அகரமுதல
தேர்தல்: கருதியனவும் நிகழ்ந்தனவும்
தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்த பொழுது நான் புறநகர் ஒன்றில் இருந்தேன். என் அலைபேசியில் இணைய இணைப்பு சரியாகக் கிடைக்கவில்லை. எனவே, முடிவுகளைப் பார்க்க இயலவில்லை. ஆனால், அன்பர்கள் சிலர் அடுத்தடுத்து ஒரே மாதிரி பேசினர். நான் அவர்களுக்கு ஒரே மாதிரிதான் மறுமொழி உரைத்தேன். அவர்கள், “நீங்கள் தேர்தல்பற்றியும் “பாசகவின் தேர்தல் கணிப்புச் சாயம்வெளுத்து விட்டது!” என்றும் எழுதியவை மிகச் சரி. ஆனால், பா.ச.க. அல்லவா பெரும்பான்மை பெற்று வருகிறது” என்றனர். நான் அதற்குப் “பா.ச.க. கட்சி அளவில் பெரும்பான்மை பெறும். இப்பொழுது சிவசேனா முதலான கூட்டணிக் கட்சிகளின் வெற்றியையும் சேர்த்துப் பா.ச.க. வெற்றி எண்ணிக்கையில் சேர்க்கின்றனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானாவில் பா.ச.க. முழுத் தோல்வியைச் சந்திக்கும். கருநாடகாவில் ஒரு பாதி வெற்றி பெறும். ஒரிசா, மே.வங்கம், வட கிழக்கு மாநிலங்களில் வெற்றி காணாது. சிக்கிம், வடகிழக்கு மாநிலங்களில் பா.ச.க. வெற்றி பெறாது. குறுக்கு வழியில் ஈடுபட்டிருந்தாலன்றிஆட்சி அமைக்கும் எண்ணிக்கை அதற்குக் கிடைக்காது” என்றேன்.
ஆனால், நேரம் செல்லச் செல்ல பா.ச.க. அறுதிப்பெரும்பான்மையை நோக்கிச் சென்று விட்டது. முடிவுகளை நம்பத்தான் முடியவில்லை. தமிழகக் கண்ணாடிகொண்டு வட இற்தியாவைப் பார்த்ததால் கணிப்பு தவறாகிவிட்டது என நண்பர்களிடம் சொன்னேன். ஆனால், அதற்கு அவர்கள், அப்படியில்லை.வாக்கு மையங்களில் பா.ச.க மிரட்டுவதையும் “மையிட்டது வாக்காளர்கள் விரல்களில்!உள்ளே விசையை; அழுத்தியது பணியாளர் விரல்கள்!” என்னும் காட்சிகளையும் காணொளிகளில் கண்டோம். எனவே, பா.ச.க.வின் இவ்வெற்றிஇயல்பானதல்ல. பறிக்கப்பட்ட வெற்றி” என்றனர்.
எனினும் பிற நம் கருத்துகள் சரியாக அமைந்தனவா எனப் பார்க்கலாம்.
அ.தி.மு.க. ஆட்சியைக் கலைக்க வேண்டா! (16 ஏப்பிரல் 2019 ) எனஎழுதியவாறே இடைத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
“தி.மு.க.வின் எதிர்பார்ப்பு பொய்த்து அ.தி.மு.க. இடைத்தேர்தல்களில் வேண்டிய எண்ணிக்கையிலான தொகுதிகளில் வெற்றி பெறலாம்.”
“சிறப்பான பின்புலம் இல்லாமல் முதல்வர் பதவியில் அமர்ந்து காட்சிக்கு எளியராக விளங்கித் திறமையாகச் செயல்படும் வல்லவராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். அரசியல்வாதிகளுக்குரிய ஊழல் இலக்கணத்தைப் புறந்தள்ளிப் பார்த்தால் அவரை ஆட்சிக் கட்டிலில் இருந்து முறையற்ற முறையில் தள்ள வேண்டிய தேவை இல்லை.”
“தேர்ந்தெடுக்கப்படும் அரசு பதவிக்காலம் வரையும் ஆட்சி செய்வதே நல்லது. செயலலிதாவை மட்டும் மக்கள் ஆட்சி செய்யத் தேர்ந்தெடுத்ததாகக் கருதுவது தவறு. அவர் தலைமையிலான அதிமுகவையும்தான் ஆள்வதற்கு மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.”
