பின்பற்றுபவர்கள் திமுகவைப் பின்பற்றட்டும். பகுத்தறிவையும் தன்மானத்தையும் ஏற்காதவர்கள் விலகிக் கொள்ளட்டும்.
 எல்லாத் தேசிய மொழியினரின் வளத்தையும் உறிஞ்சி அவற்றை நசுக்கி இந்தி தலைமை நிலைக்குத் திணிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்தித் துதிபாடிகள், திமுக இந்திக்கு எதிராகச் செயல்பட்டதால் தமிழினமும் தமிழ்நாடும் பின் தள்ளப்பட்டதாகப் பொய்யுரை பரப்பி வருகின்றனர். இந்தி, சமற்கிருதத் திணிப்புகளால் தமிழ் முதலான மொழிகளும் மொழி பேசுநரும் ஒடுக்கப்படுகின்றனர் என்னும் உண்மையை ஏற்பதாக இருந்தால் இவற்றிற்கு எதிரான பரப்புரையைத் தீவிரமாக மேற்கொள்ளவேண்டும். தங்கள் குடும்பத்தினர் இம்மொழிகளுக்கு முதன்மை அளிப்பதற்கும் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளில் இவற்றைக் கற்றுத் தருவதற்கும் மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லது இக்கொள்கை உடன்பாடில்லை எனில் வெளிப்படையாக அறிவித்துவிட்டு இவற்றைப் பரப்பும் பணியில் இவர்களும் ஈடுபடலாம்.
  தமிழ்நாட்டில் தமிழ்ப்பெயர்களே காணாமல் போன சூழல்தான் நிலவுகிறது. திமுகவின் தொடக்கக்காலம் போலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்கம்போல் தொல்திருமாவளவன் தமிழ்ப்பெயர் சூட்டப்படுவதற்கு எடுத்த நடவடிக்கை போலும் மீண்டும் முயல வேண்டும்.
  அன்றாடப்பயன்பாட்டில் தமிழே முழுமையாய் இருக்கப்பாடுபட வேண்டும்.
  புலவர்களை மதிக்கும் அரசுகள் புகழ்பெறும். சங்கக்கால வேந்தர்கள் புலவர்களை மதித்துப்போற்றினர். அவர்கள் காட்டிய நல்வழியில் அரசை நடத்தினர். இப்போதைய அரசுகள் அறிவார்ந்த ஆன்றோர்களை எதிரிகளாக நடத்துகின்றனர். இவ்வாறில்லாமல் அறிஞர்களைப் போற்ற வேண்டும். அறிஞர்களைப் போற்றுவதாகக் கூறிக்கொண்டு புகழ்பாடிகளுக்குப் பதவிகள் வழங்கி மகிழ்ச்சி கொள்ளக் கூடாது.
  கட்சியிலும் கட்சிக்காக உழைக்கும் சொற்பொழிவாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும். புறக்கணிக்கப்படுவதாகக் கவலைப்படும் அவர்கள் வருத்தத்தைப் போக்க வேண்டும்.  அதற்காக நரகல் நடைப் பேச்சாளர்களை ஊக்கப்படுத்தக் கூடாது. அதனைக் கூட்டத்தைச் சேர்க்கும் வழியாகக் கருதாமல் நல்ல கருத்துகளை விதைப்பதையே கொள்கையாகக் கொள்ள வேண்டும்.
எல்லார்க்கும் கல்வி வாய்ப்பும் வேலை வாய்ப்பும் கிடைத்தாலே ஊழல் பெருமளவு குறையும்.
எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான
இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம்
(பாரதிதாசன், பாண்டியன் பரிசு, இயல் : 56)
என்று முழங்கிக் கொண்டிராமல் செயலாற்றி இதன்மூலம் ஊழலை ஒழிக்க வேண்டும். செல்வம் உள்ளவர்க்கே தேர்தலில் வாய்ப்பு என்பதும் ஊழல் பெருகக் காரணமாக இருக்கிறது. வீண் செலவுகளுக்கும் வாக்குகளை வாங்குவதற்கும் வாய்ப்பு இல்லா முறையில் தேர்தல் நடைபெறச் செயலாற்ற வேண்டும்.
  சுருக்கமாகக் கூறுவதாயின், ஆட்சிக்கு வந்த பின் தமிழ் மக்களுக்காகவும் தமிழ் மொழிக்காகவும் நாட்டு முன்னேற்றத்திற்காகவும் என்னென்ன ஆற்றப்போவதாகப் பரப்புரை மேற்கொள்கிறார்களோ அவற்றையெல்லாம் கட்சிநிலையிலேயே இயன்ற அளவு மேற்கொள்ள வேண்டும்.
புதிய மனிதர் தாலின் செய்வார் என எதிர்பார்ப்போமா?
-இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive