அகரமுதல
தனித்தனிப் பரப்புரைகளைத் தடை செய்து வேலூரில் தேர்தலை நடத்துக!
வேலூரில் மட்டும்தான் வாக்கு வணிகம் நடைபெற்றதுபோல் தேர்தல் ஆணையம் அங்கே தேர்தலை நிறுத்தி விட்டது. வாக்கு வணிகம் நடைபெறாத தொகுதி என்று ஒன்றைச் சொல்ல முடியுமா? அல்லது வாக்கு வணிகர்கள் தேர்தலில் பஙகேற்கா வண்ணம் தேர்தல் ஆணையம்தான் எங்காவது நடவடிக்கை எடுத்துள்ளதா? ஒன்றும் இல்லை. அவ்வாறிருக்க, வேட்பாளர்களின் செல்வமும் உழைப்பும் மக்களின் வரிப்பணமும் நேரமும் வீணடிக்கப்படும் வகையில் தேர்தலை நிறுத்தியது ஏன்?
வேலூரில் தேர்தலை நிறுத்தியதற்கு எல்லாக் கட்சியினரும் தமிழக அரசும் எதிர்ப்பு காடடியுள்ளனர். குற்றச்சாட்டிற்கு உள்ளானவரைத் தகுதி நீக்கம் செய்யாமல் ஒட்டு மொத்தத் தேர்தலை நிறுத்தியது தவறு என ஆளும் கட்சிக் கூட்டணியினர் சார்பாகவும் வேண்டுமென்றே திட்டமிட்டு வெற்றியைத் தடுக்கத் தேர்தல் ஆணையம் சூழ்ச்சி செய்வதாக எதிர்க்கூட்டணியினரும் தெரிவிக்கின்றனர். எனினும் தேர்தல் நடைபெறும். எப்பொழுது? பொதுத் தேர்தல் முடிவுகள் வந்த பின்பாகக் கூட இருக்கலாம்.
தேர்தலை விரைவில் தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும். ஆனால், இனிமேல் தனித்தனிக் கட்சி மேடைகளில் பரப்பவும் வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்கவும் தடை விதிக்க வேண்டும். கூட்டத்திற்கு ஆள் சேர்க்கும் வகையிலும் வாக்குகள் வாங்கப்படுகின்றன. வீடு வீடாகச் செல்வதன் மூலமும் வாக்குகள் வாங்கப்படுகின்றன. இவற்றை நிறுத்த வேண்டும் என்றால் இவ்விரண்டிற்கும் தடை விதிக்க வேண்டும்.
தேர்தல் ஆணையமே குறிப்பிட்ட இடங்களைத் தேர்ந்தெடுத்து வேட்பாளர்களின் பரப்புரைகளுக்கு வாய்ப்பு தந்து, அவற்றைத் தொலைக்காட்சிகள் மூலம் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இதனால் வேட்பாளர்கள் தத்தம் கருத்துகளைத் தெரிவிக்கவும் வாய்ப்பு தந்ததாக அமையும். வாக்கு வணிகத்திற்கான வாய்ப்புகளுக்குக் கதவு மூடப்பட்டதாகவும் அமையும்.
வேட்பாளர்களிடம் விண்ணப்பங்கள் பெறுதல் என முதலில் இருந்து தேர்தல் நடைமுறைளைத் தொடங்கக் கூடாது. முன்னரே பதிந்து இறுதி வடிவம் எடுக்கப்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடத்தான் வாய்ப்பு தரவேண்டும். இதனால் வீண் செலவுகள் தவிர்க்கப்படும்.
அரசியல்வாதிகள் பேச்சில் வாய்மை இல்லை. எனவே, செய்யாததைச் செய்ததாகக் கூறுவர். செய்யமாட்டோம் என அறிந்தே செய்யப்போவதாகக் கூறுவர். அடுத்தவரை ஏசிப்பேசி இன்பம் காணும் அரசியல் சொற்பொழிவாளர்களும் உள்ளனர்.
இன்றைய அரசியல் சொற்பொழிவாளர்கள் எப்படி உள்ளனர்? பேதை நாக்கு குறித்து நாலடியார் விளக்குவதுபோல் இருக்கின்றனர்.
“பேதை நாக்கு பிறரைத் திட்டுவதால் பயன் இல்லை என அறிந்தாலும் திட்டித் தின்னும்; திட்டுவதனால் ஏதோ பெற்றவன் போலத் திட்டும்; வஞ்சம் கொண்டு திட்டும்; காரணம் எதுவும் இல்லாமலே திட்டும்; எதிர்த்துப் பேச வாய்ப்பு இல்லாதவரையும் திட்டும்; சினம் பொங்கத் திட்டும்; இல்லாததும் பொல்லாததும் கோத்துக் கூறித் திட்டும்; நல்ல நாளிலும் திட்டும்; ஏதும் திட்டாவிட்டால் நாக்கு அவனையே தின்பது போன்று இருக்கும் எனத் திட்டும்” என்கிறது நாலடியார்.
பெறுவதொன் றின்றியும் பெற்றானே போலக்
கறுவுகொண் டேலாதார் மாட்டும் – கறுவினால்
கோத்தின்னா கூறி உரைக்காக்காக்கால் பேதைக்கு
நாத்தின்னும் நல்ல தினத்து. (நாலடியார் 335)
இவற்றை எல்லாம் தடுப்பதற்கு உதவுவது தனிப் பரப்புரைகளுக்கான தடையாகும். தனித்தனிப் பரப்புரைகளுக்குத் தடை விதிப்பதால் ஒலி மாசும் கட்டுப்படுத்தப்படும்; மனமாசும் கட்டுப்படுத்தப்படும். எனவே, பரப்புரைகளுக்கான இடங்கள், நேரங்கள் ஆகியவற்றை வரையறுத்துக் கொண்டு அறிவித்த ஐந்து நாளில் தேர்தல் நடைபெறும் வண்ணம் தேர்தல் நாளை அறிவிக்க வேண்டும்.
நேர்மையான தேர்தல் என்பது வாக்காளர்களைப் பொறுத்தே அமையும். நன்மை கிடைத்தாலும் ஆதாயம் அடைந்தாலும் நடுவுநிலைமை தவறிப் பெறும் பணம் அல்லது பொருள் பெறும் நிலைக்கு வாக்காளர்கள் ஆளாகக் கூடாது. வாக்காளர்கள் நேர்மையாக இருந்தால் வேட்பாளர்களும் நேர்மையாக இருப்பர். “கொடுப்பதால்தான் வாங்குகிறோம்” என்னும் நிலை மாறி “வாங்காததால் கொடுக்கவில்லை” என்னும் நிலை வர வேண்டும்.
எனவே, வாக்காளர்கள் நேர்மையாக நடந்து கொள்வதற்கான சூழலை உருவாக்கியும் வாக்கு வணிகத்தில் ஈடுபடும் விற்போர், வாங்குவோர் என இரு தரப்பாருக்கும் தண்டனை என்னும் நிலையை நிலைநாட்டியும் விரைவான நேர்மையான தேர்தல் நடைபெறத் தேர்தல் ஆணையம் நடுவுநிலைமையுடன் செயல்பட வேண்டும். தொலைந்து போகக் கூடிய மத்திய ஆளுங்கட்சியின் கைப்பாவையாக இருந்து அதற்கு முட்டுக் கொடுக்கும் வகையில் கட்சிக்கொரு நீதி என்ற தவறான செயல்பாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
எனவே, நடுவுநிலைமையுடன் செயல்பட்டு உடனடியாக வேலூர் தொகுதிக்கான நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையத்தை வேண்டுகிறோம்!
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல். (திருவள்ளுவர், திருக்குறள்)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல
No comments:
Post a Comment