இவை யெல்லாம் நம் கருத்துகள். இவற்றின்படித்தான் இப்பொழுது தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
“பா.ச.க மத்திய ஆட்சியைக் கைப்பற்றி இங்கே தி.மு.க.விற்குப்பெரும்பான்மை கிடைக்கலாம்” எனக் குறிப்பிட்டிருந்தோம். அதுபோல் மத்தியில் பா.ச.க. ஆட்சி அமைக்கிறது. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணிதான் ஒன்று நீங்கலான முழு வெற்றி கண்டுள்ளது.
இடைத்தேர்தல்களில் பதவி பறிக்கப்பட்டவர்களுக்கே வாக்களியுங்கள்!(17 மார்ச்சு 2019) என வேண்டுகோள் விடுத்திருந்தோம். உண்மையில் யார் பக்கம் இருக்க வேண்டுமோ அவர்கள் பக்கம் நீதித்துறை இல்லை. இடைத்தேர்தல்களில் மக்கள் வேறு கண்ணோட்டங்களில் வாக்களிக்காமல் இவர்களே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால்தான் இப்படிப்பட்ட முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி இடமுடியும் என்பதை எண்ணிப்பார்த்து இவர்களுக்கே வாக்களிக்க வேண்டும். என்றும் குறிப்பிட்டு இருந்தோம். ஆனால், இது நிகழவில்லை. அதே நேரம்,
“சட்டமன்றத் தொகுதிகளில் பதவி பறிக்கப்பட்டவர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் வாக்களித்தாலும் அத்தொகுதி அடங்கிய நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு அவரவர் விருப்பத்திற்கேற்ப வாக்களிக்கட்டும்.”
எனக் குறிப்பிட்டிருந்தோம். இதன்படி 9 தொகுதிகளில் ஆளுங்கட்சிக்கு வாக்களித்த மக்கள் நாடாளுமன்றத் தொகுதிகளில் தி.மு.க கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர்.
தினகரனின் அ.ம.மு.க., பல்வேறு முறையற்ற தாக்குதல்களுக்கு உள்ளாவதால் முதன்மைப் பங்கைப் பெறும் வகையில் வாக்குகளைப் பெறும் என முதலில் கருதியவாறு நடைபெறவில்லை. தேர்தல் கணிப்புகளைப் பார்த்துச் சில ஊடக நண்பர்களிடம் பேசியபொழுது தினகரன் கட்சி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாது என்றனர். அப்படியானால், கட்சி அமைப்பிற்கு எதிராக வாக்களிக்க விரும்பாதவர்களாலும் தற்சார்பரகளாக(சுயேச்சைகளாக)ப் போட்டியிடுவதாலும் அவருக்குச் சரிவுதான் என்றேன். அஃதாவது, வெற்றி பெறாவிட்டாலும் கணிசமான வாக்குகளைப் பெறுவார் என்ற கணிப்பு பொய்யாகும். ஒன்று அவர் வெற்றி பெறும் வகையில் வாக்குகள் அமையும் இல்லையேல் புறக்கணிக்கப்படுவார் என்ற கருத்தைத் தெரிவித்தேன். அவ்வாறுதான நடந்துள்ளது. என்றாலும் அ.ம.மு.க.வினர் தளரத் தேவையில்லை.
பேராயக்(காங்.)கட்சி மாநிலக்கட்சி என்ற முறையில் உ.பி.யில் வெற்றி பெற்று மாநிலக் கட்சிகள் அமைக்கும் கூட்டாட்சியில் இடம் பெறட்டும். பிற மாநிலங்களில் வெற்றி பெற்றாலும் தமிழ் நாட்டில் பேராயக்(காங்.)கட்சி தோற்றால்தான் தமிழக மக்களின் ஆறா மனவலியை அக்கட்சித் தலைவர்கள் புரிந்து கொள்வார்கள். பேராயக்(காங்.)கட்சி உ.பி.யில் ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் போட்டியிட்ட இடங்களில் ஒன்று தவிர பிற இடங்களில் வெற்றி பெற்றள்ளது. கூட்டணி அறம் கருதியும் பா.ச.க.வுடன் கூட்டணி வைத்துள்ளதமிழக ஆளுங்கட்சிக் கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்பதற்காகவும்பேராயக்(காங்.)கட்சியை வெற்றி பெற வைத்துள்ளனர். எனினும் நாம் விழைந்தவாறு இந்திய அளவில் மாநிலக்கட்சிகளின் கூட்டாட்சி அமையவில்லை.
இராகுல், பிற மாநிலம் எதிலும் போட்டியிட்டு வெற்றி பெற வாழ்த்தினோம். கேரளாவில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இளங்கோவன் என்னும் தமிழினப்பகையாளி தோற்கடிக்கப்படவேண்டும் எனக் கருதினோம். அதற்கேற்ப தி.மு.க. கூடடணியில் தமிழினப் பகையாளியான அவர் மட்டுமே தோல்வியைத் தழுவியிருக்கிறார்.
தாலின் தமிழக அரசியலோடு நின்றுவிடாமல் இந்திய அரசியலிலும் கால்பதித்துத் தமிழ்நாட்டின் உயர்விற்குப் பாடுபடவேண்டும். (26 பிப்பிரவரி 2017) எனவும்
பொதுத் தேர்தல்களில் திமுக கவனத்தைச் செலுத்த வேண்டும். அதற்கு இந்திய அரசியலில் தாலின் முனைப்புடன் ஈடுபட வேண்டும். 15.10.2018) எனவும் குறிப்பிட்டிருந்தோம். நினைத்தன நிறைவேறும வண்ணம் தேர்தல் முடிவுகள்அமைந்துள்ளன.
சீமானின் நா.த.க. எவ்வளவு வாக்குகள் பெற்றாலும் அதற்குவளர்ச்சியே! நாளைக்கு இந்த வளர்ச்சி அக்கட்சியை நிலை நிறுத்திக் கொள்ள உதவும் (15 ஏப்பிரல் 2019). நா.த.க. சில இடங்களில் 3ஆவது இடத்திலும் சில இடங்களில் நான்காவது இடத்திலும் வந்து தன் வளர்ச்சியைக் காட்டியுள்ளது.
கமலின் ம.நீ.மையத்திற்குக் கிடைக்கும் வாக்குகள் அடுத்து வரும் தேர்தலில் அவருக்கு உதவும். இவர் யாருடைய ஆதரவு வாக்குகளை அல்லது எதிர்ப்பு வாக்குகளைப் பிரிக்கப் போகிறார் என்பதைப் பொறுத்துத் தேர்தல் முடிவுகளில் மாற்றம் வரலாம். எந்தத் தொகுதியிலும் பிணைத் தொகையை மீளப் பெற முடியாத அளவு குறைவான வாக்குகள் பெற்றால் கட்சியை மேம்படுத்துவதற்கான சிந்தனை உருவாகி அடுத்தத் தேர்தலுக்கு உதவும். எனக் குறிப்பிட்டிருந்தோம். தன்னம்பிக்கையுள்ள கமல் என எழுதியதற்கு எதிராகப் பேசிய நண்பர்களிடம், சென்னையில் புதிய வாக்காளர்களிலும் படித்த வாக்களாரகளிலும் பலர் கமலை ஆதரிக்கின்றனர். எனவே, அவர் கட்சிக்கு 10 இற்குக் குறையாமல் வாக்குகள் கிடைக்கும். வேட்பாளர் எவர் எனத் தெரியாமல் கமலின் கை விளக்குச் சின்னத்திற்குப் பல தொகுதிகளில் வாக்களிப்பர் என்றேன். இதுதான் நிறைவேறியுள்ளது.
நாம் கருதியன பெரும்பாலும் நிகழ்ந்துள்ளன. ஆனால், தமிழ்நாட்டிற்கு நன்மைகள் ஏற்படும்வகையில் முடிவுகள் இல்லை. எனவே, வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வாதாடியும் போராடியும் தமிழ் நாட்டிற்கும் தமிழ் மொழிக்கும் இடையூறுகள் வராமலும் தமிழகத்திற்கு நன்மைகள் கிடைக்கும் வகையிலும் செயல்பட வேண்டுகிறோம்.
மக்கள் சார்பில் வினையாற்ற வேண்டியவர்களை நாம் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுத்துள்ளோம். இனி அவர்கள் உண்மையான சார்பாளர்களாகத் திகழும் வகையில் செயலாற்றச் செய்வோம்.
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.(திருவள்ளுவர், திருக்குறள் 518)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல
No comments:
Post a Comment